search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிஎம்எஸ்"

    • ஒரு பாடலை முதலில் பாடிவிட்டு அதற்கேற்ற மாதிரி வாயசைத்து நடிக்க வைப்பது பழக்கம்.
    • டி.எம்.எஸ். பாடும் போது இது சிவாஜி பாட்டு, இது எம்.ஜி.ஆர். பாடல் என்று நம்மால் சொல்லிவிட முடிகிறது.

    டி.எம்.சவுந்திரராஜன், "அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே" பாடலுக்காக மூச்சிரைப்புடன் கூடிய குரலுக்காக, ஒலிப்பதிவுக் கூடத்தை சுற்றிவிட்டு வந்து மூச்சிரைத்துக் கொண்டே பாடியதைப் பற்றி பார்த்தோம்.

    டி.எம்.சவுந்திரராஜன் தான் பாட வேண்டுமென எம்.எஸ்.வி. பிடிவாதமாக நின்ற பாடலும் ஒன்று உண்டு!

    'கௌரவம்' என்ற திரைப்படம். 'வியட்நாம் வீடு' சுந்தரம் இயக்கி சிவாஜி கணேசன் இரு வேடங்களில் நடித்த படம்! படத் தலைப்பைப் பார்த்தாலே கதை புரியும். பாரிஸ்டர் பட்டம் வாங்கிய பெரியப்பா சிவாஜிக்கு வாழ்க்கையில் எல்லாவற்றையும் விட, வளர்த்த மகனின் (சிவாஜி) வெற்றியையும் விட, தன் கவுரவம் தான் முக்கியம் என நினைப்பவர். ஒரு கொலை வழக்கில் நேருக்கு நேர் எதிராக வழக்கில் வாதாட வேண்டிய சூழ்நிலை வருகிறது. எதிராக வழக்காடப் போகிறேன் என்று மகன் சொன்னவுடனே அவரை வீட்டை விட்டு வெளியே போகச் சொல்லி விடுகிறார் பெரியப்பா சிவாஜி, மிகவும் உணர்ச்சி மயமான சூழலில் வரும் பாடல் தான்,

    "பாலூட்டி வளர்த்தக் கிளி,

    பழம் கொடுத்து

    பார்த்தக் கிளி, நான் வளர்த்தப்

    பச்சைக்கிளி

    நாளை வரும் கச்சேரிக்கு" என்ற பாடல்!!

    கவியரசரின் வரிகள் பாரிஸ்டரின் ஒட்டுமொத்த வாழ்க்கை வரலாற்றையும், குணத்தையும் சொல்லிவிடும்! அதுதான் கவியரசருக்குக் கைவந்த கலை ஆனதே!


    இந்த பாடல் அசரீரி குரலாக வரவுள்ளதாக சொல்லப்பட்டு, இந்த பாடலை எம்.எஸ். வி. தன் குரலில் பாடி பதிவு ஆனது. பாடலை கேட்டுப் பார்த்த சிவாஜி, அசரீரி குரலாக வருவதை விட வாயசைத்துப் பாடினால் தான் நன்றாகயிருக்கும் என்று சொல்லி வாயசைத்து நடித்து விட்டார். படத்திற்கு ரி.ரிகார்டிங் இசை அமைப்பதற்கு முன் பார்த்த எம்.எஸ்.வி., "அசரீரி இல்லாமல் சிவாஜி அண்ணன் நேரடியாக பாடுவதாக காட்சி இருக்கும் இதற்கு என் குரல் வேண்டாம். டி.எம்.எஸ். தான் பின்னணி பாட வைக்க வேண்டும். இல்லைன்னா பொருத்தமா இருக்காது" என்று பிடிவாதமாக சொல்லிவிட்டார்.

    வெளியூர் போயிருந்த டி.எம்.எஸ். வந்தவுடன், இந்த பாடலை கற்றுக் கொடுத்து சிவாஜி நடித்ததையும் போட்டுக் காட்டி டி.எம்.எஸ். சை பாட வைத்தார் எம்.எஸ்.வி.

