என் மலர்
நீங்கள் தேடியது "அரசு விரைவு பஸ்கள்"
- அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்களின் தரவை நாங்கள் செயலியில் பதிவேற்ற தொடங்கியுள்ளோம்.
- தமிழகத்துக்குள்ளும், தமிழகத்துக்கு வெளியேயும் இயங்கும் அனைத்து அரசு விரைவு பஸ்களையும் கண்காணிக்க முடியும்.
சென்னை:
சென்னை மாநகர போக்குவரத்து கழகம் 'சவோ' என்னும் நிறுவனத்துடன் இணைந்து சென்னை மாநகர பஸ்களின் வருகையை தெரிந்து கொள்வதற்கான செயலியை ஏற்கனவே அறிமுகப்படுத்தியது.
இதன் மூலம் சென்னை நகரில் பஸ்களுக்காக பஸ் நிறுத்தத்தில் காத்திருக்கும் பயணிகள் 'சவோ' செயலியை பயன்படுத்தி தாங்கள் செல்ல விரும்பும் பஸ் எங்கு வந்து கொண்டிருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.
அதேபோல் அடுத்த பஸ் எப்போது வரும் என்பது உள்ளிட்ட விவரங்களையும் தெரிந்து கொள்ள முடியும்.
சென்னை மாநகரில் இயங்கும் 3233 பஸ்களில் இந்த அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது. அதன்மூலம் 3233 பஸ்களின் வருகை குறித்த விவரங்களை தற்போது சென்னை பயணிகள் பெற்று பயனடைந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் சென்னையில் இருந்து நீண்ட தூரம் இயக்கப்படும் அரசு விரைவு பஸ்களிலும் இதே நடைமுறையை கொண்டு வர திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக இந்த செயலி மேம்படுத்தப்பட்டுள்ளது.
அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் சென்னையில் இருந்து தினமும் 950 பஸ்கள் தமிழகத்தின் பல பகுதிகளுக்கு இயக்கப்படுகின்றன. இதன் மூலம் தினமும் 70 ஆயிரம் பயணிகள் பயணம் செய்து வருகிறார்கள்.
இந்த 'சவோ' செயலியை அரசு விரைவு பஸ்களுக்கும் விரிவுபடுத்தும் நிலையில் இனி அவர்களும் இந்த செயலியால் பயன் அடையலாம். இந்த செயலி மூலம் அரசு விரைவு பஸ்கள் எங்கு வந்து கொண்டிருக்கிறது. தாங்கள் செல்ல விரும்பும் அடுத்த பஸ் எப்போது என்ற விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.
தற்போது முக்கிய பஸ் நிறுத்தங்கள் மற்றும் பஸ் நிலையங்களை தவிர மற்ற இடங்களுக்கு பஸ் எப்போது வரும் என்ற நேர கட்டுப்பாடு இல்லை. இந்த செயலி மூலம் பஸ் செல்லும் வழியில் எந்த இடத்தில் இருந்தபடியும் பஸ் எப்போது வரும் என்பதை தெரிந்து கொள்ளலாம். இதன் மூலம் பயணிகள் பஸ்களின் நேரங்களை தெரிந்து கொண்டு வசதியாக பயணிக்க முடியும்.
இந்த செயலியில் பயணிகள் நுழைந்து, 'சர்ச் பஸ் ரூட்' என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால், பஸ் தடம் எண்ணை டைப் செய்தால் தற்போது இயக்கப்படும் அனைத்து பஸ்களும் அதில் காட்டப்படும். அதன்பிறகு தாங்கள் செல்ல விரும்பும் பஸ்கள் பற்றிய தகவல்களை பெறலாம்.
இந்த நடைமுறை சென்னையில் இருந்து இயக்கப்படும் பஸ்களில் முதலில் அமலுக்கு வருகிறது. அதன்பிறகு மதுரை, திருச்சி மற்றும் மாநிலம் முழுவதும் இருந்து இயக்கப்படும் பஸ்களிலும் நடைமுறைக்கு வரும்.
இதுதொடர்பாக அரசு விரைவு போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், "ஏற்கனவே 'சவோ' செயலி சென்னை மாநகர போக்குவரத்து கழக பஸ்களில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. இதேபோல் அரசு விரைவு பஸ்களிலும் இது விரைவில் நடைமுறைக்கு வரும்
இதற்காக அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்களின் தரவை நாங்கள் செயலியில் பதிவேற்ற தொடங்கியுள்ளோம்.
