search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சர் கீதா ஜீவன்"

    • இந்தி தெரிந்தவர்கள் வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என்ற தமிழக அரசின் அறிக்கையால் சர்ச்சை வெடித்தது.
    • தவறுதலான அறிவிக்கையைப் பதிவேற்றிய இணை இயக்குநர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு

    மகளிர் உதவி கட்டுப்பாட்டு மைய விளம்பரத்தில் தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி தெரிந்தவர்கள் வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என்ற தவறுதலான அறிவிக்கையைப் பதிவேற்றிய இணை இயக்குநர் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் இயங்கும். சமூக நல ஆணையரகம் மூலம் பாதிப்புக்கு உள்ளாகும் மகளிருக்கு உதவிட பெண்களுக்கான கட்டுப்பாட்டு மையம், "மகளிர் உதவி எண்.181" சென்னையில் செயல்பட்டு வருகிறது. மகளிர் உதவி எண்.181 பணியிடத்தில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பிடும் பொருட்டு, விண்ணப்பங்கள் பெற்றிட tn.gov.h என்ற இணையதளத்தில் ஆட்சேர்ப்புக்கான அறிவிக்கை, சமூக நல ஆணையரக இணை இயக்குநரால் பதிவேற்றம் செய்யப்பட்டது. அதில் "அழைப்பு ஏற்பாளர்" (Call Responders) roன்று குறிப்பிடப்பட்டுள்ள பணியிடத்திற்கு தேவையான தகுதிகள் என தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி என தவறுதலாக பதிவேற்றம் செய்யப்பட்டது.

    இந்த ஆட்சேர்ப்புக்கான அறிவிக்கை தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு வந்தவுடன், அவ்விளம்பரம் உடனடியாக இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டு, தமிழ் மற்றும் ஆங்கிலம் தெரிந்த நபர்கள் விண்ணப்பிக்கலாம் என்று திருத்தப்பட்ட ஆட்சேர்ப்பு அறிவிக்கை உடனடியாக பதிவேற்றம் செய்யப்பட்டது.

    மேலும், தவறுதலாக இணையத்தில் பதிவேற்றம் செய்த இணை இயக்குநர் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, அவர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    தாய்மொழியாம் தமிழ் மொழியினை உயிருக்கும் மேலாய் மதிக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் எங்கள் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தலைமையில், அனைத்து அரசுத் துறைகளிலும் தமிழ் மட்டுமே முக்கிய மொழியாக உள்ளது. மாண்பமை நீதிமன்றம். ஒன்றிய அரசுடனான கடிதப் போக்குவரத்து போன்றவற்றிற்கு மட்டுமே ஆங்கிலம் பயன்படுத்தப்படுகிறது.

    தமிழ்த்தாய் வாழ்த்து, அய்யன் திருவள்ளுவருக்கு வள்ளுவர் கோட்டமும், 133 அடியில் வானுயர சிலையும் அமைத்தது. உலகத் தமிழ் மாநாடு நடத்தியது. தமிழுக்கு செம்மொழி சிறப்பு பெற்றுத் தந்தது என எண்ணிலடங்கா பெருமைகள் கொண்டதுதான் திராவிட முன்னேற்றக் கழக வரலாறு. தமிழர் பெருமை கூறும் கீழடி அருங்காட்சியகம் அமைத்து, உலகத்தின் பார்வையை நம் மீது திருப்பியது அண்மைக் கால வரலாறு. மேலும், அரசுப்பணிகளில் தமிழ் மொழியில் பயின்றவருக்கு முன்னுரிமை அளித்து அரசாணை வெளியிட்ட அரசு, நமது திராவிட மாடல் அரசு.

    தமிழ்நாடு அரசுத் துறைகளில் உள்ள பணியிடங்கள் மற்றும் மாநில பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள பணியிடங்கள் அனைத்திலும் தமிழ்நாட்டு இளைஞர்களை 100 சதவீதம் நியமனம் செய்யும் பொருட்டு, தேர்வு முகமைகளால் நடத்தப்படும். அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழி பாடத்தாள் தகுதித் தேர்வாக கட்டாயமாக்கப்பட்டது என தமிழ்மொழி வளர்ச்சிக்கான இவ்வரசின் பல்வேறு சாதனைகளை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.

