search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சகோதரிகள்"

    • தீயில் கருகி 2 சகோதரிகள் இறந்தது குறித்து சோரனூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
    • இருவரை பெயிண்டர் தீவைத்து எரித்துக்கொன்ற சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் சோரனூர் அருகே உள்ள நீலமலைக்குன்னு பகுதியை சேர்ந்த சகோதரிகள் பத்மினி (வயது74), தங்கம்(71). இவர்கள் இருவருக்கும் திருமணமாகவில்லை. அவர்கள் இருவரும் ஒரே காம்பவுண்டில் உள்ள இரு வீடுகளில் தனித்தனியாக தனியாக வசித்து வந்தனர்.

    இந்நிலையில் நேற்று பகலில் பத்மினி தங்கியிருந்த வீட்டில் இருந்து பயங்கர அலறல் சத்தம் கேட்டது. மேலும் வீட்டுக்குள் இருந்து குபுகுபுவென புகை வந்தது. அதனை கவனித்த அக்கம் பக்கத்தினர், அங்கு வந்தனர். அப்போது பத்மினியின் வீட்டுக்குள் தீப்பிடித்து எரிந்தது.

    பத்மினி மற்றும் தங்கம் ஆகிய இருவரும் உடல் கருகிய நிலையில் இறந்து கிடந்தனர். அப்போது அவர்களது வீட்டுக்குள் இருந்து ஒருவர் தப்பியோட முயன்றார். அந்த நபருக்கு கழுத்து, முகம் உள்ளிட்ட இடங்களில் தீக்காயம் ஏற்பட்டிருந்தது.

    அவரிடம் அக்கம்பக்கத்து வீட்டினர், அந்த நபரை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர். அதற்கு அந்த நபர், வீட்டுக்குள் தீப்பிடித்தததை பார்த்து அதில் சிக்கியவர்களை காப்பாற்ற வந்ததாக தெரிவித்தார். ஆனால் அந்த நபர் மீது அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு சந்தேகம் எழுந்தது.

    இதையடுத்து தீயில் கருகி 2 சகோதரிகள் இறந்தது குறித்து சோரனூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்களிடம் சகோதரிகளின் வீட்டில் சிக்கிய நபரை ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் விசாரித்தபோது, அவர் பட்டாம்பி பகுதியை சேர்ந்த மணிகண்டன்(48) என்பது தெரியவந்தது.

    சகோதரிகளின் வீட்டுக்குள் சென்றதற்கான காரணம் குறித்து போலீசார் கேட்டபோது, தீயில் சிக்கியவர்களை மீட்பதற்காகவே சகோதரிகளின் வீட்டுக்குள் வந்ததாகவும், அப்போது தனக்கு காயம் ஏற்பட்டுவிட்டதாக கூறியிருக்கிறார். இதையடுத்து அவரை, சிகிச்சைக்காக திருச்சூர் அரசு ஆஸ்பத்திரியில் போலீசார் அனுமதித்தனர்.

    மணிகண்டனுக்கு எங்கெல்லாம் காயம் ஏற்பட்டிருக்கிறது? என்று பார்த்தனர். அப்போது அவரது உள்ளாடைக்குள் தங்க நெக்லஸ் மற்றும் தங்க வளையல்கள் இருந்தன. அதுபற்றி போலீசாரிடம் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    அந்த நகைகள் தீயில் கருகி இறந்த சகோதரிகளின் நகைகள் என்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. அதனடிப்படையில் மருத்துவமனையில் இருந்த மணிகண்டனிடம் மீண்டும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது தங்க நகைகளுக்காக வயது முதிர்ந்த சகோதரிகள் 2 பேரையும் எரித்துக்கொன்ற அதிர்ச்சி தகவலை மணிகண்டன் தெரிவித்தார்.

    மணிகண்டன் பெயிண்டராக வேலை பார்த்து வந்திருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சகோதரிகளின் வீட்டில் மணிகண்டன் பெயிண்டிங் வேலை பார்த்திருக்கிறார். அப்போது சகோரிகள இருவரும் தனியாக வசித்து வருவதை நோட்டமிட்ட அவர், அவர்களது வீட்டில் கொள்ளையடிக்க திட்டமிட்டிருகிறார்.