தமிழகத்துக்குள்ளும், தமிழகத்துக்கு வெளியேயும் இயங்கும் அனைத்து அரசு விரைவு பஸ்களையும் இதன் மூலம் கண்காணிக்க முடியும்" என்றார்.
- எந்த பெயரில் டிக்கெட் பதிவு செய்யப்படுகிறதோ அதே பெயரில் தான் தொடர்ந்து முன்பதிவு செய்ய வேண்டும்.
- பெயர்களை மாற்றினாலும் கட்டண சலுகை பெற இயலாது.
சென்னை:
தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் மூலம் 1,200 பஸ்கள் இயக்கப்படுகின்றன. தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கு மட்டுமின்றி அண்டை மாநிலங்களுக்கும் சென்று வருகிறது.
பொதுவாக திங்கள் முதல் வியாழக்கிழமை வரை அரசு பஸ்கள் காலியாக ஓடுகின்றன. இடங்கள் நிரம்பாததால் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் மட்டும் இடங்கள் நிரம்புகிறது.
நீண்ட தூரத்திற்கு இயக்கப்படும் அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்களில் ஏற்படும் இழப்பை ஈடுசெய்யவும், ஆம்னி பஸ் பயணிகளை இழுக்கவும் பயண சலுகை திட்டம் பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு விரைவு பஸ்களில் ஒரு மாதத்திற்கு 5 முறை பயணம் செய்த பிறகு 6-வது முறை பயணத்தில் இருந்து ஒவ்வொரு பயணத்திற்கும் 50 சதவீத கட்டணம் என்று சட்டசபையில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்தார்.
5 முறை பயணம் செய்வதற்கு சலுகை கிடையாது. அதற்கு மேல் பயணம் செய்யும் ஒவ்வொரு முறைக்கும் பாதி கட்டணம் செலுத்தினால் போதும். இந்த சலுகையில் ஏசி பஸ் உள்ளிட்ட அனைத்து விரைவு பஸ்களுக்கும் பொருந்தும்.
தற்போது கோடை காலம் தொடங்கி இருப்பதால் பஸ் பயணம் அதிகளவில் இருக்கும் என்பதால் இத்திட்டம் உடனடியாக செயல்படுத்தப்படுகிறது. இதற்கான சாப்ட்வேர் பொறுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
50 சதவீத கட்டண சலுகை திட்டம் மே 1-ந் தேதி முதல் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. டிக்கெட் முன்பதிவு செய்யும் போது ஒரு மாதத்தில் 6 முறை பயணத்தில் இருந்து சலுகை கட்டணம் கிடைக்கும்.
ஒரே இடத்திற்கு இந்த பயணம் அமைய வேண்டும். உதாரணத்திற்கு சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்வதாக இருந்தால் அங்கிருந்து சென்னை வர வேண்டும். பயணம் செய்யும் இடம் மாறக்கூடாது. ஒரே இடமாக இருக்க வேண்டும். இடம் மாறினால் பாதி கட்டண சலுகை கிடைக்காது.
எந்த பெயரில் டிக்கெட் பதிவு செய்யப்படுகிறதோ அதே பெயரில் தான் தொடர்ந்து முன்பதிவு செய்ய வேண்டும். பெயர்களை மாற்றினாலும் கட்டண சலுகை பெற இயலாது. இதற்கேற்றவாறு சாப்ட்வேர் பொருத்தப்படுகிறது. இந்த பணி ஒரு சில நாட்களில் நிறைவு பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அதிக விலைக்கு உணவுப் பொருட்கள் விற்பனை, கழிப்பறை தூய்மையின்மை, பயன்படுத்த கட்டணம் போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் பயணிகள் தரப்பில் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகின்றன.
- உணவு பாதுகாப்பு, போக்குவரத்து உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
சென்னை :
தொலைதூரம் செல்லக்கூடிய அரசு பஸ்களில் பயணிப்போர் உணவு அருந்துதல், இயற்கை உபாதைகளை கழித்தல் போன்றவற்றுக்கு நெடுஞ்சாலையில் இருக்கும் உணவகத்தில் பஸ்கள் நிறுத்தப்படுகின்றன.
