search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மாணவி சத்தியபிரியா கொலை வழக்கு- ரெயில் என்ஜின் டிரைவரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை
    X

    மாணவி சத்தியபிரியா கொலை வழக்கு- ரெயில் என்ஜின் டிரைவரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை

    • கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது அதில் சதீஷ், மாணவி சத்திய பிரியாவை ரெயில் முன்பு தள்ளிவிடும் காட்சிகள் பதிவாகி இருந்ததாக தெரிகிறது.
    • மாணவி படித்த தனியார் கல்லூரி, மாணவியின் தோழிகள் ஆகியோரிடமும் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    சென்னை:

    சென்னை ஆலந்தூரை சேர்ந்தவர் கல்லூரி மாணவி சத்திய பிரியா (வயது20). இவர் வசிக்கும் அதே பகுதியில் வசித்து வருபவர் சதீஷ் (23). இந்த நிலையில் சத்திய பிரியாவை, சதீஷ் ஒருதலையாக காதலித்து வந்தார்.

    தொடர்ந்து மாணவியின் பின்னால் சுற்றி தொந்தரவு செய்து வந்தார். ஆனாலும் அவரது காதலை மாணவி சத்திய பிரியா ஏற்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த சதீஷ் கடந்த 13-ந்தேதி பரங்கிமலை ரெயில் நிலையத்தில் சத்திய பிரியாவை ரெயில் முன்பு தள்ளிவிட்டு கொலை செய்தார்.

    இதுதொடர்பாக மாம்பலம் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி சதீசை கைதும் செய்தனர். பின்னர் அவரை சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

    இந்த வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி. பிரிவுக்கு மாற்றி டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டார். இதையடுத்து ரெயில்வே போலீசார் தங்களிடம் இருந்த வழக்கு ஆவணங்களை சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    இதுதொடர்பான விசாரணையை கடந்த 15-ந்தேதி பிற்பகலில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தொடங்கினார்கள். முதலில் சம்பவம் நடந்த பரங்கிமலை ரெயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

    அதன்பிறகு சம்பவம் நடந்த இடத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரெயில்வே போலீசார், ரெயில்வே அதிகாரிகள், ஊழியர்கள், ரெயில் என்ஜின் டிரைவர்களிடம் விசாரணை நடத்தினார்கள். ரெயில் நிலையம், அதை சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டு இருந்த கேமராக்களையும் ஆய்வு செய்தனர்.

    கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது அதில் சதீஷ், மாணவி சத்திய பிரியாவை ரெயில் முன்பு தள்ளிவிடும் காட்சிகள் பதிவாகி இருந்ததாக தெரிகிறது. தற்போது முதல்கட்ட விசாரணை முடிந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    அடுத்த கட்டமாக மாணவி சத்தியபிரியாவின் தோழிகள், குடும்பத்தினர் மற்றும் சம்பவத்தை நேரில் பார்த்து டி.வி. மற்றும் யூடியூப் சேனல்களுக்கு பேட்டி அளித்தவர்கள் ஆகியோரிடம் விவரங்களை சேகரித்து அவர்களிடம் விசாரணை நடத்தவும் சி.பி. சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

    அதன்படி இன்று ஆலந்தூர் போலீசார் குடியிருப்பில் வசிக்கும் மாணவியின் தாயாரும், போலீஸ் ஏட்டுமான ராமலட்சுமி மற்றும் உறவினர்கள், அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்துகிறார்கள்.

    தொடர்ந்து மாணவி படித்த தனியார் கல்லூரி, மாணவியின் தோழிகள் ஆகியோரிடமும் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்துள்ளனர். அதன்பிறகு சதீஷின் குடும்பத்தினரிடமும் விசாரணை நடத்துகிறார்கள்.

    சதீஷ், மாணவி சத்திய பிரியாவை பின்தொடர்ந்து சென்றது முதல் அவரை ரெயில் முன்பு தள்ளி விட்டது வரை அனைத்து தகவல்கள் மற்றும் ஆதாரங்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் திரட்டி வைத்துள்ளனர்.

    இந்த நிலையில் மாணவி சத்தியபிரியா தள்ளிவிடப்பட்ட மின்சார ரெயிலின் என்ஜின் டிரைவரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது மாணவி சத்திய பிரியாவை கொலையாளி சதீஷ் எப்படி தாக்கி தள்ளினார். எவ்வளவு தூரத்தில் இருந்து அவர் விழுந்தார்? மாணவி மீது ரெயில் மோதிய பின்னர் எவ்வளவு தூரத்தில் நின்றது? உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் கேட்டு விசாரித்ததாக கூறப்படுகிறது.

    ரெயில் என்ஜின் டிரைவரின் தகவலை சி.பி.சி.ஐ.டி. போலீசார் பதிவு செய்து கொண்டனர். இந்த தகவல்களும் கொலையாளி சதீசுக்கு எதிராக பதிவு செய்யப்படும் என்று தெரிகிறது.

    இதற்கிடையே சிறையில் உள்ள கொலையாளி சதீசிடம் மேலும் பல தகவல்களை பெற அவரிடம் விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.

    வரும் வாரத்தில் சதீஷை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கவும் முடிவு செய்துள்ளனர். விரைவில் இதற்காக முறைப்படி போலீசார் கோர்ட்டில் மனுதாக்கல் செய்கிறார்கள்.

    சதீசை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கும்போது மேலும் பல தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×