என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முகமது பின் சல்மான்"

    • இந்தியா-சவுதி அரேபியா இடையே சிறப்பான நல்லுறவு உள்ளது.
    • இந்தியாவின் 4-வது பெரிய வர்த்தக கூட்டாளியாக சவுதி அரேபியா உள்ளது.

    ரியாத்:

    சவுதி அரேபியா இளவரசர் முகமது பின் சல்மான் அடுத்த மாதம் மத்தியில் இந்தியா வரவுள்ளார்.

    அடுத்த மாதம் 15, 16-ந்தேதிகளில் ஜி-20 நாடுகள் உச்சி மாநாடு இந்தோனேசியாவில் நடக்கிறது.

    ஜி-20 மாநாட்டில் பங்கேற்க செல்லும் சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் வழியில் இந்தியாவுக்கு வருகிறார்.

    கடந்த மாதம் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரின் அழைப்பை ஏற்று சவுதி இளவரசர் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சவுதி இளவரசரின் இந்திய பயணத்தின் போது இரு நாடுகள் இடையே எரிசக்தி, பாதுகாப்பு, வர்த்தகம், முதலீடுகள் தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு உள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பிரதமர் மோடியும்-சவுதி இளவரசர் முகமது பின் சல்மானும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்தியா-சவுதி அரேபியா இடையே சிறப்பான நல்லுறவு உள்ளது. இந்தியாவின் 4-வது பெரிய வர்த்தக கூட்டாளியாக சவுதி அரேபியா உள்ளது. இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 18 சதவீதம் சவுதியில் இருந்து இறக்குமதி செய்கிறது.

    சவுதி அரேபியா இளவரசர், கடைசியாக கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியா வந்திருந்தார். தற்போது உக்ரைன்-ரஷியா போர் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் உள்ள நிலையில் சவுதி அரேபியா இளவரசரின் இந்திய பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    • துருக்கியில் உள்ள சவுதி அரேபியா துணைத் தூதரகத்தில் பத்திரிகையாளர் ஜமால் கசோகி கொலை செய்யப்பட்டார்.
    • அவரை கொலை செய்ய உத்தரவிட்டதாக சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் மீது வழக்கு தொடரப்பட்டது.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கசோகி சவுதி அரேபிய அரச குடும்பத்தின் தீவிர விமர்சகராக இருந்தார். கடந்த 2017-ம் ஆண்டில் சவுதி அரேபியாவில் இருந்து வெளியேறி அமெரிக்காவில் தஞ்சம் அடைந்தார். துருக்கி பெண்ணான ஹதீஜா ஜென்கிஸை காதலித்தார். அவரை திருமணம் செய்ய முடிவு செய்த அவர், முதல் திருமணத்தின் மணமுறிவு ஆவணங்களைப் பெற 2018-ம் ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி இஸ்தான்புல்லில் உள்ள சவுதி துணைத் தூதரகத்துக்குச் சென்றார். ஆனால் திரும்பி வரவில்லை.

    இதையடுத்து, துருக்கி அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தூதரகத்துக்கு உள்ளே பதிவான ரகசிய உரையாடல்களை வைத்து கசோகி மிகவும் கொடூரமான முறையில் கொல்லப்பட்டிருப்பது தெரியவந்தது. துருக்கியில் உள்ள சவுதி அரேபியா துணைத் தூதரகத்தில் கொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் ஜமால் கசோகியை கொலை செய்ய உத்தரவிட்டதாக, சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் மீது அமெரிக்காவில் வழக்கு தொடரப்பட்டது.

    ஹதீஜா ஜென்கிஸ் மற்றும் கசோகியால் நிறுவப்பட்ட உரிமைக் குழு இந்த வழக்கைத் தொடர்ந்தது. இந்த வழக்கில் இளவரசரின் இரண்டு உதவியாளர்களும் குற்றம்சாட்டப்பட்டனர்.

    இதற்கிடையே, சவுதி அரேபியாவின் மன்னர் சல்மான், தனது மகன் இளவரசர் முகமதுவை பிரதமராக நியமித்தார். இதையடுத்து அமெரிக்க அரசு, பிற நாடுகளின் நீதிமன்றங்களில் இருந்து அரசாங்கத் தலைவர்களுக்கு விலக்கு பெறுவதற்கான நீண்டகால சட்ட முன்மாதிரியை குறிப்பிட்டு முகமது பின் சல்மான் சமீபத்தில் பிரதமராக பதவியேற்றிருந்தாலும் அவருக்கு இறையாண்மை விலக்கு அளிக்கவேண்டும் என கோரியது.

    இது முகமது பின் சல்மானை பாதுகாக்கும் சூழ்ச்சி என்று கஷோகியின் வருங்கால மனைவி மற்றும் அவரது உரிமைகள் குழு வாதிட்டது.

    இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அமெரிக்க அரசு அவருக்கு விலக்கு அளிக்க தகுதி இருப்பதாக கண்டறிந்ததால் இந்த வழக்கை தள்ளுபடி செய்வதைத் தவிர வேறு வழியில்லை என தெரிவித்த நீதிபதி, இந்த வழக்கில் இருந்து அவரை விடுவித்தார்.

    மேலும், குற்றம் சாட்டப்பட்ட அவரது உதவியாளர்கள் மீது அமெரிக்க கோர்ட்டுக்கு அதிகாரம் இல்லை என தெரிவித்தார்.

    • காசா மீதான இஸ்ரேலின் போர் நடவடிக்கை என்பது இனப்படுகொலை செய்யும் வகையில் உள்ளது.
    • பாலஸ்தீனத்தை சுதந்திர நாடாக செயல்பட விடாத வரை சவுதி அரேபியா, இஸ்ரேலை ஒரு போதும் அங்கீகரிக்காது.

    பாலஸ்தீனத்தின் காசா முனை மீது இஸ்ரேல் போர் தொடுத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இப்போர் ஒரு ஆண்டுக்கும் மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட 44 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

    இந்த நிலையில் இஸ்ரேலுக்கு சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் எச்சரிக்கை விடுத்துள்ளார். சவுதியின் ரியாத்தில் அரபு நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாடு நடந்தது. இதில் முகமது பின் சல்மான் பேசியதாவது:-

    காசா மீதான இஸ்ரேலின் போர் நடவடிக்கை என்பது இனப்படுகொலை செய்யும் வகையில் உள்ளது. பாலஸ்தீனத்தை சுதந்திர நாடாக செயல்பட விடாத வரை சவுதி அரேபியா, இஸ்ரேலை ஒரு போதும் அங்கீகரிக்காது. உடனே இப்போரை இஸ்ரேல் நிறுத்த வேண்டும்.

    அதேபோல் லெபனான் மீதான இஸ்ரேல் தாக்குதலையும் கண்டிக்கிறோம்.இதுதவிர இஸ்ரேல் ஈரானை குறிவைக்கிறது. இதை தடுத்து ஈரானின் இறையாண்மையை நிலைநாட்ட சர்வதேச அமைப்புகள் ஒன்றிணைய வேண்டும்.

    பாலஸ்தீனம் மற்றும் லெபனானில் உள்ள நமது சகோதரர்களுக்கு எதிரான இஸ்ரேலிய நடவடிக்கைகளை தடுக்க சர்வதேச சமூகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    இதற்கிடையே வடக்கு இஸ்ரேலின் ஹைபா நகரை குறிவைத்து லெபனானில் இருந்து ஹிஸ்புல்லா இயக்கத்தினர் சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தினர். சுமார் 150-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் வீசப்பட்டன. இதில் பெரும்பாலான ஏவுகணைகள் இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பால் நடுவானில் சுட்டு வீழ்த்தப்பட்டன. ஆனாலும், சில ஏவுகணைகள் இஸ்ரேலுக்குள் விழுந்து வெடித்தது. இதில் ஒரு குழந்தை உள்பட 7 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • முகமது பின் சல்மான் நாட்டில் பல்வேறு அதிரடி மாற்றங்களை கொண்டு வந்துள்ளார்.
    • பெண்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கடுமையான கட்டுப்பாடுகளை தளர்த்தினார்.

    ரியாத் :

    உலகில் இப்போதும் மன்னராட்சி நடந்து வரும் சில நாடுகளில் சவுதி அரேபியாவும் ஒன்று. அங்கு 86 வயதான சல்மான் பின் அப்துல் அஜிஸ் அல் சவுத் மன்னராக உள்ளார்.

    அவருக்கு அடுத்து அதிகாரமிக்க தலைவராக அந்த நாட்டின் பட்டத்து இளவரசரான முகமது பின் சல்மான் உள்ளார். இவர் பட்டத்து இளவரசராக பொறுப்பேற்ற பிறகு நாட்டில் பல்வேறு அதிரடி மாற்றங்களை கொண்டு வந்துள்ளார்.

    குறிப்பாக பெண்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கடுமையான கட்டுப்பாடுகளை தளர்த்தி பாலின சமுத்துவத்தை ஏற்படுத்தியதன் மூலம் சர்வதேச அளவில் கவனம் பெற்றார். இந்த நிலையில் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை சவுதி அரேபியாவின் பிரதமராக மன்னர் சல்மான் நியமித்துள்ளார். அதோடு நாட்டின் மந்திரிசபையையும் மன்னர் மாற்றியமைத்துள்ளார்.

    அதன்படி முகமது பின் சல்மானின் இளைய சகோதரரும், இளவரசருமான காலித் பின் சல்மான், ராணுவ மந்திரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன் அவர் துணை ராணுவ மந்திரியாக இருந்து வந்தார்.

    இதனிடையே பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் பிரதமராக நியமிக்கப்பட்டிருந்தாலும், மந்திரிசபை கூட்டங்களுக்கு மன்னர் சல்மான்தான் தலைமை தாங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    ×