என் மலர்
நீங்கள் தேடியது "வேளாண் திட்டப்பணிகள்"
- வேளாண் திட்டப்பணிகளை இணை இயக்குநர் ஆய்வு செய்தார்.
- உரங்களுடன் மற்ற இணைப்பு பொருள்களை வாங்க விவசாயிகளை வற்புறுத்தக்கூடாது என அறிவுறுத்தினார்.
கமுதி
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கருங்குளம் கிராமத்தில், கலைஞரின் அனைத்து கிராம ஓருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் விவசாயிகள் ஏராளமானோர் சேர்ந்து 18 ஏக்கர் தரிசு நிலத்தை தொகுப்பாக பதிவு செய்தனர். வேளாண் துறையின் மூலம் ஆழ்துளை கிணறு அமைத்து தரப்பட்டது. விவசாயிகள் தரிசு நிலத்தை விளைநிலமாக மாற்றி சோளம் பயிர் செய்திருந்தனர்.
அதனை வேளாண்மை இணை இயக்குநர் சரசுவதி தரிசு நிலத் தொகுப்பில் அமைக்கப்பட்டிருந்த ஆழ்துளை கிணற்றை ஆய்வு செய்தார். தரிசு நிலத்தில் இருந்து கருவேலம் மரங்களை அகற்றி விளைநிலமாக மாற்ற விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கினார்.இதே போல் முஷ்டகுறிச்சி பகுதியிலும், பசும்பொன் கிராமத்தில் விவசாயி ராஜம்மாள் அமைத்திருந்த விதைப் பண்ணையையும் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது, கமுதி வேளாண்மை உதவி இயக்குநர் சிவராணி, உதவி விதை அலுவலர் சரவணன், உதவி வேளாண்மை அலுவலர் உதயலட்சுமி, உதவி வேளாண்மை அலுவலர் இந்துமதி, தொழில்நுட்ப வேளாண்மை மேலாண்மை முகமை அலுவலர் ஈசுவரி ஆகியோர் உடனிருந்தனர். அபிராமத்தில் உள்ள உரக்கடைகளை ஆய்வு செய்த இணை இயக்குநர் சரசுவதி கடை உரிமையாளர்களிடம் உரங்களை நிர்ணயிக்கப்பட்ட விலையில் மட்டும் விற்க வேண்டும், கூடுதல் விலைக்கு விற்கக் கூடாது, உரங்களுடன் மற்ற இணைப்பு பொருள்களை வாங்க விவசாயிகளை வற்புறுத்தக்கூடாது என அறிவுறுத்தினார்.