    ஒரு அரசு அலுவலர் செய்த தவறை வைத்துக் கொண்டு அரசியல் செய்யும் நிலையில் சிலர் உள்ளதைப் பார்த்தால் பரிதாபமாக உள்ளது. தமிழ் குறித்து எங்களுக்கு எவரும் பாடம் எடுத்து கூச்சல் போட வேண்டியதில்லை. இதனால் மக்கள் ஏமாறப் போவதில்லை.

    நமது மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆட்சியில், தமிழ் மொழி மென்மேலும் சிறப்புகள் பெற்று வளர்ந்து வருகிறது. இதனைக் காண சகிக்காதவர்கள் தான் இப்போது கூக்குரல் இடுகிறார்கள். அதனை புறம் தள்ளி, எங்கள் தாய்மொழியாம் தமிழ் வழி பயணத்தை சிறப்புற தொடர்வோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் பட்டினி போராட்டம் சேப்பாக்கத்தில் நடைபெற்றது.
    • சத்துணவு மையங்கள் மூலம் காலை உணவு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

    சென்னை:

    தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் 72 மணி நேர பட்டினி போராட்டம் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வந்தது.

    காலமுறை ஊதியம் நிர்ணயிக்க வேண்டும், ஓய்வூதியம் ரூ.9000 வழங்க வேண்டும், 52 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்புதல், சத்துணவு மையங்கள் மூலம் காலை உணவு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெறுகிறது.

    இந்நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வந்த தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் 72 மணி நேர போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது. அமைச்சர் கீதா ஜீவன் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து போராட்டத்தை வாபஸ் பெற முடிவு செய்தனர்.

    • ஆண்டு விழாவிற்கு பள்ளி தலைவர் சுப்பையா தலைமை தாங்கினார்.
    • வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு அமைச்சர் கீதா ஜீவன் பரிசுகளை வழங்கினார்.

    எட்டயபுரம்:

    எட்டயபுரம் அருகே உள்ள சி.கே.டி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 24-ம் ஆண்டு விழா நடந்தது. விழாவிற்கு பள்ளி தலைவர் சுப்பையா தலைமை தாங்கினார். பள்ளிச் செயலாளர் ராஜகோபால் முன்னிலை வகித்தார். கல்லூரியின் முதல்வர் நம்மாழ்வார் ஆண்டு அறிக்கையை வாசித்தார். விழாவில் முந்தைய தினம் பல்வேறு போட்டிகள் நடந்தது.

    போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், கவிஞர் அருள் பிரகாஷ் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    பள்ளி நிர்வாக அலுவலர் குருநாதன் நன்றி கூறினார். பள்ளி மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் நிர்வாக குழுவினர் செய்திருந்தனர்.

    • கடந்த 5ஆம் தேதி இரவு ரசம் சாதம் சாப்பிட்டு உடல் உபாதைக்குள்ளாகியுள்ளனர்.
    • திருமுருகன்பூண்டியில் பூட்டு போட்டு மூடப்பட்ட காப்பகத்திற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் திருமுருகன்பூண்டி பகுதியில் உள்ள ஸ்ரீ விவேகானந்தா சேவாலயத்தில் 15 சிறுவர்கள் தங்கி அருகில் உள்ள அம்மாபாளையம் அரசு பள்ளியில் கல்வி பயின்று வந்ததனர்.

    இந்த நிலையில் கடந்த 5ஆம் தேதி இரவு ரசம் சாதம் சாப்பிட்டு உடல் உபாதைக்குள்ளாகியுள்ளனர். 6-ந் தேதி காலை ஊழியர்கள் உள்ளே சென்று பார்த்த போது இரண்டு மாணவர்கள் உயிரிழந்தும், மீதமுள்ள 12 மாணவர்கள் மற்றும் ஒரு காவலர் மயக்கம் அடைந்த நிலையில் இருந்துள்ளனர்.

    உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அவர்கள் மருத்துவமனை கொண்டு சென்றனர்.அங்கு மேலும் ஒரு மாணவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். மீதமுள்ள 11 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

    நேற்றைய தினம் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், தமிழக அரசால் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள அமைக்கப்பட்ட மூத்த ஐஏஎஸ் அதிகாரியான மணிவாசகம் தலைமையிலான குழுவினர் மற்றும் சமூக நலத்துறை இயக்குனர் வளர்மதி தலைமையிலான குழுவினர் நேரில் காப்பகத்தில் ஆய்வு மேற்கொண்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் காப்பகத்தில் சிறுவர்கள் தங்குவதற்கான பாதுகாப்பு வசதிகள் எதுவும் இல்லை எனவும் காப்பக நிர்வாகத்தின் அஜாக்கிரதை மற்றும் மெத்தனபோக்கு காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டு இருப்பதால் காப்பகம் மூடப்படுவதாக அறிவித்தார் .

