என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மெட்டா"
- பயனர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஜூக்கர்பர்க் மகிழ்ச்சியில் இருக்கிறார்.
- மெட்டாவின் புதிய செயலி முற்றிலும் கன்ட்ரோல், காப்பி, பேஸ்ட் அடிப்படையிலானது என ஒருவர் கருத்து தெரிவித்திருந்தார்.
மெட்டா நிறுவன தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பர்க் டுவிட்டருக்கு போட்டியாக 'திரெட்ஸ்' என்ற பெயரில் புதிய சமூக வலைத்தளத்தை அறிமுகம் செய்திருக்கிறார். இதில் உலகம் முழுவதும் பயனர்கள் இணைந்தவண்ணம் உள்ளனர்.
தோற்றத்திலும், பயன்பாடு விஷயத்திலும் டுவிட்டர் போன்றே உருவாகி இருக்கும் திரெட்ஸ் சேவையை மெட்டா நிறுவனம் இன்ஸ்டாகிராமின் டெக்ஸ்ட் சார்ந்த உரையாடல் செயலி என்று தெரிவித்து இருக்கிறது. இந்த தளத்தை பயனர்கள் இன்ஸ்டாகிராம் லாக்-இன் விவரங்களை கொண்டே பதிவு செய்து கொள்ளலாம். மக்கள் தங்களின் தகவல் மற்றும் லிங்க் ஆகியவற்றை இந்த செயலியில் பதிவிடலாம். பிறரிடமிருந்து வரும் தகவல்களுக்கு பதிலளிக்கலாம் அல்லது மறுபதிவு செய்யலாம்.
திரெட்ஸ் அறிமுகம் செய்யப்பட்ட 7 மணி நேரத்தில் அதில் சுமார் ஒரு கோடி பேர் இணைந்தது பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. டுவிட்டர் தளத்தில் மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய மாற்றங்கள் காரணமாக அதிருப்தியில் உள்ளவர்கள், திரெட்ஸ் சேவையில் இணைவார்கள் என்று வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பயனர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஜூக்கர்பர்க் மகிழ்ச்சியில் இருக்கிறார்.
இந்நிலையில், திரெட்ஸ் சேவை தொடர்பாக டுவிட்டர் தளத்திலும் பயனர்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டவண்ணம் உள்ளனர். பயனர்களுடன் இணைந்து டுவிட்டர் உரிமையாளர் எலான் மஸ்க் தனது முதல் பதிலை வெளியிட்டிருக்கிறார். ஒரு டுவிட்டர் பயனர் திரெட்ஸ் செயலியை கிண்டல் செய்யும் வகையில் பதிவிட்டிருந்தார். மெட்டாவின் புதிய செயலி முற்றிலும் இந்த கீபோர்டை பயன்படுத்தி உருவாக்கப்பட்டது என குறிப்பிட்டிருந்த அந்த பயனர், கீபோர்டு போன்ற ஒரு படத்தையும் பதிவிட்டிருந்தார். அதில் கன்ட்ரோல், காப்பி, பேஸ்ட் பட்டன்கள் மட்டுமே இருந்தன.
இந்த பதிவை பார்த்த மஸ்க், சிரிக்கும் முகத்தின் எமோடிகானை பதிவிட்டு பதில் அளித்துள்ளார். இவ்வாறு மகிழ்ச்சியுடன் மஸ்க் தனது முதல் பதிலை வெளியிட்டதன்மூலம், திரெட்ஸ் செயலியானது, டுவிட்டரின் பிரதி என்று கூறுவதுபோல் தெரிகிறது.
- கனடா செய்திகளை நிறுத்தப்போவதாக மெட்டா அறிவிப்பு
- செய்திகளை நிறுத்தினால் விளம்பரங்கள் நிறுத்தப்படும் என கனடா பதிலடி
நீயா, நானா போட்டியில் மெட்டாவும், கனடாவும்: முற்றும் சச்சரவில் கூகுளும் சேருமா?உலகின் மிகப்பெரிய இணையவழி சமூக வலைதளமான முகநூலை நடத்தி வரும் மெட்டா நிறுவனத்திற்கும் கனடா நாட்டிற்கும் இடையே மோதல் வலுத்துள்ளது. இதன் பின்னணியில் உள்ளது, கனடா, அண்மையில் கொண்டு வந்த இணைய செய்தி சட்டம் (Online News Act) என்ற ஒரு சட்டம்.
கனடா நாட்டின் செய்தி வெளியீட்டாளர்களிடமிருந்து மெட்டா, கூகுள், இன்ஸ்டாகிராம் போன்ற இணையவழி சமூக வலைதளங்கள் பெறும் உள்ளடக்கத்தை (content) இணையத்தில் இணைக்கவோ அல்லது மறுபயன்பாடு செய்வதற்கோ அந்தந்த கனடா செய்தி வெளியீட்டாளர்களுக்கு அவர்களுக்குரிய விகிதாசார பணத்தை அவை தரவில்லை என கனடா குற்றஞ்சாட்டியது.
