என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திமுக எம்எல்ஏ"

    • கம்பம் தி.மு.க எம்.எல்.ஏ. ராமகிருஷ்ணனின் சகோதரர் மனைவி கீதா கடந்த 28-ந்தேதி உடல்நலக்குறைவால் காலமானார்.
    • கம்பம் ராமகிருஷ்ணன் வீட்டிற்கு சென்ற ஓ.பன்னீர்செல்வம் அவரிடமும், அவரது சகோதரர் முருகேசன் குடும்பத்தாரிடமும் துக்கம் விசாரித்து ஆறுதல் கூறினார்.

    கம்பம்:

    அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமைக்கு கடும் போட்டி நிலவி வரும் நிலையில் ஓ.பன்னீர்செல்வம் பெரியகுளத்தில் உள்ள தனது பண்ணை வீட்டில் ஆதரவாளர்களை சந்தித்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார். அவரை தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் இருந்து நிர்வாகிகள் சந்தித்து வருகின்றனர்.

    மேலும் ஓ.பன்னீர்செல்வம் தேனி மாவட்டத்திலும் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் உற்சாகம் அளித்து வருகிறார். தொண்டர்களின் திருமண நிகழ்ச்சிகள், கோவில் திருவிழாக்கள் போன்றவற்றில் கலந்து கொள்வதுடன் தனது போடி தொகுதிக்குட்பட்ட மக்களையும் சந்தித்து குறைகளை கேட்டு வருகிறார்.

    இந்நிலையில் கம்பத்தில் தி.மு.க எம்.எல்.ஏ. ராமகிருஷ்ணன் இல்லத்திற்கு சென்ற ஓ.பன்னீர்செல்வம், அவரது உறவினர் இறந்ததற்கு துக்கம் விசாரித்தார். கம்பம் தி.மு.க எம்.எல்.ஏ. ராமகிருஷ்ணனின் சகோதரர் மனைவி கீதா கடந்த 28-ந்தேதி உடல்நலக்குறைவால் காலமானார்.

    இதனைதொடர்ந்து கம்பம் ராமகிருஷ்ணன் வீட்டிற்கு சென்ற ஓ.பன்னீர்செல்வம் அவரிடமும், அவரது சகோதரர் முருகேசன் குடும்பத்தாரிடமும் துக்கம் விசாரித்து ஆறுதல் கூறினார். அப்போது தி.மு.க, அ.தி.மு.க நிர்வாகிகள் பலர் இருந்தனர்.

    இது தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • பேசிய ஒரு மர்ம நபர் பணம் கொடுக்காவிட்டால் இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு பரப்பி விடுவோம் என மிரட்டியுள்ளனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து எம்.எல்.ஏ.விடம் பேசிய செல்போன் எண், பணம் செலுத்தப்பட்ட வங்கி கணக்கு எண் ஆகியவற்றை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரியகுளம்:

    தேனி மாவட்டம் பெரியகுளம் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் சரவணக்குமார் (வயது 48). தி.மு.க.வைச் சேர்ந்த இவர் தனது குடும்பத்துடன் பாரதி நகரில் வசித்து வருகிறார்.

    இவரது செல்போனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு வீடியோ கால் வந்தது. அதனை சரவணக்குமார் எம்.எல்.ஏ. ஆன் செய்தபோது எதிர்முனையில் இருந்து யாரும் பேசவில்லை. அதன் பிறகு சில மணி நேரங்கள் கழித்து வீடியோ கால் பதிவு செய்து அதனுடன் பெண் ஒருவர் செக்சியாக பேசுவது போன்ற தவறாக சித்தரித்து வீடியோவை அவரது செல்போனுக்கு அனுப்பினர்.

    அதன் பிறகு பேசிய ஒரு மர்ம நபர் பணம் கொடுக்காவிட்டால் இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு பரப்பி விடுவோம் என மிரட்டியுள்ளனர். இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட நபர் கூறிய வங்கி கணக்கில் ரூ.10 ஆயிரம் பணத்தை அனுப்பினார். அதன் பிறகு இதுகுறித்து உரிய விசாரணை நடத்த தேனி சைபர் கிரைம் போலீசாருக்கு புகார் அளித்தார்.

    அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து எம்.எல்.ஏ.விடம் பேசிய செல்போன் எண், பணம் செலுத்தப்பட்ட வங்கி கணக்கு எண் ஆகியவற்றை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உண்மையிலேயே வீடியோ அனுப்பியது பெண்ணா அல்லது வேறு யாருமா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

    இதுகுறித்து பெரியகுளம் எம்.எல்.ஏ.விடம் தொடர்பு கொண்டு கேட்க முயன்றபோது அவர் உரிய பதிலளிக்க மறுத்து விட்டார்.

    • மேடையில் அமர்ந்திருந்த எம்.எல்.ஏ. புகேழந்தி மயக்கம் ஏற்பட்டு மேடையிலேயே மயங்கி விழுந்தார்.
    • அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் புகழேந்திக்கு முதல் உதவி செய்தனர்.

    விக்கிரவாண்டி:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு விழுப்புரம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் துரை. ரவிக்குமார், கடலூர் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் ஆகியோரை ஆதரித்து விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார்.

    இதற்காக வேட்பாளர்கள், எம்.எல்.ஏ.க்கள் முன்னதாகவே வருகை தந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வருகைக்கு காத்திருந்தனர். நேற்று முன்தினம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்திருந்தார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருவதற்கு முன்பு மேடையில் அமர்ந்திருந்த எம்.எல்.ஏ. புகேழந்தி மயக்கம் ஏற்பட்டு மேடையிலேயே மயங்கி விழுந்தார். உடனே அருகில் இருந்த அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் புகழேந்திக்கு முதல் உதவி செய்தனர்.

    இதையடுத்து லட்சுமணன் எம்.எல்.ஏ. பதட்டத்துடன் அங்கு ஓடி வந்து மேடைக்கு கீழே அமர்ந்திருந்த அவரது மகன் செல்வகுமாருக்கு தகவல் தெரிவித்து மேடைக்கு அழைத்தார்.

    பின்னர் புகழேந்தி எம்.எல்.ஏ.வை கைத்தாங்கலாக அழைத்து சென்று முதலமைச்சருக்காக அமைக்கப்பட்டிருந்த சிறப்பு ஏ.சி. அறையில் ஓய்வெடுக்க வைத்தனர். ஆனாலும் அவருக்கு சரியாகாததால் பின்னர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவரை அனுமதித்தனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று காலை 10.35 மணியளவில் புகழேந்தி எம்.எல்.ஏ. பரிதாபமாக உயிரிழந்தார்.

    மரணம் அடைந்த புகழேந்திக்கு கடந்த 4 வருடங்களாகவே கல்லீரல் பிரச்சனை இருந்து வந்தது. அதற்கு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் அவர் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்ற பிறகுதான் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்றார். இந்த நிலையில்தான் அவர் மேடையில் மயங்கி விழுந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளார்.

    புகழேந்தி எம்.எல்.ஏ. தற்போது விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளராகவும் பதவி வகித்து வந்தார்.

    புகழேந்தி எம்.எல்.ஏ. மரணம் அடைந்ததை அறிந்ததும் அமைச்சர் பொன்முடி மருத்துவமனைக்கு விரைந்து சென்றார். அங்கு அவரது உடலை பார்வையிட்டார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

    • அயரா உழைப்பாலும், மக்கள் பணியாலும் படிப்படியாக வளர்ந்து, கழகத்தின் மாவட்டச் செயலாளராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் புகழேந்தி உயர்ந்தார்.
    • புகழேந்தியின் மறைவு, விக்கிரவாண்டி தொகுதிக்கும், விழுப்புரம் மாவட்டத்திற்கும் மட்டுமின்றி, கழகத்திற்கும் பேரிழப்பாகும்.

    சென்னை:

    தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

    விழுப்புரம் தெற்கு மாவட்ட கழகச் செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான அன்புச் சகோதரர் புகழேந்தி எதிர்பாராத வகையில் மறைவுற்ற நிகழ்வு, மிகவும், அதிர்ச்சியும் வேதனை தருகிறது.

