என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண் குழந்தைகள் தினம்"

    • மலர் கிரீடம் அணிவித்து வாழ்த்துகள் தெரிவித்தார்.
    • பாதுகாப்பு குறித்து உறுதிமொழி ஏற்கப்பட்டது.

    ஊட்டி,

    ஆண்டுதோறும் ஜனவரி 24-ந் தேதி தேசிய பெண் குழந்தைகள் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி ஊட்டி ஊரகம் மற்றும் ஊரக மகளிர் போலீஸ் நிலையம் சார்பில், பெண் குழந்தைகள் தின விழிப்புணர்வு பேரணி எம்.பாலடாவில் நேற்று நடைபெற்றது. அங்கிருந்து பழங்குடியினர் பண்பாட்டு மையம் வரை விழிப்புணர்வு பேரணி நடந்தது. ஊட்டி ஊரக போலீஸ் துணை சூப்பரண்டு விஜயலட்சுமி பேரணியை தொடங்கி வைத்து கூறுகையில், பெண் குழந்தைகள் கல்வி மற்றும் விளையாட்டில் சிறந்து விளங்க வேண்டும் என்றார். இதில் இன்ஸ்பெக்டர் கண்மணி மற்றும் பள்ளி மாணவிகள் பலர் கலந்துகொண்டனர். சமூக நலன் மகளிர் உரிமைகள் துறை சார்பில், பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி கூடலூர் வருவாய் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நடைபெற்றது. கூடலூர் ஆர்.டி.ஓ. முகமது குதரதுல்லா பெண் குழந்தைகளுக்கு தலையில் மலர் கிரீடம் அணிவித்து வாழ்த்துகள் தெரிவித்தார். தொடர்ந்து பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து உறுதிமொழி ஏற்கப்பட்டது. பின்னர் பெண் குழந்தைகள் பாதுகாப்புக்கான கையெழுத்து இயக்கத்தை ஆர்.டி.ஓ. தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஆர்.டி.ஓ. நேர்முக உதவியாளர் கோமதி, துணை தாசில்தார் சாந்தி, குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பாளர் பார்வதி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    • அனைத்து துறைகளிலும் சாதிக்கக்கூடிய சாதனையாளர்களாக பெண்கள் உள்ளனர்.
    • செல் போன்களை தேவைக்கு மட்டுமே பயன்படுத்திக் கொண்டு, தேவையில்லாதவற்றை தவிர்த்திட வேண்டும்.

    பல்லடம் :

    பல்லடம் அரசு பெண்கள் பள்ளியில் தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு வட்ட சட்டபணிகள் குழு சார்பில்,விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியை ஜெயஸ்ரீ தலைமை வகித்தார். வக்கீல்கள் வெங்கடாசலம், கோபாலகிருஷ்ணன், சுதாகர்,மீனா ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

    இந்த விழாவில் கலந்துகொண்டு நீதிபதி சித்ரா பேசியதாவது:- முன்பு பெண் குழந்தைகள் பாரமாக கருதிய காலம் இருந்தது. பெண் என்பவள் இன்னொரு வீட்டுக்கு செல்பவள் தானே என படிக்க அனுமதிக்காத காலம் இருந்தது. ஆனால் தற்போது அனைத்து துறைகளிலும் சாதிக்கக்கூடிய சாதனையாளர்களாக பெண்கள் உள்ளனர்.

    படிக்கும் காலத்தில் படிப்பை மட்டுமே கவனத்தில் கொண்டு நீங்கள் முன்னேற வேண்டும். செல் போன்களை தேவைக்கு மட்டுமே பயன்படுத்திக் கொண்டு, தேவையில்லாதவற்றை தவிர்த்திட வேண்டும்.

    பெண்களை நாட்டின் கண்கள் என்ற கருத்துக்கு ஏற்ப படிப்பில் மட்டுமன்றி குடும்ப வாழ்க்கையிலும், சமுதாயத்திலும் நல்ல பெயர் பெற்று நீங்கள் சிறந்து விளங்க வேண்டும் இவ்வாறு அவர் பேசினார்.இந்த நிகழ்ச்சியில், பள்ளி ஆசிரியைகள், மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தமிழ்நாட்டிலும் பெண் குழந்தைகளுக்கான பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.
    • வீட்டில் எத்தனை குழந்தைகள் இருந்தாலும் பெண் குழந்தை இருந்தால், அதன் மூலம் கிடைக்கும் மகிழ்ச்சியே தனி.

    நாளை பெண் குழந்தைகள் தினம்...