    ஏற்கனவே வீட்டில் பெயிண்டிங் வேலை பார்த்த பழக்கத்தின் அடிப்படையில், நேற்று மூதாட்டி பத்மினியின் வீட்டுக்கு வந்திருக்கிறார். அப்போது பட்டப்பகலில் பத்மினி வீட்டில் இருந்த நகைகளை கொள்ளையடிக்க முயன்றிருக்கிறார். இதனால் பத்மினி சத்தம் போட்டிருக்கிறார்.

    தனது அக்காளின் சத்தம் கேட்டு, பக்கத்து வீட்டில் இருந்த தங்கம் வந்திருக்கிறார். அவர் மணிகண்டனுடன் தனது அக்காள் போராடுவதை பார்த்திருக்கிறார். இருவரும் சேர்ந்து மணிகண்டனின் கொள்ளை திட்டத்தை முறியடிக்க முயன்றிருக்கிறார்.

    அப்போது மணிகண்டன், சகோதரிகள் இருவரையும் கட்டையால் சரமாரியாக அடித்துள்ளார். இதில் படுகாயமடைந்த சகோதரிகள் இருவரும் நிலைகுலைந்து கீழே விழுந்தனர். இதையடுத்து அவர்கள் அணிந்திருந்த மற்றும் வீட்டில் இருந்த நகைகளை மணிகண்டன் எடுத்துக் கொண்டார்.

    சகோதரிகள் தப்பிவிட்டால் தன்னை காட்டிக் கொடுத்து விடுவார்கள் என்று கருதிய அவர், அவர்கள் இருவரையும் கொலைசெய்ய முடிவு செய்தார். அதன்படி வீட்டின் சமையலறையில் இருந்த கியாஸ் சிலிண்டரை திறந்துவிட்டு தீவைத்தார். இதில் வீட்டுக்குள் குபீரென தீப்பிடித்தது.

    சகோதரிகள் இருவரின் மீதும் தீப்பிடித்தது. உடலில் தீப்பிடித்து எரிந்ததால் வலி தாங்க முடியாமல் சகோதரிகள் இருவரும் பயங்கரமாக அலறியுள்ளனர். வீட்டுக்குள் குபீரென தீப்பிடித்ததால், தீ வைத்த மணிகண்டனுக்கு முகம் மற்றும் கழுத்தில் தீக்காயம் ஏற்பட்டிருக்கிறது.

    இந்நிலையில் சகோதரிகளின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்ததால், அவர்களிடம் இருந்து மணிகண்டனால் அங்கிருந்து தப்பிச்செல்ல முடியவில்லை. அதன்பிறகும் காப்பாற்ற வந்ததாக கூறி தப்பித்துவிடலாம் என்று மணிகண்டன் கருதி, அதனையே தெரிவித்தார்.

    ஆனால் திருடிய நகைகளை உள்ளாடைக்குள் வைத்திருந்ததை டாக்டர்கள் கண்டுபிடித்துவிட்டதால் வசமாக சிக்கினார். இதையடுத்து மணிகண்டனை போலீசார் கைது செய்தனர். அவருக்கு தீக்காயம் இருப்பதால் போலீசாரின் கண்காணிப்பில் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளார்.

    நகைகளுக்காக வயது முதிர்ந்த சகோதரிகள் இருவரை, பெயிண்டர் தீவைத்து எரித்துக்கொன்ற சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பிரீத்தி தேர்வு எழுதிய முதல் தடவையே வெற்றி பெற்றுள்ளார். வைஷ்ணவி 4 முறையும், நிரஞ்சனி 3 தடவையும் போராடி தேர்வாகியுள்ளனர்.
    • மூத்த மகளும், 3-வது மகளும் சென்னையில் உள்ள மகளிர் கல்லூரியில் படித்தனர். 2-வது மகள் அரக்கோணம் அரசு கல்லூரியில் படித்தார்.