    இதனையடுத்து இன்று காலை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத் மூத்த ஐஏஎஸ் அதிகாரி மணிவாசகம் உள்ளிட்டார் காப்பகத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருவாய் துறையினருக்கு காப்பகத்தை மூட உத்தரவிட்டனர் . இதனை தொடர்ந்து வட்டாட்சியர் ராஜேஷ் மற்றும் காவல்துறையினர் முன்னிலையில் காப்பகத்திற்கு பூட்டு போட்டு மூடப்பட்டது. மேலும் உயிரிழந்த மூன்று மாணவர்களின் உடல்கள் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டதையடுத்து திருப்பூர் மின்மயானத்தில் எரியூட்டப்பட்டது. திருமுருகன்பூண்டியில் பூட்டு போட்டு மூடப்பட்ட காப்பகத்திற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • காப்பகம் பாதுகாப்பற்ற முறையில் உள்ளது. இரவு நேரத்தில் வார்டன் உடன் இல்லை.
    • காப்பகத்தின் நிர்வாகியின் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி அருகே உள்ள விவேகானந்தா சேவாலயம் காப்பகத்தில் கெட்டுப்போன உணவை சாப்பிட்ட மூன்று சிறுவர்கள் நேற்று உயிரிழந்தனர். மேலும் 11 சிறுவர்களுக்கு திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் இன்று காலை சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், அமைச்சர் மு.பி.சாமிநாதன் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி மணிவாசன், சமூக நலத்துறை இயக்குனர் வளர்மதி, திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் மற்றும் அதிகாரிகள் மாணவர்கள் தங்கி இருந்த காப்பகத்தில் ஆய்வு செய்தனர். இப்போது மாணவர்கள் தங்கி இருந்த அறை, சமையல் கூடம் மற்றும் உணவு அருந்தும் இடம், இடங்களை ஆய்வு செய்தனர். அதனை தொடர்ந்து திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். மாணவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை விவரங்கள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.

    பின்னர் தி.மு.க. கட்சி சார்பில் உயிரிழந்த 3 மாணவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1லட்சம் பணமும் சிகிச்சை பெறும் மாணவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிதி உதவியாக அமைச்சர்கள் வழங்கினார்கள்.

    ஆய்வுக்கு பின்னர் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    3 மாணவர்கள் பலியான சம்பவம் அறிந்து தமிழக முதல்வர் மிகவும் வருத்தப்பட்டார்.

    உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்டார். இதனையடுத்து இன்று சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டோம். அப்போது காப்பகம் பாதுகாப்பற்ற முறையில் உள்ளது. இரவு நேரத்தில் வார்டன் உடன் இல்லை. நிர்வாகத்தின் மெத்தன போக்கால் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. எனவே காப்பகத்தின் நிர்வாகியின் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

    மாணவர்கள் தங்குமிடம் குறுகலான தகர கொட்டகையாக உள்ளது. இதனை முறையான ஆய்வு செய்யாத மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மாணவர்களின் உயிரிழப்புக்கு காரணமான காப்பகம் மூடப்படுகிறது. காப்பகத்தில் உள்ள மாணவர்கள் ஈரோட்டில் உள்ள காப்பகத்தில் பராமரிக்கப்படுவார்கள்.

    காப்பகத்தில் மாணவர்களுடன் தங்கியிருந்த நபர் வேறு அறையில் தங்கி இருந்துள்ளார். இவர்களின் அஜாக்கிரதை காரணமாக இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அஜாக்கிரதை கண்கூடாக தெரிகிறது.

    தயாரிக்கப்பட்ட வெளி உணவுகளை வாங்குவது சட்டப்படி தவறு. அதிலும் தவறு செய்துள்ளார்கள். நிர்வாகி செந்தில்நாதன் மீது வழக்கு பதிவு செய்யப்படும்.

    அனைத்து காப்பகங்களிலும் ஆய்வு நடத்தப்படும். வெளியில் தயாரிக்கப்பட்ட உணவுகளை காப்பகங்களில் பெறக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×