இதனால் அந்நாட்டின் பல அச்சு மற்றும் டிஜிட்டல் செய்தி பதிப்பகங்கள், வருவாய் குறைந்து பொருளாதார வீழ்ச்சியை எதிர்கொண்டதால் உள்ளூர் வெளியீடுகள் நிதி ரீதியாக நிலை பெறுவதற்கு, இச்சட்டம் கொண்டு வர வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதாக கனடா கூறியிருந்தது.
இதற்கு எதிர்வினையாக அமெரிக்காவின் மெட்டா நிறுவனம், கனடா நாட்டு செய்திகளை இனிமேல் தங்கள் வலைதளங்களில் நிறுத்த போவதாக அறிவித்தது.
மெட்டா செய்தித்தொடர்பாளர் தெரிவித்ததாவது:-
இணைய செய்திச் சட்டம் எங்கள் தளங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதற்கான உண்மைகளை அறியாத ஒரு குறைபாடுள்ள சட்டம். மெட்டாவின் சமூக தளங்களில் காண்பிக்கப்படும் செய்தி உள்ளடக்கத்திற்கான இணைப்புகளை மெட்டா சேகரிக்கவில்லை.
அவற்றை முகநூல் அல்லது இன்ஸ்டாகிராமில் வெளியிட, அந்தந்த வெளியீட்டாளர்கள்தான் முடிவு செய்கிறார்கள். துரதிர்ஷ்டவசமாக, இந்த சட்டத்தின் அடிப்படை அம்சங்களில் பல குறைகள் உள்ளன. ஆனால், செயல்முறை மாற்றங்களைச் செய்ய 'ஒழுங்குமுறை அமைப்பு' அனுமதிக்கவில்லை. எனவேதான், வரும் வாரங்களில் கனடாவில் செய்திகளை நிறுத்த திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில், கனடாவின் பாரம்பரியத்துறை அமைச்சர் பாப்லோ ரோட்ரிக்ஸ் நேற்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) அரசாங்கத்தின் முடிவை அறிவித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மெட்டாவின் முடிவு பொறுப்பற்றது. கனடா இனி மெட்டாவின் வலைதளங்களில் விளம்பரம் செய்வதை நிறுத்தப்போகிறது. இருப்பினும், ஒரு சுமூக முடிவிற்காக அரசாங்கம் இந்நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி குறைகளை நிவர்த்தி செய்ய முயற்சி நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
2021-2022-ம் ஆண்டில் முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் விளம்பரத்திற்காக, கனடா அரசாங்கம் சுமார் ரூ.70 கோடி (8.6 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) செலவிட்டுள்ளதாக அரசாங்க செலவினங்கள் பற்றிய வருடாந்திர அறிக்கை காட்டுகிறது.
மெட்டா நிறுவனத்தை தொடர்ந்து, கூகுள் நிறுவனமும், 6 மாதங்களில் கனடாவின் இந்த மசோதா நடைமுறைக்கு வரும்போது அந்நாட்டு செய்திகளை தடுக்கப்போவதாக கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- ஜனவரியில் இருந்து புதிய தளம் உருவாக்குவது தொடர்பான பணிகள் நடைபெற்று வந்தன.
- திரெட்ஸ் சேவை இன்ஸ்டாகிராம்-இன் டெக்ஸ்ட் சார்ந்த உரையாடல் செயலி ஆகும்.
மெட்டா நிறுவன தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பர்க் டுவிட்டருக்கு போட்டியாக புதிய சமூக வலைதளம் 'திரெட்ஸ்' என்ற பெயரில் அறிமுகம் செய்கிறார். இவரின் இந்த போக்கு, எலான் மஸ்க்-க்கு நேரடி சவால்விடும் வகையில் இருப்பதாக தெரிகிறது. கடந்த காலங்களில் எலான் மஸ்க் மற்றும் மார்க் ஜூக்கர்பர்க் இடையே காரசாரமான கருத்து மோதல்கள் இருந்ததே இதற்கு காரணமாகும்.
டுவிட்டர் போன்ற சமூக வலைதள சேவைக்கு இன்றும் சந்தை இருப்பதாக மார்க் ஜூக்கர்பர்க்-இன் மெட்டா நிறுவனம் நம்புகிறது. திரெட்ஸ் சேவை கடந்த வாரம் அதன் ஊழியர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த தளத்தில் மூத்த பிராடக்ட் பிரிவு அலுவலராக க்ரிஸ் கோக்ஸ் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
திரெட்ஸ் தொடக்கம்:
கடந்த ஜனவரியில் இருந்து புதிய தளம் உருவாக்குவது தொடர்பான பணிகள் நடைபெற்று வந்தன. புதிய சேவையை பயன்படுத்துமாறு உலக பிரபலங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கோக்ஸ் தெரிவித்துள்ளார். பிரபலங்கள் மட்டுமின்றி கிரியேட்டர்களிடமும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
தோற்றத்திலும், பயன்பாடு விஷயத்திலும் டுவிட்டர் போன்றே உருவாகி இருக்கும் திரெட்ஸ் சேவையை மெட்டா நிறுவனம் இன்ஸ்டாகிராம்-இன் டெக்ஸ்ட் சார்ந்த உரையாடல் செயலி என்று தெரிவித்து இருக்கிறது. இந்த தளத்தை பயனர்கள் இன்ஸ்டாகிராம் லாக்-இன் விவரங்களை கொண்டே பதிவு செய்து கொள்ளலாம்.
