search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கனிம வளம்"

    • முன் பக்க சக்கரங்கள் உடைந்து தெறித்தன
    • கனரக லாரிகளை கட்டுப்படுத்தவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

    கன்னியாகுமரி :

    கேரள மாநிலத்திற்கு குமரி மாவட்டம் வழியாக பல்வேறு இடங்களில் இருந்து கனிம வளங்கள் கடத்தப்பட்டு வருகிறது. மேலும் முறையான அனுமதியின்றி அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றி கொண்டு செல்லப்படுகிறது.

    இதனை தடுத்து நிறுத்தும் படி பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால் முறையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாததால் கடத்தல் சம்பவம் தொடர்ந்து வருகிறது.

    இதனால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் மரண பயத்துடன் செல்கின்ற னர். இந்நிலையில் நேற்று நள்ளிரவு கேரளாவுக்கு கனிம வளங்களை கொண்டு செல்வதில் யார் முந்தி செல்வது என்ற போட்டியில் ராதாபுரத்தில் இருந்து வந்த கனரக லாரி, மார்த்தாண்டம் மேம்பாலம் தொடங்கும் பகுதியில் மோதியது.

    இதில் மேம்பாலத்தின் நுழைவாயிலில் இருந்த பெயர் பலகை துண்டானது. மேலும் டாரஸ் லாரி யின் முன் பக்க 2 சக்க ரங்களும் துண்டாகி சென்று உள்ளது. லாரியின் முன்பக்கம் முழுவதும் கடுமையாக சிதைந்து சேதமடைந்து உள்ளது.

    இந்தச் சம்பவத்தில் லாரியை ஓட்டி வந்த ஜெயராஜ் (வயது 42) காயம் அடைந்தார். அவரை லாரியின் உரிமை யாளர் மற்றும் சக டிரைவர்கள் அங்கிருந்து காரில் அழைத்துச் சென்று திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    மேலும் லாரியில் துண்டான 2 சக்கரங்க ளையும் கிரேன் மூலம் தூக்கி இரவோடு இரவாக அகற்றியதோடு லாரியையும் சாலை ஓரத்தில் ஒதுக்கி உள்ளனர்.

    மேலும் 30 அடி உயரம் உள்ள பெயர் பலகையையும் கிரேன் மூலம் தூக்கி சாலை ஓரத்திற்கு மாற்றி வைத்துவிட்டு அப்பகுதியில் விபத்து நடக்காதது போன்று மாற்றி வைத்துள்ளனர்.

    மேலும் சாலை முழுவதும் லாரியில் இருந்த ஆயில் கொட்டி உள்ளது. இதனால் இருசக்கர வாகனங்களில் சென்ற பலர் வழுக்கி விழுந்து விபத்துக்குள்ளாகினர்.

    விபத்து சம்பவம் நடந்த பிறகும் சம்பந்தப்பட்ட நிர்வாகமோ அல்லது போலீசாரோ கனரக லாரிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

    • ஒருவர் கைது; 2 டிரைவர்களுக்கு வலைவீச்சு
    • ஜே.சி.பி. மூலம் டெம்போவில் கனிமவள கற்கள்

    நாகர்கோவில் : குளச்சல் அருகே ரீத்தாபுரம் பேரூராட்சி கரையாகுளம் பகுதியில் ரீத்தாபுரம் கிராம நிர்வாக அலுவலகம் உள்ளது. இங்கு கிராம நிர்வாக அலுவலராக கலைச்செல்வன் (வயது 31) என்பவர் வேலை பார்த்து வருகிறார்.நேற்று மதியம் இந்த கிராம நிர்வாக அலுவலக எல்லைக்குட்பட்ட குளவிளை முண்டன்பிலா விளையில் அனுமதியின்றி கனிமவள கற்கள் டெம்போவில் ஏற்றி செல்லப்படுவதாக கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வனுக்கு தகவல் கிடைத்தது. உடனே அவர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். அப்போது அங்கு ஜே.சி.பி. மூலம் டெம்போவில் கனிமவள கற்கள் ஏற்றிக்கொண்டிருந்தனர். அதை கண்டதும் அவர் டெம்போவில் கற்கள் ஏற்றுவதை தடுத்தார். அப்போது அங்கு நின்ற ஆனக்குழியை சேர்ந்த விஜயகுமார் (50) என்பவர் கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வனை பிடித்து தள்ளிவிட்டார். அதே நேரத்தில் டெம்போ டிரைவர் வேகமாக ஓட்டி தப்பி சென்று விட்டார். இந்த சம்பவம் குறித்து கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வன் குளச்சல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் விஜயகுமார் மற்றும் ஜே.சி.பி. டிரைவர், டெம்போ டிரைவர் ஆகியோர் மீது அரசு பணி செய்யவிடாமல் தடுத்தது, மிரட்டல் விடுத்தது உள்பட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். அவர்களில் விஜயகுமாரை கைது செய்து, ஜே.சி.பி.யையும் பறிமுதல் செய்தனர். தப்பி சென்ற ஜே.சி.பி. மற்றும் டெம்போ டிரைவர்களை தேடி வருகின்றனர்.