    இது இந்தியா முன்னெடுத்த பெருமைக்குரிய தினம். இது கடந்த 2008-ம் ஆண்டு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் ஜனவரி 24-ந்தேதி அறிவிக்கப்பட்டது. அன்று முதல் ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

    என்னதான் பாலின சமத்துவம் பேசப்பட்டு வந்தாலும் பெண் குழந்தைகளை பாதுகாக்க வேண்டிய கட்டாயம் ஒரு கட்டத்தில் அரசுக்கும் ஏற்பட்டது. மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது 1000 ஆண்களுக்கு 918 பெண்கள் என்ற அளவில் பெண் குழந்தைகள் எண்ணிக்கை சரிவை நோக்கி சென்றதை சந்தித்த போதுதான் அரசுக்கு பொறி தட்டியது. தாயின் வயிற்றில் இருக்கும் போதே பெண் குழந்தைகள் கண்டறியப்பட்டு கருவிலேயே அழிக்கப்படுவதும், தப்பித்தவறி பிறந்து விட்டால் கூட கள்ளிப்பாலையும், நெல் மணியையும் கொடுத்து அந்த கண்மணிகளை ஈவு இரக்கமில்லாமல் அழித்து வந்ததும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    நம்ம கடலூர் மாவட்டத்தில் 1000 ஆண்களுக்கும் 854 பேர் தான் பெண்கள் என்ற கணக்குதான் இந்திய அளவில் பெண் குழந்தைகளை காக்கும் அளவுக்கு நாட்டின் கண்களை திறக்க வைத்தது. பெண் குழந்தைகளை காப்போம், கற்பிப்போம் என்ற திட்டத்தை நாடு முழுவதும் தொடங்கினார்கள்.

    சமூகத்தில் பெண்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகள், ஏற்றத்தாழ்வுகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி பெண் குழந்தைகளை காப்பாற்றுதல், பாலின விகிதங்களை பராமரித்தல், குழந்தை திருமணம், அவர்களுக்கான சட்ட உரிமைகள், மருத்துவம், மரியாதை போன்றவை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான் இதன் முக்கிய நோக்கம்.

    தமிழ்நாட்டிலும் பெண் குழந்தைகளுக்கான பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. ஒரு குடும்பத்தில் ஒரே ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50 ஆயிரத்தையும், 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25 ஆயிரத்தையும் அரசே டெபாசிட் செய்கிறது. அந்த குழந்தை திருமண வயதை எட்டும் போது ரூ.3 லட்சம் கிடைக்கும்.

    அரசு திட்டங்கள் போட்டு காப்பதைவிட மக்களின் மனமாற்றம் தான் முழு வெற்றியை தரும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்து. பெண் குழந்தை என்பது பல பரிணாம வளர்ச்சியோடு வாழ்க்கையை பரிபூரணமாக்குகிறது. எனவேதான் பெண் குழந்தைகளை கொண்டாடுகிறோம். வீட்டில் எத்தனை குழந்தைகள் இருந்தாலும் பெண் குழந்தை இருந்தால், அதன் மூலம் கிடைக்கும் மகிழ்ச்சியே தனி.

    அந்த வீட்டின் ஆனந்த யாழை மீட்டுபவள் அவள். "வா.. வா என் தேவதையே... பெண் பூவே வா... வா... பொய் வாழ்வின் பூரணமே..." என்று பெண் குழந்தைகளின் பிறப்பை உயர்வாக சித்தரித்து பாடுகிறார்கள்.

    பெண் குழந்தைகளின் பாதுகாப்பு என்பது அவர்களின் உரிமை, சட்ட பாதுகாப்பில் அடங்கி இருக்கிறது. குழந்தை திருமணம் சட்டப்படி தவறு. அதற்கு தண்டனையும் உண்டு. அப்படி இருந்தும் தமிழ்நாட்டில் குழந்தை திருமணம் அதிகரித்து இளம் வயது கர்ப்பம் அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    குழந்தை திருமணங்கள் அரங்கேற முக்கிய காரணம் இன்றைய சமூக சூழ்நிலையில் பெற்றோர்களுக்கு ஏற்படும் தேவையற்ற பயம். திருமணம் முடிந்துவிட்டால் தங்கள் கடமை முடிந்து விட்டதாக கருதுகிறார்கள். ஆனால் அது அந்த குழந்தைகளை படு பாதாளத்தில் தள்ளுவது என்பதை அவர்கள் உணர்வதில்லை. இளம் வயது கர்ப்பம் அவர்களின் உடல் ஆரோக்கியத்தை கடுமையாக பாதிக்கிறது. பிறக்கும் குழந்தைகளின் ஆரோக்கியத்தையும் பாதிக்கும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

    பெண் குழந்தைகள் பிறந்ததும் பெருமைப்படும் பெற்றோர் மிக இளம் வயதிலேயே அந்த குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைப்பதற்கு காரணம் சமூக அழுத்தமும், நடைபெறும் பாலியல் அத்துமீறல்களும்தான் எனப்படுகிறது.