பாடுபடும் டுவிட்டர்:
டுவிட்டர் தளத்தினை உலகம் முழுக்க சுமார் 25 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். எலான் மஸ்க் டுவிட்டரை விலைக்கு வாங்கியதில் இருந்து, இந்த தளம் சரிவை சந்தித்து வருகிறது. டுவிட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்க எலான் மஸ்க் 44 பில்லியன் டாலர்களை செலவிட்டுள்ளார். டுவிட்டரை விலைக்கு வாங்கியதும், மூத்த தலைமை அதிகாரியில் இருந்து பலரை அதிரடியாக பணிநீக்கம் செய்தார்.
இதைத் தொடர்ந்து எலான் மஸ்க் மேற்கொண்ட பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் காரணமாக ஏராளமான விளம்பரதாரர்கள் டுவிட்டரை விட்டு வெளியேறினர். இதன் காரணமாக டுவிட்டரின் வருவாய் படிப்படியாக குறைய தொடங்கியது. பிறகு வெரிஃபைடு அந்தஸ்தை பெற பயனர்கள் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற முறை அறிவிக்கப்பட்டு, தற்போது இது அமலில் இருக்கிறது.
மார்க் விருப்பம்:
இதுதவிர ஏராளமான நடவடிக்கைகள் காரணமாக டுவிட்டர் முழுமையாக மாறி போனது. சமீபத்தில் பயனர்கள் நாள் ஒன்றுக்கு எத்தனை ட்வீட்களை பார்க்க முடியும் என்பதை கட்டுப்படுத்துவதாக எலான் மஸ்க் அறிவித்தார். இந்த எண்ணிக்கை வெரிஃபைடு பெற்றவர்கள், பெறாதவர்கள், புதிய பயனர்கள் என மூன்று வகையாக பிரிக்கப்பட்டு உள்ளன.
சமூக வலைதள உலகில் டுவிட்டர் ஏற்படுத்திய தாக்கம், மார்க் ஜூக்கர்பர்க்-ஐ பெரிதும் கவர்ந்தது. 2008-ம் ஆண்டு டுவிட்டரை விலைக்கு வாங்க மார்க் ஜூக்கர்பர்க் விருப்பம் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் தான், மார்க் தற்போது திரெட்ஸ் தளத்தை உருவாக்கி இருக்கிறார். இந்த சேவையின் முதல் சவால், பயனர்கள் இதில் தங்களின் இன்ஸ்டாகிராம் அக்கவுன்ட்-ஐ பயன்படுத்த விரும்புவார்களா என்பது தான்.
போட்டி நிறுவன சேவைகள்:
புதிய தளத்தில் அதிக பயனர்களை பெற, திரெட்ஸ் தளம் அவர்களுக்கு ஆரம்பத்தில் பல்வேறு வசதிகளை வழங்க வேண்டும். மற்றொரு பெரிய விஷயம் சமீப காலங்களில் டுவிட்டருக்கு போட்டியாக துவங்கப்பட்ட புளூஸ்கை, கடந்த திங்கள் கிழமை அன்று மட்டும் பயனர்கள் எண்ணிக்கையில் 20 சதவீதம் வளர்ச்சியை பெற்றது.
எனினும், அதிக பயனர்களை தாக்குப்பிடிக்க முடியாமல் புளூஸ்கை இன்வைட் முறையிலேயே இயங்கி வருகிறது. அதன்படி 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் மட்டுமே இந்த சேவையை பயன்படுத்த முடியும். இத்தனை சவால்களை எதிர்கொண்டே மெட்டா நிறுவனத்தின் புதிய திரெட்ஸ் சமூக வலைதளம் பயன்பாட்டுக்கு வருகிறது.
- புதிய சேவை திரெட்ஸ் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
- டுவிட்டர் தளத்திற்கு போட்டியாக புளூஸ்கை, மாஸ்டோடான் போன்ற சேவைகள் துவங்கப்பட்டுள்ளன.
மார்க் ஜூக்கர்பர்க்-இன் மெட்டா நிறுவனம் டுவிட்டர் தளத்திற்கு போட்டியாக புதிய சமூக வலைதள சேவையை உருவாக்கி வருவது அனைவரும் அறிந்ததே. கடந்த சில மாதங்களாக இந்த சேவை பற்றிய தகவல்கள் வெளியாகி வந்தது.