    • கனிம வளங்கள் கேரளாவுக்கு கடத்தி செல்ல முயன்றது தெரியவந்தது.
    • கொல்லங்கோடு போலீசார் விசாரணை நடத்தி லாரி உரிமையாளர் மற்றும் டிரைவர் மீது வழக்கு பதிவு

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட கனிம பாதுகாப்பு திட்ட தாசில்தார் தினேஷ் சந்திரன் மற்றும் ஊழியர்கள் கொல்லங்கோடு பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். கேரளாவுக்கு கடத்தல்

    ஊரம்பு சந்திப்பில் அவர்கள் நின்ற போது கனிம வளம் ஏற்றிய டாரஸ் லாரி வந்தது. அந்த லாரியை தடுத்து நிறுத்தி தனி தாசில்தார் விசாரித்தார். அனுமதிக்கப்பட்டிருந்த நடைச்சீட்டை வாங்கி பார்த்த போது கொல்லங்கோடு பகுதிக்கு என்று இருந்தது.ஆனால் அதனை மறைத்து கனிம வளங்கள் கேரளாவுக்கு கடத்தி செல்ல முயன்றது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து டாரஸ் லாரியை பறிமுதல் செய்து கொல்லங்கோடு போலீஸ் நிலையத்தில் அதிகாரிகள் ஒப்படைத்தனர். இது சம்பந்தமாக தனி தாசில்தார் தினேஷ் சந்திரன் கொடுத்த புகாரின் பேரில் கொல்லங்கோடு போலீசார் விசாரணை நடத்தி லாரி உரிமையாளர் மற்றும் டிரைவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    • ரூ.25 லட்சம் அபராதம் வசூல்
    • அதிகாலை வேளைகளில் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டம் வழியாக கேரளாவிற்கு தினமும் டாரஸ் லாரிகளில் கனிம வளங்கள் கொண்டு செல்லப்பட்டு வருகிறது. கனிம வளங்கள் அதிகபாரத்துடன் கொண்டு செல்லப்படுவதால் சாலைகள் சேதம் அடைவதுடன் விபத்துகளும் அதிக அளவு நடைபெற்று வருகிறது.

    எனவே அதிகபாரம் ஏற்றி செல்லும் டாரஸ் லாரிகளை பிடிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். நாகர்கோவில் நகர பகுதியில் காலை நேரங்களில் கனரக வாகனங்கள் நுழைய தடை இருந்து வரும் நிலையில் புறநகர் பகுதிகளில் அதிக அளவு கனிம வளங்கள் கொண்டு செல்லப்பட்டு வருகிறது.

    அப்டா மார்க்கெட்டில் இருந்து புத்தேரி வழியாக இறச்சகுளம் களியங்காடு வழியாக கேரளாவிற்கு கனிம வளங்கள் லாரிகளில் கொண்டு செல்லப்படுவதால் அந்த பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. கனிம வள கடத்தலை கட்டுப்படுத்த இரவு, அதிகாலை வேளைகளில் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

    களியக்காவிளை, ஆரல்வாய்மொழி, அஞ்சுகிராமம், நாகர்கோவில் உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள். அதிக பாரம் ஏற்றி வரும் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து அபராதம் விதித்து வரு கிறார்கள். அனுமதிஇன்றி கனிம வளங்கள் கொண்டு செல்லும் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது.

    கடந்த 15 நாட்களில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட டாரஸ் லாரிகளில் அதிக பாரம் ஏற்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டு அந்த லாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. ரூ.25 லட்சம் அபராத தொகையாக வசூல் ஆகியுள்ளது. அதிக பாரம் ஏற்றி வந்து பிடிபட்ட லாரிகள் அந்தந்த போலீஸ் நிலை யங்களின் முன் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது. அபராத தொகை கட்டிய பிறகு மட்டுமே அந்த லாரிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றன.

