என் மலர்
நீங்கள் தேடியது "வீரபாகுபதி"
- போலீசார் பாதுகாப்பு நடவடிக்கையாக குவிக்கப்பட்டிருந்தனர்.
- 10 பேர் மட்டுமே ஜெப கூட்டம் நடத்துவதற்கு அனுமதி
கன்னியாகுமரி:
சுசீந்திரம் அருகே உள்ள புத்தளம் வீரபாகுபதியில் அனுமதி இன்றி வீட்டில் ஜெபக்கூட்டம் நடந்துள்ளது. இதனை பாரதிய ஜனதா மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகள் கண்டித்தனர். இந்த நிலையில் அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்து முன்னணி ராஜாக்க மங்கலம் ஒன்றிய பொதுச் செயலாளர் சுரேஷ் கைது செய்யப்பட்டார்.
இதற்கு கண்டனம் தெரிவித்து புத்தளம் ஜங்ஷனில் நேற்று மாலை ஆர்ப்பாட்டத்திற்கு ராஜாக்கமங்கலம் கிழக்கு ஒன்றிய பாரதிய ஜனதா தலைவர் ராஜேஷ் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் ஒன்றிய பொதுச் செயலாளர் வக்கீல் ரமேஷ், மாவட்ட பொது செயலாளர் வக்கீல் ஜெகநாதன், பொரு ளாளர் முத்துராமன், மாவட்ட பொருளாதார பிரிவு தலைவரும், நாகர்கோவில் மாநகராட்சி மாமன்ற உறுப்பினருமான அய்யப்பன், ராஜக்கா மங்கலம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் தர்மலிங்கம் என்ற உடையார், நாகர்கோவில் மாநகராட்சி மாமன்ற உறுப்பினரும், பாரதிய ஜனதா தெற்கு மாநகர பொதுச் செயலாளருமான வீரசூரபெருமாள், ஓ.பி.சி. மாவட்ட பொதுச் செயலாளர் தங்கம் மற்றும் ஏராளமான நிர்வாகிகள், தொண்டர்கள், வீரபாகுபதி ஊர் பொதுமக்கள் திரண்டனர்.
இது பற்றிய தகவல் கிடைத்ததும் கன்னியாகுமரி துணை சூப்பிரண்டு ராஜா மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்று கூறினர். இதனால் பாரதிய ஜனதா தொண்டர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு பாரதிய ஜனதா மாவட்ட தலைவர் தர்மராஜ் விரைந்து வந்தார். அவர் போலீசாரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பிரச்சினைக்குரிய வீட்டில் எக்காரணம் கொண்டும் ஜெபக்கூட்டம் நடத்த அனுமதிக்க மாட்டோம். இதனை மீறி ஜெபக்கூட்டம் நடத்த முயற்சித்தால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என்று போலீசார் உறுதி கூறினார்கள்.
இதனை ஏற்று போரா ட்டம் கைவிடப்பட்டது. இருப்பினும் சுசீந்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் காந்திமதி, சப் இன்ஸ்பெக்டர் ராபர்ட் செல்வசிங் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு நடவடிக்கையாக குவிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை முதல் வீரபாகுபதியில் உள்ள அந்த வீட்டில் வைத்து ஜெபக்கூட்டம் நடத்திவிட கூடாது என்பதற்காக கன்னியாகுமரி டி.எஸ்.பி. ராஜா, ஏ .டி .எஸ்.பி. ராஜேந்திரன், சுசீந்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாய்லெட்சுமி ஆகியோர் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்
அப்போது ஜெபக்கூட்டம் நடத்து வதற்காக 40-க்கும் மேற் பட்டோர் வந்திருந்தனர். அப்போது தகுந்த அனுமதி இருந்தால் மட்டுமே ஜெபக்கூட்டம் நடத்த முடியும் என்று அவர்களிடம் கூறினர்.
உடனே அவர்கள் டி.எஸ்.பி.யிடம் நாங்கள் 10 நிமிடம் ஜெப கூட்டம் மட்டும் நடத்திவிட்டு செல்கி றோம் என்றனர். பின்னர் டி.எஸ்.பி, ஏ.டி.எஸ்.பி. தலைமையில் பேச்சு வார்த்தை நடத்தி 10 பேர் மட்டுமே ஜெப கூட்டம் நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.
அதன் பேரில் காலை 9.10 முதல் 9.20 வரை 10 பேர் ஜெபம் செய்து விட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதி முழுவதும் மிகுந்த பரபரப்புடன் காணப்பட் டது.