என் மலர்
நீங்கள் தேடியது "திண்ணையில் சமையல் செய்யும் அவலம்?"
- நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை.
- அங்கன்வாடி கட்டிடத்தில் வைக்கப்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் அருகே காரமடை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட இலுப்பநத்தம் ஊராட்சியில் மொத்தம் 12 வார்டுகள் உள்ளன.
இந்த ஊராட்சியில் 7-வது வார்டுக்கு உட்பட்ட இலுப்ப நத்தம் கிராமத்தில் அரசு ஆரம்ப தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளி இங்கு 50 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது.
இப்பள்ளியில் இலுப்பநத்தம், திம்மனூர், வடக்கு தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 14 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இவர்களுக்கு ஒரு தலைமை ஆசிரியரும், உதவி ஆசிரியரும் கல்வி கற்று கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவதற்காக சமையல் கூடம் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வந்துள்ளது.
இதனிடையே கடந்த ஓராண்டுக்கு முன்பு இந்த சமையல் கூடம் பழுதடைந்த நிலையில் இருந்ததால் இதனை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டுவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து இந்த சமையல் கூடம் இடிக்கப்பட்டது. இடிக்கப்பட்டு ஓராண்டு ஆகியும், இதுவரை புதிய சத்துணவு கூடம் அமைக்க அரசு சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு சமைத்துக் கொடுக்க இடம் இல்லாததால் வகுப்பறையின் திண்ணையில் வைத்து சமையல் செய்து வருகின்றனர்.
சமையலுக்கு உண்டான மளிகை பொருட்கள் கூட வைக்க இடம் இல்லாமல் அருகில் உள்ள அங்கன்வாடி கட்டிடத்தில் வைக்கப்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப் பள்ளிக்கு தேவையான சமையல் கூடத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென பெற்றோர்கள் வலியுறுத்தி உள்ளனர்.