search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆட்டோ டிரைவர்கள்"

    • 30 கிலோ மீட்டர் தூரம் வரை சுற்றுலா பயணிகளை அழைத்து செல்ல அனுமதி வழங்க வலியுறுத்தல்
    • ஊட்டி நகரில் மட்டுமே 1800 ஆட்டோக்கள் உள்ளன.

    ஊட்டி, :

    நீலகிரி மாவட்டத்தில் விவசாயத்துக்கு அடுத்ததாக சுற்றுலா தொழில் உள்ளது. இதை நம்பி ஆயிரக்கணக்கானோர் உள்ளனர். சுற்றுலா பயணிகளை சுற்றுலா தலங்களுக்கு அழைத்து செல்வதில் வாடகை கார் டிரைவர்களுக்கும், ஆட்டோ டிரைவர்களுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு வந்தது. இதை தீர்க்க நகர் பகுதியில் இருந்து 15 கிலோ மீட்டர் தூரத்துக்குள் மட்டுமே ஆட்டோவை இயக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

    ஆனாலும் பெரும்பாலான ஆட்டோ டிரைவர்கள் நிர்ணயித்த தூரத்தை விட அதிக தூரம் சுற்றுலா பயணிகளை அழைத்து செல்வதாக கூறப்படுகிறது. இதனால் அந்த ஆட்டோக்களுக்கு வட்டார போக்குவரத்து அலுவலர்கள் அபராதம் விதித்து வருகின்றனர்.

    இந்தநிலையில் நேற்று நகரில் இருந்து 30 கிலோ மீட்டர் தூரம் வரை சுற்றுலா பயணிகளை அழைத்து செல்ல ஆட்டோக்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஆட்டோ டிரைவர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் ஊட்டி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து கலெக்டர் அலுவலகம் வரை பேரணியாக சென்றனர். இந்த பேரணி லோயர் பஜார், காபி ஹவுஸ், கமர்சியல் சாலை, கேசினோ சந்திப்பு, டி.பி.ஓ. வழியாக கலெக்டர் அலுவலகத்தை வந்தடைந்து.பேரணியின்போது கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். அப்போது கலெக்டர் அலுவலகத்திற்குள் பேரணியை அனுமதிக்காததால் ஊட்டி மேற்கு போலீஸ் நிலையம் முன்பு ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து நீலகிரி மாவட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் சங்க கூட்டமைப்பு தலைவர் சண்முகம் கூறியதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கூடலூர், பந்தலூர் மற்றும் கோத்தகிரி ஆகிய பகுதிகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன. 15 கிலோ மீட்டர் தூரத்துக்குள் மட்டுமே ஆட்டோக்கள் இயக்க வேண்டும் என்ற உத்தரவு உள்ளது.

    ஊட்டி நகரில் மட்டுமே 1800 ஆட்டோக்கள் உள்ளன. ஆனால் இந்த ஆட்டோக்கள் நகரின் எல்லையான 3 கிலோ மீட்டர் தூரத்திற்குள்ளேயே இயக்கப்பட வேண்டிய நிலை உள்ளது. எனவே தொலை தூரங்களுக்குள் ஆட்டோக்கள் சென்று வந்தால் மட்டுமே பிழைப்பு நடத்த முடியும். அதற்கு அதிகாரிகள் அனுமதி வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையடுத்து ஆட்டோ டிரைவர்கள் சிலர் கலெக்டர் அலுவலகத்துக்கு சென்று கலெக்டர் அம்ரித்தை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.

    ×