அங்கு அதிக விலைக்கு உணவுப் பொருட்கள் விற்பனை, கழிப்பறை தூய்மையின்மை, பயன்படுத்த கட்டணம் போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் பயணிகள் தரப்பில் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இதுதொடர்பாக அவ்வப்போது உணவு பாதுகாப்பு, போக்குவரத்து உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்கிடையே போதிய அடிப்படை வசதிகள் இல்லாத, போக்குவரத்து துறையின் உரிமம் பெறாத உணவகங்களில் பஸ்கள் நிறுத்தப்படுவதாக புகார் எழுந்தது.
எனவே, பயணிகள் அறியும் வகையில் பஸ் நிறுத்துவதற்கான உரிமம் பெற்ற உணவக பட்டியலை வெளியிட வேண்டும் என தொடர் கோரிக்கையை சமூக அமைப்பு உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர்.
இதன் தொடர்ச்சியாக தற்போது பஸ்களை நிறுத்துவதற்கான உரிமம் பெற்ற 51 உணவகங்களின் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இதனை அரசு பஸ் என்ற இணையதளத்தில் அனைவரும் அறிந்து கொள்ளலாம்.
- வழக்கமாக அரசு விரைவு பஸ்களில் தினசரி 10 ஆயிரம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படும்.
- தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்கள் அனைத்தும் நிரம்பி வழிகிறது.
சென்னை:
பஸ் மற்றும் ரெயில்களில் பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் மட்டும்தான் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். பலர் டிக்கெட் கிடைக்காமல் திண்டாடுவார்கள்.
ஆனால் வழக்கத்துக்கு மாறாக கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக தினமும் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.
வழக்கமாக அரசு விரைவு பஸ்களில் தினசரி 10 ஆயிரம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படும். ஆனால் இப்போது 16 ஆயிரமாக உயர்ந்துள்ளது. கடந்த 10 நாட்களில் 36 ஆயிரம் டிக்கெட்டுகள் மாநிலம் முழுவதும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. கோயம்பேட்டில் இருந்து தினமும் 450 பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த பஸ்களில் அடுத்த சில நாட்களுக்கு டிக்கெட்டுகள் இல்லை. வார இறுதி நாட்கள், முகூர்த்த தினங்களில் வழக்கமாக 1.2 லட்சம் பயணிகள் அரசு பஸ்களிலும், விரைவு பஸ்களிலும் பயணிப்பார்கள். தற்போது அது 1.3 முதல் 1.5 லட்சம் வரை உயர்ந்துள்ளது. பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால் சிறப்பு பஸ்களும் இயக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
எதிர்பாராத வகையில் பயணிகள் கூட்டம் அதிகமாக வருவதால் அதை சமாளிக்க சென்னை மட்டுமின்றி விழுப்புரம், கும்பகோணம் கோட்டங்களில் இருந்தும் கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
அதேநேரம் ஆம்னி பஸ்களில் 50 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை கட்டணத்தை உயர்த்தி வசூல் வேட்டை நடத்துகிறார்கள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது.
சென்னையில் இருந்து கோவை, தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, நாகர்கோவில், திருச்செந்தூர் ஆகிய வழித்தடங்களில் கட்டணம் தாறுமாறாக வசூலிக்கப்படுகிறது. அரசு பஸ்களில் திருச்செந்தூருக்கு ரூ.620. ஆம்னி பஸ்களில் ரூ.2000. நாகர்கோவிலுக்கு ஆம்னி பஸ்கள் கட்டணம் ரூ.1500-ல் இருந்து ரூ.3 ஆயிரமாக உயர்த்தப்பட்டு உள்ளது.
தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்கள் அனைத்தும் நிரம்பி வழிகிறது. அடுத்த மாதம் 10-ந் தேதி வரை எந்த ரெயிலிலும் இடம் இல்லை. முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் உட்கார இடம் இல்லாமல் நின்று கொண்டே பயணிக்கிறார்கள்.
நெல்லை, கன்னியாகுமரி ரெயில்களில் கூடுதலாக ஒன்றிரண்டு பெட்டிகளை இணைக்க வேண்டும் என்று பயணிகள் கூறுகிறார்கள்.
கூட்ட நெரிசல் காரணமாக தென்னக ரெயில்வே தாம்பரம்-நாகர்கோவில், தாம்பரம்-நெல்லை, தாம்பரம்-செங்கோட்டை, சென்னை-கன்னியாகுமரி சிறப்பு ரெயில்களை அறிவித்துள்ளது.
