search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பரங்கிமலை ரெயில் நிலையம்"

    • ஆதம்பாக்கம் தில்லைகங்கா நகரில் இருந்து பரங்கிமலையை இணைக்கும் வகையிலும் ஏற்கனவே தூண்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
    • பரங்கிமலை ரெயில் நிலையத்தில் பறக்கும் ரெயில் பணிக்காக இரும்பு பாலம் அமைக்கும் பணியில் 6 இரும்பு கிரீடர்கள் பொருத்தப்படுகிறது.

    சென்னை:

    சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே பறக்கும் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தினமும் 150 ரெயில் சேவைகள் இயக்கப்படுகின்றன. இதில் தினமும் 2 லட்சம் பயணிகள் பயணம் செய்து வருகிறார்கள்.

    இந்தநிலையில் வேளச்சேரி மற்றும் பரங்கிமலையை இணைக்கும் வகையில் 5 கி.மீ. தூரத்துக்கு பறக்கும் ரெயில் பாதை அமைக்கும் பணிகள் கடந்த 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

    ஆனால் ஆதம்பாக்கம் தில்லைகங்கா நகரில் நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட பிரச்சனையால் இந்த பணிகள் கிடப்பில் போடப்பட்டது. அதன் பிறகு இந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்ட நிலையில் கடந்த ஆண்டு முதல் மீண்டும் பணிகள் தொடங்கியது. ரூ.734 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    மொத்தம் உள்ள 5 கி.மீ தூரத்தில், 4.5 கி.மீ.தூரத்துக்கு 167 தூண்களுடன் ரெயில் பாதை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பாதையில் புழுதிவாக்கம், ஆதம்பாக்கம், வாணுவம்பேட்டை ஆகிய இடங்களில் ரெயில் நிலையங்கள் அமைக்கும் பணிகளும் முடிவடைந்துள்ளன.

    ஆதம்பாக்கம் தில்லைகங்கா நகரில் இருந்து பரங்கிமலையை இணைக்கும் வகையிலும் ஏற்கனவே தூண்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இங்கிருந்து பரங்கிமலை ரெயில் நிலையத்தை இணைக்கும் வகையில் பரங்கிமலை ரெயில் நிலையத்தில் சென்னை கடற்கரை- தாம்பரம் ரெயில் பாதையின் மேலே 100 அடி உயரத்தில் இரும்பு பாலம் அமைக்கும் பணி நேற்று தொடங்கியது. இந்த இரும்பு பாலத்துக்காக 51 மீட்டர் நீளம், 3 மீட்டர் உயரம் கொண்ட 6 இரும்பு கிரீடர்கள் பொருத்தி இரும்பு பாலம் அமைக்கும் பணி நேற்று தொடங்கியது. இந்த பணிக்காக சென்னை கடற்கரை- செங்கல்பட்டு வழித்தடத்தில் நேற்று காலை 10 மணி முதல் மாலை 3.30 மணி வரை 54 மின்சார ரெயில்கள் சேவை ரத்து செய்யப்பட்டன. முதல் நாளான நேற்று மட்டும் 3 இரும்பு கிரீடர்கள் பொருத்தப்பட்டு உள்ளன.

    இன்னும் 3 இரும்பு கிரீடர்கள் பொருத்தும் பணி இன்று இரவு நடைபெற உள்ளது.

    இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-

    பரங்கிமலை ரெயில் நிலையத்தில் பறக்கும் ரெயில் பணிக்காக இரும்பு பாலம் அமைக்கும் பணியில் 6 இரும்பு கிரீடர்கள் பொருத்தப்படுகிறது.

    முதல் நாளான நேற்று 3 இரும்பு கிரீடர்கள் பொருத்தப்பட்டன. இதன் மூலம் 50 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன. இந்த பணியில் 100 என்ஜினீயர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். மீதமுள்ள பணிகள் இன்று இரவு 11 மணிக்கு மேல் தொடங்கும்.

    இன்னும் 2 நாட்களில் மேலும் 3 இரும்பு கிரீடர்கள் பொருத்தும் பணி முடிவடைய வாய்ப்பு உள்ளது. இந்த இரும்பு கிரீடர்கள் ஒவ்வொன்றும் 75 டன் எடை கொண்டவை. மொத்தம் 6 கிரீடர்கள், அவற்றை பொருத்துவதற்கான இரும்புகள் என மொத்தம் 540 டன் எடை கொண்டவை. மீதமுள்ளவற்றில் 2 இரும்பு கிரீடர்கள் தண்டவாள பகுதிக்கு கொண்டு வரப்பட்டு விட்டன. இன்னும் ஒரு இரும்பு கிரீடர் வெளியே உள்ளது. அதுவும் தண்டவாள பகுதிக்கு கொண்டுவரப்பட்டு பொருத்தப்படும்.

