search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இன்புளூயன்சா"

    • சுயமாக மருந்து-மாத்திரைகள் வாங்கி சாப்பிடக் கூடாது.
    • இந்த நோய் பாதித்தவர்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும்.
    • இருமினாலோ, தும்மினாலோ இந்த நோய் மற்றவர்களுக்கும் பரவி விடும்.

    தமிழகத்தில் 'இன்புளூயன்சா' காய்ச்சல் பரவல் மக்களை கதிகலங்க வைத்துள்ளது.

    கொரோனா தொற்று போன்று 1918-ம் ஆண்டு உலகையே அச்சுறுத்திய நோயாக 'இன்புளூயன்சா' எனப்படும் புளூ காய்ச்சல் இருந்தது. அந்த காலகட்டத்தில் இந்த நோய்க்கு லட்சக்கணக்கான மக்கள் பலியாகினர்.

    பின்னர், மருத்துவ நிபுணர்கள் தடுப்பூசியை கண்டு பிடித்து இந்த கொள்ளை நோயின் வீரியத்தை கட்டுப்படுத்தினர். இதையடுத்து 'இன்புளுயன்சா' நோய் குணப்படுத்தக்கூடிய சாதாரண வகை காய்ச்சல் போன்று மாறியது. கோடை வெயில் காலம் முடிவடைந்து பருவமழை தொடங்கும் காலகட்டத்தில் இந்த 'இன்புளூயன்சா' வைரஸ் தொற்று பரவுவது வழக்கம்.

    கடந்த 2 ஆண்டுகள் கொரோனா நோய் தொற்றில் இருந்து தப்பிக்க முககவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த உணவு வகைகளை உண்ணுதல் என பொதுமக்கள் கட்டுப்பாடுகளை முறையாக கடைபிடித்ததால் 'இன்புளூயன்சா' காய்ச்சல் கட்டுக்குள் இருந்தது.

    தற்போது கொரோனாவின் கொட்டம் தடுப்பூசிகள் மூலம் அடக்கப்பட்டுள்ளதால், மக்கள் மத்தியில் கொரோனா நோய் பற்றிய அச்சம் முற்றிலும் விலகி விட்டது. இதனால் முககவசம், சமூக இடைவெளி போன்ற கட்டுப்பாடுகளை பெரும்பாலான மக்கள் கைவிட்டுவிட்டனர்.

    இந்தநிலையில் தற்போது 'இன்புளூயன்சா' காய்ச்சல் வேகமாக பரவி மக்களை கதி கலங்க வைத்துள்ளது. தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.

    இந்த வகை காய்ச்சல் மட்டுமின்றி டெங்கு, டைபாய்டு போன்ற வைரஸ் காய்ச்சலும் மக்களை அச்சுறுத்தி வருகிறது. அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவதற்கு கூட்டம் அலைமோதுகிறது. தனியார் ஆஸ்பத்திரிகளிலும் காய்ச்சல் பாதித்தவர்கள் அதிகம் பேர் பரிசோதனைக்காக வருகிறார்கள். காய்ச்சலால் குழந்தைகள், முதியோர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

    சென்னை எழும்பூர் அரசு நலக்குழந்தைகள் நல மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவும், உள்நோயாளிகள் பிரிவும் பரபரப்பாக இயங்கி வருகிறது. இந்த ஆஸ்பத்திரியில் உள்ள 560 படுக்கைகளும் நிரம்பி உள்ளன. 'இன்புளூயன்சா', டெங்கு போன்ற வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்படும் குழந்தைகளை அரசு டாக்டர்களும், நர்சுகளும் சிறப்பாக கவனிப்பதால் விரைவில் குணமடைந்து வருகின்றனர்.

    தற்போது பலவிதமான காய்ச்சல் பரவுவதற்கான காரணங்கள் குறித்தும், இதில் இருந்து குழந்தைகள் குணமடைவதற்கான வழிமுறைகள் குறித்தும் மாநில குழந்தைகள் நல ஒருங்கிணைப்பாளர் டாக்டர் எஸ்.சீனிவாசன் 'தினத்தந்தி' நிருபருக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    குளிர்ந்த காலநிலை வைரஸ் உருவாகுவதற்கு உகந்ததாக இருக்கிறது. அந்த வகையில் பருவமழை காரணமாக செப்டம்பர், அக்டோபர், நவம்பர் ஆகிய 3 மாதங்கள் வைரஸ் காய்ச்சல் தாக்குதல் அதிகம் இருக்கும். இந்த காலகட்டத்தில் பரவும் காய்ச்சலை கண்டு யாரும் பயப்பட தேவையில்லை. அதே நேரத்தில் அலட்சியமாகவும் இருந்து விடக்கூடாது.

    உடலின் வெப்ப நிலை 102 டிகிரி மேல் தொடர்ந்து இருந்தால் டாக்டரிடம் சென்று உடல் பரிசோதனை செய்வது மிக அவசியம். ரத்த பரிசோதனை மூலம் எந்த வகையான காய்ச்சல் தாக்கியிருக்கிறது? என்பதை அறிந்து அதற்கு ஏற்ப சிகிச்சையை எடுத்துக் கொள்ளலாம். டாக்டர்களின் அறிவுரையின்றி மருந்தகங்களில் சுயமாக மருந்து-மாத்திரைகள் வாங்கி சாப்பிடக் கூடாது. இது உயிருக்கே ஆபத்தாக அமைந்துவிடும்.

