search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மலையடிவாரம்"

    • சபரிமலை சீசன் தொடங்கியுள்ளதால் அங்குள்ள வனப்பகுதியில் தொடர்ந்து அதிர்வேட்டு வெடிக்கப்படுகிறது.
    • தற்போது மீண்டும் மக்னா யானை தொழிலாளியை தாக்கியுள்ள சம்பவம் விவசாயிகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் பண்ணைப்புரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராமு (வயது 65), இவர் கேரளாவை சேர்ந்த ரவீந்திரநாத் என்பவரது தோட்டத்தில் இரவு காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். தினமும் தோட்ட வேலையை பார்த்து விட்டு, வீட்டுக்கு செல்வார். அப்போது தேவையான உணவு பொருட்களை வாங்கிவிட்டு, மீண்டும் இரவு தோட்டத்திற்கு செல்வது வழக்கம். அதன்படி நேற்று இரவு ராமு தோட்டத்திற்கு செல்வதற்காக, பண்ணைப்புரம் சங்கப்பன்குளம் பகுதியில் நடந்து சென்றார்.

    அப்போது அந்த பகுதியில் இருந்து வந்த ஒற்றை மக்னா யானை ராமுவை பலமாக தாக்கியது. இதில் அவர் பக்கத்தில் உள்ள முள்வேலியில் சிக்கி பலத்த காயமடைந்தார். வேலிக்குள் விழுத்து கிடந்ததால், மக்னா யானை அப்படியே விட்டுவிட்டு சென்றது. உயிர் தப்பிய ராமுவை இன்று அக்கம் பக்கத்தினர் மீட்டு உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவல் அறிந்ததும் உடனடியாக வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.

    தற்போது சபரிமலை சீசன் தொடங்கியுள்ளதால் அங்குள்ள வனப்பகுதியில் தொடர்ந்து அதிர்வேட்டு வெடிக்கப்படுகிறது. இதனால் அங்குள்ள யானைகள் இடம்பெயர்ந்து தேனி விளை நிலங்களுக்குள் புகுவது தொடர் கதையாகி வருகிறது. ஏற்கனவே இப்பகுதியில் மக்னா யானை தாக்கி பலர் உயிரிழந்துள்ளனர்.

    தற்போது மீண்டும் மக்னா யானை தொழிலாளியை தாக்கியுள்ள சம்பவம் விவசாயிகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே வனப்பகுதியை ஒட்டியுள்ள விளை நிலங்களில் யானைகள் புகுவதை தடுக்க வனத்துறை தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • யானை, புலி, சிறுத்தை, காட்டெருமை கடமான் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
    • அடிவாரப் பகுதியில் கட்டப்பட்டுள்ள தடுப்பணைகள் நீர்வரத்து இல்லாமல் வறண்டு கிடக்கிறது.

    உடுமலை,ஆக.2-

    உடுமலை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன.இங்கு யானை, புலி, சிறுத்தை, காட்டெருமை கடமான் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. அவற்றுக்கு தேவையான உணவு மற்றும் தண்ணீரை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள் கொடுத்து அடைக்கலம் அளித்து வருகிறது. ஆனாலும் வறட்சி காலத்தில் ஏற்படுகின்ற தண்ணீர் பற்றாக்குறையால் உணவு மற்றும் குடிநீரை தேடிக்கொண்டு வனவிலங்கு அடிவாரப் பகுதிக்கு வந்து விடுவது வாடிக்கையாக உள்ளது.

    அப்போது வாகன போக்குவரத்து காரணமாக உடுமலை மூணார் சாலையை கடந்து அமராவதிஅணைக்கு செல்வதிலும் சிக்கல் ஏற்பட்டது. இதனால் வன விலங்குகள் மனிதன் மோதல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. அதைத் தொடர்ந்து மலை அடிவாரப் பகுதியில் வனத்துறை சார்பில் தடுப்பணைகள், தண்ணீர் தொட்டிகள் கட்டப்பட்டது. கோடை காலத்தில் குடிநீர் தொட்டிகளில் தண்ணீர் நிரப்புவதுடன் தடுப்பணையில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குவதால் வனவிலங்குகள் சாலையை கடப்பதற்கான அவசியம் எழவில்லை. அவற்றில் தேங்கி உள்ள தண்ணீரை குடித்து விட்டு வனவிலங்குகள் வனப்பகுதிக்குள் சென்று விடுவது வாடிக்கையாக இருந்தது.

    இந்த சூழலில் நடப்பு ஆண்டில் தென்மேற்கு பருவமழை தீவிரமடை யவில்லை. இதனால் அடிவாரப் பகுதியில் கட்டப்பட்டுள்ள தடுப்பணைகள் நீர்வரத்து இல்லாமல் வறண்டு கிடக்கிறது.இதன் காரணமாக தண்ணீரைத் தேடிக் கொண்டு வரும் வனவிலங்குகள் உடுமலை மூணாறு சாலையை கடந்து அணைப் பகுதிக்குள் சென்று விடுவது வாடிக்கையாக உள்ளது.

    • சுற்றுவட்டார பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக எச்சரிக்கை பதாகைகளை பல்வேறு இடங்களில் வைத்து சிறுத்தையை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
    • தோட்டத்தில் புகுந்த சிறுத்தை அங்கு கட்டப்பட்டிருந்த கன்றுக்குட்டியை தூக்கி செல்ல முயன்றது.