    ஒரு பாடலை முதலில் பாடிவிட்டு அதற்கேற்ற மாதிரி வாயசைத்து நடிக்க வைப்பது பழக்கம். ஆனால் காட்சி எடுத்து விட்ட பிறகு அதற்கேற்ற மாதிரி பாடல் பாட வைப்பது மிக சவாலானது. ஒவ்வொரு சொல்லும் எடுக்குமிடமும், முடிக்குமிடமும் காட்சிக்குப் பொருத்த வேண்டும். பாடல் சம்பந்தப்பட்ட சிவாஜி, எம்.எஸ்.வி., டி.எம்.எஸ். எல்லோருமே தொழில் பக்தி உடையவர்கள். அவர்கள் அர்ப்பணிப்போடு செய்ததால் தான் அப்பாடல் சிறப்பாக வந்தது.

    மேலும், இதுபோன்ற பாடல்கள் என்றால் டி.எம்.எஸ். தான் என்ற முத்திரை இருக்கும்போது, எம்.எஸ்.வி. பிடிவாதம் பிடித்ததில் நியாயம் இருக்கத்தானே செய்கிறது?

    'தெய்வமகன்' படத்தில் வரும் "தெய்வமே, தெய்வமே நன்றி சொல்வேன் தெய்வமே", 'ஞான ஒலி' படத்தில் வரும் "தேவனே என்னைப் பாருங்கள்", "தங்கப் பதக்கம்" படத்தின் "சோதனை மேல் சோதனை போதுமடா சாமி", அவ்வளவு ஏன் 1978ல் வந்த 'பைலட் பிரேம் நாத்' படத்தில் வந்த "ஹூ ஈஸ் தி பிளாக் ஷீப்?" என்றப் பாடல் வரையிலும் கூட சிவாஜிக்கு டி.எம்.எஸ். கம்பீரமாகவும் கனகச்சிதமாகவும் பாடி முத்திரை பதித்தார் என்பதில் மாற்றுக் கருத்தே நமக்கு இல்லை. இந்தப் பாடல்களை கேட்டாலே சிவாஜி படப் பாடல்கள் என்று படத்தை பார்க்காமலே சொல்லி விடலாம்.

    1959ல் வந்த 'தங்கப் பதுமை' படத்தில் 'இன்று நமதுள்ளமே பொங்கும் புது வெள்ளமே' என்ற உற்சாகப் பாடலை டி.எம்.எஸ்.சை பாட வைக்கிறார் எம்.எஸ். வி. இதில் அவரின் குரல் அதிர்வு குறைந்து ஸ்படிகத் தெளிவு குரலில் பாட வைக்கிறார். 'பாகப்பிரிவினை' படத்திலும் 'ஏன் பிறந்தாய் மகனே', 'தாழையாம் பூ முடிச்சு' என்ற பாடலும் குழைவாகவும் தணிந்த குரலிலும் பாட வைக்கிறார். பின்னர் வந்த எல்லா பாடல்களிலும் அதே தொனியில் பாடுகிறார் டி.எம்.எஸ். பாசமலர், பாலும் பழமும், பாவ மன்னிப்பு பட பாடல்கள் சிவாஜிக்கான தொனியில் பொருந்தி பெரும் வரவேற்புப் பெற்றன.

    எம்ஜிஆருக்கு 1957ல் 'மகாதேவி' 'சேவை செய்வதே ஆனந்தம்' பாடலை பாட வைக்கிறார். 1960ல் 'மன்னாதி மன்னன்' படம். அதில் 'கனிய கனிய மழலை பேசும் கண்மணி' என்ற பாடலில் குழைந்து பாட வைத்திருப்பார். அதிர்வு குரலை எம்.ஜி.ஆருக்கும் தவிர்த்து விட்டு, ஸ்படிக தெளிவுக்குரலை கொண்டு வந்துவிட்டார். இந்தப் படத்திலிருந்து எம்.ஜி.ஆருக்கு பாடும் பாடல்களின் தொனி மாறிவிடுகிறது.

