search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிலை மீட்பு"

    • கருங்கல்லினால் ஆன சிலைகள் பற்றி பட்டினப்பாக்கம் போலீசுக்கு தகவல் கிடைத்தது.
    • மீட்கப்பட்ட சிலையை மெரினா போலீசார் மயிலாப்பூர் தாசில்தாரிடம் ஒப்படைத்தனர்.

    சென்னை:

    தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் பழமையான கோவில்களில் இருந்து திருடப்பட்ட பழங்கால சாமி சிலைகளை மீட்கும் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.

    அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள அருங்காட்சியகங்களில் இருந்து பழங்கால சாமி சிலைகள் சமீபத்தில் மீட்கப்பட்டு தமிழகம் கொண்டு வரப்பட்டன. இந்த சிலைகளை சம்பந்தப்பட்ட கோவில்களில் ஒப்படைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் உள்ள துலுக்கானத்தம்மன் கோவில் எதிரே மணல் பரப்பில் 2 பழங்கால சாமி சிலைகள் கிடந்தன. கருங்கல்லினால் ஆன இந்த சிலைகள் பற்றி பட்டினப்பாக்கம் போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் சிலைகளை மீட்டு அப்பகுதியைச் சேர்ந்த தாசில்தாரிடம் ஒப்படைத்தனர்.

    இதேபோல் மெரினா போலீஸ் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர் அப்போது கலங்கரை விளக்கம் பின்புறம் உள்ள கடற்கரையில் ஒரு அடி உயரமுள்ள கற்சிலை கண்டெடுக்கப்பட்டது.

    மீட்கப்பட்ட சிலையை மெரினா போலீசார் மயிலாப்பூர் தாசில்தாரிடம் ஒப்படைத்தனர்.

    கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் இந்தப் பழமையான சிலைகளை கோவில்களில் திருடி வந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த 2014-ம் ஆண்டுக்கு பின்னர் தற்போது வரை 238 சிலைகளும், பாரம்பரிய சின்னங்களும் மீட்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
    • வரப்பட்டு, கடந்த 18-ந் தேதி வழக்கின் சொத்தாக தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டது.

    புதுடெல்லி:

    நாட்டின் பழங்கால பாரம்பரியத்தை பாதுகாப்பதிலும், கடந்த காலங்களில் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட பாரம்பரிய சின்னங்களை மீட்பதிலும் மத்திய அரசு முனைப்போடு செயல்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் தற்போதுவரை மொத்தம் 251 பழங்கால பாரம்பரிய சின்னங்கள் மற்றும் சிலைகள் மீட்கப்பட்டு உள்ளன. கடந்த 2014-ம் ஆண்டுக்கு பின்னர் தற்போது வரை 238 சிலைகளும், பாரம்பரிய சின்னங்களும் மீட்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில் மேலும் ஒரு சிலை ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்டு உள்ளது. அது சோழர் காலத்தைச் (14-15-ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது) சேர்ந்த அனுமன் சிலை ஆகும். அரியலூர் மாவட்டம் பொட்டவெளி வெள்ளூர் வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து கடத்தப்பட்டு உள்ளது. கடந்த 1961-ம் ஆண்டு புதுச்சேரியில் உள்ள பிரான்ஸ் நிறுவனம் மூலம் ஆவணப்படுத்தப்பட்டது. 2012-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் அது மீட்கப்பட்டு அங்கு கேன்பராவில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து கடந்த பிப்ரவரி கடைசி வாரத்தில் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டு, கடந்த 18-ந் தேதி வழக்கின் சொத்தாக தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டது.

    இந்த தகவல்களை மத்திய கலாசார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

    • கோவிலில் சிசிடிவி கேமரா காட்சிகளை அக்டோபர் 2019 தொடக்கத்தில் இருந்து பகுப்பாய்வு செய்தனர்.
    • திருவள்ளுவர் மாவட்டம் தும்பிக்குளம் சின்னத்தெரு பகுதியை சேர்ந்த நீலகண்டன் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    திருச்சி:

    கும்பகோணத்தில் 1000 ஆண்டு பழமையான பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இங்குள்ள பழங்கால அனுமன் சிலை 3 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்டதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் புகார் அளிக்கப்பட்டது. இந்த வழக்கில் துப்பு துலங்காத நிலையில் தனிப்படை அமைக்கப்பட்டு சமீப காலமாக விசாரணை முடிக்கி விடப்பட்டது.

    இந்த நிலையில் கோவிலில் சிசிடிவி கேமரா காட்சிகளை அக்டோபர் 2019 தொடக்கத்தில் இருந்து பகுப்பாய்வு செய்தனர். அதில் உள்ள காட்சிகளை ஆய்வு செய்தபோது சந்தேகத்திற்குரிய சில நபர்களின் காட்சிகளை கண்டறிந்து அவற்றை பதிவிறக்கம் செய்தனர். இதையடுத்து சந்தேகத்தின் பேரில் மர்ம நபர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது திருவள்ளுவர் மாவட்டம் தும்பிக்குளம் சின்னத்தெரு பகுதியை சேர்ந்த நீலகண்டன் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்ற ஒரு கூட்டாளியுடன் சேர்ந்து அந்த சிலையை வெளிநாட்டில் கோடிக்கணக்கான ரூபாய்க்கு விற்க முடிவு செய்திருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து நீலகண்டன் வீட்டை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர் . அப்போது அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயிரம் ஆண்டுகள் பழமையான சோழர் கால நாயக்க மன்னர்களால் நிறுவப்பட்ட பழமையான அனுமன் சிலையை கண்டறிந்து கைப்பற்றினர். இதை அடுத்து மணிகண்டனையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். தீவிரமாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த தனிப்படையினரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபி டாக்டர் ஜெயந்த் முரளி பாராட்டினார்.

