என் மலர்
நீங்கள் தேடியது "மாநகர போக்குவரத்து கழகம்"
- சென்னை மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் பிரபு சங்கர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.
- பயோமெட்ரிக் மூலம் பதிவு செய்யும் ஊழியர்களின் வருகை மட்டுமே கணக்கில் கொள்ளப்படும்.
சென்னை:
சென்னை மாநகர போக்குவரத்துக்கழக ஊழியர்கள் இன்று முதல் கட்டாயமாக பயோமெட்ரிக் மூலம் வருகைப்பதிவு செய்ய வேண்டும் என்று மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் பிரபு சங்கர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சென்னை மாநகர போக்குவரத்துக்கழகத்தில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களும் தங்களின் வருகையை பயோமெட்ரிக் மூலம் தவறாமல் பதிவு செய்ய வேண்டும் என ஏற்கனவே கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை 1-ந் தேதி தெரிவிக்கப்பட்டது. மாநகர போக்குவரத்துக் கழகத்தின் தலைமை அலுவலகம், அனைத்து பணிமனைகள், தொழிற்கூடங்கள் உள்ளிட்டவற்றில் பணிபுரியும் டிரைவர், கண்டக்டர், தொழில்நுட்ப பணியாளர்கள், அலுவலக பணியாளர்கள் உள்ளிட்டோர் பயோமெட்ரிக் மூலமாகவே வருகையை பதிவு செய்ய வேண்டும் என மீண்டும் அறிவுறுத்தப்படுகிறது.
அதன்படி, இன்று (திங்கட்கிழமை) முதல் பயோமெட்ரிக் மூலம் பதிவு செய்யும் ஊழியர்களின் வருகை மட்டுமே கணக்கில் கொள்ளப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பகல் பொழுதில் பேருந்துகள் தொழில்நுட்ப பணிகளுக்காக பணிமனைக்குள் இயக்கப்படும் போது ஓட்டுனர் உரிமம் இல்லாத எந்த ஒரு பணியாளரும் பேருந்தினை இயக்கக்கூடாது.
- மின் சாதனங்களை கையாளும் பணியாளர்கள் கண்டிப்பாக கையுறை மற்றும் உரிய காலணிகளுடன் பாதுகாப்பான முறையில் பணி செய்திட வேண்டும்.
சென்னை:
சென்னை மாநகர போக்குவரத்து கழகம் டிரைவர், கண்டக்டர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பல்வேறு விதிமுறைகளை பின்பற்றுமாறு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அவை வருமாறு:-
பணிமனைக்குள் உள்ள ஓட்டுநர், நடத்துனர் ஓய்வறையில் எந்த காரணம் கொண்டும் புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துதல் ஆகியவை கூடாது. மீறுபவர்களை உரிய மேற்பார்வையாளர், பாதுகாவலர் ஆகியோரின் அடிப்படை புகாருடன் கிளை மேலாளரின் பரிந்துரையுடன் உரிய ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்திய நிலையில் பணிமனைக்குள் எந்த ஒரு பணியாளரும் வரக்கூடாது. பாதுகாவலர்கள் எந்த சூழ்நிலையிலும் மது அருந்திய பணியாளர்களை அனுமதிக்கக் கூடாது. மீறிச் செல்லும் பணியாளர்கள் மீது உடனடியாக தலைமையகத்தின் மூலம் உரிய ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
ஓட்டுனர், நடத்துனர் ஓய்வறைகளின் மேல் தளங்களில் ஏதேனும் திறந்த நிலையில் அறைகள் அல்லது வெட்டவெளி தளங்கள் இருப்பின் அவற்றை பணியாளர்களின் பாதுகாப்பு கருதி பூட்டி வைக்க வேண்டும்.
பணியில் இருக்கும்போது கைபேசி பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்த்திட வேண்டும். இதனால் விபத்துகள் தவிர்க்கப்படும்.
எந்த ஒரு பணியாளரும் பணி நேரத்தில் பணிமனையை விட்டு வெளியே செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் அனுமதி சீட்டில் உரிய மேற்பார்வையாளரின் அனுமதி பெற்று பாதுகாவலரிடம் தெரிவித்து வெளியே செல்ல வேண்டும்.
