search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்தோனேஷியா"

    • விபத்தில் பேருந்தில் இருந்த 9 பேர் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலி.
    • விபத்தில் படுகாயம் அடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

    தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியா மேற்கு ஜாவா மாகாணத்தை சேர்ந்த பாண்டுங் பகுதியில் நடந்த ஒரு பட்டமளிப்பு விழாவில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    விழா முடிந்ததும் பேருந்து ஒன்றில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஜகார்தா பகுதியில் உள்ள உயர்நிலைப் பள்ளிக்கு திரும்பிக்கொண்டு இருந்தனர். அந்த பேருந்தில் மொத்தம் 61 பேர் பயணம் செய்தனர்.

    மலைகள் நிறைந்த பகுதியில் பேருந்து கீழே இறங்கி கொண்டு இருந்தபோது திடீரென பிரேக் பழுதானதாக கூறப்படுகிறது.

    இதனால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து மலையில் முன்னால் சென்று கொண்டிருந்த கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் மீது பயங்கரமாக மோதியது. 

    இந்த கோர விபத்தில் பேருந்தில் இருந்த 9 பேர் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி சம்பவ இடத்திலேயே இறந்தனர். 50-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தனர்.

    இது பற்றி தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் 2 பேர் உயிர் இழந்தனர். பலியானவர்களில் 9 பேர் மாணவர்கள், ஒரு ஆசிரியர், மற்றும் மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் என மொத்தம் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

    படுகாயம் அடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.

    • சுமத்ரா தீவில் உள்ள மராபி மலையில் இரண்டாவது முறையாக எரிமலை வெடிப்பு ஏற்பட்டது.
    • எரிமலை வெடிப்பினால் அருகில் உள்ள கிராம மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்

    இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் உள்ள மராபி மலை இன்று மீண்டும் வெடித்தது. எரிமலையில் இருந்து தீக்குழம்பு வெளியேறியதால், அருகில் உள்ள கிராமங்கள் பாதிக்கப்பட்டது. இதனால் அங்குள்ள 150க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

    அதிகாலை 6.21 மணிக்கு எரிமலை வெடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், மராபியின் சிகரத்திற்கு கீழே உள்ள பள்ளத்தாக்கு மற்றும் ஆற்றங்கரைக்கு அருகே வசிக்கும் மக்களுக்கு, சுமத்ரா தீவில் உள்ள மராபி மலையில் இரண்டாவது முறையாக எரிமலை வெடிப்பு ஏற்பட்டது.

    மழைக்காலத்தில் ஏற்படக்கூடிய எரிமலைக்குழம்புகளின் அச்சுறுத்தல் குறித்து எச்சரிக்கை விடுக்க வேண்டும் எனவும், எரிமலை ஆய்வு நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

    எரிமலை ஆய்வு நிறுவனத்தின் பரிந்துரையின்படி, 4.5 கிலோமீட்டர் தூரம் உள்ள மக்களை அங்கிருந்து வெளியேற்றி, அவர்களுக்கு தங்குமிடம் அந்நாட்டு அரசாங்கத்தால் தயார் செய்து கொடுக்கப்பட்டது. மேலும் எரிமலை சாம்பலால் ஏற்படும் சுவாச நோய்த் தொற்றுகளை தவிர்க்க இலவச முககவசம் மக்களுக்கு வழங்கப்பட்டது.

    கடந்த டிசம்பர் மாதம் மராபி மலையில் வெடிப்பு ஏற்பட்ட போது, எரிமலையில் நடைபயணம் மேற்கொண்ட 75 பேரில் பலர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், 23 பேர் உயிரிழந்தது குறிப்பிடதக்கது. 

    • பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டு உள்ளதால் மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டு உள்ளது.
    • இந்தோனேஷியாவை போல பக்கத்து நாடான மலேசியாவிலும் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி வருகிறது.

    இந்தோனேஷியாவில் கடந்த சில நாட்களாக பலத்த மழை கொட்டி வருகிறது. இதனால் அங்குள்ள நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது. பல பகுதிகளில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

    ஆறுகளில் தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது. தொடர் மழையால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் அவர்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கிறார்கள்.