இந்த நிலையில், மெட்டா நிறுவனத்தின் புதிய சமூக வலைதள சேவை ஜூலை 6-ம் தேதி அறிமுகமாவதாக கூறப்படுகிறது. புதிய சேவை திரெட்ஸ் (threads) என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக வெளியான ஸ்கிரீன்ஷாட்களின் படி புதிய திரெட்ஸ் சேவை தோற்றத்தில் இன்ஸ்டாகிராம் போன்றே இருக்கும் என்றும், பயன்பாடுகள் டுவிட்டர் போன்றே இருக்கும் என்றும் தெரியவந்துள்ளது. டுவிட்டர் தளத்திற்கு போட்டியாக சமீபத்தில் உருவாக்கப்பட்ட தளங்களான புளூஸ்கை மற்றும் மாஸ்டோடான் போன்றே, திரெட்ஸ் சேவையும் பரவலான தளமாக இருக்கும் என்று தெரிகிறது.
புதிய சேவை பற்றிய தகவல், தனியார் செய்தி நிறுவனம் சார்பில் வெளியாகி இருக்கிறது. "திரெட்ஸ், இன்ஸ்டாகிராம் செயலி," என்றும், இது ஜூலை 6-ம் தேதி முதல் டவுன்லோடு செய்ய கிடைக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இதுபற்றிய தகவல் கூகுள் பிளே ஸ்டோர் லிஸ்டிங்கிலும் இடம்பெற்று இருக்கிறது.
- கூகுள் நிறுவனமும் இதேபோன்ற முடிவை எடுப்பது பற்றி பரிசீலனை செய்துவருவதாக தகவல் வெளியானது.
- செய்தி உள்ளடக்கத்தைத் தடுப்பதற்காக மெட்டா மேற்கொண்ட சோதனை முயற்சியின்போது பிரதமர் கண்டனம் தெரிவித்தார்.
உலகெங்கிலும் பிரபலமான முகநூல் (Facebook) எனப்படும் சமூகப்பதிவுகளுக்கான வலைதளம் நடத்தி வரும் மெட்டா நிறுவனம், "கனடாவில் உள்ள அனைத்து பயனர்களுக்கும் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் செய்தி கிடைப்பது இனி நிறுத்தப்படும்" என்று கூறியிருக்கிறது.
டிஜிட்டல் செய்திகள் பிரபலமானதிலிருந்து, கனடா நாட்டில் கடந்த பத்து வருடங்களில் நூற்றுக்கணக்கான செய்தி வெளியீட்டு நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன; பலர் வேலையிழந்தனர். இதனால் போராடி வரும் கனடா நாட்டின் செய்தித்துறையை ஆதரிக்க முடிவு செய்த கனடா அரசு, ஒரு மசோதாவை கொண்டு நிறைவேற்றியிருக்கிறது.
இதன்படி, கனடா டிஜிட்டல் துறையின் ஜாம்பவான்கள் தங்களது உள்ளடக்கத்திற்காக கனடா நாட்டிற்கு பணம் செலுத்த வேண்டும். இந்த ஜாம்பவான்கள் தங்கள் தளங்களில் பகிரப்படும் செய்திகள் மற்றும் தகவல்களுக்காக கனடா நாட்டு "அவுட்லெட்"களுடன் நியாயமான வணிக ஒப்பந்தங்களைச் செய்ய வேண்டும். இல்லையென்றால் அவர்கள் வழக்குகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மெட்டா, செய்திகளை தடை செய்வதற்கான முடிவை எடுத்துள்ளது. கூகுள் நிறுவனமும் இதேபோன்ற முடிவை எடுப்பது பற்றி பரிசீலனை செய்துவருவதாக தகவல் வெளியானது.
மெட்டா நிறுவனத்தின் நடவடிக்கைக்கு பதிலளித்த கனடாவின் பாரம்பரிய அமைச்சர் பாப்லோ ரோட்ரிக்ஸ், மெட்டாவின் முடிவு வருந்தத்தக்கது என்றாலும் தொழில்நுட்ப ஜாம்பவான்களுக்கு எதிராக கனடா நாட்டினர்களின் பக்கம் தான் நிற்பதாக உறுதியளித்தார்.
இந்த வாரம் ஃபேஸ்புக் மற்றும் கூகுள் நிறுவனங்களை, கனடாவின் அதிகாரிகள் சந்தித்ததாகவும், புதிய சட்டம் குறித்த கூடுதல் விவாதங்களை எதிர்நோக்கியுள்ளதாகவும் அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.
கடந்த மாதமே சில பயனர்களுக்கான கனடா நாட்டின் செய்தி உள்ளடக்கத்தைத் தடுப்பதற்காக மெட்டா மேற்கொண்ட சோதனை ஓட்டத்தை பிரதம மந்திரி ஜஸ்டின் ட்ரூடோ கண்டனம் தெரிவித்திருந்தார். அந்நிறுவனம் பத்திரிகையாளர்களுக்கு அவர்களின் பணிக்காக பணம் கொடுக்க மறுப்பது, 'பொறுப்பற்றதாகவும் தொடர்பில்லாததாகவும்' இருப்பதாகவும் கூறிய அவர், "இந்த மசோதாவை எதிர்ப்பது, நமது ஜனநாயகத்திற்கும், பொருளாதாரத்திற்கும் ஆபத்தானது" என்றும் தெரிவித்திருந்தார்.
