என் மலர்
நீங்கள் தேடியது "மாலை சூரசம்ஹாரம்"
- திராளன பக்தர்கள் குவிந்தனர்.
- 16 வகை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
வடவள்ளி,
கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த புதன்கிழமை காலை காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அதை தொடர்ந்து காலை, மாலையில் யாகம் வளர்க்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது.
கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு, கோவிலுக்கு தினமும் பக்தர்கள் வந்த வண்ணம் இருந்தனர்.
இன்று சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையொட்டி இன்று காலை கோ பூஜையுடன் கோவில் நடை திறக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து சுவாமிக்கு 16 வகை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சுப்பிரமணிய சுவாமிக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரதனை காட்டப்பட்டது.
தொடர்ந்து முன்மண்டபத்தில் சுப்பிரமணிய சுவாமி ஆட்டுக்கிடாய் வாகனத்திலும், வீரபாகு குதிரை வாகனத்திலும், தங்க மயில் வாகனத்தில் முருகர் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
மதியம் 3 மணிக்கு மூலவரிடம் இருந்து வேல் வாங்கி அன்னையிடம் வைத்து பூஜை செய்து சுப்பிரமணிய சுவாமி வேலை பெற்று கொண்டு சூரசம்ஹாரத்திற்கு ஆட்டுக்கிடாய் வாகனத்திலும், வீரபாகு தேவர் குதிரை வாகனத்திலும் எழுந்தருளி முதலாவதாக தாராகசூரன் வதம், 2-வதாக பானுகோபம் வதம், 3-வதாக சிங்கமுக சூரன் வதம், 4-வதாக சூரபத்மன் வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.
மாலை 4 மணிக்கு சூரசம்ஹாரம் செய்த சுப்பிரமணிய சுவாமியின் கோபம் தணிக்கும் விதமாக மகா அபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளிக்கிறார்.
சூரசம்ஹார விழாவை முன்னிட்டு இன்று காலை முதலே கோவிலுக்கு கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களான திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் அதிகளவில் வந்தனர்.
அவர்கள் நீண்ட வரிசையில், காத்திருந்து சாமி தரிசனம் செய்து சென்றனர்.
நாளை காலை 9.30 மணிக்கு யாக சாலை கலசங்களில் உள்ள தீர்த்தங்களை கொண்டு சுவாமிக்கு அபிஷேகம் நடக்கிறது.
காலை 10.30 மணிக்குள் சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது.
சூரசம்ஹாரத்தை யொடடி மருதமலை கோவில் மலைப்பாதையில் இன்று காலை முதல் மாலை வரை இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை.
அனைத்து வாகனங்களும் அடிவாரத்தில் நிறுத்தி விட்டு பக்தர்கள் கோவில் வாகனத்தில் செல்ல நீண்ட வரிசையில் காத்து சென்றனர்.
பஸ்சுக்காக காத்து நிற்க முடியாமல் சிலர் குழந்தைகள் முதல், முதியவர்கள் வரை நடைப்பாதை வழியாக சென்றனர்.
மேலும் தீயணைப்புத்துறை, ஆம்புலன்ஸ், மருத்துவ முகாம் என்று சிறப்பு ஏற்படுகளுடனும் வழியில் ஆங்காங்கே தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டு இருந்தது.