search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதுரை உயர்நீதிமன்றம்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நித்தியானந்தாவுக்கு எதிராக பல்வேறு வழக்குகள், பிடிவாரண்டுகள் உள்ளன.
    • நித்தியானந்தாவின் சொத்துகளை நீதித்துறை பாதுகாக்க வேண்டுமா?

    கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த சுரேகா என்பவர் நித்தியானந்தாவின் சீடராக இருக்கிறார். இவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவில், "கணேசன் என்பவருக்கு சொந்தமான விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள 45 ஏக்கர் நிலத்தை நித்தியானந்தாவின் அறிவுறுத்தலின் பேரில் அபகரிக்க முயன்றதாக சுரேகா, தர்மலிங்கம் மற்றும் ரவி ஆகியோர் மீது தேனி மாவட்டம் சேத்தூர் காவல்நிலையத்தில் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    ஆனால் நாங்கள் அது சம்பந்தமான எந்தவித முயற்சியும் மேற்கொள்ளவில்லை.பொய்யான புகாரில் எங்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆகவே இந்த வழக்கில் எங்களுக்கு முன்ஜாமின் வழங்கவேண்டும். இது தொடர்பாக நீதிமன்றம் விதிக்கும் கட்டுப்பாடுகளுக்கு நாங்கள் கட்டுப்படுவோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த மனு நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "எனது மனுதாரர் நிலத்தை அபகரிக்கும் எவ்வித முயற்சிகளிலும் ஈடுபடவில்லை. இது பொய்யாக புனையப்பட்ட வழக்கு, ஆகவே அவருக்கு இந்த வழக்கில் முன்ஜாமின் வழங்க வேண்டும்" என்று வாதிட்டார்.

    புகார்தாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "நிலத்தின் உரிமையாளர் கணேசன் ஏற்கனவே நித்தியானந்தா வழக்கில் அரசு தரப்பு சாட்சியாக உள்ளார். மைசூர் ராம்நகர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. நித்தியானந்தாவின் சீடர் கணேசனை பயமுறுத்தும் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் அவருக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது" என்று வாதிட்டார்.

    இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, "தலைமறைவாய் இருக்கும் நித்தியானந்தா இந்திய நீதித்துறைக்கே சவால் விடுகிறார். நித்தியானந்தாவுக்கு எதிராக பல்வேறு வழக்குகள், பிடிவாரண்டுகள் உள்ளன. நித்தியானந்தா நீதிமன்றத்துக்கு வருவதில்லை, ஆனால் அவரது சொத்துகளை நீதித்துறை பாதுகாக்க வேண்டுமா? என்று கேள்வி எழுப்பினார்.

    மேலும் மனுதாரர் இனிமேல் இந்த விவகாரங்களில் தலையிட மாட்டேன் என்று உத்தரவாத பத்திரம் நாளை தாக்கல் செய்தால் அவருக்கு முன்ஜாமின் வழங்குவது குறித்து உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று கூறிய நீதிபதி வழக்கின் விசாரணையை நாளைக்கு ஒத்தி வைத்தார்.

    • சாதியப் பாகுபாடு எண்ணங்களை ஒழிக்க வேண்டும் எனில் சகிப்புத்தன்மை அதிகரிக்க வேண்டும்.
    • சாதியை குறிக்கும் வண்ணக்கயிறுகள், சாதியை குறிக்கும் நெற்றித் திலகம் உள்ளிட்டவற்றுக்கு தடை விதிக்க வேண்டும்.

    அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு நிரந்தர டீன்களை நியமிக்கக் கோரி மதுரையை சேர்ந்த வெரோனிகா மேரி என்பவர் மதுரை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

    இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மதுரை, திருச்சி, விருதுநகர் மருத்துவ கல்லூரிகளில் டீன்களை உடனடியாக நியமிக்க தமிழ்நாடு சுகாதாரத்துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

    இந்த வழக்கின் விசாரணையின் போது விரைந்து நியமனப்படுத்துவதில் காலதாமதம் ஏன்? எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இந்த வழக்கின் விசாரணையில், பள்ளிகளில் சாதிய மோதல்களை தடுப்பதற்கான ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு குழு அறிக்கையை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி சுப்பிரமணியன் விமர்சித்தார்.