பகல் பொழுதில் பேருந்துகள் தொழில்நுட்ப பணிகளுக்காக பணிமனைக்குள் இயக்கப்படும் போது ஓட்டுனர் உரிமம் இல்லாத எந்த ஒரு பணியாளரும் பேருந்தினை இயக்கக்கூடாது.
மின் சாதனங்களை கையாளும் பணியாளர்கள் கண்டிப்பாக கையுறை மற்றும் உரிய காலணிகளுடன் பாதுகாப்பான முறையில் பணி செய்திட வேண்டும்.
மின்சாரத்தால் இயக்கக் கூடிய இயந்திரங்கள் தரைப் பகுதியில் கண்டிப்பாக ரப்பர் மேட்கள் போடப்பட வேண்டும். இயந்திரங்கள் இயக்கப்படாத நிலையில் உரிய மேல் உரைகள் கொண்டு மூடப்பட்டிருக்க வேண்டும். இயந்திரங்களில் பாதுகாப்பு உரைகள் கண்டிப்பாக இருக்க வேண்டும்.
இயந்திரங்களில் பணிபுரியும் பணியாளர்கள் உரிய பாதுகாப்பு உபகரணங்களை கையாள வேண்டும், பாதுகாப்பு உடைகளை அணிந்தே பணி செய்திட வேண்டும்.
பேருந்துகள் பணிமனையின் உள்ளே வரும் போது ஓட்டுனர், நடத்துனர் மற்றும் பாதுகாவலர் ஆகியோர்கள் பேருந்தின் உள்ளே ஆய்வு செய்து, எளிதில் தீ பற்றக்கூடிய பொருட்களோ அல்லது வெடி பொருட்களோ இருப்பின் அவற்றை உரிய பாதுகாப்பான முறையில் அகற்றிடவும். தேவை ஏற்படின் அருகில் உள்ள காவல்துறை அல்லது தீயணைப்பு துறையின் உதவியுடன் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளவும் வேண்டும்.
பணிமனையில் மேற்குறிப்பிட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்படுவதை கிளை மேலாளரும், பணியிலிருக்கும் மேற்பார்வையாளரும், பாதுகாவலர்களும் கண்டிப்பாக உறுதி செய்திட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மாணவர்கள் படியில் தொங்க நேரிட்டாலோ அல்லது உயிருக்கு பாதுகாப்பாற்ற முறையில் பயணிக்க முற்பட்டாலோ அந்த பஸ்சை நிறுத்தி படிக்கட்டு மற்றும் முறையற்ற பயணத்தை தவிர்க்க மாணவர்களை அறிவுறுத்த வேண்டும்.
- பஸ்களில் பள்ளி, கல்லூரி மாணவர்களின் பாதுகாப்பான பயணத்தினை உறுதி செய்வது டிரைவர் மற்றும் கண்டக்டர்களின் பொறுப்பு என்பதனை உணர்ந்து பணிபுரிய வேண்டும்.
சென்னை:
சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் அனைத்து டிரைவர் மற்றும் கண்டக்டர்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:-
மாநகர பஸ்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பஸ் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்யாதவாறு பஸ்களில் ஏறும் போதும், பயணம் செய்யும் போதும், பாதுகாப்பான விதிகளை கடைப்பிடிக்கச் செய்ய டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் கடைபிடிக்க வேண்டிய நிலையான நெறிமுறைகள் ஏற்கனவே சுற்றறிக்கை மூலம் வலியுறுத்தப்பட்ட நிலையில் ஒரு சில பஸ்களில் மாணவர்கள் படிக்கட்டு பயணம் தொடருவதால் மீண்டும் கீழ்க்கண்ட இயக்க நெறிமுறைகளை கடைபிடிக்க வலியுறுத்தப்படுகிறது.
வழித்தடங்களில் ஏதேனும் மாணவர்கள் படியில் தொங்க நேரிட்டாலோ அல்லது உயிருக்கு பாதுகாப்பாற்ற முறையில் பயணிக்க முற்பட்டாலோ அந்த பஸ்சை நிறுத்தி படிக்கட்டு மற்றும் முறையற்ற பயணத்தை தவிர்க்க மாணவர்களை அறிவுறுத்த வேண்டும்.