- விரைவு பஸ்களை பொறுத்தவரை 30 நாட்களுக்கு முன்பாக முன்பதிவு செய்ய முடியும்.
- நவம்பர் 11-ந்தேதி பயணம் செய்வோருக்கான முன்பதிவு நாளை (வியாழக்கிழமை) தொடங்க உள்ளது.
சென்னை:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு விரைவு பஸ்களில் பயணம் செய்வோருக்கான முன்பதிவு இன்று தொடங்கியது.
தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் (நவம்பர்) 12-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் அரசு விரைவு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
விரைவு பஸ்களை பொறுத்தவரை 30 நாட்களுக்கு முன்பாக முன்பதிவு செய்ய முடியும்.
அந்த வகையில் நவம்பர் 10-ந்தேதி பயணம் மேற்கொள்வோர் இன்று (புதன்கிழமை) முதல் இருக்கைகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
நவம்பர் 11-ந்தேதி பயணம் செய்வோருக்கான முன்பதிவு நாளை (வியாழக்கிழமை) தொடங்க உள்ளது. அரசு போக்குவரத்துக் கழகத்தின் www.tnstc.in என்ற இணையதளம் அல்லது tnstc செயலி மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இது தவிர பஸ் நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்கள் மூலமாகவும் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அரசு விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- அரசு போக்குவரத்துக் கழக பஸ்களில் 30 நாட்களுக்கு முன் முன்பதிவு செய்து பயணம் செய்யும் முறை நடைமுறையில் இருந்து வந்தது.
- தொலைதூரம் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் மொபைல் ஆப் மூலம் முன்பதிவு செய்து பயணிக்கலாம்.
சென்னை:
தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் ஆர்.மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பஸ்களில் 30 நாட்களுக்கு முன் முன்பதிவு செய்து பயணம் செய்யும் முறை நடைமுறையில் இருந்து வந்தது. பயணிகளின் வசதிக்காக 15-ந் தேதி (நேற்று) முதல் பயண முன்பதிவு காலம் 30 நாட்களுக்கு பதிலாக 60 நாட்களுக்கு முன் முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
எனவே தொலைதூரம் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் மேற்கண்ட வசதியை பயன்படுத்தி தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு www.tnstc.in மற்றும் மொபைல் ஆப் மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தீபாவளி பண்டிகை அக்டோபர் 31-ந் தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது.
- தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய அனைத்து பஸ்களும் நிரம்பி விட்டன.
சென்னை:
அரசு விரைவு பஸ்களுக்கு 60 நாட்களுக்கு முன்னதாக முன்பதிவு செய்யும் நடைமுறை உள்ளது. அரசு பஸ்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நீண்ட தூரம் செல்லக்கூடிய எஸ்.இ.டி.சி. பஸ்களில் படுக்கை வசதியுடன் குளிர்சாதன வசதி போன்றவை இருப்பதால் அதிகளவில் பயணிக்க தொடங்கி உள்ளனர்.
இந்த நிலையில் தீபாவளி பண்டிகை அக்டோபர் 31-ந் தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது.
தீபாவளிக்கு சொந்த ஊர் செல்லக் கூடியவர்கள் கடந்த 1, 2-ந் தேதிகளில் முன்பதிவு செய்தனர். அக்டோபர் 28, 29 ஆகிய தேதிகளில் பயணம் செய்வதற்காக முன்பதிவு தொடங்கியது. தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய அனைத்து பஸ்களும் நிரம்பி விட்டன.
அதே போல பண்டிகை முடிந்து நவம்பர் 3-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அங்கிருந்து புறப்பட்டு சென்னைக்கு வருவதற்கும் பெரும்பாலான இடங்கள் நிரம்பி விட்டன. 1500 பஸ்களுக்கு முதல் கட்டமாக முன்பதிவு நடந்து வருகிறது. இது தவிர வழக்கம் போல சிறப்பு பஸ்களும் அறிவிக்கப்படும்.
- இந்த ஆண்டு முன்பதிவு வசதி பஸ்கள் அளவைவிட முன்பதிவு இல்லாத பஸ்கள் கூடுதலாக இயக்கப்படுகின்றன.
- கோயம்பேடு மார்க்கெட், தாம்பரம், பூந்தமல்லி உள்ளிட்ட முக்கிய பஸ் நிலையங்களில் கடைசி நேர முன்பதிவு டிக்கெட் கவுண்டர்கள் 20-ந்தேதி திறக்கப்படும்.