    டி.எம். சவுந்தரராஜனிடம் ஒரு பழக்கம் உண்டு. பாடுவதற்கு முன்னால் எந்த நடிகர் பாடுகிறார் என கேட்டுத் தெரிந்துக் கொண்டு அவரவர் குரலுக்கேற்றபடி தன் குரலை மாற்றிக் கொண்டு பாடுவார். அதனால் டி.எம்.எஸ். பாடும் போது இது சிவாஜி பாட்டு, இது எம்.ஜி.ஆர். பாடல் என்று நம்மால் சொல்லிவிட முடிகிறது.

    ஒரு போட்டியில் டி.எம். சவுந்தரராஜன் சொன்னார், சிவாஜிக்கு நாபி கமலத்திலிருந்துப் பாடுவேன். எம்.ஜி.ஆருக்கு மூக்குத் தொண்டையிலிருந்து குரலெடுத்துப் பாடுவேன்."

    'பாமா விஜயம்' என்ற படத்தில் 'வரவு எட்டணா செலவு பத்தணா' என்ற பாடலில் அப்பா குரலும் மகன்கள் குரல்களும் டி.எம்.எஸ். தான்! பாடும் விதத்தில் வித்தியாசம் காட்டியிருப்பார்.


    'சாந்தி' படத்தில் 'யார் அந்த நிலவு' என்ற பாடல் பற்றி பார்ப்போம். அந்தக் காலத்தில் ஆங்கிலேயப் பாப் பாடகரான கிளிப் ரிச்ர்ட் என்பரின் ரசிகர் சிவாஜி. தனக்கும் அது போல் ஒரு பாடல் பாட வேண்டும் என ஆசைப்பட்டார். 'அவர் பாடல் மாதிரி எனக்கு ஒரு டியூன் போட்டு தரணும்' என்று எம். எஸ். வியிடம் கேட்க, அவரும் சரியென சொல்லிவிட்டார். கவியரசரை வைத்து பாடல் எழுதி அட்டகாசமான ஒரு ட்யூன் போட்டு டி.எம்.எஸ்ஸை பாட வைத்து ஒலிப்பதிவும் செய்தாகிவிட்டது. படப்பிடிப்புக்கு முன் சிவாஜிக்கு பாட்டு போட்டுக் காட்டப்பட்டது. பாட்டை கேட்ட சிவாஜி படப்பிடிப்பை இரண்டு நாட்கள் தள்ளி வைத்துக் கொள்ளலாம் என்று சொல்லிவிட்டார்.

    இரண்டு நாள் கழித்து போய் சிவாஜியைக் கேட்டபோது," இன்னும் இரண்டு நாள் தள்ளி வையுங்கள்" என்று சொல்கிறார். இயக்குனர் பீம்சிங், என்ன பாட்டுப் பிடிக்கலையா? வேறு ட்யூன் போட சொல்லவா? என்கிறார்.

    'நான், விசுவை கேட்ட மாதிரி பிரமாதமான டியூன் போட்டு விட்டார். கவியரசர் என்னமா எழுதியிருக்கார்! டி.எம்.எஸ். என்னம்மா பாடிட்டார். இவர்கள் மூன்று பேரைதாண்டி நான் இந்தக் காட்சியில தெரியணும்னா நான் எப்படியெல்லாம் நடிக்கணும்னு யோசிச்சேன். அதனால் தான் நேரம் எடுத்துக் கொண்டேன்", என்றார் சிவாஜி. நடிப்புக்கென்றே பிறந்தவரின் தொழில் பக்தி!!