கூகுள் நிறுவனமும் கடந்த பிப்ரவரியில், தனது பிரபலமான தேடுபொறியில் கனடா நாட்டு பயனர்களுக்கு செய்திகளுக்கான அணுகலை தற்காலிகமாக கட்டுப்படுத்தியது. அதன் செய்தித் தொடர்பாளர் ஜென் க்ரைடர் கூறும்போது, "யாரும் விரும்பாத ஒரு முடிவைத் தவிர்க்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம். அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றவே முயல்கிறோம்" என கூறினார்."
ஆன்லைன் விளம்பரங்களில் ஆதிக்கம் செலுத்தும் இந்த இரு நிறுவனங்களும், செய்தி நிறுவனங்களின் உள்ளடக்கத்தை இலவசமாகப் பயன்படுத்தும் போது பாரம்பரிய செய்தி நிறுவனங்களுக்கு கிடைக்கவேண்டிய வருவாய் வெளியே செல்வதாக ஆஸ்திரேலியாவும் குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.
இந்த இரு நாடுகளைத் தொடர்ந்து உலகின் பிற நாடுகளும் இதே போல் சட்டங்கள் கொண்டு வருமா என டிஜிட்டல் ஆர்வலர்கள் விவாதிக்கின்றனர்.
- புதிய செயலியின் இன்டர்ஃபேஸ் இன்ஸ்டாகிராமில் உள்ளதை போன்றே காட்சியளிக்கிறது.
- இந்த செயலி டுவிட்டர் தளத்திற்கு போட்டியை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
டுவிட்டர் தளத்திற்கு போட்டியாக புதிய சமூக வலைதள செயலியை மெட்டா நிறுவனம் உருவாக்கி வருவது அனைவரும் அறிந்ததே. பிராஜக்ட் 92 பெயரில் உருவாகி வரும் புதிய செயலி பற்றிய முன்னோட்டம் அந்நிறுவன ஊழியர்களுக்கு சமீபத்தில் காட்டப்பட்டது. மெட்டா நிறுவனத்தின் புதிய செயலி எப்படி காட்சியளிக்கும் என்பதை கூறும் ஸ்கிரீன்ஷாட்கள் தற்போது வெளியாகி இருக்கிறது.
மேலும், புதிய செயலி த்ரெட்ஸ் (threads) எனும் பெயரில் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. தற்போது வெளியாகி இருக்கும் ஸ்கிரீன்ஷாட்களின் படி புதிய செயலியின் இன்டர்ஃபேஸ் இன்ஸ்டாகிராமில் உள்ளதை போன்றே காட்சியளிக்கிறது. எனினும், இதில் புகைப்படங்கள் காணப்படவில்லை.
மெட்டா நிறுவனத்தின் மூத்த பிராடக்ட் அலுவலர் க்ரிஸ் கோக்ஸ் வெளியிட்டு இருக்கும் தகவல்களின் படி, புதிய சமூக வலைதள செயலி ஆக்டிவிட்டிபப் சோஷியல் நெட்வொர்க்கிங் ப்ரோடோகாலை (ActivityPub social networking protocol) பயன்படுத்துகிறது. இதை கொண்டு பயனர்கள் தங்களது இன்ஸ்டாகிராம் அக்கவுன்டை புதிய பிளாட்ஃபார்மிற்கும் கொண்டு செல்ல முடியும்.
இந்த செயலி டுவிட்டர் தளத்திற்கு போட்டியை ஏற்படுத்தும் வகையில் இருக்கும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார். இந்த செயலி இன்ஸ்டாகிராம் அக்கவுன்ட் விவரங்களை கொண்டு தானாக ப்ரோஃபைல் உருவாக்கும் என்று கூறப்படுகிறது. புதிய தளத்தை பயன்படுத்துவதற்காக மெட்டா நிறுவனம் பல்வேறு பிரபலங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
புதிய செயலியை உருவாக்குவதற்கான பணிகள் ஜனவரி மாதம் துவங்கி நடைபெற்று வருகிறது. விரைவில், இந்த செயலி பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கலாம்.
Photo Courtesy: The Verge
- மெட்டா வெரிஃபைடு சேவை இன்ஸ்டாகிராம் அல்லது பேஸ்புக்கில் நேரடியாக விற்பனைக்கு கிடைக்கிறது.
- வலைதளங்களுக்கான மெட்டா வெரிஃபைடு சேவை ரூ. 599 விலையில் வழங்கப்படுகிறது.
சமூக வலைதள நிறுவனமான மெட்டா, பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் போன்ற முன்னணி தளங்களை வைத்திருக்கிறது. டுவிட்டர் நிறுவனம் துவங்கி வைத்த கட்டண முறையிலான வெரிஃபைடு சேவையை தற்போது மெட்டாவும் கையில் எடுத்துள்ளது. அதன்படி இந்திய சந்தையில் மெட்டா வெரிஃபைடு சேவை துவங்கப்பட்டுள்ளது.