சென்னை:
தீபாவளி பண்டிகை வருகிற 24-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. 2 வருட கொரோனா பாதிப்புக்கு பிறகு இந்த ஆண்டு பண்டிகையை உற்சாகமாக கொண்டாட தயாராகி வருகின்றனர்.
தீபாவளி பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட செல்லும் மக்கள் பஸ், ரெயில்களில் முன்பதிவு செய்து பயணத்தை திட்டமிட்டுள்ளனர். சிறப்பு ரெயில்கள் உள்பட அனைத்து ரெயில்களிலும் இடங்கள் நிரம்பிவிட்டன.
இந்த நிலையில் தமிழக அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 16 ஆயிரம் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
சென்னை மற்றும் சுற்று வட்டாரப்பகுதியில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊரில் பண்டிகையை கொண்டாட செல்வது வழக்கம். அந்த வகையில் வெளியூர் செல்லும் பொதுமக்களுக்கு வசதியாக 21, 22, 23 ஆகிய தேதிகளில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
இன்னும் தீபாவளிக்கு 10 நாட்களே இருப்பதால் பயணத்தை உறுதி செய்து வருகின்றனர். முதலில் அரசு விரைவு பஸ்களுக்கு முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. தீபாவளிக்கு முந்தைய 3 நாட்களுக்கு முன்பதிவு விறுவிறுப்பாக நடக்கிறது.
சென்னை உள்பட பல்வேறு நகரங்களில் அரசு விரைவு பஸ்களின் முன்பதிவு 60 சதவீதம் முடிந்து விட்டது. மொத்தமுள்ள 1000 விரைவு பஸ்களில் 600 பஸ்களுக்கு முன்பதிவு முடிந்து விட்டது. அனைத்து இருக்கைகளும் நிரம்பி விட்டன.
குறிப்பாக, மாலை மற்றும் இரவு நேர பஸ்களில் இடம் இல்லை. பகல் நேர பஸ்களில் மட்டுமே இடங்கள் காலியாக உள்ளன. சென்னையில் இருந்து செல்லக்கூடிய 450 பஸ்களில் இரவு நேர பஸ்கள் பெரும்பாலும் நிரம்பிவிட்டன. பகல் நேர பஸ்களில் மட்டும் இருக்கைகள் நிரம்பாமல் உள்ளன.
பொதுவாக கடைசி 3 நாட்களில் தான் முன்பதிவு அதிகரிக்கும். அந்த வகையில் 20, 21, 22-ந் தேதிகளில் முன்பதிவு மேலும் விறுவிறுப்பாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:-
அரசு விரைவு பஸ்களுக்கான முன்பதிவு கிட்டத்தட்ட நிறைவு கட்டத்தை நெருங்கி விட்டது. 21, 22, 23 ஆகிய 3 நாட்களுக்கும் சுமார் 1 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
அரசு விரைவு பஸ்களுக்கான முன்பதிவு முடிந்தவுடன் பிற போக்குவரத்து கழக பஸ்களுக்கான முன்பதிவு தொடங்கும். கடைசி 3 நாட்கள் மற்ற பஸ்கள் முன்பதிவுக்குள் கொண்டு வரப்படும். இந்த ஆண்டு முன்பதிவு வசதி பஸ்கள் அளவைவிட முன்பதிவு இல்லாத பஸ்கள் கூடுதலாக இயக்கப்படுகின்றன.
வெளியூர் செல்லக்கூடிய பயணிகள் முன்கூட்டியே பயணத்தை தொடர வேண்டும். நள்ளிரவில் வருவதை தவிர்க்க வேண்டும். 'பஸ் இல்லை' என்று சொல்லாத அளவிற்கு கூடுதலாக பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கோயம்பேடு மார்க்கெட், தாம்பரம், பூந்தமல்லி உள்ளிட்ட முக்கிய பஸ் நிலையங்களில் கடைசி நேர முன்பதிவு டிக்கெட் கவுண்டர்கள் 20-ந்தேதி திறக்கப்படும். அங்கு நேரடியாக சென்று முன் பதிவு டிக்கெட் பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்படுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகை பயணத்திற்கான முன்பதிவு வேகமாக நடந்து வருகிறது.
- அரசு விரைவு பஸ்களில் இடங்கள் நிரப்பிய பின்னர் மற்ற போக்குவரத்து கழக பஸ்களும் முன்பதிவுக்குள் கொண்டு வரப்படும்.