    தொடர் மழை காரணமாக இந்தோனேஷியாவில் உள்ள பல தீவுகளில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது. இதில் ஏராளமான வீடுகள் இடிந்து தரைமட்டமானது. ரியாசு தீவில் நிலச்சரிவில் வீடுகள் மண்ணோடு மண்ணாக புதைந்ததால் அதில் சிக்கி பெண்கள் உள்பட 11 பேர் இறந்து விட்டனர்.

    50க்கும் மேற்பட்டவர்களை காணவில்லை. அவர்களது கதி என்னவென்று தெரியவில்லை. பலர் மண்ணுக்குள் புதைந்து இருக்கலாம் என தெரிகிறது. இதனால் சாவு எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது. மீட்பு பணிகள் அங்கு முடுக்கிவிடப்பட்டு உள்ளன.

    பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டு உள்ளதால் மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. ஏராளமான பொதுமக்கள் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

    இந்தோனேஷியாவை போல பக்கத்து நாடான மலேசியாவிலும் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி வருகிறது. இதனால் வீடுகளை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. ரோடுகளில் தண்ணீர் ஆறு போல பெருக்கெடுத்து ஓடுவதால் பொது மக்கள் கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். மலேசியாவில் நேற்று மழைக்கு 4 பேர் பலியாகிவிட்டனர்.

    • இந்தோனேஷியா நாட்டை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது அந்த நாட்டில் வசித்து வரும் மற்ற நாட்டினருக்கும் பொருந்தும்
    • கருக்கலைப்பை சட்ட விரோதமாக அறிவிக்கும் பழைய சட்டம் தொடரவேண்டும் என்று மசோதாவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    ஜகார்த்தா:

    இந்தோனேஷியாவில் குற்றவியல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர அந்நாட்டு பாராளுமன்றத்தில் மசோதா கொண்டு வரப்பட்டது. இந்த சட்ட திருத்த மசோதா பாராளுமன்றத்தில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. அதன்படி திருமணத்தை மீறி தகாத உறவு வைத்து இருந்தால் ஓராண்டு வரை சிறை தண்டனை கிடைக்கக்கூடிய குற்றமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இதற்கான புகாரை கணவர் அல்லது மனைவி, பெற்றோர், குழந்தைகள்தான் கொடுக்க வேண்டும். இந்த சட்டம் இந்தோனேஷியா நாட்டை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது அந்த நாட்டில் வசித்து வரும் மற்ற நாட்டினருக்கும் பொருந்தும்

    இந்தோனேஷியாவில் அங்கிகரீக்கபட்டுள்ள இந்து மதம், இஸ்லாம், கிருஸ்தவம், பவுத்தம், கன்பூசியம் ஆகிய 5 மதங்களை அவமதித்தால் 5 ஆண்டு வரை சிறை தண்டனை கிடைக்கும் வகையில் மதநிந்தனைச் சட்டம் கொண்டுவரப்பட்டு உள்ளது. மார்க்சிய லெனினிசத்தை பரப்புபவர்களுக்கு 10 ஆண்டு வரையிலும் கம்யூனியசத்தை பரப்புபவருக்கு 5 ஆண்டுகள் வரையிலும் சிறைதண்டனை விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    கருக்கலைப்பை சட்ட விரோதமாக அறிவிக்கும் பழைய சட்டம் தொடரவேண்டும் என்று மசோதாவில் குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆனால் உயிருக்கு ஆபத்தான மருத்துவ சூழலை கருத்தில் கொண்ட பெண்களுக்கும், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண்களுக்கும் 12 வாரத்துக்கான கருவை கலைத்து கொள்ளலாம் என்ற விதி விலக்கு அந்த சட்டத்தில் புதிதாக சேர்க்கப்பட்டு உள்ளது. பல நாடுகளில் மரண தண்டனைக்கு எதிர்ப்பு வலுத்தும் வரும் சூழலில் இந்தோனேஷியாவில் மரண தண்டனை தொடரும் என புதிய மசோதாவில் தெரிவிக்கபட்டு உள்ளது. ஆனாலும் மரண தண்டனை கைதிகள் 10 ஆண்டுகள் நன்னடத்தையுடன் இருந்தால் அவர்களின் தண்டனை ஆயுள் தண்டனையாகவோ அல்லது 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்தில் குறிப்படப்பட்டுள்ளது. பதவியில் உள்ள அதிபர்கள், துணை அதிபர்கள் மற்றும் அரசு அமைப்புகளை அவமதித்தால் தண்டனை கொடுக்கும் வகையில் புதிய சட்டம் சேர்க்கப்பட்டு உள்ளது. இந்த சட்ட திருத்தங்களுக்கு மனித உரிமை ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