    இதை பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பொறுப்புடனும் தன்னம்பிக்கையுடனும் வளர்ப்பதன் மூலம் களைய முடியும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்து.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆண் குழந்தைகளுக்கு அளிக்கப்படும் எந்தவொரு சுதந்திரமும் பெண் குழந்தைகளுக்கு வழங்கப்படுவது இல்லை என்ற சூழல் இன்றளவும் நிலவுகிறது.
    • அடுப்பங்கரையில் அடைப்பட்டிருந்தவள் ஆகாய விமானத்தை இயக்குகிறாள்‌.

    உலகில் உயிர்கள் தோன்றிட உறவுகள் மலர்ந்திட உரிப்பொருளாக விளங்குபவள் பெண் என்னும் பேராற்றல்.

    அப்பாவிற்கு தேவதையாகவும், அம்மாவிற்கு தெய்வமாகவும், சகோதரர்களுக்கு செல்லமாகவும் வலம் வரும் பெண் குழந்தைகளை கொண்டாடும் வகையில் 2012-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 11-ந் தேதியை‌ சர்வதேச பெண் குழந்தைகள் தினமாக ஐ.நா.சபை அறிவித்தது.

    இன்றைய காலகட்டங்களில் அவர்கள் வாழ்வில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை களைவதோடு, அவர்களை ஊக்குவித்து கவுரபடுத்தும் விதமாக இந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

    பிறந்த போதே கள்ளிப்பால் கொடுத்து அதனை அழிக்க தொடங்கிய பெண் சிசுக்கொலை ஆண்டுகள் பல கடந்தாலும் இன்றும் எங்கோவோர் இடத்தில் நடந்து கொண்டு இருப்பதாக ஆய்வுகள் கூறுகிறது. சமூகத்தில் நிலவி வரும் பாலின சமத்துவமின்மை காரணமாக பெண் குழந்தைகளின் அடிப்படை உரிமைகளும், அத்தியாவசிய தேவைகளும் ஒடுக்கப்படுகின்றன. ஆண் குழந்தைகளுக்கு அளிக்கப்படும் எந்தவொரு சுதந்திரமும் பெண் குழந்தைகளுக்கு வழங்கப்படுவது இல்லை என்ற சூழல் இன்றளவும் நிலவுகிறது.

    இது தவிர பெண் குழந்தைகளுக்கு எதிரான குழந்தை திருமணம் என்ற கொடுமையான நிகழ்வு இன்றும் இருப்பது மனவேதனை தரும் செய்தியாகும். நாகரிகம் வளர்ந்தாலும் இன்றைய சூழலில் குழந்தை திருமணம் நடைபெற்று கொண்டிருப்பது அவர்களின் உரிமை பறிக்கப்படுவதன் அடையாளமாகவே கருதப்படுகிறது.

    பல ஆண்டுகள் நடந்த போராட்டங்களின் விளைவாக தற்போது பெண் குழந்தைகளுக்கு எதிரான ஒடுக்கப்படும் சூழல்கள் மாறி வருகின்றன. அவர்களுக்கான அடிப்படை உரிமைகள் தடையின்றி வந்தடைகிறது‌. வீட்டில் கோலம் போட்டுக் கொண்டிருந்த பெண்ணும் இப்போது ஒலிம்பிக்கில் கோப்பையை வெல்கிறாள். அடுப்பங்கரையில் அடைப்பட்டிருந்தவள் ஆகாய விமானத்தை இயக்குகிறாள்‌.

    இவையெல்லாம் பாலின சம உரிமை ஊக்குவிப்பதாக இருந்தாலும்கூட, இக்காலத்தில் அவர்கள் பாலியல் தொந்தரவால் பாதிக்கப்படும் அவலநிலை பெருகி வருகிறது. பருவ நிலை அடைந்த பெண்ணை விட, சின்னஞ்சிறு குழந்தைகள்கூட பாலியல் வன்மத்தால் சிதைக்கப்படுகிறார்கள். பள்ளி செல்லும் குழந்தைகளை பாலியல் வன்புணர்வு செய்யும் மிருகத்தனமான மனிதர்களால், ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதா? அல்லது வீட்டிலே பாதுகாப்பதா? என்ற சிந்தனைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    இதனால் பல ஆண்டுகளாக போராடி வாங்கிய உரிமைகள் பறிக்கப்பட்டு மீண்டும் பிற்போக்கான சமுதாயத்தில் பெண் குழந்தைகள் அடைக்கப்பட்டு விடுவார்களோ என்ற அச்சமான சூழ்நிலை நிலவி வருகிறது. இத்தகு கொடுமையான நிகழ்வுகளை செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. அப்போதுதான்‌ இந்த நிலை மாறும்‌, பெண் குழந்தைகளின் எதிர்காலமும் வளம்பெறும் என்பது முற்றிலும் உண்மை. இத்தகைய தடைகளையும், கொடுமைகளையும் தாண்டி வளர்ந்து வரும் பெண் குழந்தைகளுக்கு ஆதரவாகவும், அவர்களுக்கு உறுதுணையாகவும் இருந்திட இந்நாளில் நாம் உறுதியேற்போம்.

    ×