சென்னை:
தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் செல்லக்கூடிய மக்கள் பஸ், ரெயில்களில் பெரும்பாலும் பயணம் செய்வார்கள்.
அனைத்து ரெயில்களிலும் எல்லா வகுப்புகளும் நிரம்பி விட்டதால் பஸ் பயணத்தை நோக்கி மக்கள் நகர்கிறார்கள்.
பஸ்களில் 30 நாட்களுக்கு முன்பாக முன்பதிவு செய்து கொள்ள வசதி இருப்பதால் தற்போது அரசு விரைவு பஸ்களில் ஆர்வமாக முன்பதிவு செய்து வருகின்றனர். ஆம்னி பஸ்களில் பல மடங்கு கட்டணம் வசூலிப்பதால் அரசு பஸ்களை மக்கள் நாடுகிறார்கள்.
tnstc.in.com என்ற இணையதளத்தின் வழியாக அரசு விரைவு பஸ்களுக்கான முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அக்டோபர் 22, 23 ஆகிய தேதிகளில் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்லக்கூடிய பெரும்பாலான விரைவு பஸ்களில் இடங்கள் நிரம்பி வருகின்றன.
சென்னையில் இருந்து 450 அரசு விரைவு பஸ்கள் பல்வேறு நகரங்களுக்கு செல்கின்றன. அதில் 400 பஸ்களுக்கான முன்பதிவு பெருமளவில் நிறைவடைந்துள்ளன.
குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருவனந்தபுரம், மதுரை, தென்காசி, செங்கோட்டை போன்ற தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய பஸ்களில் இடங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன.
ஆயுத பூஜை, விஜயதசமி அடுத்த மாதம் 4, 5 ஆகிய தேதிகளில் வருகிறது. முன்னதாக 2-ந்தேதி காந்தி ஜெயந்தி விடுமுறை தினமாகும். தொடர்ச்சியாக அரசு விடுமுறை நாட்கள் வருவதால் வெளியூர் பயணம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
அதனால் அக்டோபர் 1, 2-ந்தேதி பயணம் செய்வதற்கும் அதிகளவில் முன்பதிவு நடைபெற்று வருகின்றது. தீபாவளி, ஆயுத பூஜை விடுமுறை முன்பதிவு அரசு விரைவு பஸ்களில் விறுவிறுப்பாக நடைபெறுவதால் குறைந்த அளவிலேயே இடங்கள் இருக்கின்றன.
இதுவரை 15 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். தீபாவளி முடிந்து மறுநாள் சென்னை திரும்புவதற்கான முன்பதிவு நாளை மறுநாள் (25-ந்தேதி) தொடங்குகிறது.
இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:-
ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகை பயணத்திற்கான முன்பதிவு வேகமாக நடந்து வருகிறது. சென்னையில் இருந்து புறப்படக்கூடிய பஸ்களில் குறைந்த அளவில் இருக்கைகள் காலியாக உள்ளன.
கடைசி நேரத்தில் நெரிசலில் பயணம் செய்வதை தவிர்க்க முன்பதிவு செய்து கொள்வது நல்லது. அரசு விரைவு பஸ்களில் இடங்கள் நிரப்பிய பின்னர் மற்ற போக்குவரத்து கழக பஸ்களும் முன்பதிவுக்குள் கொண்டு வரப்படும்.
அக்டோபர் 1-ந்தேதி முதல் கூடுதலாக பஸ்களை இயக்க திட்டமிட்டு உள்ளோம். கோயம்பேட்டில் இருந்து வழக்கமாக தினமும் இயக்கப்படும் 2,200 பஸ்கள் தவிர 1,000 சிறப்பு பஸ்கள் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படும். பொதுமக்கள் தேவைக்கேற்ப கூடுதலாக பஸ்களை விடவும் தயார் நிலையில் உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- தமிழகம் முழுவதும் முதலில் 600-க்கும் மேற்பட்ட அரசு விரைவு பஸ்களுக்கு முன்பதிவு செய்ய இணைக்கப்பட்டுள்ளன.
- முன்பதிவு அதிகம் ஆவதை தொடர்ந்து மேலும் பஸ்கள் முன்பதிவுக்குள் கொண்டு வர அரசு விரைவு போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது.
சென்னை:
தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் 24-ந்தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. தொழில் மற்றும் வேலைவாய்ப்புக்காக சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வசித்து வரும் லட்சக்கணக்கான மக்கள் தீபாவளியை கொண்டாட பயணத்தை திட்டமிட்டு உள்ளனர்.