     காங்கயம்

    திருப்பூர் மாவட்டம் ஊதியூர் வனப்பகுதிக்கு வந்த ஒரு சிறுத்தை அங்கு பதுங்கி மலையடிவாரப்பகுதியில் உள்ள தோட்டங்களுக்குள் புகுந்து அங்கிருந்த ஆடு, மாடு, நாய்களை வேட்டையாடி வந்தது. இதையடுத்து காங்கயம் வனத்துறையினர் ஊதியூர் மலை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக எச்சரிக்கை பதாகைகளை பல்வேறு இடங்களில் வைத்து சிறுத்தையை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

    ஆனால் சிறுத்தை கூண்டுகளில் சிக்காமல் இதுவரை வனத்துறையினருக்கு போக்கு காட்டி வருகிறது. இந்த நிலையில் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் சிறுத்தையை பார்த்ததாக தெரிவித்தனர். பொதுமக்கள் தெரிவித்த இடங்களுக்கு சென்ற வனத்துறையினர் சிறுத்தையின் கால் தடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    இந்தநிலையில் கடந்த ஒரு மாதமாக ஊதியூர் மலையடிவார பகுதியில் உள்ள விவசாயிகளின் தோட்டத்தில் பட்டியில் அடைத்து வைத்திருந்த ஆட்டுக்குட்டிகள் தொடர்ந்து மாயமாகி வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். வனத்துறையினர் அப்பகுதிக்கு சென்று கால்தடங்களை ஆய்வு செய்து சிறுத்தை வேட்டையாடியதை உறுதி செய்தனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த ஊதியூர் பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சிறுத்தையின் வேட்டையை கண்காணிக்க தங்களது தோட்டத்தில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி தீவிரமாக கண்காணித்து வந்தனர். இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு நள்ளிரவு 12 மணியளவில் ஊதியூர் மலையடிவார பகுதியில் உள்ள விவசாயி கார்த்தியின் தோட்டத்தில் புகுந்த சிறுத்தை மெதுவாக நடந்து சென்று இரை தேடிய காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் மலையடிவார பகுதியில் உள்ள விவசாயி ராஜாமணி என்பவரது தோட்டத்தில் புகுந்த சிறுத்தை அங்கு கட்டப்பட்டிருந்த கன்றுக்குட்டியை தூக்கி செல்ல முயன்றது.

    அப்போது கன்றுக்குட்டியின் அலறல் சத்தத்தை கேட்டு ராஜாமணி வெளியே ஓடி வருவதை பார்த்த சிறுத்தை அங்கிருந்து தப்பி ஓடி வனப்பகுதிக்குள் மறைந்தது. இதையடுத்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினர் நேரில் சென்று கால் தடயங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு சிறுத்தையை பிடிக்க தீவிர முயற்சி செய்து வருகின்றனர்.

    • ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் செங்காந்தள் மலர்கள் பூத்துக்குலுங்குகின்றன.
    • கார்த்திகை மாதம் 1-ந் தேதி பூக்கத் தொடங்கி கார்த்திகை மாத முடிவிற்குள் இது பூத்து முடிந்து விடும் தன்மை வாய்ந்தது.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளான தேவதானம் சாஸ்தா கோவில், அய்யனார் கோவில், செண்பகத் தோப்பு பகுதிகளில் தமிழக அரசின் மலரான செங்காந்தள் மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. இது தமிழக அரசின் மலராகும்.

    பார்ப்போருக்கு ரம்மிய மாக காட்சி அளிக்கும் இந்த மலர்கள் சிவப்பு, மஞ்சள், வெள்ளை போன்ற வண்ணங்களில் பூத்துக் குலுங்குகின்றன. கார்த்திகை மாதம் 1-ந் தேதி பூக்கத் தொடங்கி கார்த்திகை மாத முடிவிற்குள் இது பூத்து முடிந்து விடும் தன்மை வாய்ந்தது.

    இதற்கு கார்த்திகைப்பூ என்றும், கண்வழிப்பூ என்றும் பெயர்கள் உண்டு. இது மிகுந்த மருத்துவ குணமுடையது. அரிய வகையான இந்த செடியின் மலர்கள், கிழங்கு, வேர் போன்றவை சித்த மருத்து வத்தில் முக்கியமாக இடம் வகிக்கிறது.

    தேனி மாவட்டம் போடி, பெரியகுளம், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து இந்த பகுதிக்கு வந்து சித்த மருத்துவத்திற்காக செங்காந்தள் மலர்களின் வேர்களை பறித்து கிழங்கை எடுத்துவிட்டு செடிகளை போட்டுவிட்டு செல்கின்றனர்.

    இதன் காரணமாக கார்த்திகை மாத தொடக்கத்திலேயே பூத்துக் குலுங்கும் இத்தகைய மலர்கள் சித்த மருத்துவ சேகரிப்பாளர்களால் அழியும் நிலை ஏற்படுகிறது.

    இத்தகைய அரிய வகை மலர்களை பாதுகாப்பதற்கு தமிழக அரசு வேளாண்மை துறை மற்றும் இதர துறைகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    ×