    கி.பானுமதி கிருஷ்ணகுமார்

    கி.பானுமதி கிருஷ்ணகுமார்


    அந்தக் காட்சியில் சிவாஜி ஊதி தள்ளி விட்டார். உண்மையிலேயே ஒயிலாக சிகரெட் பிடித்தபடி பாடும் அழகு புதுமையாக இருக்கும்!

    'பாவ மன்னிப்பு' என்ற படம். ஏ.வி.மெய்யப்ப செட்டியார் இந்தப் படத்துக்கு இசையமைக்கும் படி விஸ்வநாதன்- ராமமூர்த்தியை அழைக்கிறார். மொத்தம் எட்டு பாடல்கள். ஒன்று கிராமியம், ஒன்று மேற்கத்தியம், ஒன்று இந்துஸ்தானி, மெலடி என்று பல விதங்களில் பாடல்கள் தந்து விட்டார்கள். மெய்யப்ப செட்டியார், என் விருப்பத்துக்கு ஒரு பாடல் தாருங்கள் என்று சொல்லி வந்த பாடல் தான் "சாய வேட்டி தலையிலேக் கட்டி" என்ற பாடல்!

    மெய்யப்ப செட்டியார் இந்தப் படத்தை வைத்து பொதுமக்களின் ரசனையை கணிக்க எண்ணினார். அதனால் ஒரு போட்டியை அறிவித்தார். பாடல்களை பிடித்த வகையில் வரிசைப்படுத்த வேண்டும் என்பதுதான். அந்தப் போட்டியில் கடிதங்கள் மூட்டை மூட்டையாக குவிந்ததாம். பெரும்பாலோர் "சாய வேட்டி தலையில் கட்டி" என்ற பாடலை கடைசியாக பட்டியலிட்டு இருந்தார்களாம். பொதுமக்களின் ரசனை உணர்ந்து அதற்கு ஏற்ற பாடல்கள் வழங்குவதில் மெல்லிசை மன்னர்கள். இவர்களின் திறனை தெரிந்து கொண்டார், மெய்யப்ப செட்டியார்.

    "அத்தான் என்னத்தான்" என்ற பாடலை கேட்ட லதா மங்கஷ்கர், "இப்படிப்பட்ட பாடல் எனக்கு கிடைத்தால் நான் பம்பாயிலிருந்து சென்னை வந்து பாடித்தந்து விட்டு போகத்தயார்" என்று சொன்னாராம்.

    "அத்தான் என்னத்தான்" பாடல் பற்றி பி.சுசீலா நினைவு கூறுவது அதைவிட சுவாரசியமானது.

    நாளைக்கு, "ஒரு பாடல் ஒலிப்பதிவு இருக்குமா வந்திருங்க" என்று எம்.எஸ்.வி. சொல்ல,

    "எனக்கு, குரல் சரியில்லை, ஜலதோஷம் மாதிரி இருக்கு. லேசான காய்ச்சல்" என்று பி.சுசிலா சொல்ல,

    "அப்படியா, இந்தப் பாட்டுக்கு அந்த குரல் தான் வேண்டும். நீங்க வந்து பாடுங்க" என்று சொன்னாராம் எம்.எஸ்.வி. அந்த பாடல் இன்னும் நமது காதுகளில் ரிங்கரித்துக் கொண்டே இருக்கிறது!!

    வடக்கத்திய திரையுலகத்தினர் பலரும் எம்.எஸ்.வியின் இசையமைப்பை கவனித்து வந்தனர். குறிப்பாக நவ்ஷத் அலி என்ற இசை அமைப்பாளர்.