    "பள்ளிகளில் சாதிய மோதல்களை தவிர்க்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் அமைக்கப்பட்ட குழு, அளித்த பரிந்துரைகள் என்னைப் பொறுத்த அளவில் ஏற்புடையது அல்ல. சாதியப் பாகுபாடு எண்ணங்களை ஒழிக்க வேண்டும் எனில் சகிப்புத்தன்மை அதிகரிக்க வேண்டும். ஓய்வு பெற்ற நீதிபதியின் அறிக்கைக்கு பிறகே, நான் பொட்டு வைத்து வருகிறேன்" என்று நீதிபதி சுப்பிரமணியன் தெரிவித்தார்.

    பள்ளி மாணவர்களின் கைகளில் சாதியை குறிக்கும் வண்ணக்கயிறுகள், சாதியை குறிக்கும் நெற்றித் திலகம் உள்ளிட்டவற்றுக்கு தடை விதிக்க வேண்டும் என்று பள்ளிகளில் சாதிய மோதல்களை தடுப்பதற்கான ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ஸ்லாமியர்கள் வாழ்க்கை முழுவதும் தாடி வைத்திருப்பது வழக்கம்.
    • பல மதங்கள், இனங்களை கொண்ட இந்தியாவில் வேற்றுமையில் ஒற்றுமை என்பதே நமது சிறப்பு.

    மதுரையைச் சேர்ந்த முதல்நிலை காவலரான அப்துல் காதர் இப்ராஹிம், கடந்த 2018ம் ஆண்டு தாடி வைத்திருந்ததால் துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டு 2 ஆண்டுகளுக்கு ஊதிய உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது.

    இதனை எதிர்த்து காவலர் அப்துல் காதர் இப்ராஹிம், மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு நீதிபதி விக்டோரியா கெளரி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது, "இறைத்தூதர் நபிகளை பின்பற்றும் இஸ்லாமியர்கள் வாழ்க்கை முழுவதும் தாடி வைத்திருப்பது வழக்கம். பல மதங்கள், இனங்களை கொண்ட இந்தியாவில் வேற்றுமையில் ஒற்றுமை என்பதே நமது சிறப்பு.

    தமிழக காவல்துறையில் பணியாற்றும் முஸ்லிம் காவலர் தாடி வைக்க தடையில்லை. அவர்கள் நேர்த்தியாக தாடி வைத்து கொள்ள அனுமதி உண்டு. காவல் சட்ட விதிகளில் இதற்கு அனுமதி இருப்பதாகக் கூறிய நீதிபதி விக்டோரியா கெளரி, ஊதிய உயர்வு நிறுத்தி வைக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.

    • தொழில்நுட்ப வளர்ச்சியால் மீண்டும் வெவ்வேறு பெயர்களில் வெளி வருகின்றன.
    • ப்ரீ பயர் விளையாட்டில் வரும் வன்முறை காட்சி குழந்தைகள் மனதை பாதிக்கிறது.

    நாகர்கோவிலை சேர்ந்த அயரின் அமுதா என்பவர், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். தனது மகள் நாகர்கோவிலில் உள்ள தனியார் கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்பு படித்து வருகிறார் என்றும், கடந்த 6-ந் தேதி முதல் அவளை காணவில்லை என்றும் மனுவில் தெரிவித்திருந்தார்.

    இதுகுறித்து வடசேரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததாகவும், தடை செய்யப்பட்ட ஆன்லைன் விளையாட்டுகளில் ஆர்வம் காட்டி வந்த தமது மகளை, அந்த விளையாட்டு மூலம் பழக்கமான ஒருவர் அழைத்து சென்றுள்ளார், அவளை மீட்டு ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும் என்றும் தமது மனுவில் அமுதா கூறியிருந்தார்.

    இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் நிஷாபானு, ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதிகள், ப்ரீ பயர் போன்ற ஆன்லைன் விளையாட்டில் வரும் வன்முறை காட்சிகள் குழந்தைகள் மனதை பெரிதும் பாதிக்கும் வகையில் உள்ளன என்றும், ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்தாலும் தொழில்நுட்ப வளர்ச்சியால் மீண்டும் வெவ்வேறு பெயர்களில் அவை வெளிவந்து கொண்டே இருக்கின்றன எனவும் தெரிவித்தனர்.

    இதனால் இந்த விளையாட்டுகளை முழுவதுமாக தடை செய்வது என்பது இயலாத காரியமாக உள்ளது என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர். இந்நிலையில் மனுதாரர் தரப்பு மகளை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது அவர் தனது பெற்றோருடன் செல்வதாக தெரிவித்தார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

    ×