தீபாவளிக்கு முந்தைய 2 நாட்கள் (சனி, ஞாயிறு) அரசு விடுமுறையாக இருப்பதால் அக்டோபர் 21-ந் தேதியே பயணத்தை தொடர வாய்ப்பு அதிகம் உள்ளது. ரெயில்களில் இடங்கள் அனைத்தும் நிரம்பி காத்திருப்போர் பட்டியல் நீடித்து வருகிறது.
சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லக் கூடிய எல்லா ரெயில்களிலும் அனைத்து வகுப்புகளும் நிரம்பி விட்டன. சிறப்பு ரெயில்களிலும் இடங்கள் காலி இல்லை. கூடுதலாக சிறப்பு ரெயில்களை இயக்குவதற்கும் தெற்கு ரெயில்வே திட்டமிட்டு வருகிறது.
இந்த நிலையில் அரசு விரைவு பஸ்களில் தீபாவளி முன்பதிவு நாளை (21-ந் தேதி) முதல் தொடங்குகிறது. 30 நாட்களுக்கு முன்னதாக அரசு விரைவு பஸ்களுக்கு முன்பதிவு செய்யக் கூடிய வசதி உள்ளது.
அதன்படி அக்டோபர் 22-ந்தேதி பயணம் செய்ய நாளை (புதன்கிழமை) முன்பதிவு தொடங்குகிறது. www.tnstc.com என்ற இணைய தளம் வழியாக முன்பதிவு செய்து நெரிசல் இல்லாமல் பயணம் செய்யலாம்.
சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கும் பிற பகுதியில் இருந்து சென்னை வருவதற்கும் முன்பதிவு செய்யப்படுகிறது.
கோயம்பேட்டில் இருந்து நெல்லை, தூத்துக்குடி, திருவனந்தபுரம், கன்னியாகுமரி, மதுரை, தென்காசி மற்றும் கும்ப கோணம், தஞ்சாவூர், கோவை உள்ளிட்ட பல் வேறு பகுதிகளுக்கு செல்லக்கூடிய 400-க்கும் மேற்பட்ட பஸ்கள் முன்பதிவு செய்யும் திட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் முதலில் 600-க்கும் மேற்பட்ட அரசு விரைவு பஸ்களுக்கு முன்பதிவு செய்ய இணைக்கப்பட்டுள்ளன. முன்பதிவு அதிகம் ஆவதை தொடர்ந்து மேலும் பஸ்கள் முன்பதிவுக்குள் கொண்டு வர அரசு விரைவு போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:-
அரசு விரைவு பஸ்களுக்கு 30 நாட்களுக்கு முன்பு முன்பதிவு செய்யும் வசதி நடைமுறையில் உள்ளது. அதன்படி தீபாவளி பயணத்திற்கான முன்பதிவு நாளை முதல் தொடங்குகிறது.
பயணிகளின் முன்பதிவை பொறுத்து மேலும் 1000-க்கும் மேற்பட்ட பஸ்களுக்கு முன்பதிவு செய்யப்படும். விழுப்புரம், சேலம், கும்பகோணம், கோவை, மதுரை, திருநெல்வேலி ஆகிய 6 போக்குவரத்து கழகங்களில் இருந்து பஸ்கள் பெறப்பட்டு முன்பதிவில் இணைக்கப்படும்.
தமிழகத்தின் எந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டுமானாலும் அரசு விரைவு பஸ் இணையதளத்தின் மூலம் முன்பதிவு செய்து நெரிசலின்றி மகிழ்ச்சியுடன் பயணிக்கலாம். அரசு விடுமுறை நாட்களை தொடர்ந்து தீபாவளி வருவதால் 3 நாட்கள் பண்டிகை கொண்டாட்டத்திற்காக பயணம் மேற்கொள்ள வாய்ப்பு உள்ளது.
அதனால் முன்பதிவு அதிகரிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கிறோம். அடுத்த மாதம் இறுதியில் தான் பெரும்பாலானவர்கள் முன்பதிவு செய்ய ஆர்வம் காட்டுவார்கள். மேலும், தீபாவளிக்கு முந்தைய 2 நாட்களுக்கு முன்பு கோயம்பேட்டில் நேரடி டிக்கெட் சிறப்பு கவுண்டர்களும் திறக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.