    • 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல்.
    • சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஜகார்த்தா:

    கடந்த மாதம் 21ந் தேதி இந்தோனேஷியாவின் மேற்கு ஜாவா தீவில் உள்ள சியாஞ்சூர் பகுதியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 331 பேர் கொல்லப்பட்டனர் 600 பேர் காயமடைந்தனர். இந்நிலையில் ஜாவா தீவில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


    மேற்கு ஜாவா மற்றும் மத்திய ஜாவா மாகாணங்களுக்கு இடையே உள்ள பஞ்சார் நகருக்கு தென்கிழக்கே 18 கிலோமீட்டர் தொலைவில் 112 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக கூறப்பட்டுள்ளது. மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதால் பீதி அடைந்த மக்கள் தெருக்களில் தஞ்சம் அடைந்தனர். ஆனால் உயிரிழப்புகள் குறித்த உடனடி தகவல்கள் எதுவும் இல்லை என்றும், சுனாமி ஆபத்து ஏதும் விடுக்கப்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • வெளிநாடு வாழ் இந்திய சமுதாயத்தினர், வசிக்கும் நாட்டிற்காக, கடின உழைப்பை செலுத்துகின்றனர்.
    • இந்தியாவின் பெருமையையும், அந்தஸ்தையும் உலக அளவில் உயர்த்தி வருகின்றனர்.

    பாலி:

    இந்தோனேஷியா நாட்டில் நடைபெறும் ஜி20 அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்றுள்ள பிரதமர் மோடி, பாலி நகரில், இந்திய சமுதாயத்தினருடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    இந்தியாவுக்கும், இந்தோனேஷியாவுக்கும் இடையே நெருங்கிய கலாச்சார, நாகரீக தொடர்புகள் உள்ளன. பாலி ஜத்ரா என்ற மிகப் பழமையான பாரம்பரியம் இரு நாடுகளுக்கும் இடையிலான கலாச்சாரம் மற்றும் வர்த்தக தொடர்பை பிரதிபலிக்கிறது.

    இந்திய சமுதாயத்தினர், தாங்கள் வசிக்கும் நாட்டுக்காக அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய கடின உழைப்பு செலுத்தி வருகின்றனர். இதன் மூலம் இந்தியாவின் பெருமையையும், அந்தஸ்தையும் உலக அளவில் அவர்கள் உயர்த்தி வருகின்றனர். இந்தியா இந்தோனேஷியா உறவை வலுப்படுத்துவதிலும் இந்திய சமுதாயத்தினர் மிக முக்கியப் பங்காற்றி வருகின்றனர்.

    டிஜிட்டல் தொழில்நுட்பம், நிதி, சுகாதாரம், தொலைத் தொடர்பு, விண்வெளித் துறை போன்ற பல்வேறு துறைகளில் இந்தியா சிறந்த வளர்ச்சியை அடைந்துள்ளது. தற்சார்பு இந்தியாவின் தொலை நோக்கு பார்வை உலக நலனுக்கானது.

    மத்தியப்பிரதேசத்தின் இந்தூரில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 8-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை நடைபெறவுள்ள, வெளிநாடுவாழ் இந்தியர்கள் தின மாநாட்டிலும், குஜராத்தில் நடைபெற உள்ள பட்டத் திருவிழாவிலும் இந்தோனேஷியாவில் உள்ள இந்திய சமுதாயத்தினர் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×