    கோட்டார் பகுதியில் நேற்று முன்தினம் அனுமதி இன்றி கனிம வளங்களை கொண்டு சென்ற 9 டாரஸ் லாரிகள் பிடிபட்டது. அந்த லாரி டிரைவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பிடிப்பட்ட லாரிகள் போலீஸ் நிலையத்தின் முன் பகுதியில் சாலையில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டு வருகிறது.

    இரவு நேரங்களில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் தற்போது காலை நேரங்களில் அதிக அளவு வாகனங்களில் கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுகின்றன. நாகர்கோவில் நகர பகுதிகளிலும் காலை நேரங்களில் கனிம வளங்கள் கொண்டு செல்லப்பட்டு வருகிறது.

    எனவே போலீசார் காலை நேரங்களிலும் சோதனையை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது.

    • போலீசாரின் சோதனைக்கு பயந்து சாலையோரம் நிறுத்தப்பட்ட லாரிகளும் சிக்கின
    • களியக்காவிளை அருகே இன்று அதிகாலை சோதனை

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டத்தில் இருந்தும், வெளி மாவட்டங் களில் இருந்தும் 100-க் கணக்கான லாரிகள் கனிம வளங்களை வாகனங்களில் அதிக பாரம் ஏற்றி கேரளா விற்கு கடத்தி செல்வது தொடர் கதையாக நடந்து வருகிறது.

    இந்த லாரிகள் இரவு-பகலாக சாலையில் செல்வ தால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதோடு, தொடர் விபத்துக்களும் நடப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். கனிம வளங்கள் கொண்டு செல்லப்படும் லாரிகளால் காலை நேரத்தில் மாண வர்கள் பள்ளிக்கு செல்ல முடியாமலும் பணியா ளர்கள் குறித்த நேரத்தில் வேலைக்கு செல்ல முடியா மலும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    சட்ட விரோதமாக பாறைகளை உடைத்து கடத்தப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று அரசியல் கட்சிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டன. இதனை தொடர்ந்து அதிக பாரம் ஏற்றி செல்லும் வாகனங்களை பறிமுதல் செய்து வாகனத்தின் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் ஆகியோர் உத்தர விட்டனர். அதன்படி கடந்த சில நாட்களாக குமரி மாவட்டத்தில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு கனிம வளங்கள் கடத்தப்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.

    இன்று காலை தனிப்பிரிவு போலீசார் படந்தாலுமூடு பகுதியில் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக 4 வாகனங்கள் வந்தன. அவற்றை தடுத்து நிறுத்தி சோதனை செய்த போது, கனிம வளங்களை அதிக பாரம் ஏற்றி கேரளாவிற்கு கடத்தி செல்வது தெரிய வந்தது.

    இதை தொடர்ந்து அந்த வாகனங்களை தனிப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த வாகனங்கள் களியக்கா விளை போலீஸ் நிலை யத்திற்கு கொண்டு செல்லப் பட்டன. மேலும் இந்த கனிம வளங்கள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது? இதன் உரிமையாளர்கள் யார்? என்றும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையில் குழித்துறை முதல் களியக்காவிளை வரை சாலையோரம் கனிமவளம் ஏற்றிய லாரிகள் நிற்பதாக தனிப்படையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அந்த லாரிகளை போலீசார் சோதனை செய்தபோது, அதில் அதிக அளவில் கனிம வளங்கள் ஏற்றப்பட்டி ருப்பது தெரியவந்தது.

    ஆனால் லாரியில் டிரைவர் உள்பட யாரும் இல்லை. இதனால் லாரி களை போலீசார் கைப்பற்றி உள்ளனர். போலீசாரின் சோதனை காரணமாக, கனிமவளங்களை கடத்திச் செல்லும் வாகனங்களை ஆங்காங்கே விட்டு விட்டு டிரைவர்கள் தப்பிச் செல்வது ஏற்கனவே நடந்து வருகிறது. அதுபோலத் தான் தற்போதும் இந்த வாகனங்களை நிறுத்தி விட்டு, டிரைவர்கள் தப்பிச் சென்றிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். அந்த லாரிகளில் இருந்த ஆவணங்களை கைப்பற்றிய போலீசார், அதனை வைத்து உரிமையாளர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விபத்து அபாயம் உள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு
    • பணியாளர்கள் குறித்த நேரத்தில் வேலைக்கு செல்ல முடியாமலும் அவதி

    கன்னயாகுமரி :

    குமரி மாவட்டத்தில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான லாரிகள், அதிக பாரத்துடன் கனிம வளங்களை கேரளாவிற்கு கடத்தி செல்வது தொடர் கதையாக நடந்து வருகிறது.

