search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேங்கிய"

    • தாரமங்கலம் அருகே உள்ள ராமிரெட்டிபட்டி கிராமம் கத்தி மாறன்வளவு பகுதியில் அரசு நடுநிலைப் பள்ளி செயல்படுகிறது.
    • இங்கு 295 மாணவர்கள் படித்து வருகின்றனர்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகே உள்ள ராமிரெட்டிபட்டி கிராமம் கத்தி மாறன்வளவு பகுதியில் அரசு நடுநிலைப் பள்ளி செயல்படுகிறது. இங்கு 295 மாணவர்கள் படித்து வருகின்றனர். தலைமைஆசிரியராக நாகவள்ளி என்பவர் பணி புரிந்து வருகிறார்.

    இந்த பள்ளி சற்று தாழ்வான பகுதியில் அமைந்துள்ளதால் மழை காலங்களில், பள்ளி வளாகத்தில் தண்ணீர் தேங்கி குளம் போல் மாறிவிடுகிறது. இதனால் மாணவர்கள் கடும் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர், கடந்த வாரம் கல்வி அதிகாரிகளுக்கும், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளுக்கும் தெரிவித்து உள்ளார்.

    இந்நிலையில், தற்போது பெய்து வரும் மழை காரணமாக பள்ளியில் தண்ணீர் சூழ்ந்து உள்ளதால், நேற்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு அருகில் உள்ள கிராம சேவை மைய கட்டிடத்தில் வைத்து பாடம் நடத்தப்பட்டது.

    இதுபற்றி அறிந்து பள்ளிக்கு வந்த பெற்றோர்கள், பள்ளிக்கு விடுமுறை அளிக்குமாறு தலைமைஆசிரியரிடம் வலியுறுத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து பள்ளிக்கு வந்த வட்டார கல்வி அலுவலர் வாசுகி, ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் கருணாநிதி, ஒன்றிய குழு தலைவர் சுமதிபாபு, ஊராட்சி மன்ற தலைவர் பெரியதாயி ஆகியோர் பள்ளிக்கு வந்து பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    மேலும், பள்ளியில் தண்ணீர் புகாதவாறு தற்காலிகமாக தடுப்பு பணி மேற்கொள்வதாகவும், மழைநீர் வடிந்த பிறகு ஊராட்சி ஒன்றிய நிதியில் இருந்து நிரந்தர கால்வாய் அமைத்து கொடுப்பதாகவும் உறுதி அளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

    • பல்வேறு பகுதிகளில் தூர்வாரப்படாமல் இருந்த உபரி நீர் கால்வாயால், மழைநீர் ஆங்காங்கே உள்ள வீடுகளுக்குள் புகுந்தது.
    • மழை நீரை வெளியேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்காததால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர், பொத்த னூர், பாண்டமங்கலம், வெங்கரை, கொந்தளம், சேளூர், பிலிக்கல் பாளையம், குன்னத்தூர், ஆனங்கூர், வடகரையாத்தூர், இருக்கூர், கோப்பணம் பாளையம், கபிலக்குறிச்சி, பெரிய சோளிபாளையம், திடுமல், கவுண்டம்பாளையம், சிறுநல்லி கோவில், ஜமீன்எளம் பள்ளி, சோழசிராமணி, பெருங்குறிச்சி, மணியனூர், கந்தம்பாளையம், ஒத்தக்கடை, பரமத்தி, கபிலர்மலை, நன்செய் இடையாறு, பாலப்பட்டி, மோகனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு 7 மணி அளவில் லேசான சாரல் மழை பெய்ய தொடங்கியது. அதனை தொடர்ந்து இடி, மின்னலுடன் பலத்த கனமழை இரவு முழுவதும் பெய்தது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் தூர்வாரப்படாமல் இருந்த உபரி நீர் கால்வாயால், மழைநீர் ஆங்காங்கே உள்ள வீடுகளுக்குள் புகுந்தது. மழை நீரை வெளியேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்காததால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

    வயல்களில் மழைநீர்

    அதேபோல் பலத்த மழை பெய்த காரணமாக விவசாயிகள் பயிரிடப்பட்டிருந்த கரும்பு, வாழை, வெற்றிலை, நெல் வயல்களில் மழை நீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. மழை நீரை வெளியேற்ற முடியாததால் நெல் பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே கிராமப்புறங்களில் வற்றிய நிலையில் இருந்த கிணறுகள், பலத்த கன மழையின் காரணமாக நீரூற்று எடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    வியாபாரம் பாதிப்பு

    மழையின் காரணமாக சாலை ஓரங்களில் போடப்பட்டிருந்த பழக்கடைகள், பலகார கடைகள், ஜவுளிக்கடைகள், உணவு பொருள் விற்பனை செய்யும் கடைகள் மற்றும் தள்ளுவண்டி கடைகளில் வியாபாரம் செய்ய முடியாமல் பாதிப்படைந்து உள்ளனர். சாலை ஓர கடைக்காரர்கள், கட்டில் கடைக்காரர்கள் வியாபாரம் செய்ய முடியாமல் அவதிப்பட்டனர். மேலும் பலத்த மழையின் காரணமாக தார் சாலைகளில் இருபுறமும் உள்ள குழிகளில் மழை நீர் தேங்கி நிற்கிறது. பெரிய வாகனங்கள் செல்லும்போது இந்த மழைநீர் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் மீது தெளிப்பதால், இருசக்கர வாகனங்கள் ஓட்டிகள் அவதிபடுகின்றனர்.

    ×