இந்திய சந்தையில் மெட்டா வெரிஃபைடு சேவையை பெற மொபைல் செயலிகளுக்கான மாதாந்திர கட்டணம் ரூ. 699 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. வரும் மாதங்களில் வலைதளங்களுக்கான வெரிஃபைடு சேவை மாதம் ரூ. 599 விலையில் வழங்கப்பட இருக்கிறது.
"மெட்டா வெரிஃபைடு சேவை இன்ஸ்டாகிராம் அல்லது பேஸ்புக்கில் நேரடியாக விற்பனைக்கு கிடைக்கிறது. ஐஒஎஸ் மற்றும் ஆன்ட்ராய்டில் இதற்கான மாதாந்திர கட்டணம் ரூ. 699. வரும் மாதங்களில் வலைதளங்களுக்கான மெட்டா வெரிஃபைடு சேவை ரூ. 599 விலையில் வழங்கப்பட இருக்கிறது," என மெட்டா தெரிவித்துள்ளது.
"முதற்கட்டமாக பல்வேறு உலக நாடுகளில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட மெட்டா வெரிஃபைடு சோதனையை இந்தியாவுக்கும் நீட்டிக்கிறோம். மேலும் ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த வெரிஃபைடு பேட்ஜ்களை தொடர்ந்து வழங்குவோம்," என்று மெட்டா மேலும் தெரிவித்துள்ளது.
- மறுகட்டமைப்பு செலவீனங்களுக்காக மெட்டா நிறுவனம் ஏற்கனவே பல மில்லியன் டாலர்களை செலவிட்டுள்ளது.
- மெட்டா நிறுவனம் பணிநீக்க நடவடிக்கைக்கு செலவிட்டுள்ள தொகை பற்றிய விவரங்கள் வெளியானது.
மெட்டா நிறுவனம் தனது ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. பல கட்டங்களாக நடைபெற்று வரும் பணிநீக்க நடவடிக்கையில் உலகம் முழுக்க பணியாற்றி வந்த ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், மெட்டா நிறுவனம் 2023 காலாண்டு முடிவுகளை பத்திரங்கள் மற்றும் பரிமாற்ற அறிக்கையில் சமர்பித்து இருக்கிறது. இதில் மெட்டா நிறுவனம் பணிநீக்க நடவடிக்கைக்கு செலவிட்டுள்ள தொகை பற்றிய விவரங்கள் இடம்பெற்றுள்ளது.
பணிநீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு எவ்வளவு தொகை செலவிடப்பட்டு உள்ளது என்ற விவரங்களை மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி மெட்டா நிறுவனம் பணிநீக்க ஊதியம் மற்றும் தனிப்பட்ட செலவீனங்களுக்கு மட்டும் 1 பில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 8 ஆயிரம் கோடி) செலவாகும் என்று அறிவித்து இருக்கிறது.
மறுகட்டமைப்பு செலவீனங்களுக்காக மெட்டா நிறுவனம் ஏற்கனவே பல மில்லியன் டாலர்களை செலவிட்டுள்ளது. இதில் பணிநீக்க ஊதியம், பாதிக்கப்படும் ஊழியர்களுக்கு நிறுவனம் சார்பில் கொடுப்பதாக அறிவிக்கப்பட்ட இதர பலன்களும் அடங்கும்.
பணிநீக்க நடவடிக்கைக்கு பெரும் தொகை செலவிடப்பட்டு இருக்கும் நிலையிலும், மெட்டா நிறுவன வருவாயில் இது நல்ல பலன்களை ஏற்படுத்தி இருக்கிறது. பணிநீக்க நடவடிக்கைகள் காரணமாக 2023 முதல் காலாண்டில் மட்டும் மெட்டா நிறுவன வருவாய் 28.65 பில்லியன் டாலர்கள் ஆகும். இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது மூன்று சதவீதம் அதிகம் ஆகும். வருடாந்திர அடிப்படையில் இது ஆறு சதவீதம் அதிகம் ஆகும்.
"2022 ஆண்டில் நிறுவனத்தில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய திட்டங்கள் மற்றும் வியாபார கவனம் உள்ளிட்டவைகளை மாற்றியமைக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறோம். மார்ச் 31, 2023 வரையிலான காலக்கட்டத்தில் 2022 பணிநீக்க நடவடிக்கைகளை நிறைவு செய்து, டேட்டா செண்டர் மறுகட்டமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு இருக்கிறோம்," என்று மெட்டா தெரிவித்து உள்ளது.
- பணிநீக்கம் செய்யப்பட்ட மெட்டா ஊழியர்கள் லின்க்டுஇன் தளத்தில் பணிநீக்க நடவடிக்கை குறித்து பதிவிட்டுள்ளனர்.