    கடந்த சில நாட்களாக உடல்நலம் குன்றியிருந்த அவர், தன் உடல்நலன் பற்றியெல்லாம் சிந்திக்காமல் கழகத்தின் வெற்றிக்காகத் தேர்தல் பணிகளை ஆற்றி வந்தார். நேற்றைய என்னுடைய பரப்புரைக் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த அவர், சற்றே மயக்கம் வர, மருத்துவமனைக்குச் சென்றார். உடனடியாக நானும் மருத்துவர்களைத் தொடர்புகொண்டு, அவரது உடல்நலனைக் கவனித்துக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டிருந்தேன். நலன் பெற்று மீண்டு வருவார் என்று நம்பியிருந்த நிலையில், அவர் நம்மைவிட்டு பிரிந்த செய்தி வந்து நம்மைத் துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

    1973-இல் கழகத்தின் கிளைச் செயலாளராகத் தமது அரசியல் வாழ்வைத் தொடங்கிய புகழேந்தி, தமது அயரா உழைப்பாலும், மக்கள் பணியாலும் படிப்படியாக வளர்ந்து, கழகத்தின் மாவட்டச் செயலாளராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் உயர்ந்தார்.

    1996-இல் ஒன்றியத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பான பணிகளை மேற்கொண்டவர். விக்கிரவாண்டி தொகுதி மக்களோடு, மக்களாக இருந்து அவர்களுக்கான அனைத்துப் பணிகளையும் அக்கறையுடன் மேற்கொண்டு வந்த புகழேந்தியை சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுத்து அந்த மக்கள் அனுப்பி வைத்தனர். எப்போது என்னைச் சந்திக்க வந்தாலும், தொகுதி மக்களுக்கான கோரிக்கைகளுடன்தான் வருவார். அவற்றுக்கான தீர்வுகளைப் பெற்றுச் செல்வார். கழகத் துணைப் பொதுச் செயலாளர் க.பொன்முடிக்கு உற்ற துணையாக விளங்கி - மக்களோடு மக்களாக வாழ்ந்த புகழேந்தியின் மறைவு, விக்கிரவாண்டி தொகுதிக்கும், விழுப்புரம் மாவட்டத்திற்கும் மட்டுமின்றி, கழகத்திற்கும் பேரிழப்பாகும்.

    ஈடுசெய்ய முடியாத அவரது பேரிழப்பால் வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள் மற்றும் கழகத் தோழர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளர்.

    • விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினரான புகழேந்தி உடல்நலக் குறைவால் காலமானார்
    • அண்ணன் புகழேந்தி அவர்களுடைய மரணம் கழகத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும் - உதயநிதி

    விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினரரான புகழேந்தி மறைவிற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அதில்,

    "விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளரும் - விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினருமான அண்ணன் புகழேந்தி அவர்கள் உடல்நலக் குறைவால் மறைந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தோம்.

    கழகப்பணி, மக்கள் பணி இரண்டிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு, அர்ப்பணிப்போடு பணியாற்றிய ஆற்றல் மிகு செயல்வீரர். அண்ணன் புகழேந்தி அவர்களுடைய மரணம் கழகத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

    இத்துயரமான நேரத்தில் அண்ணன் புகழேந்தி அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், கழகத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். அண்ணன் அவர்களின் பணிகள் என்றும் நிலைத்திருக்கும்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

    • தமிழகம் முழுவதும் நாளை மற்றும் நாளை மறுநாள் 2வது கட்ட வாக்காளர் சிறப்பு முகாம்.
    • தமிழகம் முழுவதும், சுமார் 68 ஆயிரம் வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

    தமிழகம் முழுவதும் 2வது கட்ட வாக்காளர் சிறப்பு முகாம் நாளை (23ம் தேதி), நாளை மறுதினம் (24ம் தேதி) நடைபெறும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.

    தமிழகம் முழுவதும், சுமார் 68 ஆயிரம் வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் நடைபெற அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்துள்ளனர்.

    இந்நிலையில், எழும்பூர் தொகுதி எம்.எல்.ஏ ஐ. பரந்தாமன் தனது எக்ஸ் தள பக்கத்தில் இதுகுறித்த விழிப்புணர்வு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில், " எழும்பூர் தொகுதியைச் சேர்ந்த 18 வயது பூர்த்தியானவர்கள், வாக்காளர் அடையாள அட்டையில் ஏதேனும் திருத்தம் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களா நீங்கள்.? என்ன செய்ய வேண்டும்… எப்படி செய்ய வேண்டும்... உங்களுக்கான பதிவுதான் இது..!" என குறிப்பிட்டிருந்தது.