    வருகிற மார்ச் மாதத்துக்குள் முழு பணிகளையும் முடித்து இந்த வழித்தடத்தில் பறக்கும் ரெயில்களை இயக்க திட்டமிட்டு உள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • சதீஷ், பரங்கிமலை ரெயில் நிலையத்திற்கு வந்து கொண்டிருந்த மின்சார ரெயிலில் சத்யாவை தள்ளிவிட்டுள்ளார்.
    • சதீஷ் மீதான குண்டர் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

    சென்னை:

    சென்னை கிண்டியை அடுத்த ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சதீஷ்(23) என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த 2ஆம் ஆண்டு கல்லூரி மாணவி சத்யா(20) என்பவரை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் பரங்கிமலை ரெயில் நிலையத்தில் நின்று பேசிக்கொண்டு இருந்த போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு சண்டை நடந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சதீஷ், பரங்கிமலை ரெயில் நிலையத்திற்கு வந்து கொண்டிருந்த மின்சார ரெயிலில் சத்யாவை தள்ளிவிட்டுள்ளார். இதில் ரெயிலில் சிக்கி சத்யா உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இச்சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இக்கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சதீஷ் சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்நிலையில் சதீஷ் மீதான குண்டர் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

    கைது செய்தது தொடர்பான குறிப்பாணையில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உள்ள தகவலில் முரண்பாடு இருப்பதன் காரணமாக குண்டர் சட்டத்தை ரத்து செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • மாணவி சத்யாவை எப்படியாவது திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டேன்.
    • சத்யாவுக்கு வேறு இடத்தில் திருமணம் செய்து வைப்பதற்கு பெற்றோர் ஏற்பாடு செய்தனர். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

    சென்னை:

    பரங்கிமலை ரெயில் நிலையத்தில் கல்லூரி மாணவி சத்யாவை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபர் சதீசை, சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஒருநாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.

    அப்போது சதீசை, சி.பி.சி.ஐ.டி. போலீசார் பரங்கி மலை ரெயில் நிலையம் மற்றும் அவனது வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். சத்யாவை கொலை செய்தது ஏன்? என்பது குறித்து சதீஷ் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளான். அதில் கூறியிருப்பதாவது:-

    மாணவி சத்யாவை எப்படியாவது திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டேன். ஆனால் அது நடக்கவில்லை. அதே நேரத்தில் சத்யாவுக்கு வேறு இடத்தில் திருமணம் செய்து வைப்பதற்கு பெற்றோர் ஏற்பாடு செய்தனர். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

    இதையடுத்து சத்யாவை கொலை செய்ய முடிவு செய்தேன். அதற்காக திட்டம் தீட்டி பரங்கிமலை ரெயில் நிலையத்தில் வைத்து ரெயிலில் தள்ளி கொலை செய்ய முடிவு செய்து திட்டம் போட்டு தீர்த்துக் கட்டினேன்.

    இவ்வாறு சதீஷ் வாக்குமூலம் அளித்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

    ஒருநாள் காவல் முடிந்து சதீசை நேற்று போலீசார் சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • மாணவி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
    • போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்க கோரி சைதாப்பேட்டை கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர்

    சென்னை:

    சென்னை பரங்கிமலை ரெயில் நிலையத்தில் கல்லூரி மாணவி சத்திய பிரியா, ரெயிலில் தள்ளி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய சதீசை போலீசார் கைது செய்தனர். விசாரணை நடத்தி வாக்கு மூலம் பெற்ற பின், சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தப்பட்ட சதீசை 28ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

    அதன்பின் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணைக்கு மாற்றம் செய்து தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு உத்தரவிட்டார். இதையடுத்து டி.எஸ்.பி.செல்வகுமார் தலைமையில் சிபிசிஐடி போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்டுள்ள சதீசுக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுக் கொடுக்க முடிவு செய்துள்ளனர். இதனால் சதீஷ் மீதான குற்றப்பத்திரிகையை விரைவில் தாக்கல் செய்ய இருக்கிறார்கள்.

    இதற்காக சிறையில் உள்ள சதீசை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்க கோரி சைதாப்பேட்டை கோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வீடியோ கான்பரன்சிங் மூலமாக சதீஷ் ஆஜர்படுத்தப்பட்டார்.

    காவல்துறையின் மனுவை விசாரித்த நீதிமன்றம், சதீஷை ஒருநாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தது. இதையடுத்து சதீஷை சிறையில் இருந்து சிபிசிஐடி அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்த உள்ளனர். 

    • மாணவி சத்தியபிரியா கொலை வழக்கு விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர்.
    • மாணவி கொலையில் கைது செய்யப்பட்டுள்ள சதீசுக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுக் கொடுக்க முடிவு செய்துள்ளனர்.

    சென்னை:

    சென்னை ஆலந்தூரை சேர்ந்தவர் கல்லூரி மாணவி சத்தியபிரியா (வயது23). போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தார். அதே குடியிருப்பில் வசித்து வந்த சதீஷ் (23) என்பவர் சத்திய பிரியாவை ஒருதலையாக காதலித்து வந்தார். அவரது காதலை சத்திய பிரியா ஏற்கவில்லை.

    இதனால் ஆத்திரம் அடைந்த சதீஷ் கடந்த 13-ந்தேதி பரங்கிமலை ரெயில் நிலையத்தில் மாணவி சத்தியபிரியாவை மின்சார ரெயில் முன்பு தள்ளி கொலை செய்தார். இந்த கொலை தொடர்பாக வாலிபர் சதீசை ரெயில்வே போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் அவர் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் மாணவி கொலை வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது. வழக்கு தொடர்பான ஆவணங்களும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டது.

    இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் தங்களது முதல்கட்ட விசாரணையை கடந்த 15-ந்தேதி தொடங்கினார்கள். பரங்கிமலை ரெயில் நிலையத்தில் சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்ட போலீசார் ரெயில் நிலைய அதிகாரிகள், பாதுகாப்பு பணியில் இருந்த ரெயில்வே போலீசார் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

    ரெயில் என்ஜின் டிரைவரிடம் விசாரணை நடத்தினார்கள். பின்னர் ரெயில் நிலையம், அதை சுற்றி உள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள் ஆகியவற்றையும் ஆய்வு செய்தனர்.

    இதன் அடுத்தக்கட்டமாக மாணவி சத்திய பிரியாவின் தோழிகள், குடும்பத்தினர், சம்பவத்தை நேரில் பார்த்து பேட்டி அளித்தவர்கள் ஆகியோர்களின் விவரங்களை சேகரித்து அவர்களிடம் விசாரணை நடத்தினார்கள்.

    ஆலந்தூர் போலீஸ் குடியிருப்பில் வசிக்கும் மாணவி சத்தியபிரியாவின் தாயாரான போலீஸ் ஏட்டு ராமலட்சுமி, அவரது உறவினர்கள், அக்கம் பக்கத்தினர், சதீசின் குடும்பத்தினர் ஆகியோரிடமும் விசாரணை நடத்தி உள்ளனர்.

    மாணவி சத்தியபிரியா கொலை வழக்கு விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர். மாணவி கொலையில் கைது செய்யப்பட்டுள்ள சதீசுக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுக் கொடுக்க முடிவு செய்துள்ளனர். இதனால் சதீஷ் மீதான குற்றப்பத்திரிகையை விரைவில் தாக்கல் செய்ய இருக்கிறார்கள்.

    இதற்காக சிறையில் உள்ள சதீசை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்க கோரி சைதாப்பேட்டை கோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று மனு தாக்கல் செய்தனர்.

    தீபாவளி முடிந்த பிறகு இந்த மனு விசாரணைக்கு வர உள்ளது. போலீஸ் காவலுக்கு அனுமதி அளித்ததும் இந்த வழக்கு விசாரணை தீவிரம் அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • மாணவியின் தாய் ராமலட்சுமி புற்றுநோயால் அவதிப்பட்டு வரும் நிலையில் கணவர் மாணிக்கம் தற்கொலை செய்து கொண்டதும் அவர்களது குடும்பத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • மாணவி சத்தியபிரியா கொலை செய்யப்பட்ட அன்று சென்னை மாநகர போலீஸ் அதிகாரிகளும் நேரில் சென்று ஆறுதல் கூறியபோது அவர் கண்ணீர் விட்டு அழுதார்.

    ஆலந்தூர்:

    சென்னை ஆலந்தூரைச் சேர்ந்த கல்லூரி மாணவி சத்திய பிரியாவை, பரங்கிமலை ரெயில் நிலையத்தில் வைத்து வாலிபர் சதீஷ் ரெயில் முன்பு தள்ளி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக மாம்பலம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில் வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது. மாணவி சத்திய பிரியா கொலை வழக்கை விரைந்து முடித்து கொலையாளி சதீசுக்கு அதிகபட்ச தண்டனையை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதற்காகவே இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டுள்ளது.

    இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர். ரெயில்வே போலீசாரிடமிருந்து வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் வாங்கி தங்களது அதிரடி விசாரணையை வேகப்படுத்தி உள்ளனர்.

    பரங்கிமலை ரெயில் நிலையத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்திய போலீசார் கேமரா காட்சிகளை போட்டு பார்த்தும் பல்வேறு தகவல்களை சேகரித்தனர். மாணவி சத்திய பிரியா, கொலையாளி சதீஷ் இருவரும் தனித்தனியாக பரங்கிமலை ரெயில் நிலையத்துக்குள் நுழையும் காட்சி, சத்திய பிரியாவை, சதீஷ் ரெயிலில் தள்ளி விடும் வீடியோ பதிவு ஆகியவற்றையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைப்பற்றி இருக்கிறார்கள்.

    மாணவியின் தாய் ராமலட்சுமி புற்றுநோயால் அவதிப்பட்டு வரும் நிலையில் கணவர் மாணிக்கம் தற்கொலை செய்து கொண்டதும் அவர்களது குடும்பத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    மாணவி சத்தியபிரியா கொலை செய்யப்பட்ட அன்று சென்னை மாநகர போலீஸ் அதிகாரிகளும் நேரில் சென்று ஆறுதல் கூறியபோது அவர் கண்ணீர் விட்டு அழுதார்.

    இந்த நிலையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மாணவி சத்திய பிரியாவின் தாயிடம் நேரில் விசாரணை நடத்தினார்கள். ஒரே நேரத்தில் மகள், கணவரை இழந்து அவர் சோகத்தில் மூழ்கி இருந்தார். அவரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடந்த சம்பவத்தை கேட்டனர். சத்திய பிரியா-சதீஷ் இடையே ஏற்பட்ட காதல் விவகாரம் குறித்த விவரங்களை வாக்குமூலமாக பதிவு செய்தனர்.

    சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் சதீஷ் குடும்பத்தை எவ்வளவு நாட்களாக தெரியும், சத்தியபிரியா-சதீஷ் இடையே என்ன நடந்தது என்று போலீசார் விளக்கமாக ராமலட்சுமியிடம் கேட்டனர்.

    அப்போது அவர் போலீசாரிடம் கூறியதாவது:-

    சிறு வயதில் இருந்தே அடுத்தடுத்த தெருக்களில் 2 குடும்பமும் வசித்து வந்தோம். சத்தியபிரியா பெரியவளாகிய பிறகும் சதீஷ் அவளை பின் தொடர்ந்துள்ளான். அவள் வெளியில் செல்லும் போது பின் தொடர்வதாக என் மகள் என்னிடம் கூறுவாள்.

    பின்னர் என் மகளை அவன் காதலிப்பதகாக கூறியதையும் என்னிடம் தெரிவித்தாள். நாங்கள் உடனே கண்டித்தோம். அவனது பெற்றோரிடம் சொல்லி இது போன்ற செயலில் ஈடுபடுவதை தடுக்க வேண்டும் என்று கூறினோம்.

    ஒருமுறை மாம்பலம் ரெயில் நிலையத்தில் சதீஷ், சத்தியபிரியாவிடம் வாய் தகராறு செய்து அடித்து உள்ளான். அந்த சம்பவத்தையும் அவள் கூறினாள். இது பற்றி போலீசில் தெரிவித்தோம்.

    போலீசார் அவனிடம் விசாரணை என்ற பெயரில் எச்சரிக்கை செய்து விட்டு விட்டனர். அன்றே போலீசார் அவன் மீது நடவடிக்கை எடுத்து இருந்தால் என் மகளை இன்று பறிகொடுத்து இருக்க மாட்டேனே.

    என் மகளை ரெயிலில் தள்ளி கொடூரமாக கொலை செய்த அவனுக்கு உரிய தண்டனை பெற்று தர வேண்டும் என்று கண்ணீர் மல்க ராமலட்சுமி வாக்குமூலமாக கூறியுள்ளார்.

    அதனைத் தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் அடுத்தகட்ட விசாரணைக்கு சென்றனர்.

    • கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது அதில் சதீஷ், மாணவி சத்திய பிரியாவை ரெயில் முன்பு தள்ளிவிடும் காட்சிகள் பதிவாகி இருந்ததாக தெரிகிறது.
    • மாணவி படித்த தனியார் கல்லூரி, மாணவியின் தோழிகள் ஆகியோரிடமும் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    சென்னை:

    சென்னை ஆலந்தூரை சேர்ந்தவர் கல்லூரி மாணவி சத்திய பிரியா (வயது20). இவர் வசிக்கும் அதே பகுதியில் வசித்து வருபவர் சதீஷ் (23). இந்த நிலையில் சத்திய பிரியாவை, சதீஷ் ஒருதலையாக காதலித்து வந்தார்.

    தொடர்ந்து மாணவியின் பின்னால் சுற்றி தொந்தரவு செய்து வந்தார். ஆனாலும் அவரது காதலை மாணவி சத்திய பிரியா ஏற்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த சதீஷ் கடந்த 13-ந்தேதி பரங்கிமலை ரெயில் நிலையத்தில் சத்திய பிரியாவை ரெயில் முன்பு தள்ளிவிட்டு கொலை செய்தார்.

    இதுதொடர்பாக மாம்பலம் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி சதீசை கைதும் செய்தனர். பின்னர் அவரை சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

    இந்த வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி. பிரிவுக்கு மாற்றி டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டார். இதையடுத்து ரெயில்வே போலீசார் தங்களிடம் இருந்த வழக்கு ஆவணங்களை சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    இதுதொடர்பான விசாரணையை கடந்த 15-ந்தேதி பிற்பகலில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தொடங்கினார்கள். முதலில் சம்பவம் நடந்த பரங்கிமலை ரெயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

    அதன்பிறகு சம்பவம் நடந்த இடத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரெயில்வே போலீசார், ரெயில்வே அதிகாரிகள், ஊழியர்கள், ரெயில் என்ஜின் டிரைவர்களிடம் விசாரணை நடத்தினார்கள். ரெயில் நிலையம், அதை சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டு இருந்த கேமராக்களையும் ஆய்வு செய்தனர்.

    கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது அதில் சதீஷ், மாணவி சத்திய பிரியாவை ரெயில் முன்பு தள்ளிவிடும் காட்சிகள் பதிவாகி இருந்ததாக தெரிகிறது. தற்போது முதல்கட்ட விசாரணை முடிந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    அடுத்த கட்டமாக மாணவி சத்தியபிரியாவின் தோழிகள், குடும்பத்தினர் மற்றும் சம்பவத்தை நேரில் பார்த்து டி.வி. மற்றும் யூடியூப் சேனல்களுக்கு பேட்டி அளித்தவர்கள் ஆகியோரிடம் விவரங்களை சேகரித்து அவர்களிடம் விசாரணை நடத்தவும் சி.பி. சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

    அதன்படி இன்று ஆலந்தூர் போலீசார் குடியிருப்பில் வசிக்கும் மாணவியின் தாயாரும், போலீஸ் ஏட்டுமான ராமலட்சுமி மற்றும் உறவினர்கள், அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்துகிறார்கள்.

