search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருப்பத்தூர் துணை கலெக்டர்"

    • வீட்டில் துர்நாற்றம் வீசியதால் சந்தேகம் அடைந்த கலெக்டர் அலுவலக ஊழியர்கள் உடனடியாக கலெக்டர் அலுவலக நேர்முக உதவியாளர் வில்சன் ராஜசேகருக்கு தகவல் கொடுத்தனர்.
    • சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் கதவை உடைத்து பார்த்தபோது உள்ளே கட்டிலில் துணை கலெக்டர் மோகனகுமரன் நிர்வாண நிலையில் இறந்து கிடந்தார்.

    திருப்பத்தூர்:

    சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி, கடமைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பி.மோகனகுமரன் (வயது53). திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் துணை கலெக்டராகவும், கலெக்டரின் நேர்முக உதவியாளராகவும் (கணக்கு) கடந்த 1½ ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார்.

    தற்போது திருப்பத்தூர் பிரான்லைன் பகுதியில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ரேனு என்பவரது வீட்டில் மாடியில் தனியாக குடியிருந்து வந்தார்.

    கடந்த சனிக்கிழமை மாலை கலெக்டர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மோகன குமரன் கலந்து கொண்டு இரவு டிபன் வாங்கிக் கொண்டு தனது வீட்டுக்கு சென்றார்.

    ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நேற்று திங்கட்கிழமை கலெக்டர் அலுவலகத்திற்கு அவர் வரவில்லை விடுமுறை குறித்தும் எந்த தகவலும் இல்லை. செல்போனில் தொடர்பு கொண்ட போதும் அவர் எடுக்கவில்லை.

    மாலையும் இதே நிலைமை நீடித்ததால் பல்வேறு கோப்புகளில் கையெழுத்து போட வேண்டி உள்ளதால் கலெக்டர் அலுவலக ஊழியர்கள் அவரது வீட்டுக்கு சென்று பார்த்தனர். வீடு உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டு இருந்தது. கதவை தட்டிப் பார்த்தும் செல்போன் மூலம் தொடர்பு கொண்ட போதும் எந்தவித பதிலும் இல்லை.

    மேலும் வீட்டில் துர்நாற்றம் வீசியதால் சந்தேகம் அடைந்த கலெக்டர் அலுவலக ஊழியர்கள் உடனடியாக கலெக்டர் அலுவலக நேர்முக உதவியாளர் வில்சன் ராஜசேகருக்கு தகவல் கொடுத்தனர்.

    அவர் திருப்பத்தூர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் கதவை உடைத்து பார்த்தபோது உள்ளே கட்டிலில் துணை கலெக்டர் மோகனகுமரன் நிர்வாண நிலையில் இறந்து கிடந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த கலெக்டர் அமர்குஷ்வாஹா, மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, கோட்டாட்சியர் லட்சுமி, உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டனர்.

    மர்ம சாவு குறித்து கிராம நிர்வாக அலுவலர் ஜெய்சூர்யா டவுன் போலீசில் புகார் கொடுத்தார். உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    துணை கலெக்டர் மோகன குமரன் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். குளிப்பதற்காக இரவு ஹீட்டர் போட்டு உடைகளை களைந்து உள்ளார்.

    அப்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இருக்கலாம் என தெரிவித்தனர். இது குறித்து மேலும் பிரேத பரிசோதனை அறிக்கையில் முழு விவரம் தெரிய வரும் என்றனர்.

    இறந்த மோகனகுமரனுக்கு சாந்தி என்ற மனைவியும் கவின் (வயது 12) என்ற மகன் உள்ளனர். துணை கலெக்டர் மர்மமான முறையில் இறந்துகிடந்த சம்பவம் திருப்பத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இன்று காலை துணை கலெக்டர் மோகனசுந்தரம் உடலுக்கு கலெக்டர் அமர்குஷ்வாஹா உள்ளிட்ட மாவட்ட அதிகாரிகள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி உடலை அவரது மனைவி சாந்தியிடம் ஒப்படைத்தனர். சொந்த ஊருக்கு அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்டது.

    ×