    கோவை சென்ட்ரல் ஸ்டுடியோவில் எம்.எஸ்.வி. வேலைக்கு சேர்ந்ததிலிருந்தே நவ்ஷத் அலி இசையின் மீது ஈர்ப்பாக இருந்தார். அவரது இசையில் வந்த இந்தி பாடல்களை கேட்டு விடுவார். அவரது உள்ளம் கவர்ந்த இசையமைப்பாளரை தனது குரு இடத்தில் வைத்து மதித்தது மட்டுமல்லாமல், எப்படியோ நவுஷத்தின் முகவரியை வாங்கி விட்டார். அவருடைய ஒவ்வொரு படப் பாடல்களைப் பற்றியும் நுட்பமாக ரசித்து அதைப் பாராட்டி யாரையாவது உருது தெரிந்தவர்களை பிடித்து கடிதங்கள் எழுத வைத்து அனுப்புவாராம். அப்படி ஒரு மகா ரசிகன் எம்.எஸ்.வி.

    நவ்ஷத் அலியும் இவரது நுட்பமான ரசனையை கவனித்து நன்றி தெரிவித்து தவறாமல் பதில் கடிதம் எழுதுவாராம்.

    கோப்பெருஞ்சோழன் பிசிராந்தயார் நட்பு போல பார்க்காமலே ஒருவரயோருவர் நட்பும் மதிப்பும் பாராட்டிய அன்பு, அவர்களுக்கு இடையே இருந்த அன்பு! கற்றோரை கற்றோரே காமுருவர் என்பது போல ஒரு ஆகச் சிறந்த கலைஞனை இன்னொரு ஆகச் சிறந்த கலைஞன் இனம் கண்டு கொண்டு, அதனால் வந்த அன்பு, பாசம்!!

    இவர்களின் நட்பை தென்னிய திரையுலகமும், வட இந்திய திரையுலகமும் ஒன்று சேர்த்து கண்டு ரசித்த நெகிழ்வும் நடந்தது. அது என்ன? அடுத்த தொடரில் பார்ப்போம்.

    • மறைந்த பழம்பெரும் பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் உருவச்சிலை மதுரையில் நிறுவப்பட்டுள்ளது.
    • இந்தச் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

    மதுரை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளையும், நாளை மறுநாளும் ராமநாதபுரம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இதற்காக அவர் இன்று மாலை சென்னையில் இருந்து விமானத்தில் மதுரை வந்தடைந்தார்.

    இந்நிலையில், மறைந்த பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜனின் நூற்றாண்டு விழாவையொட்டி மதுரை மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிட வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள டி.எம்.சவுந்தரராஜன் உருவச்சிலையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    இந்த விழாவில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், எ.வ.வேலு உள்பட பலர் பங்கேற்றனர்.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு மதுரையில் இன்று டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வருகிறார்.

    மதுரை:

    தமிழ் சினிமா வரலாற்றில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசீகர குரலால் ரசிகர்களின் உள்ளங்களை கவர்ந்த பழம் பெரும் பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட 11 மொழிகளில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார்.

    1922-ம் ஆண்டு மார்ச் 24-ந்தேதி மதுரையில் பிறந்த அவர் காரைக்குடி ராஜாமணி ஐயங்காரிடம் இசை பயிற்சி பெற்று மேடைக்கச்சேரிகளில் பாடி வந்தார். 1950-ம் ஆண்டு சினிமாவில் பாடும் வாய்ப்பு கிடைத்தது.

    எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல் தொடங்கி 1970-ம் ஆண்டுகளில் டி.ராஜேந்திரன் இயக்கத்தில் வெளியான ஒருதலை ராகம் திரைப்படத்தின் நாயகன் வரை, பல்வேறு தலைமுறையைச் சேர்ந்த நடிகர்களுக்கும் பாடல்கள் பாடியிருக்கிறார். சுமார் 65 ஆண்டுகள் அவர் திரையுலகில் தன்னுடைய இசை பயணத்தை தொடர்ந்து வந்தார்.