    தொடர்ந்து மாணவி படித்த தனியார் கல்லூரி, மாணவியின் தோழிகள் ஆகியோரிடமும் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்துள்ளனர். அதன்பிறகு சதீஷின் குடும்பத்தினரிடமும் விசாரணை நடத்துகிறார்கள்.

    சதீஷ், மாணவி சத்திய பிரியாவை பின்தொடர்ந்து சென்றது முதல் அவரை ரெயில் முன்பு தள்ளி விட்டது வரை அனைத்து தகவல்கள் மற்றும் ஆதாரங்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் திரட்டி வைத்துள்ளனர்.

    இந்த நிலையில் மாணவி சத்தியபிரியா தள்ளிவிடப்பட்ட மின்சார ரெயிலின் என்ஜின் டிரைவரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது மாணவி சத்திய பிரியாவை கொலையாளி சதீஷ் எப்படி தாக்கி தள்ளினார். எவ்வளவு தூரத்தில் இருந்து அவர் விழுந்தார்? மாணவி மீது ரெயில் மோதிய பின்னர் எவ்வளவு தூரத்தில் நின்றது? உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் கேட்டு விசாரித்ததாக கூறப்படுகிறது.

    ரெயில் என்ஜின் டிரைவரின் தகவலை சி.பி.சி.ஐ.டி. போலீசார் பதிவு செய்து கொண்டனர். இந்த தகவல்களும் கொலையாளி சதீசுக்கு எதிராக பதிவு செய்யப்படும் என்று தெரிகிறது.

    இதற்கிடையே சிறையில் உள்ள கொலையாளி சதீசிடம் மேலும் பல தகவல்களை பெற அவரிடம் விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.

    வரும் வாரத்தில் சதீஷை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கவும் முடிவு செய்துள்ளனர். விரைவில் இதற்காக முறைப்படி போலீசார் கோர்ட்டில் மனுதாக்கல் செய்கிறார்கள்.

    சதீசை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கும்போது மேலும் பல தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • புழல் சிறையில் சதீசுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
    • 8 மணி நேரத்துக்கு ஒருமுறை சுழற்சி முறையில் போலீசார் மாறி மாறி பாதுகாப்பு அளித்து வருகிறார்கள்.

    சென்னை:

    மாணவி சத்யாவை கொடூரமாக கொலை செய்த கொலையாளி சதீஷ், புழல் சிறையில் அடைக்கப்ட்டுள்ளான். அங்கு சக கைதிகளால் அவனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுவிடக்கூடாது என்று சிறைத்துறை அதிகாரிகள் அஞ்சுகிறார்கள். சதீஷ் கோர்ட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது ஏற்கனவே தாக்குதல் சம்பவம் நடைபெற்றது. இதனை கருத்தில்கொண்டே புழல் சிறையில் சதீசுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. 8 மணி நேரத்துக்கு ஒருமுறை சுழற்சி முறையில் போலீசார் மாறி மாறி பாதுகாப்பு அளித்து வருகிறார்கள்.

    சிறையில் சதீஷ் தற்கொலை செய்து கொள்ளக்கூடாது என்பதற்காக அதனை தடுக்கும் வகையிலான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

    நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் மாணவி சுவாதி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதல் விவகாரத்தில் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான ராம்குமார் புழல் சிறையில் இருந்தபோதுதான் மின் வயரை கடித்து தற்கொலை செய்து கொண்டான். அதே பாணியில் சதீசும் தற்கொலை முடிவை எடுத்துவிடக் கூடாதே என்கிற அச்சம் சிறை துறையினருக்கு ஏற்பட்டு உள்ளது. இதை தொடர்ந்து சதீசை 24 மணி நேரமும் சிறை காவலர்கள் தொடர்ந்து கண்காணித்தப்படியே உள்ளனர்.

    • 4 தனிப்படையினர் மாணவி கொலை வழக்கு தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • மாணவி சத்யா கொலை வழக்கை எவ்வளவு சீக்கிரம் நடத்தி முடிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் விரைவாக நடத்தி முடிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    சென்னை:

    சென்னை ஆலந்தூரை சேர்ந்த கல்லூரி மாணவி சத்யா ரெயில் முன்பு தள்ளி கொலை செய்யப்பட்ட சம்பவம் ஏற்படுத்திய பரபரப்பு இன்னும் அடங்காமலேயே உள்ளது.

    பரங்கிமலை ரெயில் நிலையத்தில் நடைபெற்ற இந்த கொடூர கொலை சம்பவம் தொடர்பாக மாம்பலம் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் வைரவன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். கடந்த 13-ந்தேதி மதியம் மாணவி சத்யாவை ரெயில் முன்பு தள்ளி கொலை செய்துவிட்டு தப்பிய கொடூர கொலையாளி சதீசை ரெயில்வே போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி துரைப்பாக்கத்தில் வைத்து அதிரடியாக கைது செய்தனர்.

    சதீசை கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் புழல் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை ரெயில்வே போலீசிடமிருந்து சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது.

