search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஷின்ஜோ அபே"

    • ஷின்ஜோ அபேவுக்கு வருகிற 27-ந்தேதி அரசு சார்பில் நினைவு நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது.
    • டோக்கியோவில் நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    டோக்கியோ :

    ஜப்பானில் நீண்ட காலம் பிரதமராக இருந்தவர் என்கிற பெருமைக்குரியவரான முன்னாள் பிரதமர் ஷின்ஜோ அபே, கடந்த ஜூலை மாதம் 8-ந்தேதி தேர்தல் பிரசாரம் ஒன்றில் பங்கேற்றிருந்தபோது சுட்டுக்கொல்லப்பட்டார். இது ஜப்பான் மட்டும் இன்றி ஒட்டுமொத்த உலகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பின்னர் ஷின்ஜோ அபேயின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

    இந்த நிலையில் ஜப்பானில் கொலை செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ஷின்ஜோ அபேவுக்கு வருகிற 27-ந்தேதி அரசு சார்பில் நினைவு நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி உள்பட உலக தலைவர்கள் பலரும் கலந்து கொள்ள உள்ளனர்.

    இந்த நிலையில் ஷின்ஜோ அபேவுக்கு அரசு நினைவு நிகழ்ச்சி நடத்துவதற்கு ஜப்பானில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நினைவு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி நேற்று தலைநகர் டோக்கியோவில் நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அரசை கண்டிக்கும் பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஷின்ஜோ அபேவுக்கு எதிராக கண்டன கோஷங்களையும் எழுப்பினர். ஷின்ஜோ அபேயும், அவரது அரசும் குறிப்பிட்ட ஒரு மத அமைப்புடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததாக குற்றம் சாட்டி மக்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு ஷின்ஜோ அபேவுக்கு நினைவு நிகழ்ச்சி நடத்த எதிர்ப்பு தெரிவித்து 70 வயது முதியவர் ஒருவர் டோக்கியோவில் உள்ள பிரதமர் அலுவலகம் அருகே தீக்குளித்தது நினைவுகூரத்தக்கது.

    ×