    தன்னுடைய தனித்துவமான இசைப் பயணத்தில், இவர் செய்த சாதனைக்காக பேரவைச் செம்மல், கலைமாமணி, பத்மஸ்ரீ உள்ளிட்ட ஏராளமான விருதுகள் வழங்கப்பட்டன. இதுதவிர கலா ரத்னம், கான ரத்னம், அருள் இசை சித்தர், நவரச பவ நளின கான வர்ஷினி, ஞானாமிர்த வர்ஷினி, சாதனை சக்கரவர்த்தி, பாரதிய இசை மேகம், கான குரலோன் போன்ற பட்டங்களும் ரசிகர்களால் சூட்டப்பட்டது.

    2013-ம் ஆண்டு, தனது 91-வது வயதில் டி.எம். சவுந்தரராஜன் சென்னையில் காலமானார். அவரது நூற்றாண்டு விழாவையொட்டி சென்னையில் அவர் வாழ்ந்த வீடு அமைந்திருக்கும் மந்தவெளி வெளிவட்ட சாலை பகுதிக்கு டி.எம்.சவுந்தரராஜன் சாலை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயர் சூட்டினார். மேலும் அவரது புகழுக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி மதுரையில் முழு திருவுருவச்சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டது.

    மதுரை தெற்கு வட்டம் முனிச்சாலை சந்திப்பு பகுதியில் உள்ள மதுரை மாநகராட்சி கிழக்கு மண்டலம் (பழைய) அலுவலகக் கட்டிட வளாகத்தில் பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் முழு திருவுருவச் சிலை அமைத்திட மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பரிந்துரை செய்யப்பட்டு பொதுப்பணித்துறையின் மூலம் ரூ.50 லட்சம் செலவில் சிலை நிறுவப்பட்டுள்ளது.

    இந்த சிலை திறப்பு விழா இன்று மாலை நடைபெறுகிறது. இதில் பங்கேற்கவும், நாளை முதல் ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வருகிறார்.

    விமான நிலையத்தில் அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், பெரியகருப்பன், ராஜகண்ணப்பன், சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, மாவட்டச் செயலாளர் மணிமாறன் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்கிறார்கள்.

    பின்னர் அங்கிருந்து காரில் புறப்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முனிச்சாலையில் மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள பழம்பெரும் பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜனின் முழு உருவச் சிலையை திறந்து வைக்கிறார்.

    இதையடுத்து இரவில் தனியார் ஓட்டலில் தங்கும் அவர் நாளை காலை ராமநாதபுரம் புறப்பட்டு செல்கிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு மதுரையில் இன்று டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • “அர்த்தம் தெரியாவிட்டால் ஆயிரக்கணக்கில் அள்ளி அள்ளிக் கொடுத்தாலும் பாட மாட்டான் இந்த சௌந்தரராஜன்...”
    • இப்படி சொல்லிவிட்டு ஒலிப்பதிவுக் கூடத்திலிருந்து புறப்பட்டும் விட்டார் டிஎம்எஸ்.

    "முத்தைத்தரு பத்தித் திருநகை..." என்று படித்துவிட்டு, இதன் பொருள் என்ன? என்று கேட்டு உடல் குலுங்க குலுங்க சிரித்தார் டி.எம்.எஸ்.

    ஒருவரும் பதில் சொல்லவில்லை.

    "என்னய்யா சொல்கிறீர்கள்? இந்த பாடல் வரிகளுக்கு என்ன அர்த்தம் என்று இங்கே இருக்கும் ஒருவருக்குமே தெரியாதா ?"

    ஒலிப்பதிவுக் கூடத்தில் இருந்த அத்தனை பேரும் டிஎம்எஸ்ஸின் அந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் மௌனமாக இருந்தார்கள்.

    அருணகிரிநாதர் பட பாடல் பதிவு நேரம் அது. (1964)

    சிரிப்பதை நிறுத்திய டிஎம்எஸ்ஸின் குரல் கொஞ்சம் கோபத்தோடு உயர்ந்தது.