    மேலும் அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:-

    நம் அனைவருக்கும் வாக்களிப்பது என்பது ஜனநாயக கடமை. தேர்தல் நேரத்தில் வாக்காளர் பட்டியலில் பெயரை தேடி பார்த்துவிட்டு இல்லை என்று ஏமாற்றம் அடைவதைவிட சிறப்பு முகாமை பயன்படுத்தி பெயர் பதிவு செய்துக் கொள்ளலாம்.

    இந்திய தேர்தல் ஆணையம் ஒவ்வொரு ஆண்டும் வாக்காளர் சிறப்பு முகாம் நடத்தி வருகிறது. அதன்படி, இம்மாதம் நாளை மற்றும் நாளை மறுநாள் (23ம், 24ம் தேதிகளில்) சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

    யார் யாருக்கெல்லாம் உங்களுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லையோ அவர்களும், வரும் ஜனவரி மாதத்தில் 18 வயது பூர்த்தி செய்யும் இளைஞர்களும் வாக்காளர் சிறப்பு முகாமிற்கு சென்று பெயரை பதிவு செய்துக் கொள்ளலாம்.

    ஏற்கனவே பதிவு செய்தவர்கள் பிழை ஏதேனும் இருந்தால் அதை திருத்திக் கொள்ளலாம். முகவரி மாறியிருப்பவர்கள், எழும்பூர் தொகுதிக்கு குடிவந்தவர்கள், அடுத்த முறை எழும்பூர் தொகுதியில் இருந்து வாக்கு செலுத்த நினைப்பவர்கள் முகவரியை மாற்றிக் கொள்ளலாம்.

    அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது, தேர்தல் நேரத்தில் தங்களின் இருப்பிடத்தின் அருகாமையில் செயல்படும் வாக்குச்சாவடிக்கு செல்லுங்கள். அங்கு, வாக்காள அதிகாரிகள் இருப்பார்கள். திமுகவின் நிர்வாகிகளும் தங்களுக்கு உதவ காத்துக் கொண்டிருக்கின்றனர்.

    நீங்கள் அங்கு செல்லும்போது 18 வயது பூர்த்தியானதற்கான ஆதாரமாக பிறப்புச் சான்றிதழ் அல்லது படிப்புச் சான்றிதழ் உடன் எடுத்துக் செல்லவும்.

    முகவரி மாற்றம் செய்ய வேண்டும் என்றால், இருப்பிடச் சான்றிதழுக்கு அட்டாச்சியாக பேங்க் பாஸ் புக், கேஸ் பில், குடும்ப அட்டை, ஆதார் கார்டு, சொத்து பத்திரம் ஆகியவை உடன் எடுத்துச் செல்லுங்கள்.

    இந்த ஆவணங்களை எடுத்துச் செல்லும்போது அங்கு தரப்படும் விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து ஆவணங்களுடன் இணைத்து சமர்ப்பிக்க வசதியாக இருக்கும்.

    வாக்காளர் சிறப்பு முகாம் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்று கிழமைகளில் நடைபெறுவதால் விடுமுறை தினத்தை வீட்டில் இருந்தே கழிக்கலாம் என்று நினைக்காதீர்கள்.

    இந்த இரண்டு நாட்களில் உங்களுக்கு சவுகரியப்படக்கூடிய ஒரு நாளில் 10 நிமிடம் செலவழித்து பதிவு செய்துக் கொள்ளுங்கள்.

    எழும்பூர் தொகுதி மக்கள் உங்களுடைய பெயர்கள் சேர்த்தல், நீக்கல், திருத்தல் போன்றவற்றை சிறப்பு முகாமில் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மத்திய அரசைக் கண்டித்து நாளை போராட்டம் நடைபெறும்.
    • தமிழ்நாட்டில் மத்திய அரசு நடத்தும் கேந்திர வித்யாலயா பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்களே இல்லை.

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மருத்துவர் அணி செயலாளர் எழிலன் செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது அவர் கூறியிருப்பதாவது:-

    மத்திய அரசு திணிக்க முயலும் மும்மொழிக் கொள்கையை ஒருபோதும் ஏற்க மாட்டோம். மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தியை திணிக்க மத்திய அரசு முயற்சி செய்கிறது.

    மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை திணிக்க முயற்சிக்கிறது.

    மாநில அரசின் சுயமரியாதையை மத்திய அரசு கொச்சைப்படுத்துகிறது.

    தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மத்திய அரசைக் கண்டித்து நாளை போராட்டம் நடைபெறும்.

    தமிழ்நாட்டில் மத்திய அரசு நடத்தும் கேந்திர வித்யாலயா பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்களே இல்லை.