    வேலூர்:

    தமிழகத்தில் 9,791 இரண்டாம் நிலை காவலர் பணிக்கான 7 மாதம் அடிப்படை பயிற்சி கடந்த வாரம் நிறைவு பெற்றது.

    இதில் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த கீழ் ஆவதம் கிராமத்தைச் சேர்ந்த சகோதரிகளான பிரீத்தி (வயது 28), வைஷ்ணவி (25), நிரஞ்சனி (22) ஆகிய 3 பேரும் ஒரே நேரத்தில் போலீஸ் பணிக்கு தேர்வாகி ஒரே மையத்தில் பயிற்சியை நிறைவு செய்துள்ளனர்.

    இதில் பிரீத்திக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். திருவள்ளுர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள தற்காலிக காவலர் பயிற்சி பள்ளியில் சகோதரிகள் 3 பேரும் 2-ம் நிலை காவலர் பயிற்சியை வெற்றிகரமாக முடித்துள்ளனர்.

    பிரீத்தி தேர்வு எழுதிய முதல் தடவையே வெற்றி பெற்றுள்ளார். வைஷ்ணவி 4 முறையும், நிரஞ்சனி 3 தடவையும் போராடி தேர்வாகியுள்ளனர்.

    மகள்களின் வெற்றி குறித்து அவர்களின் தந்தை வெங்கடேசன் கூறியதாவது:-

    ''எனது மனைவி ஷகிலா இறந்த நிலையில் மகள்கள் பிரீத்தி, வைஷ்ணவி, நிரஞ்சனி, மகன் கார்த்திகேயன் ஆகியோரை நன்றாக படிக்க வைத்து அரசு வேலைக்கு அனுப்ப வேண்டும் என்று பாடுபட்டேன். நான், பிளஸ் 2 முடித்த பிறகு போலீஸ் தேர்வுக்கு சென்றேன். ஆனால் என்னால் தகுதி பெற முடியவில்லை.

    இதனால் இருக்கின்ற 5 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து பிள்ளைகளை படிக்க வைத்தேன். எனது 3 மகள்களும் பட்டப்படிப்பு முடித்துள்ளனர். மகன் சென்னையில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார்.

    மூத்த மகள் பிரீத்திக்கு ராஜீவ்காந்தி என்பவருடன் திருமணமாகி 2 மகன்கள் இருக்கின்றனர். மற்றவர்கள் திருமணமாகாத நிலையில் போலீஸ் பணிக்கு சகோதரிகள் 3 பேரும் கடந்த சில ஆண்டுகளாக முயற்சி செய்து வந்தனர்.

    ''எனக்கு கிடைக்காத காவலர் வேலை எனது மகள்களுக்கு கிடைத்ததில் பெருமையாக இருக்கிறது. மகள்கள் 3 பேரும் அரசுப் பள்ளியில்தான் படித்தார்கள்.

    மூத்த மகளும், 3-வது மகளும் சென்னையில் உள்ள மகளிர் கல்லூரியில் படித்தனர். 2-வது மகள் அரக்கோணம் அரசு கல்லூரியில் படித்தார். 3 மகள்களும் வீட்டில் இருந்தே காவலர் தேர்வுக்கு படித்தார்கள். எனது விவசாய நிலத்திலே 3 பேரும் ஓட்டப்பயிற்சி எடுத்தார்கள்.

    அவர்களின் உழைப்புக்கு உரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது'' எனது மகள்கள் 3 பேரும் ஒரே நேரத்தில் காவலர் பணிக்கு தேர்வானதற்கு மருமகன் ராஜூவ்காந்தி தான் காரணம் என்றார்.

    வாழ்க்கையின் அடித்தட்டு நிலையில் இருந்து சாதிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் தீவிர பயிற்சியில் ஈடுபட்ட சகோதரிகள் 3 பேரும் ஒரே நேரத்தில் காவலர் பணிக்கு தேர்வாகி பயிற்சி முடித்துள்ளதை அந்த கிராம மக்கள் பாராட்டி அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    ×