    கனிம வள லாரிகளை குழித்துறை முதல் களியக்காவிளை வரை ஒன்றன் பின் ஒன்றாக சாலையோரங்களில் நிறுத்துவதால் பிற வாகனங்கள் செல்ல முடியாமல் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றன. மேலும் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

    இந்த லாரிகள் இரவு, பகலாக சாலையில் செல்வதால் காலை நேரத்தில் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாமலும் பணியாளர்கள் குறித்த நேரத்தில் வேலைக்கு செல்ல முடியாமலும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    களியக்காவிளை போலீசார் அதிக பாரம் ஏற்றி செல்லும் வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர். ஆனால் சில டிரைவர்கள், போலீசாரை பார்த்தவுடன் கனிம வள லாரிகளை சாலையின் ஓரங்களில் நிறுத்தி விட்டு தப்பியோடி விடுகின்றனர். போலீசார் லாரியின் பக்கம் வந்து பார்க்கும் போது யாரும் இல்லாததால் அதனை பறிமுதல் செய்ய முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

    வாகனத்தின் அருகிலோ அல்லது தொலைவிலோ போலீசார் நின்றால் அந்த பக்கமே டிரைவர்கள் வருவதில்லை. போலீசார் அந்த இடத்தை விட்டு சென்று விட்டால் மறு கணமே லாரியை எடுத்து செல்கின்றனர். இந்த சம்பவம் தொடர் கதையாக நடந்து வருகிறது. ஆகவே போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து விட்டு சாலையோரங்களில் நிறுத்தி செல்லும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கடையம் சின்னத்தேர் பகுதி அருகில் குழந்தைகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
    • 3 பேரும் அவர்களது வீட்டிற்கு சென்று போராட்டத்தை தொடர்ந்தனர்.

    கடையம்:

    கடையம் பகுதியில் இருந்து கேரளாவிற்கு கனிம வளம் கடத்தப்படு வதை தடுக்க கல்யாணிபுரம் பகுதியை சேர்ந்த கீழக்கடையம் பஞ்சாயத்து தலைவர் பூமிநாத் தலைமையில் ஏராளமான போரா ட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக பூமிநாத் மகன் அஸ்வின் சுவநாத் மற்றும் அவரது சகோதரர் சந்திரசேகர் மகள்கள் சுப பிரியங்கா (வயது 11), சுபிதா (8) ஆகிய 3 பேரும் கனிம வளங்கள் கடத்தலை தடுக்கக் கோரி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதினர். மேலும் தமிழ்ப்புத்தாண்டு நாளை முன்னிட்டு பட்டினி போராட்டம் நடத்த இருப்ப தாகவும் அந்த கடிதத்தில் தெரிவித்து இருந்தனர்.

    இந்த நிலையில் நேற்று குழந்தைகள் 3 பேரும், அவரது பெற்றோருடன் கடையம் சின்னத்தேர் பகுதி அருகில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது அனுமதி இல்லாத காரணத்தினால் பூமிநாத், சந்திரசேகர், கீழக்கடையம் மாரியப்பன் ஆகிய 3 பேரையும் போலீசார் அழைத்து சென்றனர்.

    இதைத்தொடர்ந்து குழந்தைகள் 3 பேரும் அவர்களது வீட்டிற்கு சென்று பட்டினி போரா ட்டத்தை தொடர்ந்தனர். இதுகுறித்து தகவலறிந்த முன்னாள் அம்பை எம்.எல்.ஏ.வும், இயற்கை வள பாதுகாப்புச் சங்க தலைவருமான ரவி அருணன், செயலாளர் ஜமீன், தெற்கு கடையம் ஒன்றிய கவுன்சிலர் மாரி குமார் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் அந்த குழந்தைகளை சந்தித்து ஜூஸ் வழங்கி, பேச்சு வார்த்தை நடத்தி போராட்ட த்தை கைவிட செய்தனர். தொடர்ந்து காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றவர்களும் உண்ணா விரதத்தில் ஈடுபட்டதால் அங்கேயும் இவர்கள் சென்று பேச்சு வார்த்தை நடத்தி ஜூஸ் வழங்கினர். தொடர்ந்து மாலையில் 3 பேரும் விடுவிக்கப்பட்டனர்.