    போலீஸ் சூப்பிரண்டு ஜியா உல் ஹக் தலைமையிலான போலீசார் வழக்கு விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். டி.எஸ்.பி. புருஷோத்தமன் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    4 தனிப்படையினர் மாணவி கொலை வழக்கு தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள். மாணவி சத்யா கொலை வழக்கை எவ்வளவு சீக்கிரம் நடத்தி முடிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் விரைவாக நடத்தி முடிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    இதுதொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறும் போது, இதுபோன்ற முக்கியமான வழக்குகளை 3 மாதத்தில் முடிப்பதற்கு எப்போதுமே திட்டமிடுவோம்.

    அந்த வகையில் சத்யா கொலை வழக்கும் 3 மாதத்தில் நடத்தி முடிக்கப்படும். இந்த வழக்கில் கொலையாளி சதீசுக்கு அதிகபட்ச தண்டனையை பெற்று தருவோம் என்று தெரிவித்தார்.

    மாணவி சத்யா கொலை செய்யப்பட்ட பரங்கிமலை ரெயில் நிலையத்தில் சம்பவம் நடைபெற்ற பகுதியில் 2 கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன. மெட்ரோ ரெயில் நிலைய பகுதியிலும் கொலை சம்பவம் நடந்த இடம் நோக்கி கேமரா ஒன்று பொருத்தப்பட்டிருந்தது. இந்த 3 கேமராக்களில் பதிவான காட்சிகளையும் ரெயில்வே போலீசார் ஏற்கனவே கைப்பற்றி உள்ளனர்.

    சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகளும் இந்த வீடியோ காட்சிகளை போட்டு பார்த்துள்ளனர். இந்த வீடியோ காட்சிகளில் மாணவி சத்யா, கொலையாளி சதீஷ் ஆகியோர் ரெயில் நிலையத்துக்குள் வரும் காட்சிகள் பதிவாகி உள்ளன.

    ஒரு கண்காணிப்பு கேமராவில் மாணவி சத்யாவை சதீஷ் ரெயிலில் தள்ளி விடும் காட்சியும் பதிவாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கொலை சம்பவம் நடந்தபோது ரெயில் நிலையத்தில் நின்றிருந்த பயணிகள் பற்றிய விவரங்களையும் போலீசார் சேகரித்துள்ளனர். சதீஷ், சத்யாவை பின் தொடர்ந்து சென்றது முதல், கொலை செய்தது வரை இந்த வழக்குக்கு தேவையான அனைத்து முக்கிய ஆதாரங்களையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் முழுமையாக திரட்டி வைத்துள்ளனர்.

    இந்த வழக்கில் மாம்பலம் ரெயில்வே போலீசார் நடத்திய விசாரணை நேற்று காலையுடன் முடிவடைந்தது. இதையடுத்து வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும், ரெயில்வே போலீசார், சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். சி.பி.சி.ஐ.டி. போலீசார் இதனை வைத்து அடுத்தகட்ட விசாரணையில் தீவிரம் காட்டியுள்ளனர்.

    மாணவி கொலையில் ரெயில் நிலையத்தில் நின்றிருந்த பயணிகள் பலரை இந்த வழக்கில் முக்கிய சாட்சிகளாக போலீசார் சேர்த்துள்ளனர். அவர்களிடமும் விசாரணை தொடங்கியுள்ளது. இந்த சாட்சிகள் தெரிவிக்கும் தகவல்கள் வாக்குமூலமாக பதிவு செய்யப்பட்டு வீடியோவும் எடுக்கப்படுகிறது. மாணவிக்கு சதீஷ் தொடர்ச்சியாக கொடுத்த தொந்தரவுகள் பற்றியும் போலீசார் விரிவான விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதில் கிடைத்த தகவல்களும் வழக்கில் முக்கிய ஆதாரங்களாக சேர்க்கப்பட்டுள்ளன. இப்படி மாணவி சத்யா கொலையில் கொலையாளி சதீசுக்கு எதிராக அனைத்து வலுவான ஆதாரங்களும் கிடைத்திருப்பதால் உச்சப்பட்ச தண்டனையில் இருந்து சதீஷ் தப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    • சத்யாவின் மரணம் குடும்பத்தை நிலை குலைய செய்துள்ளது.
    • தாய் ராமலட்சுமி மகள் மற்றும் கணவரை ஒரே நேரத்தில் பறி கொடுத்து விட்டு அடுத்து 2 குழந்தைகளுடன் என்ன செய்ய போகிறோமோ என்ற வேதனையில் தவித்து வருகிறார்.

    ஆலந்தூர்:

    சென்னை பரங்கிமலை ரெயில் நிலையத்தில் நேற்று முன்தினம் மின்சார ரெயில் முன்பு தள்ளி மாணவி சத்யா கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது. இப்படி கூட கொலைகள் நடக்குமா? என நினைக்க தோன்றும் வகையில் இந்த கொடூர சம்பவம் அரங்கேறி உள்ளது. இந்த சோகம் மறைவதற்குள் அவரது தந்தை மாணிக்கம் மகள் இறந்த துக்கம் தாங்காமல் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    ஒருதலைக்காதலால் ஒரு அப்பாவி மாணவி மற்றும் அவரது தந்தை உயிர்கள் பறிபோய் உள்ளது, சோகத்திலும் சோகத்தை அனைவர் மனதிலும் ஏற்படுத்தி இருக்கிறது. கொலையுண்ட சத்யா பற்றி உருக்கமான தகவல்கள் கிடைத்து உள்ளன.

