என் மலர்
நீங்கள் தேடியது "8 மணி நேரம் நீடித்த"
- பவானி அருகில் உள்ள ஊராட்சி கோட்டை மலையின் அடிவார பகுதியில் பவானி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
- இந்த அலுவலகத்தில் லஞ்சம் வாங்கப்படுவதாக பொதுமக்கள் பலரும் ஈரோடு லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் தெரிவித்த வண்ணம் இருந்தனர்.
பவானி:
பவானி அருகில் உள்ள ஊராட்சி கோட்டை மலையின் அடிவார பகுதியில் பவானி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
இந்த அலுவலகத்தில் பவானி மற்றும் அந்தியூர் வட்டார பகுதியில் உள்ள பொதுமக்கள் தாங்கள் வாங்கும் புது வாகனம் பழைய வாகனம் எப்.சி. காண்பித்தல், எல்.எல்.ஆர். மற்றும் லைசென்ஸ் பெறுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு கடந்த சில மாதங்களுக்கு முன் மேட்டுப்பாளையத்தில் பணியாற்றிய சுகந்தி என்பவர் ஆய்வாளராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
கடந்த சில நாட்களாகவே இந்த அலுவலகத்தில் லஞ்சம் வாங்கப்படுவதாக பொதுமக்கள் பலரும் ஈரோடு லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் தெரிவித்த வண்ணம் இருந்தனர்.
இந்நிலையில் நேற்று மாலை சுமார் 4 மணி அளவில் ஈரோடு லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. ராஜேஷ், இன்ஸ்பெக்டர் ரேகா, சப்- இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் கோவை மண்டல ஆய்வு குழு ஆலோசகர் சாந்தாமணி ஆகியோர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அலுவலகத்தில் உள்ளே இருந்த 2 பெண் அலுவலர்கள் உட்பட 5 பேர் மற்றும் புரோக்கர்கள் என வந்து சென்ற 12 பேர் உள்ளேயே அமர வைத்தனர்.
பின்னர் நடத்திய தீவிர சோதனையில் கணக்கில் வராத ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் பறிமுதல் செய்யப் பட்டதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தகவல் தெரிவித்தனர். மாலை 4 மணிக்கு தொடங்கிய சோதனை நள்ளிரவு 12 மணி வரை நீடித்தது. கிட்டத்தட்ட 8 மணி நேரம் சோதனை நடந்தது.
புரோக்கர்களாக கருதப்படும் ஒரு சிலர் குறைந்த அளவு பணம் வைத்திருந்த நிலையில் அவர்களிடம் முகவரி, செல்போன் நம்பர் போன்றவற்றை வாங்கிக் கொண்டு இரவு 9 மணிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் ஒரு சிலரை அதிக அளவு பணம் வைத்திருந்த குற்றத்திற்காக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய உள்ளதாகவும், அதேபோல் கணக்கில் காட்டப்படாத ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் மறிமுதல் செய்யப்பட்ட நிலையில் அலுவலர் மீது வழக்கு பதிவு செய்ய உள்ளதாக தகவல் தெரிவித்தனர்.