    • தனிப்படையினர் சிலையை வாங்குவது போல மாறுவேடத்தில் சென்று பழனிச்சாமியிடம் பேரம் பேசினர்.
    • தொடர்ச்சியாக நடந்த பேச்சுவார்த்தையில் பழனிச்சாமி ரூ.15 கோடிக்கு அந்த தொன்மையான சிலையை விற்க ஒப்புக்கொண்டார்.

    திருச்சி:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நாகர்கால பாளையம் பகுதியில் வசித்து வருபவர் ஆர்.எஸ்.பழனிச்சாமி. இவரது வீட்டில் சுமார் 600 ஆண்டுகள் தொன்மையான பெருமாள் சிலை பதுக்கி வைத்திருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதனடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நாகேந்திரன், தலைமைக் காவலர் பரமசிவம் ஆகியோர் அடங்கிய குழுவினர் கோபிசெட்டிபாளையம் விரைந்து சென்றனர்.

    பின்னர் ஆர்.எஸ்.பழனிச்சாமியிடம் சிலை இருப்பதை உறுதி செய்தனர். அதனைத்தொடர்ந்து தனிப்படையினர் சிலையை வாங்குவது போல மாறுவேடத்தில் சென்று பழனிச்சாமியிடம் பேரம் பேசினர். அப்போது அந்த நபர் அந்த சிலைக்கு ரூ.33 கோடி விலை கேட்டார்.

    தொடர்ச்சியாக நடந்த பேச்சுவார்த்தையில் பழனிச்சாமி ரூ.15 கோடிக்கு அந்த தொன்மையான சிலையை விற்க ஒப்புக்கொண்டார். இதனையடுத்து மாறுவேடத்தில் சென்ற தனிப்படையினர் பழனிச்சாமி மறைத்து வைத்திருந்த 22.800 கிலோ எடையுள்ள, 58 செ.மீ. உயரமும், 31 செ.மீ. அகலமும் உள்ள வெங்கடாஜலபதி சிலையை கைப்பற்றினர்.

    இதுகுறித்து திருச்சி சரக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏ.டி.எஸ்.பி. பாலமுருகன் இன்று நிருபர்களிடம் கூறுகையில், மீட்கப்பட்ட சிலை கர்நாடக மாநிலம் மாண்டியாவில் உள்ள ஒரு கோவிலுக்கு சொந்தமானது என தெரிகிறது. அந்த கோவில் அர்ச்சகர் மூலம் கடத்தி வந்து விற்பனை செய்ய முயன்றது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

    அதன் அடிப்படையில் சிலையின் உண்மைத்தன்மை குறித்து கண்டறிய கர்நாடக மாநிலத்திற்கு அனுப்பி வைத்து அந்த கோவிலுக்கு சொந்தமானதுதானா? என்பது குறித்து விசாரணை நடத்தப்படும். பழனிச்சாமி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையின் அடிப்படையில் பழனிச்சாமி விரைவில் கைது செய்யப்படுவார் என்றார்.

    • தனிப்படையினர் கோவை சென்று சம்பந்தப்பட்டவர்களிடம் சிலை வாங்குவது போல் பேசி, ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு கொண்டுவர கூறினர்.
    • சுமார் 3 அடி உயரமுள்ள திருவாச்சியுடன் கூடிய நடராஜர் உலோகச் சிலையாக அது இருந்தது.

    சென்னை:

    தமிழகத்தில் உள்ள கோவில்களில் இருக்கும் சிலைகளை திருடி, தொன்மையான சிலைகள் என கூறி ஏமாற்றி சட்ட விரோதமாக வெளிநாடுகளுக்கு கடத்தி சில கும்பல் விற்பனை செய்து வருகிறது. இதுதொடர்பாக, சென்னை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்படி, திருச்சி சரக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாலமுருகன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் பிரேமா சாந்தகுமாரி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜேஸ், பாண்டியராஜன், காவலர்கள் பரமசிவம், சிவபாலன் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

    இந்த தனிப்படையினர் கோவை சென்று சம்பந்தப்பட்டவர்களிடம் சிலை வாங்குவது போல் பேசி, ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு கொண்டுவர கூறினர். அதன்படி, கடந்த 6-ந்தேதி அதிகாலை 5 மணிக்கு கோவையில் இருந்து பல்லடம் செல்லும் சாலையில் உள்ள இருகூரில் மாறுவேடத்தில் காத்திருந்தபோது, காரில் அந்த சிலையை கொண்டு வந்தனர்.

    சுமார் 3 அடி உயரமுள்ள திருவாச்சியுடன் கூடிய நடராஜர் உலோகச் சிலையாக அது இருந்தது. அந்த சிலை குறித்து கேட்டபோது, முன்னுக்கு பின் முரணாக பேசியதால், காரில் வந்த 2 பேரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். சிலையையும் பறிமுதல் செய்தனர்.

    போலீசில் சிக்கிய கார் டிரைவர் ஜெயந்த் (வயது 22) மேட்டூர் வி.டி.சி. நகரை சேர்ந்தவர். மற்றொருவர் கேரள மாநிலம் பாலக்காடு கல்லடத்தூரை சேர்ந்த சிவபிரசாத் நம்பூதிரி (53) ஆவார். இருவரும் இந்த நடராஜர் சிலையை வெளிநாட்டில் விற்பனை செய்வதற்கு திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.

    பறிமுதல் செய்யப்பட்ட நடராஜர் சிலை தமிழகத்தில் எந்த ஊரில் உள்ள கோவிலில் இருந்து திருடப்பட்டது என்பது குறித்தும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×