மாணவர்கள், டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களின் அறிவுரையை கேட்காமல் மீறி செயல்பட்டு, நிலைமை கட்டுப்பாட்டை மீறினால் டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் பஸ்சை இடையூறு இல்லாமல் ஓரமாக நிறுத்தி அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கோ அல்லது போலீஸ் அவசர அழைப்பு 100 எண்ணுக்கோ மற்றும் மாநகர போக்குவரத்து வான்தந்தி பிரிவுக்கும் தகவல் தெரிவித்து புகார் அளித்திட வேண்டும்.
பஸ்களில் பள்ளி, கல்லூரி மாணவர்களின் பாதுகாப்பான பயணத்தினை உறுதி செய்வது டிரைவர் மற்றும் கண்டக்டர்களின் பொறுப்பு என்பதனை உணர்ந்து பணிபுரிய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- 60 பஸ்களை 642 நடைகள் கிளாம்பாக்கத்துக்கு இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
- ஆவடி, கோயம்பேடு, மாதவரம், திருப்போரூர், தாம்பரம் ஆகிய பகுதிகளில் இருந்து 12 பஸ்கள் புதிய வழித்தடங்களில் இயக்கப்பட உள்ளன.
சென்னை:
சென்னை, வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் ஏக்கர் 67 பரப்பளவில் ரூ.314 கோடி மதிப்பீட்டில் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இங்கு புறநகர் பஸ் நிலையம் மற்றும் வெளியூர் பஸ் நிலையம் என 2 பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
இந்த பஸ் நிலையம் பயன்பாட்டுக்கு வந்த பிறகு கோயம்பேட்டில் இருந்து செல்லும் 60 சதவீத பஸ்களை கிளாம்பாக்கத்துக்கு மாற்றி இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்துக்குப் பொது மக்கள் எளிதாகச் செல்ல வசதியாக மாநகரப் பஸ்களை இயக்க திட்டமிட்டு, அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
அதன்படி வண்டலூர், தாம்பரம் செல்லும் பஸ்களை நீட்டிக்கவும், புதிதாக சில வழித்தடங்களில் சேவைகளை தொடங்கவும் மாநகரபோக்கு வரத்துக்கழகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது வரை 60 பஸ்களை 642 நடைகள் கிளாம்பாக்கத்துக்கு இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆவடி, கோயம்பேடு, மாதவரம், திருப்போரூர், தாம்பரம் ஆகிய பகுதிகளில் இருந்து 12 பஸ்கள் புதிய வழித்தடங்களில் இயக்கப்பட உள்ளன.
இதுகுறித்து மாநகர போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறும்போது, "தற்போது சென்னையின் பெரும்பாலான பகுதிகளைச் சேர்ந்த மக்கள் கிளாம்பாக்கத்தை அடையும் வகையில் 642 நடைகள் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது. ஆனால் கிளாம்பாக்கம் பஸ் நிலையம் தொடர்பாகத் தொடர்ச்சியாக ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இதில் 1,000 நடைகள் இயக்குமாறு அறிவுறுத்தல்கள் பெறப்பட்டு உள்ளனர்" என்றனர்.
- படிப்படியாக சென்னையில் உள்ள மற்ற டெப்போக்களுக்கும் விரிவுபடுத்தப்பட வாய்ப்புள்ளது.
- பயணிகள் தங்கள் செல்போன்களை பயன்படுத்தி ஸ்கேன் செய்து பணம் செலுத்தலாம்.
சென்னை:
சென்னையில் மாநகர பஸ்களில் டிக்கெட்டுகளுக்கு ஆன்லைன் மூலம் பணம் செலுத்தும் புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முதல் முறையாக பல்லாவரம் பஸ் டெப்போவில் இந்த நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. இதற்காக பல்லாவரத்தில் உள்ள மாநகரபோக்குவரத்து கழக பஸ் கண்டக்டர்களுக்கு, யுபிஐ மற்றும் கார்டு மூலம் டிஜிட்டல் முறையில் பணம் பெறும் புதிய கையடக்க கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த திட்டம் படிப்படியாக சென்னையில் உள்ள மற்ற டெப்போக்களுக்கும் விரிவுபடுத்தப்பட வாய்ப்புள்ளது. இந்த தொடுதிரை சாதனங்கள் மூலம், பயணிகள் ஏறும் பஸ் நிறுத்தத்தின் பெயரையும் அவர்கள் சேருமிடத்தையும் கண்டக்டர் தேர்வு செய்யலாம். அவர்கள் தேர்வு செய்தவுடன், பயணிகள் பணம், கார்டுகள் மற்றும் யுபிஐ உள்ளிட்ட பல்வேறு வகைகளில் டிக்கெட் கட்டணம் செலுத்தலாம். யுபிஐ முறை தேர்ந்தெடுக்கப்பட்டால், கியூஆர் குறியீடு திரையில் காட்டப்படும். பயணிகள் தங்கள் செல்போன்களை பயன்படுத்தி ஸ்கேன் செய்து பணம் செலுத்தலாம்.