    • சட்ட விரோதமாக பாறைகள் உடைத்து கடத்தப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று அரசியல் கட்சிகள் தொடர் போராட்டம்,
    • களியக்காவிளை போலீசார் பி.பி.எம். சந்திப்பு பகுதியில் வாகன சோதனை

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் 100-க்கணக்கான லாரிகளில் அதிக பாரத்துடன் கனிம வளங்களை கேரளாவிற்கு கடத்தி செல்வது தொடர் கதையாக நடந்து வருகிறது.

    இந்த லாரிகள் இரவு, பகலாக சாலையில் செல்வதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதோடு தொடர் விபத்துக்களும் ஏற்பட்டு வருகிறது. இதனால் தினசரி கனிமவளங்கள் கொண்டு செல்லப்படும் லாரிகளால் காலை நேரத்தில் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாமலும், பணியாளர்கள் குறித்த நேரத்தில் வேலைக்கு செல்ல முடியாமலும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    சட்ட விரோதமாக பாறைகளை உடைத்து கடத்தப்படுவதை தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று அரசியல் கட்சிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை களியக்காவிளை போலீசார் பி.பி.எம். சந்திப்பு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த 3 லாரிகளை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், கனிம வளங்களை அதிக பாரம் ஏற்றி கேரளாவிற்கு கடத்தி செல்வது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து 3 லாரிகளையும் பறிமுதல் செய்த போலீசார் அதனை களியக்காவிளை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். மேலும் இந்த கனிம வளங்கள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது. இதன் உரிமையாளர் யார்? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இயற்கையின் தன்மை பாதிக்கப்பட்டு பருவநிலை மாற்றம் ஏற்பட்டு வருகிறது.
    • பொதுமக்கள் மத்தியில் அரசுக்கு அவப்பெயர் ஏற்பட்டு உள்ளது.

     உடுமலை :

    உடுமலை பகுதியில் தொடரும் திருட்டு சம்பவங்களைத் தடுக்க போலீசார் ரோந்துப் பணியை அதிகரிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:- உடுமலை பகுதியில் பல இடங்களில் வீட்டின் பூட்டை உடைத்து வீடு புகுந்து திருடிய குற்றவாளிகள் இன்னும் போலீசாரிடம் சிக்காமல் டிமிக்கி கொடுத்து வருகின்றனர்.இந்தநிலையில் தொடர்ந்து நடைபெறும் திருட்டு சம்பவங்களில் குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதை விட சம்பவம் குறித்து வெளியே தெரியாமல் மறைப்பதிலேயே போலீசார் ஆர்வம் காட்டுகின்றனர்.அந்தவகையில் உடுமலையில் முக்கிய சாலையான கல்பனா சாலையில் கேரளாவைச் சேர்ந்த சிபு ஜோஸ் என்பவர் பல ஆண்டுகளாக ஸ்டுடியோ நடத்தி வருகிறார்.அந்த கட்டிடத்திலேயே அவருடைய வீடும் உள்ளது.இந்தநிலையில் அவருடைய வீட்டின் முன் நிறுத்தியிருந்த விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.அதிகாலை நேரத்தில் 2 மர்ம நபர்கள் அவருடைய வீட்டு வளாகத்துக்குள் புகுந்து மோட்டார் சைக்கிளை தள்ளிச் செல்வது கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியுள்ளது.மேலும் அதே இரவில் உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அருகில் உள்ள அப்பாவு வீதியில் சீனு என்பவர் வீட்டு முன் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.இதற்கு சில நாட்களுக்கு முன் காந்திநகரிலுள்ள ஒரு வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