    காய்ச்சல் பாதிப்பால் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு சிகிச்சை பெறுவதற்கு அதிகம் பேர் வருகிறார்கள். அதே போன்று சிகிச்சை மூலம் குணமடைந்து 'டிஸ்சார்ஜ்' செய்யப்படுவோர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. 'இன்புளூயன்சா' காய்ச்சல், தொற்று நோய் என்றாலும் டாக்டர்களின் அறிவுரையின்படி மருந்து, மாத்திரைகளை எடுத்து கொண்டாலே விரைவில் குணமடைந்து விடலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல ஆஸ்பத்திரியின் இயக்குனர் டாக்டர் எழிலரசி கூறியதாவது:-

    'இன்புளூயன்சா' வைரஸ் காய்ச்சலை பொறுத்தவரை ஏ, பி, பேரா-இன்புளூயன்சா, எச்1.என்1., போன்ற பல வகைகளில் பரவுகிறது. இவற்றில் எச்1.என்.1 வைரஸ்சின் பாதிப்பு தான் மிகக்குறைவான வகையில் இருந்து வருகிறது.

    இதேபோல் குழந்தைகளின் நுரையீரலை தாக்கும் வைரஸ் (ஆர்.எஸ்.வி.) காய்ச்சல், சாதாரண வைரஸ் காய்ச்சல், டெங்கு காய்ச்சல், மலேரியா போன்றவை பருவநிலை மாற்றம் காரணமாக பரவி வருகிறது. கடந்த 2017-2018-ம் ஆண்டுகளில் இந்த எச்1.என்1 வைரஸ்சின் பாதிப்புதான் பெரிய வகையில் இருந்தது.

    எனவே தற்போதைய சூழலில் இன்புளூயன்சா மற்றும் டெங்கு காய்ச்சலின் பாதிப்பை முக்கியமாக எடுத்துக்கொள்ள வேண்டும். தொண்டை வலி, வறட்டு இருமல், மூக்கில் நீர் வடிதல் போன்ற அறிகுறிகளுடன் ஏற்படும் காய்ச்சலுக்கு டாக்டரை உடனடியாக அணுக வேண்டும்.

    கொரோனாவுக்கு கொடுக்கப்படும் அறிவுரைகள்தான் 'இன்புளூயன்சா' காய்ச்சலுக்கும் வழங்கப்படுகிறது. காய்ச்சல் அறிகுறி உள்ள குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம். முககவசம் அணிவது அவசியம். அதேபோல் பெரியவர்களுக்கு காய்ச்சல் வரும்போது தனிமைபடுத்தி கொள்வது மிகவும் முக்கியம் ஆகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தமிழகத்தில் 'இன்புளூயன்சா' நோயால் நேற்று முன்தினம் வரையில் 465 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அரசு ஆஸ்பத்திரிகளில் 10 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருவோர்களுக்கு ரத்த பரிசோதனை மூலம் 'இன்புளூயன்சா' அறிகுறி இருக்கிறதா? என்பது கண்டறியப்பட்டு வருகிறது.

    தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவின்பேரில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருவது வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

    தற்போது தமிழகத்தில் 3 நாட்களில் குணமடைய கூடிய சாதாரண வகை காய்ச்சலில்தான் அதிகம் பேர் பாதிக்கப்படுகின்றனர் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

    தண்ணீரை காய்ச்சி குடிப்பது நல்லது

    ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு காய்ச்சல் வந்தால், அடுத்தடுத்து மற்றவர்களும் பாதிக்கப்படும் நிலை உள்ளது. தற்போது பரவும் வைரஸ் காய்ச்சல் உடல்நிலையை சோர்வடைய செய்து மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துகிறது.

    எனவே காய்ச்சல் பாதிக்காமல் தப்பிப்பதற்காக டாக்டர்கள் வழங்கும் பரிந்துரைகள் வருமாறு:-

    * குடிநீரை காய்ச்சி பருக வேண்டும். சூடான உணவையே உண்ண வேண்டும். ஐஸ்கீரிம், குளிர்பானங்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

    * 'இன்புளூயன்சா' போன்ற வைரஸ் காய்ச்சல் உள்ளவர்கள் இருமினாலோ, தும்மினாலோ இந்த நோய் மற்றவர்களுக்கும் பரவி விடும். எனவே இந்த நோய் பாதித்தவர்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். மற்றவர்களும் அணிந்தால் நோய் தாக்குதலில் இருந்து தப்பிக்கலாம்.

    * நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். நீர்ச்சத்து உள்ள பானங்களை அதிகம் அருந்தலாம்.

    * காய்ச்சல் உள்ள குழந்தைகள் சாப்பிடுவதற்கு அடம் பிடிப்பார்கள். எனவே அவர்கள் 2 மணி நேரத்துக்கு ஒருமுறை என ஒரு நாளைக்கு 10 முறை கொஞ்சம், கொஞ்சமாக உணவை ஊட்டிவிடலாம்.

    * 'இன்புளூயன்சா' காய்ச்சலை தடுப்பதற்கு தடுப்பூசி உள்ளது. இந்த தடுப்பூசியை குழந்தைகள் போட்டுக்கொள்ளலாம்.

    ×