மேலும் தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம் அனைத்து மாநகர போக்குவரத்து கழக பஸ்களுக்கும் கியூஆர் அடிப்படையிலான டிக்கெட் செலுத்தும் முறையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், பயணிகள் தங்கள் மொபைல் செயலியை பயன்படுத்தி தங்கள் கணக்குகளை ரீசார்ஜ் செய்யலாம். மேலும் பயணிகள் தங்களுக்கான கியூஆர் குறியீட்டை பயன்படுத்தி சென்னை மெட்ரோ ரெயில் மற்றும் உள்ளூர் ரெயில்களிலும் பயணிக்கலாம்.
இதற்காக அனைத்து பஸ்கள் மற்றும் ரெயில்களின் நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களில் கியூஆர் ஸ்கேனர்கள் நிறுவப்பட உள்ளது. மேலும் பயணிகள் பயணம் செய்யும் போது கியூஆர் குறியீடுகளை பஸ் கண்டக்டர்கள் மற்றும் ரெயில் டிக்கெட் பரிசோதகர்களிடம் காண்பிக்கலாம்.
- சிலர் பேட்ஜ் அணியாமல் பணி செய்வது குறித்து புகார் பெறப்பட்டுள்ளது.
- சீருடை பேட்ஜ் அணிந்து பணிபுரிய வேண்டும்.
சென்னை:
டிரைவர்-கண்டக்டர் கள் பணியின்போது சீருடை மற்றும் பேட்ஜ் அணிந்து பணிபுரிய வேண்டும் என்று போக்குவரத்து துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது சம்பந்தமாக அனைத்து கிளை மேலாளர்கள்-மண்டல மேலாளர்களுக்கு மாநகர போக்கு வரத்து கழக மேலாண் இயக்குனர் அனுப்பி உள்ள சுற்றறிக்கை வருமாறு:-
மாநகரப் போக்குவரத்து கழகத்தை சார்ந்த அனைத்து பணிமனைகளிலும் பணி புரியும் டிரைவர்கள் கண்டக்டர்கள் கட்டாயம் சீருடை பேட்ஜ் அணிந்து பணிபுரிய வேண்டும். சிலர் பேட்ஜ் அணியாமல் பணி செய்வது குறித்து புகார் பெறப்பட்டுள்ளது.
எனவே டிரைவர்-கண்டக்டர்கள் சீருடை மற்றும் பேட்ஜ் அணிந்து பணிபுரிகிறார்களா என்பதை கிளை மேலாளர்கள் மற்றும் மண்டல மேலாளர்கள் கண்காணிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சென்னை கடற்கரை- தாம்பரம் - செங்கல்பட்டு இடையிலான மின்சார ரெயில்கள் அட்டவணை மாற்றம்.
- பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதலாக பேருந்துகள் இயக்கப்படும்.
சென்னை கடற்கரை, தாம்பரம், செங்கல்பட்டு இடையிலான வழித்தடத்தில் நாளை முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் மின்சார ரெயில்களின் அட்டவணை மாற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் கூடுதலாக 20 பேருந்துகள் இயக்கப்படும் என சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
சென்னை கடற்கரை- தாம்பரம் - செங்கல்பட்டு இடையிலான மின்சார ரெயில்கள் 08.12.2024 முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் மறு அறிவிப்பு வரும் வரை கால அட்டவணை மாற்றம் செய்து இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பினை தொடர்ந்து, மாநகர் போக்குவரத்துக் கழகத்தில், வரும் 08.12.2024 முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் பயணிகள் நலன் கருதி வழக்கமாக மேற்குறிப்பிட்ட வழித்தடத்தில் இயக்கப்படும் பேருந்துகளுடன், கூடுதவாக தாம்பரம் முதல் பிராட்வே வரை கூடுதலாக 10 பேருந்துகளும், தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரை 05 பேருந்துகளும், கூடுவாஞ்சேரி முதல் தி.நகர் வரை 05 பேருந்துகள் என மொத்தம் 20 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
மேலும், பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதலாக பேருந்துகள் இயக்கப்படும். முக்கிய பேருந்து நிலையங்களில் அலுவலர்களை நியமித்து, இப்பேருந்துகளின் இயக்கத்தினை கண்காணிக்கவும் நடவடிக்கை தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- பேருந்துகள் இயக்கப்படுவதாக சென்னை போக்குரவத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
- அலுவலர்கள் நியமிக்கப்பட்டு பேருந்துகள் இயக்கத்தினை கண்காணிக்கவும் நடவடிக்கை.