    இவரது தாய் ராமலட்சுமி ஆதம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருகிறார். மார்பக புற்றுநோயால் அவதிப்பட்டு வரும் இவருக்கும் கணவர் மாணிக்கத்துக்கும் திருமணமாகி நீண்ட நாட்களாக குழந்தை இல்லாமல் இருந்தது. 10 ஆண்டுகளுக்கு பிறகு தான் இந்த தம்பதிக்கு சத்யா பிறந்தார்.

    அதன் பிறகு அவர்களுக்கு அடுத்தடுத்து 2 குழந்தைகள் பிறந்தது. 15 வயதான 2-வது மகள் பரங்கிமலையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். 3-வது குழந்தையான செல்விக்கு தற்போது 2½ வயது தான் ஆகிறது.

    ராம லட்சுமியின் தங்கை காஞ்சனா லஞ்ச ஒழிப்பு துறையில் ஏட்டாக பணியாற்றி வருகிறார்.

    இவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. அவரது தம்பி சீனிவாசன் எழும்பூரில் போலீஸ்காரராக இருந்து வருகிறார். இவருக்கும் பெண் குழந்தை தான் உள்ளது. இதனால் தங்களுக்காவது ஆண் வாரிசு கிட்டும் என்ற நம்பிக்கையில் ராமலட்சுமி தம்பதியினர் இருந்தனர்.

    ஆனால் 3-ம் பெண்களாக பிறந்ததால் சற்று வருத்தம் அடைந்தனர். ஆனாலும் அவர்கள் அதை காட்டி கொள்ளாமல் பாசமாக தான் வளர்த்து வந்தனர்.

    மூத்த மகளான சத்யா பெற்றோர் மீது அதிக பாசத்துடன் இருந்தார். பெற்றோர் என்ன சொன்னாலும் அதை கேட்டு நடந்தார்.

    புற்று நோயால் பாதிக்கப்பட்டதால் 3- வது குழந்தை பிறந்ததும் அதற்கு பால் கொடுக்கமுடியாமல் ராமலட்சுமி கஷ்டப்பட்டார், இதை அறிந்த சத்யா தனது தங்கைக்கு பாட்டிலில் பால் கொடுப்பது. தொட்டிலில் தூங்க வைப்பது என ஒரு தாயாக மாறி பராமரித்து வந்தார். தனக்கு என்ன பிரச்சினை என்றாலும் அதை மூடி மறைக்காமல் சத்யா தனது பெற்றோரிடம் தெரிவிப்பார்.

    அப்படி தான் கொலையாளி சதீஷ் தன்னை பின் தொடர்ந்து வந்து தொந்தரவு கொடுப்பதாக பெற்றோரிடம் தெரிவித்தார். பெற்றோர் சதீசின் நடத்தை சரியில்லை, இதனால் அவனது பேச்சுக்கு மயங்கி விடாதே என்று மகளை எச்சரித்தனர். இதை ஏற்றுக்கொண்ட சத்யா முதலில் நட்பாக பழகினாலும் அதன்பிறகு சதீசை ஏறெடுத்து பார்க்காமல் கல்லூரிக்கு சென்று வந்தார். ஆனாலும் சதீசின் செயல் எல்லை மீறி போனதால் இது தொடர்பாக 2 முறை போலீசிலும் புகார் கொடுத்தனர்.

    ஆனால் 2 குடும்பத்தினரும் போலீஸ் துறையை சேர்ந்ததால் போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி உள்ளனர். சதீஷின் தந்தையும் என் மகன் இனிமேல் தொந்தரவு எதுவும் கொடுக்கமாட்டான் என வாக்குறுதிகொடுத்தார். இதனால் போலீசார் புகார் மீது நடவடிக்கை எதுவும் எடுக்காமல் விட்டு விட்டனர். ஆனாலும் சதீசின் கொட்டம் அடங்கவில்லை.

    சத்யாவை விரட்டி விரட்டி சென்று தொந்தரவு கொடுத்து வந்தார். இதனால் சத்யா உயிருக்கு ஆபத்து எதுவும் வந்து விடக்கூடாது என்பதற்காக ராமலட்சுமியின் தந்தை தினமும் பேத்தியை அழைத்து கொண்டு பரங்கிமலை ரெயில் நிலையத்துக்கு வருவார். பின்னர் பிளாட்பாரத்திற்கும் கூடவே வந்து மின்சார ரெயிலில் ஏற்றி விட்டு தான் செல்வது வழக்கம்.

    அது போல தான் சம்பவம் நடந்த நேற்று முன்தினமும் தாத்தா பேத்தியை அழைத்து கொண்டு பரங்கிமலை ரெயில் நிலையத்துக்கு சென்றார். ஆனால் அன்று அவர் பிளாட்பாரத்துக்கு வராமல் ரெயில் நிலையத்துக்கு வெளியே இறக்கி விட்டு சென்றார். இதை ஏற்கனவே நோட்டமிட்டு அங்கு காத்திருந்த சதீஷ் தனது தோழிகளுடன் நின்று கொண்டிருந்த சத்யா அருகே சென்று கடைசியாக தனது ஆசையை தெரிவித்தார். உடனே சத்யா இனிமேல் என்னுடன் பேசாதே, என்னை விட்டு விலகி செல் என கோபமாக கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த சதீஷ் என்னை திருமணம் செய்யாத நீ இனி யாரையும் திருமணம் செய்யக்கூடாது என ஆவேசத்துடன் ரெயில் முன்பு தள்ளி விட்டு கொன்றது தெரிய வந்துள்ளது.