    ஒற்றை ஆட்சி முறையை திணிக்கும் முயற்சியாகவே தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தப்படுகிறது.

    பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கான எந்த திட்டத்தையும் மத்திய அரசு அறிவிக்கவில்லை. தமிழ்நாட்டுக்கான புயல் பாதிப்பு நிதியைக் கூட மத்திய அரசு விடுவிக்க மறுக்கிறது.

    தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கைதான் பின்பற்றப்படும். கல்வித்துறையில் தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் திட்டங்கள் நாட்டிற்கே முன்னோடியாக திகழ்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ‘ஜெயிலர்’ படத்தில் நெடுஞ்சாலையில் குண்டு வெடிப்பு போன்ற காட்சி படமாக்கப்பட்டது.
    • புதிதாக போடப்படும் குருவிநத்தம்-அழகியநத்தம் தேசிய நெடுஞ்சாலையில் குண்டு வெடிப்பு காட்சிக்கு படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டது. இதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 'அண்ணாத்த' படத்திற்கு பிறகு இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் தற்போது 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார்.

    'ஜெயிலர்' படத்தின் முதல் கட்ட காட்சிகள் முடிவடைந்த நிலையில் 2-ம் கட்ட படப்பிடிப்பு கடலூர்-புதுவை எல்லையான அழகியநத்தம் (கடலூர் மாவட்டம்) தென்பெண்ணையாற்று பாலம் அருகே நடைபெற்று வருகிறது.

    இந்த படப்பிடிப்பிற்காக நடிகர் ரஜினிகாந்த் புதுவையில் இருந்து கார் மூலம், கடலூர் சென்றபோது புதுவை எல்லை பகுதியான குருவிநத்தத்தில் அவருக்கு ரசிகர்கள் ஆரவாரமாக வரவேற்பளித்தனர். மேலும் அவரை உற்சாகப்படுத்தும் வகையில் கூச்சலிட்டனர்.

    ரசிகர்களின் வரவேற்பை அடுத்து காரின் கண்ணாடியை திறந்து பார்த்து ரசிகர்களுக்கு ரஜினி கையசைத்தது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

    இந்த நிலையில் ரஜினியை புதுவை மாநிலம் பாகூர் தொகுதியின் தி.மு.க. எம்.எல்.ஏ. செந்தில்குமார் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

    'ஜெயிலர்' படத்தில் நெடுஞ்சாலையில் குண்டு வெடிப்பு போன்ற காட்சி படமாக்கப்பட்டது. புதிதாக போடப்படும் குருவிநத்தம்-அழகியநத்தம் தேசிய நெடுஞ்சாலையில் இந்த காட்சிக்கு படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டது. இதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

    இது தொடர்பாக படப்பிடிப்பு குழுவினர் தொகுதி எம்.எல்.ஏ.வான செந்தில்குமாரிடம் கூறியுள்ளனர். அவர் தேசிய நெடுஞ்சாலை துறையினர் மற்றும் ஒப்பந்ததாரிடம் பேசி அனுமதி பெற்று தந்துள்ளார்.


    ரஜினியை தி.மு.க. எம்.எல்.ஏ. செந்தில்குமார் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்த காட்சி.

    ரஜினியை தி.மு.க. எம்.எல்.ஏ. செந்தில்குமார் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்த காட்சி.

    இதனையடுத்து படப்பிடிப்பு நடந்துள்ளது. இதற்கு ஏற்பாடு செய்த எம்.எல்.ஏ.வை ரஜினி பார்க்க விரும்பினார். படப்பிடிப்பு தளத்தில் கேரவேனில் இருந்த ரஜினியை தி.மு.க. எம்.எல்.ஏ. செந்தில்குமார் சந்தித்து பூங்கொத்து கொடுத்தார்.

    அப்போது சிறுவயதில் இருந்து கமல் ரசிகரான தான் 'அண்ணாமலை' படம் பார்த்த பிறகு ரஜினிக்கும் ரசிகராகி விட்டேன் என செந்தில்குமார் எம்.எல்.ஏ. கூறினார். இதற்கு ரஜினி தனது பாணியில் சிரித்து கொண்டே நன்றி... நன்றி என கூறியுள்ளார்.

    ரஜினியை தி.மு.க. எம்.எல்.ஏ. சந்தித்தது சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்படுகிறது.

    ×