தாம்பரம் - கடற்கரை இடையே இன்று காலை 7 முதல் மாலை 4 வரை மின்சார ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டதை அடுத்து, இந்த வழித்தடத்தில் கூடுதலாக 40 பேருந்துகள் இயக்கப்படுவதாக சென்னை மாநகர் போக்குரவத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகர் போக்குரவத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று (05.01.2025) தாம்பரம் ரெயில் நிலையத்தில் புதிய நடை மேம்பால பணிகள் நடைபெறுவதால் காலை 07.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை கடற்கரை முதல் தாம்பரம் வரை இயக்கப்படும் ரெயில்கள் பல்லாவரம் வரையிலும், அதேபோல் செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை செல்லும் ரெயில்கள் காலை 11.00 மணி முதல் மாலை 4.00 வரை செங்கல்பட்டிலிருந்து கூடுவாஞ்சேரி வரையிலும் இயக்கப்படும் என்று தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது.
எனவே, இவ்வழித்தடத்தில் பயணம் செய்யும் பயணிகள் நலன் கருதி மாநகர போக்குவரத்து கழகம் 05.01.2025 அன்று ஏற்கனவே இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக பல்லாவரம் பேருந்து நிலையத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு 10 பேருந்துகளையும், பல்லாவரம் பேருந்து நிலையத்தில் இருந்து கூடுவாஞ்சேரிக்கு 10 பேருந்துகளையும், தாம்பரம் பேருந்து நிலையத்தில் இருந்து தி.நகர் மற்றும் பிராட்வேக்கு கூடுதலாக 20 பேருந்துகள் என மொத்தம் 40 பேருந்துகளை இயக்க உள்ளது.
மேலும் முக்கிய பேருந்து நிலையங்களில் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு பேருந்துகள் இயக்கத்தினை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
- தினமும் இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக 150 பஸ்கள் இயக்கப்படும்.
- முக்கிய நிறுத்தங்களில் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு பஸ் இயக்கத்தை கண்காணிக்க உத்தரவிடப்பட்டது.
சென்னை:
சென்னை மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
பொங்கல் திருநாளை சொந்த ஊரில் கொண்டாடிவிட்டு சென்னை திரும்பும் பயணிகளின் வசதிக்காக 19-ம் தேதி பிற்பகல் முதல் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து மாநகர போக்குவரத்துக் கழகத்தின் மூலம் அட்டவணைப்படி தினமும் இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக 150 பஸ்கள் இயக்கப்படும்.
வரும் 20-ம் தேதி கிளாம்பாக்கத்தில் பயணிகள் அதிகம் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், கூடுதலாக 500 பஸ்கள் அதிகாலை முதல் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து தற்போது இயக்கப்பட்டு வரும் 482 பஸ்களுடன் சேர்த்து ஆக மொத்தம் 982 பஸ்கள் இயக்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, இன்று பிற்பகல் முதல் 20-ம் தேதி வரை பயணிகளின் கூட்ட நெரிசல் குறையும் வரை கிளாம்பாக்கம், தாம்பரம் ரெயில் நிலையம், பூந்தமல்லி, கோயம்பேடு, மாதவரம் புறநகர் பஸ்நிலையம், செங்குன்றம், எழும்பூர் ரெயில் நிலையம் மற்றும் சென்டிரல் ரெயில் நிலையம் ஆகிய முக்கிய பஸ் நிறுத்தங்களில் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு பஸ் இயக்கத்தினை கண்காணித்திட உத்தரவிடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.