    "சொல்லுங்கள் ஐயா, அர்த்தம் தெரியாவிட்டால் இதை நான் எப்படி உணர்வுகளோடு பாட முடியும் ? அந்தப் பாடலை கேட்பவர்கள்தான் எப்படி அதை முழுமையாக ரசிக்க முடியும் ?"

    சுற்றி இருந்தவர்களின் மௌனம் தொடர்ந்தது.

    ஏனெனில் அவர்களுக்கு தெரியும், எந்த ஒரு பாடலையும் அதன் அர்த்தம் தெரியாமல், உணர்வுகள் புரியாமல் ஒருபோதும் பாடமாட்டார் டிஎம்எஸ்.

    மீண்டும் ஒரு முறை தன் கையிலிருந்த அந்த பாடல் வரிகளை வாசித்துப் பார்த்தார் டிஎம்எஸ்.

    "முத்தைத்தரு பத்தித் திருநகை

    அத்திக்கிறை சத்திச் சரவண

    முத்திக்கொரு வித்துக் குருபர எனவோதும்..."

    திரும்ப திரும்ப வாசித்துப் பார்க்கிறார் டி.எம்.எஸ். அதன் பொருள் விளங்கவில்லை.

    தலைநிமிர்ந்து தன்னை சுற்றி இருந்தவர்களை பார்த்த பின், அழுத்தமாக உதட்டை பிதுக்கி விட்டு, பாடல் எழுதி இருந்த காகிதத்தை கீழே வைத்தார் டி.எம்.எஸ்.

    "அர்த்தம் தெரியாவிட்டால் ஆயிரக்கணக்கில் அள்ளி அள்ளிக் கொடுத்தாலும் பாட மாட்டான் இந்த சௌந்தரராஜன்..."

    இப்படி சொல்லிவிட்டு ஒலிப்பதிவுக் கூடத்திலிருந்து புறப்பட்டும் விட்டார் டிஎம்எஸ்.

    அவரது பிடிவாதம் அறிந்த படக் குழுவினர் செய்வது அறியாமல் திகைத்து நின்றார்கள்.

    அப்போது அருகில் இருந்த யாரோ ஒருவர் அசரீரி போல குரல் கொடுத்தார் : "வாரியார் சுவாமிகளை கேட்டால் இதன் பொருள் புரியும்..."

    "அப்படியா ?" என்று திரும்பி அவரைப் பார்த்து கேட்ட டி.எம்.எஸ்., அடுத்த நிமிடமே வாரியார் வீட்டை நோக்கி விரைந்து புறப்பட்டார்.

    வரவேற்றார் வாரியார்.

    பணிவோடு தன் அருகில் வந்து அமர்ந்த டிஎம்எஸ்-க்கு புன்னகையோடும் பொறுமையோடும் பொருள் விளக்கினார் வாரியார்.

    "முத்தைத்தரு பத்தித் திருநகை ...

    வெண்முத்தை நிகர்த்த, அழகான

    பல்வரிசையும் இளநகையும் அமைந்த....

    அத்திக்கு இறை ...

    தெய்வயானை அம்மைக்குத் தலைவரே...

    சத்திச் சரவண...

    சக்திவேல் ஆயுதத்தை ஏந்தும் சரவணபவக் கடவுளே...

    முத்திக்கொரு வித்துக் குருபர...

    மோக்ஷ வீட்டுக்கு ஒப்பற்ற ஒரு

    விதையாக விளங்கும் ஞான குருவே..."

    இப்படியாக ஒவ்வொரு வார்த்தைக்கும் பொருளை வாரியார் விளக்கமாக எடுத்துச் சொல்ல சொல்ல,

    அதை கவனமாக கேட்டுக் கொண்டு, அதன் பிறகே 'அருணகிரிநாதர்' படத்தின் அந்தப் பாடலைப் பாடினாராம் டி.எம்.எஸ்.

    -துலாக்கோல் சோம நடராஜன்

    ×