- மார்க் ஜூக்கர்பர்க் 10 ஆயிரம் பேர் பணிநீக்கம் செய்யப்பட உள்ளனர் என்று தெரிவித்து இருந்தார்.
மெட்டா நிறுவனம் இறுதிக்கட்ட பணிநீக்க நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இந்த முறை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனை உறுதிப்படுத்தும் வகையில், பணிநீக்கம் செய்யப்பட்ட மெட்டா ஊழியர்கள் லின்க்டுஇன் தளத்தில் பணிநீக்க நடவடிக்கை குறித்து பதிவிட்டு வருகின்றனர்.
சுமார் 5 ஆயிரம் பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர் என்று இன்ஸ்டாகிராம் தளத்தில் கிரியேட்டர் மார்கடிங் பிரிவில் பணியாற்றி வந்த ஊழியர் தெரிவித்துள்ளார். இவரது பதிவு மட்டுமின்றி, மேலும் பலர் வெளியிட்டு இருக்கும் பதிவுகளில் இந்த முறை பணிநீக்க நடவடிக்கையில் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் மற்றும் இதர நிறுவனங்களில் பணியாற்றி வந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அறிந்து கொள்ள முடிகிறது.
கடந்த மார்ச் மாதத்தில் மெட்டா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பர்க் 10 ஆயிரம் பேர் பணிநீக்கம் செய்யப்பட உள்ளனர் என்று தெரிவித்து இருந்தார். செலவீனங்களை குறைக்கும் நோக்கில் இந்த கடின முடிவை எடுக்க வேண்டிய சூழல் உருவாகிவிட்டது என்று அவர் மேலும் தெரிவித்தார். இந்த அறிவிப்பின் அங்கமாகவே தற்போதைய பணிநீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த முறை பணிநீக்க நடவடிக்கையில் விளம்பரங்கள் விற்பனை, மார்கடிங், தகவல் பரிமாற்றம் மற்றும் கூட்டணிகள் உள்ளிட்ட பிரிவுகளில் பணியாற்றி வந்த ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். கடந்த ஆண்டு நவம்பர் மாத வாக்கில் 11 ஆயிரம் பேர், அதாவது 13 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்ய இருப்பதாக மெட்டா நிறுவனம் முதல் முறையாக அறிவித்து இருந்தது.
- புதிய வலைதளம் இன்ஸ்டாகிராமை அடித்தளமாக கொண்டு உருவாக்கப்படுகிறது.
- புதிய சமூக வலைதளம் டெக்ஸ்ட்-ஐ மையமாக கொண்டு உருவாக்கப்படுகிறது.
சமூக வலைதள உலகில் மாற்றம் எப்போதும் மாறாத ஒன்று. முன்னணி சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம், P92 அல்லது பிராஜக்ட் 92 பெயரில் புதிய திட்டத்தில் பணியாற்றி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் புதிய சமூக வலைதள சேவை உருவாக்கப்பட இருக்கிறது.
இந்த சமூக வலைதளம், "Instagram for your thoughts" எனும் டேக்லைன் கொண்டிருக்கிறது. இந்த வலைதளம் பிரத்யேக அம்சங்கள் மற்றும் பயனர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கும் என்று கூறப்படுகிறது. இன்ஸ்டாகிராம் தாய் நிறுவனம் மெட்டா மற்றும் தேர்வு செய்யப்பட்ட கிரியேட்டர்களிடையே நடைபெற்ற ரகசிய உரையாடல்களை தொடர்ந்து இந்த தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதன்படி புதிய வலைதளம் இன்ஸ்டாகிராமை அடித்தளமாக கொண்டு உருவாக்கப்படுகிறது. இந்த தளம் மாஸ்டோடான் போன்ற சேவைகளில் இயங்கும் திறன் கொண்டிருக்கும். இன்ஸ்டாகிராம் ஐடி மற்றும் பாஸ்வேர்டு கொண்டு புதிய தளத்திலும் சைன்-இன் செய்து கொள்ளலாம். இதன் மூலம் இன்ஸ்டாவில் உள்ள ஃபாலோயர்களை புதிய தளத்திலும் சின்க் செய்து கொள்ள முடியும்.
புதிய சமூக வலைதளம் டெக்ஸ்ட்-ஐ மையமாக கொண்டு உருவாக்கப்படுகிறது. மெட்டாவின் கீழ் இயங்கும் இன்ஸ்டாகிராமின் கிளை நிறுவனமாக புதிய வலைதளம் செயல்பட இருக்கிறது. இந்த வலைதளம் டுவிட்டர் தளத்திற்கு போட்டியாக இருக்கும் என்று தெரிகிறது. மெட்டாவின் இன்ஸ்டாகிராம் தளத்தினை உலகம் முழுக்க பெரும்பாலானோர் பயன்படுத்தி வருகின்றனர். இது புகைப்படம் மற்றும் வீடியோக்களை பகிரும் தளமாகவே இருந்து வருகிறது.