    பொதுவாக நள்ளிரவு 1 மணி முதல் அதிகாலை 4 மணிக்கு இடையிலான,மக்கள் அசந்து தூங்கும் நேரத்திலேயே திருடர்கள் கைவரிசை காட்டுகின்றனர்.அந்த நேரத்தில் போலீசாரும் ரோந்துப் பணியை கிட்டத்தட்ட முடித்து விட்டு ஓய்வெடுக்கத் தொடங்கி விடுகின்றனர்.இது திருடர்களுக்கு சாதகமாக மாறி விடுகிறது.உடுமலை பகுதியில் நடைபெற்று வரும் தொடர் திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.எனவே போலீசார் ரோந்துப் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்.மேலும் ஒரு பகுதிக்கு போலீசார் ரோந்து முடித்துச் சென்று விட்டால் மீண்டும் வரமாட்டார்கள் என்ற நம்பிக்கை திருடர்களுக்கு ஏற்படாத வண்ணம் ஒதுக்குப்புறமான பகுதிகளுக்கு திடீர் விசிட் செய்ய வேண்டும்.மேலும் இரவு ரோந்துப் பணியின் போது சைரன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.அத்துடன் வீடுகள் மற்றும் வீதிகளில் கண்காணிப்புக்கேமராக்கள் பொருத்துவதன் மூலம் பொதுமக்கள் போலீசாருக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கூறினர்.

    கனிம வளங்களை கொள்ளை அடித்தல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதால் இயற்கையின் தன்மை பாதிக்கப்பட்டு பருவநிலை மாற்றம் ஏற்பட்டு வருகிறது.அதை உணர்த்தும் விதமாக உடுமலையை அடுத்த அமராவதி காவல் சரக பகுதியில் முறையான அனுமதியின்றி மலைகளை வெடிவைத்து தகர்த்து கற்கள் உற்பத்தி செய்தும் கிராவல் மண்ணை அள்ளிச் செல்லும் சம்பவம் கடந்த சில நாட்களாக மும்முரமாக நடைபெற்று வருவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்து உள்ளனர்.இது குறித்து அவர்கள் கூறுகையில், பூமியில் படைக்கப்பட்ட ஒவ்வொரு பொருளையும் பேணிக்காத்து சேதாரம் இல்லாமல் பராமரித்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்ப்பது தலையாய கடமையாகும்.இதில் அரசு மற்றும் அரசு அதிகாரிகளின் பங்கு அதிக அளவில் உள்ளது.குறிப்பிட்ட இடைவெளியில் ரோந்து மற்றும் களஆய்வு சென்று கனிமவளங்களை பாதுகாத்து பராமரிக்க வேண்டியது தலையாய கடமையாகும்.

    ஆனால் உடுமலையை அடுத்த அமராவதி பகுதியில் நிலைமை தலைகீழாக உள்ளது.கடந்த சில நாட்களாக மலை அடிவாரப் பகுதி மற்றும் அரசு புறம்போக்கில் உள்ள மலைகளை வெடிவைத்து தகர்த்து சைஸ்,சிறுகல் மற்றும் வேலி போடுவதற்கு பயன்படும் கம்பிகற்களை உற்பத்தி செய்தும் நிலத்தடி நீர்உயர்வுக்கு ஆதாரமாக உள்ள கிராவல் மண்ணை கடத்திச் சென்ற வண்ணம் உள்ளனர். இதனால் இயற்கையால் படைக்கப்பட்ட கண்ணுக்குத் தெரியாத அரியவகை சிறு உயிரினங்கள் வாழ்வாதாரத்தை இழந்தும் அழிந்தும் வருகின்றன.மேலும் கிராவல்மண் கடத்தல் வெளியில் தெரியாத வகையில் மண்ணை முழுவதுமாக தண்ணீரில் நனைத்து லாரியில் லோடு ஏற்றி செல்கின்றனர்.இதனால் சாலை முழுவதும் ஈரப்பதம் அடைந்து சேதம் ஏற்பட்டு வருகிறது. ஒரு சில நபர்களின் சுயலாபத்திற்காக பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள சாலை சேதம் அடைவது வேதனைக்குரியது. அதுமட்டுமின்றி கனிம வள கொள்ளையால் இயற்கை மாற்றம் அடைந்து வருங்கால சந்ததியினரின் வாழ்வாதாரம் பாதிக்கும் சூழல் உருவாகி உள்ளது.இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய வருவாய் மற்றும் காவல்துறையினர் கடத்தலை தடுக்காமல் வேடிக்கை பார்ப்பதுடன் உடந்தையாகவும் உறுதுணையாகவும் செயல்பட்டு வருகின்றனர்.

    இதன் காரணமாக இரவு பகலாக கனிமவள கொள்ளை தங்கு தடையின்றி முழு வீச்சில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.இதனால் பொதுமக்கள் மத்தியில் அரசுக்கு அவப்பெயர் ஏற்பட்டு உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் அமராவதி பகுதியில் உடனடியாக ஆய்வு செய்து கனிமவள கொள்ளையை தடுத்தும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன் அதற்கு உறுதுணையாக செயல்பட்டு வருகின்ற அதிகாரிகள் மீதும் துறைரீதியான நடவடிக்கை எடுப்பதற்கு முன்வர வேண்டும்.இவ்வாறு தெரிவித்தனர்.

    • அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை
    • ஜே.சி.பி. எந்திரத்தை பறிமுதல் செய்து தக்கலை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    கன்னியாகுமரி:

    தக்கலை சுற்றுவட்டார பகுதியில் பல்வேறு இடங்களில் கனிம வளங்கள் கடத்தப்படுவதை தடுக்க வலியுறுத்தி பல்வேறு அமைப்புகள் போராடி வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாலை தக்கலை அருகே பள்ளியாடி பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் கனிம வளங்கள் எடுத்து கடத்தப்படுவதாக தக்கலை தாசில்தாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக தாசில்தார் வினோத் தலைமையில் வருவாய் ஆய்வாளர் ராஜேஷ், மருதூர்குறிச்சி கிராம அதிகாரி குமார் உள்பட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    அதிகாரிகளை கண்டதும் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. உடனே மருதூர்குறிச்சி கிராம அதிகாரி குமார் தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கனிம வளம் கடத்த முயன்றதாக டிரைவர் விருதுநகர் தபசுலிங்கம் பகுதியை சேர்ந்த பிரபாகரன் (வயது 25) என்பவரை கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய ஜே.சி.பி. எந்திரத்தை பறிமுதல் செய்து தக்கலை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    • நிலத்தடி நீர் இருப்புக்கு ஆதாரமாக உள்ள கிராவல் மண் கடத்தலும் அதிகரித்து வருகிறது.
    • இயற்கையால் படைக்கப்பட்ட அரியவகை சிறு உயிரினங்கள் வாழ்வாதாரத்தை இழந்தும் அழிந்தும் வருகின்றன.

    உடுமலை :

    உடுமலையை அடுத்த அமராவதி போலீஸ் சரகத்துக்குட்பட்ட பகுதியில் தம்புரான் கோவில் அருகே அனுமதியின்றி மலைகளை வெடிவைத்து தகர்த்து கற்கள் உற்பத்தி செய்தும் கிராவல் மண்ணை அள்ளிச் செல்லும் சம்பவமும் கடந்த சில நாட்களாக மும்முரமாக நடைபெற்று வருவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்து உள்ளனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது:-

    உடுமலையை அடுத்த அமராவதி பகுதியில் அரசு புறம்போக்கில் உள்ள மலைகளை வெடிவைத்து தகர்த்து சைஸ், சிறுகல் மற்றும் வேலி போடுவதற்கு பயன்படும் கம்பிகற்களை உற்பத்தி செய்து கடத்திச்சென்ற வண்ணம் உள்ளனர். அதே போன்று நிலத்தடி நீர் இருப்புக்கு ஆதாரமாக உள்ள கிராவல் மண் கடத்தலும் அதிகரித்து வருகிறது. இதனால் அரசுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது. அத்துடன் இயற்கையால் படைக்கப்பட்ட கண்ணுக்குத் தெரியாத அரியவகை சிறு உயிரினங்கள் வாழ்வாதாரத்தை இழந்தும் அழிந்தும் வருகின்றன. முறையான அனுமதி பெறாமல் முறைகேடான வழியில் நடைபெற்று வரும் தொடர் கனிமவள கொள்ளையால் தட்பவெப்ப நிலை மாற்றமும் ஏற்படக்கூடிய சூழல் உருவாகி உள்ளது.

    இது சம்பந்தமாக புகார் அளித்தாலும் நடவடிக்கை எடுப்பதில்லை. மாறாக புகார் அளிப்பவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய கனிமவளம், வருவாய் மற்றும் காவல்துறையினர் கடத்தலை தடுக்காமல் வேடிக்கை பார்த்து வருகின்றனர். இதன் காரணமாக இரவு பகலாக கனிமவள கொள்ளை தங்கு தடையின்றி முழுவீச்சில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் அமராவதி பகுதியில் ஆய்வு செய்து கனிமவள கொள்ளையில் ஈடுபட்டு வருகின்ற நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன் அதற்கு உறுதுணையாக செயல்பட்ட அதிகாரிகள் மீதும் துறைரீதியான நடவடிக்கை எடுப்பதற்கு முன்வர வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    ×