என் மலர்
நீங்கள் தேடியது "நட்சத்திர விடுதியில் நவராத்திரி கொலு"
- கொடைக்கானல் தனியார் நட்சத்திரவிடுதியில் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக கொலு அலங்காரம் செய்யப்பட்டு உள்ளது.
- இதனை ரசித்த சுற்றுலா பயணிகள் அதன் முன்பு நின்று செல்பி எடுத்துக் கொண்டனர்.
கொடைக்கானல்:
தமிழகம் முழுவதும் நவராத்திரி விழாவை முன்னிட்டு கோவில்கள் மற்றும் வீடுகளில் கொலு பொம்மைகள் வைத்து வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. கொடைக்கானல் தனியார் நட்சத்திரவிடுதியில் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக கொலு அலங்காரம் செய்யப்பட்டு உள்ளது.
இங்கு அமைக்கப்பட்டுள்ள கொலு பொம்மைகள் கண்காட்சியில் இந்து, கிறிஸ்தவர்கள் வணங்கும் தெய்வங்கள், ராமர் பட்டாபிஷேகம், மீனாட்சி திருக்கல்யாணம், திருவள்ளுவர், விவேகானந்தர், மகாத்மா காந்தி, அப்துல் கலாம், வீரசிவாஜி ஆகியோரது சிலைகள் வைக்கப்பட்டு இருந்தது.
நவதானியங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட துர்கா தேவி படம், அன்னை தெரசா, அன்னை வேளாங்கண்ணி, காவிரி ஆறு வரலாறு, நவசக்தி கன்னிகள், சிறியது முதல் பெரியது வரையான சிவலிங்கங்கள் ஆகியவை அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய கொலு வகைகள் மற்றும் அதை பரிமாறும் முறைகள் குறித்து விளக்கும் வண்ணம் தத்ரூபமாக அமைக்கப்பட்டிருந்த சிலைகள் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.
இதுமட்டுமின்றி டி20 உலக கோப்பையை நினைவூட்டும் வண்ணம் புல் வெளி மைதானத்தில் வீரர்கள் நிற்பது போன்ற காட்சி அமைக்கப்பட்டு இருந்தது. கொரோனா காலத்திற்குப் பின் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக புதுமையாக பல்வேறு தலைவர்கள், கடவுள்கள், பாரம்பரியத்தை பறைசாற்றும் வடிவமைப்புகள், திருப்பதி கருட வாகன சேவையை நேரில் காண்பது போன்ற காட்சி அமைப்புகள் சுற்றுலா பயணிகளை கவர்ந்தது.
இதனை ரசித்த சுற்றுலா பயணிகள் அதன் முன்பு நின்று செல்பி எடுத்துக் கொண்டனர். சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களை கவரும் வகையில் இந்த வருடம் வித்தியாசமான முறையில் நவராத்திரி கொலு அமைத்துள்ளதாக கோடை இன்டர்நேஷனல் தங்கும் விடுதி உரிமையாளர் பாண்டுரங்கன் தெரிவித்தார்.