search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நளினி முருகன்"

    • 16 ஆண்டுகாலமாக எனது மகளை நான் பார்க்கவில்லை.
    • சாந்தன் இலங்கைக்கு செல்வதாக கூறுகிறார்.

    திருச்சி

    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த நளினி உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதை தொடர்ந்து சிறையில் இருந்து விடுதலையான இலங்கையை சேர்ந்த முருகன், சாந்தன், ராபர்ட்பயாஸ், ஜெயக்குமார் ஆகிய 4 பேரும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருச்சிக்கு அழைத்து வரப்பட்டு மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் தனித்தனி அறைகளில் தங்க வைக்கப்பட்டனர்.

    இந்தநிலையில் முருகனை பார்ப்பதற்காக அவரது மனைவி நளினி நேற்று காலை சென்னையில் இருந்து ரெயில் மூலம் திருச்சி வந்தார். பின்னர் அங்கிருந்து காரில் திருச்சி சிறப்பு முகாமிற்கு வந்தார். அவருடன், 3 பெண்கள் மற்றும் வக்கீல்கள் உள்பட 7 பேர் வந்தனர். இவர்கள் அனைவரும் நேற்று காலை 10.20 மணி அளவில் முகாமிற்குள் சென்று முருகனை சந்தித்து பேசினார்கள்.

    இதனை தொடர்ந்து நேற்று மாலை 5.10 மணிஅளவில் நளினி சிறப்பு முகாமில் இருந்து வெளியே வந்தார். மத்திய சிறை வாசலில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நான் கேள்விபட்டபடி, சிறைக்குள் 4 பேரும் உண்ணாவிரதம் இருக்கவில்லை. இத்தனை ஆண்டுகாலம் சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் திடீரென மீண்டும் அவர்களை சிறப்பு முகாமில் அடைத்ததால் முதலில் ஒரு நெருக்கடியான சூழல் இருந்தது. இப்போது எல்லாம் சரியாகிவிட்டது. மத்திய-மாநில அரசுகள் விரைந்து அவர்களை விருப்பப்படும் நாட்டுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    எனது கணவரை லண்டனுக்கு அனுப்பி விடும்படி கலெக்டரிடம் கோரிக்கை வைத்துள்ளேன். ஏனென்றால் அங்கு எங்கள் மகள் வசிக்கிறார். 16 ஆண்டுகாலமாக எனது மகளை நான் பார்க்கவில்லை. அதனால் நாங்கள் மகளுடன் இருக்க ஆசைப்படுகிறோம். சாந்தன் இலங்கைக்கு செல்வதாக கூறுகிறார். ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் எந்த நாட்டிற்கு செல்வது என்று இன்னும் முடிவு செய்யவில்லை.

    முதல்-அமைச்சரை நேரில் சென்று சந்திக்க வேண்டும் என்று கிடையாது. அவரே அனைத்தையும் பார்த்து கொள்கிறார். எங்களை வெளிநாடு அனுப்புவதற்காக பணிகளை அரசு சார்பில் மும்முரமாக செய்து வருவதாக தான் நினைக்கிறேன். பல ஆண்டுகளாக சிறையில் கழித்து வந்தவர்களை வெளியே அனுப்பாமல் மீண்டும் சிறப்பு முகாமில் அடைத்து வைப்பதை பார்க்கும்போது மனதுக்கு கஷ்டமாக தான் இருக்கிறது.

    அவர்களை வெளியே விட்டால் சமூகத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று கூறுவது தவறு. ஏனென்றால் முகாமில் இருப்பவர்களின் குடும்பத்தினர் பலரும் வெளியே வசித்து கொண்டு தானே இருக்கிறார்கள். அவர்களால் சமூகத்துக்கு எந்த பிரச்சினையும் இல்லை தானே. அதுபோல தானே முகாமில் இருப்பவர்களையும் வெளியே வாழவைக்க வேண்டும்.

    நான் காங்கிரஸ் குடும்பத்தை சேர்ந்தவர். எனது தாயாருக்கு காந்தி தான் பெயர் வைத்தார். இந்திராகாந்தி இறந்தபோது கூட எங்கள் குடும்பத்தில் யாரும் சாப்பிடாமல் அழுது கொண்டே இருந்தோம். ராஜீவ்காந்தி இறந்தபோதும் 3 நாட்களாக சமைக்காமல் அழுது கொண்டு தான் இருந்தோம். ஆனால் அவருடைய மரணம் தொடர்பான குற்றத்தில் நான் ஈடுபட்டதாக என் மீது குற்றச்சாட்டு இருக்கிறது. இது சரியானால் தான் என் மனதுக்கு நிம்மதி.

    சிறையில் இருந்து வெளியே வந்தபிறகும் எனது கணவரை முகாமில் வைத்துள்ளது எனது மனதை பாதித்துள்ளது. தற்போது எனக்கு நிறைய வேலை இருக்கிறது. நாங்கள் வெளிநாட்டுக்கு செல்வதற்காக தூதரகத்துக்கு அலைய வேண்டி உள்ளது. எனது கணவருக்கு தூக்குதண்டனை வந்தபோது, அவர் தூக்கு தண்டனையில் இருந்து விடுதலை பெற வேண்டி கோவில்களில் தீமிதிக்க நேர்த்திக்கடன் இருந்தது. திருப்பதி கோவிலுக்கு நடந்தே செல்வதாக வேண்டுதல் இருந்தது. அதை எல்லாம் நிறைவேற்ற வேண்டும்.

    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகள் என்று யாரையும் சொல்லமுடியாது. அப்படி எதுவும் எனக்கு தெரியவில்லை. அவ்வாறு காட்டி கொடுக்கும் பழக்கமும் எனக்கு கிடையாது. அப்படி இருந்திருந்தால் 30 ஆண்டுகள் சிறையில் கழித்து இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆகையால் ராஜீவ் கொலையில் உண்மையான குற்றவாளிகள் யாரென்று எனக்கு தெரியாது. தற்போது இலங்கையில் நெருக்கடியான சூழல் இருப்பதால் அங்கு செல்வது சரியாக இருக்குமா? என தெரியவில்லை.

    சிறையில் பிரியங்கா காந்தி என்னை சந்தித்தபோது, ராஜீவ் கொலை வழக்கு குறித்து என்னிடம் கேட்டார். அப்போது எனக்கு தெரிந்த விஷயங்களை அவரிடம் கூறினேன். அது அவருக்கு திருப்தியாக இருந்ததா? என எனக்கு தெரியாது. அதை அவரிடம் தான் கேட்க வேண்டும். சிறப்பு முகாமில் எனது கணவர் உள்பட 4 பேரை சந்தித்து பேசியது மகிழ்ச்சியாக உள்ளது. எங்களை சந்தித்த அவர்களுக்கு நிறைய ஆறுதல் தேவைப்பட்டது. அவர்களை விரைந்து வெளியே எடுப்பதற்கான பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக நளினி சிறப்பு முகாமிற்கு வருவதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கலெக்டர் பிரதீப்குமார் நேரில் சென்று சிறப்பு முகாமில் ஆய்வு நடத்தினார்.

    ×