இந்த நிலையில், டுவிட்டர் போன்று செய்திகளை பகிரும் நோக்கில், எழுத்துக்களை அடிப்படையாக கொண்டு இயங்கும் புதிய வலைதளம் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த வலைதளத்தின் ஆரம்பக்கட்ட சோதனைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஜூன் மாத வாக்கில் இந்த வலைதளம் பயன்பாட்டுக்கு வரும் என்று கூறப்படுகிறது.
புதிய வலைதளத்தில் பயனர்கள் அதிகபட்சம் 500 வார்த்தைகள் கொண்ட பதிவுகளை மேற்கொள்ள முடியும். இத்துடன் இணைய முகவரிகளை பகிர்வது, புகைப்படம் அல்லது ஐந்து நிமிடங்கள் வரை ஓடும் வீடியோக்களை பதிவேற்றம் செய்வது போன்ற வசதிகள் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இத்துடன் மற்ற சமூகவலைதளங்களில் இருப்பதை போன்றே, இதிலும் லைக், ரிப்ளை மற்றும் ரிபோஸ்ட் போன்ற வசதிகளும் வழங்கப்படுகிறது.
- இந்த அம்சம் மற்றவர்களிடம் மொபைலை கொடுப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
- இதன் மூலம் பயனர் தனியுரிமை பாதுகாக்கப்படுகிறது.
மெட்டா நிறுவனம் தனது வாட்ஸ்அப் செயலியில் சாட் லாக் பெயரில் புதிய அம்சத்தை அறிமுகம் செய்து இருக்கிறது. இதன் மூலம் பயனர்கள் தங்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும் சாட்களை தனியே ஒரு ஃபோல்டர் உருவாக்கி அதில் பாஸ்வேர்டு அல்லது பயோமெட்ரிக் பாதுகாப்புடன் சேமித்துக் கொள்ளலாம்.
தனிப்பட்ட சாட்கள் மட்டுமின்றி க்ரூப் சாட்களையும் இந்த ஃபோல்டரில் வைத்துக் கொள்ள முடியும். இதன் மூலம் பயனர் தனியுரிமை பாதுகாக்கப்படுவதோடு, மெசேஜ் பிரீவியூக்கள் எதுவும் தெரியாது. இந்த அம்சம் உலகளவில் அனைவருக்கும் வழங்கப்பட்டு வருகிறது.
"இந்த அம்சம் அடிக்கடி தங்களது மொபைல் போனினை குடும்ப உறுப்பினரிடமோ அல்லது சந்தர்ப சூழல் காரணமாக மற்றவர்களிடம் மொபைலை கொடுப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்," என்று மெட்டா தனது வலைதளத்தில் தெரிவித்து உள்ளது.
வாட்ஸ்அப் சாட்-ஐ லாக் செய்யும் முன் பயனர்கள் குறிப்பிட்ட காண்டாக்ட் அல்லது க்ரூப்-ஐ தேர்வு செய்ய வேண்டும். சாட்களை மீண்டும் பார்க்க இன்பாக்ஸ்-ஐ கீழ்புறமாக ஸ்வைப் செய்தால், சாட்களின் மேல் லாக்டு ஃபோல்டர் இடம்பெற்று இருக்கும். லாக்டு ஃபோல்டருக்கான பாஸ்வேர்டு அல்லது பயோமெட்ரிக் மூலம் அன்லாக் செய்ய வேண்டும்.
எதிர்காலத்தில் சாட் லாக் ஆப்ஷன்களில் பயனர்கள் இதர சாதனங்களில் உள்ள சாட்களை லாக் செய்யும் வசதியை வழங்குவது, பிரத்யேக பாஸ்வேர்டுகளை வைத்துக் கொள்ள செய்வது போன்ற ஆப்ஷன்களை வழங்க மெட்டா திட்டமிட்டிருந்ததாக தெரிவித்து உள்ளது.
- மெட்டா நிறுவனம் கடந்த ஆண்டு நவம்பரில் 11,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது.
- இதுவரை பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியுள்ளது.
சான் பிரான்சிஸ்கோ :
கொரோனா தொற்று மற்றும் உக்ரைன் போர் காரணமாக ஏற்பட்டுள்ள சர்வதேச பொருளாதார நெருக்கடியால் பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனங்கள் தொடர்ந்து ஆள்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் கூகுள், மைக்ரோசாப்ட், டுவிட்டர், பேஸ்புக், டிஸ்னி, அமேசான், வால் ஸ்டிரீட் உட்பட பல நிறுவனங்களும் ஆள்குறைப்பை மேற்கொண்டுள்ளன. இதுவரை பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியுள்ளது.
பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனம் கடந்த ஆண்டு நவம்பரில் 11,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. அதை தொடர்ந்து கடந்த மாதம் மேலும் 10,000 ஊழியர்களை பணியில் இருந்து நீக்கியது.
இந்த நிலையில் தற்போது 3-வது கட்டமாக மேலும் 4,000 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய மெட்டா நிறுவனம் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஓரிரு தினங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மெட்டா ஊழியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்