    சத்யாவின் மரணம் அந்த குடும்பத்தை நிலை குலைய செய்துள்ளது. அவரது தாய் ராமலட்சுமி மகள் மற்றும் கணவரை ஒரே நேரத்தில் பறி கொடுத்து விட்டு அடுத்து 2 குழந்தைகளுடன் என்ன செய்ய போகிறோமோ என்ற வேதனையில் தவித்து வருகிறார். தன்னை தாய் போல கவனித்து வந்த அக்காளை காணாது 2½ வயது பிஞ்சுமனம் ஏங்குவது கண்கலங்க வைத்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கொலை வழக்கு விசாரணையை தீவிரப்படுத்த விரைவில் விசாரணை அதிகாரி நியமிக்கப்பட உள்ளார்.
    • அதிகாரி நியமிக்கப்பட்டவுடன் சி.பி.சி.ஐ.டி. விசாரணை தீவிரப்படுத்தப்பட உள்ளது.

    சென்னை:

    சென்னை ஆலந்தூரை சேர்ந்த கல்லூரி மாணவி சத்திய பிரியாவை ரெயில் முன்பு தள்ளி கொடூரமாக கொலை செய்த சம்பவம் ஏற்படுத்திய பரபரப்பு இன்னும் அடங்காமலேயே உள்ளது.

    இக்கொலை சம்பவம் தொடர்பாக மாம்பலம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். துரைப்பாக்கத்தில் பதுங்கி இருந்த கொலையாளி சதீசை ரெயில்வே போலீசாரே கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    பரங்கிமலை ரெயில் நிலையத்தில் பரபரப்பான மதிய வேளையில் நடந்த இந்த துணிகர கொலை சம்பவத்தை பயணிகள் பலரும் நேரில் பார்த்துள்ளனர். இதனால் இந்த வழக்கில் சாட்சிகள் வலுவாகவே உள்ளன.

    அதே நேரத்தில் ரெயில் நிலையத்தில் உள்ள கேமராக்களையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    ரெயில்வே போலீசாரிடம் இருந்து இந்த வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி டி.ஜி.பி.சைலேந்திரபாபு உத்தரவிட்டார். இதன்படி சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஆரம்ப கட்ட விசாரணையை தொடங்கி உள்ளனர்.

    கொலை வழக்கு விசாரணையை தீவிரப்படுத்த விரைவில் விசாரணை அதிகாரி நியமிக்கப்பட உள்ளார். இந்த அதிகாரி நியமிக்கப்பட்டவுடன் சி.பி.சி.ஐ.டி. விசாரணை தீவிரப்படுத்தப்பட உள்ளது.

    இந்த வழக்கை பொறுத்தவரையில் மற்ற வழக்குகளை போல் அல்லாமல் சிறப்பு கவனம் செலுத்தி விசாரணை நடத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    அதே நேரத்தில் வழக்கு விசாரணையை விரைந்து முடிக்கவும் உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

    கொடூரமான கொலை சம்பவம் என்பதால் இந்த வழக்கில் வழங்கப்படும் தீர்ப்பு இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் ஓரளவுக்கு தடுக்கும் வகையில் இருக்க வேண்டும் என்பதிலும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிரமாக உள்ளனர். இதையடுத்து கொலை வழக்கில் உச்சபட்ச தண்டனையை வாங்கி கொடுக்க முடிவு செய்து உள்ளனர்.

    இதையடுத்து அதற்கு தேவையான ஆவணங்களை சேகரிப்பதில் போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள். வழக்கு விசாரணையை விரைவில் முடித்து குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யவும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

    • தலைமறைவான குற்றவாளியை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
    • கிழக்கு கடற்கரை சாலையில் சுற்றித் திரிந்த கொலையாளியை போலீசார் கைது செய்தனர்.

    சென்னை:

    பரங்கிமலையில் மின்சார ரெயிலில் இருந்து மாணவியை தள்ளிவிட்டதில், கழுத்து துண்டாகி உயிரிழந்த சம்பவம் நேற்று சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சதீஷ் என்ற இளைஞர் மாணவியை ஒருதலையாக காதலித்து வந்த நிலையில், காதலை ஏற்க மறுத்ததால் மாணவியை கொலை செய்திருக்கலாம் என்கிற சந்தேகத்தில் போலீசார் விசாரணை நடத்தினர்.

    தலைமறைவான குற்றவாளியைப் பிடிக்க ரெயில்வே போலீசார் சார்பில் டிஎஸ்பி தலைமையில் 4 தனிப்படைகளும், பரங்கிமலை சட்ட ஒழுங்கு உதவி ஆணையர் தலைமையில் 3 தனிப்படைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில், கிழக்கு கடற்கரை சாலையில் சுற்றித் திரிந்த கொலையாளி சதீஷை போலீசார் இன்று கைது செய்தனர்.

    மேலும், மாணவியின் தந்தை மாரடைப்பால் மரணமடைந்தார்.

    ×