என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "முதலமைச்சர் ரங்கசாமி"
- பட்டதாரி ஆசிரியர்கள் 288 பேர் முதலமைச்சர் ரங்கசாமி வீட்டு முன்பு திரண்டனர்.
- ஆசிரியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பினர்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் பட்டதாரி ஆசிரியர்கள், கவுரவ விரிவுரையாளர்கள், பால சேவிகா பணியாளர்கள் ஆகியோர் கடந்த 5 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணி செய்து வருகின்றனர். அவர்கள் பணி நிரந்தம் செய்ய வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று இரவு 7.30 மணியளவில் பட்டதாரி ஆசிரியர்கள் உள்ளிட்ட 288 பேர் முதலமைச்சர் ரங்கசாமி வீட்டு முன்பு திரண்டனர். அப்போது மழை பெய்து கொண்டிருந்தது.
மழையையும் பொருட்படுத்தாமல் குடை பிடித்த படியும், மழை கோட்டு அணிந்த படியும் அவர்கள் முதலமைச்சர் வீட்டு முன்பு காத்திருந்தனர்.
அப்போது அப்பா பைத்தியசாமி கோவிலில் முதலமைச்சர் பூஜை செய்து கொண்டிருந்தார். கோவிலுக்கு சென்ற ஆசிரியர்கள் முதலமைச்சரை சந்தித்து நாங்கள் 5 ஆண்டுகளாக பணி செய்து வருகிறோம். எங்களுக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
கடந்த 10 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ஆசிரியர்கள் இருக்கின்றனர் என்று அவர்களிடம் முதலமைச்சர் கூறிவிட்டு அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றார்.
இதுபற்றி தகவலறிந்து வந்த கோரிமேடு போலீசார் போராட்டம் நடத்த வந்த ஆசிரியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அங்கிருந்து அனுப்பினர்.
மழையையும் பொருட்படுத்தாமல் போராட்டம் நடத்த வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
- பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் ஒன்று கூடி ரகசிய கூட்டம் நடத்தினர்.
- ஆளும் அரசுக்கு எதிராக பேசும் நிலை ஏற்படும் எனவும் எச்சரித்தனர்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் முதல்- அமைச்சர் ரங்கசாமி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.
சமீபத்தில் நடந்து முடிந்து பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜனதா அமைச்சர் நமச்சிவாயம் தோல்வி அடைந்தார். இதனால், என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜனதா கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
ஆட்சி அமைந்தது முதலே நிர்வாக பதவியில் இல்லாத ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு வாரிய பதவி வழங்க வேண்டும் என்று பா.ஜனதாவினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். ஆனால், 3 ஆண்டு ஆட்சி நிறைவுற்ற நிலையிலும் இதுவரை வாரியத் தலைவர் பதவி வழங்கப்படவில்லை.
அதோடு, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் கூட தங்கள் தொகுதி களுக்கு தரப்படவில்லை என்று பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் குமுறலில் உள்ளனர்.
இத்தகைய சூழலில் ஆளுங்கட்சியாக இருந்தும் தேர்தலில் தோல்வி அடைந்தது கூட்டணிக்குள் மனகசப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சமீபத்தில் தேர்தல் தோல்விக்கு பிறகு பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் ஒன்று கூடி ரகசிய கூட்டம் நடத்தினர்.
அதையடுத்து மாநிலத்தலைவர் செல்வகணபதி யிடம், தங்களுக்கு சுழற்சி முறையில் அமைச்சர் பதவி தரவேண்டும்-வாரியத்தலைவர் பதவிகளை உடன் நிரப்ப வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இல்லாவிட்டால் சட்டமன்றத்தில் ஆளும் அரசுக்கு எதிராக பேசும் நிலை ஏற்படும் எனவும் எச்சரித்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு, "முதல் அமைச்சர் ரங்கசாமி (ஞாயிற்றுக்கிழமை) மதியம் உணவு விருந்துக்கு அழைத்துள்ளார்" என்று அனைத்து அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு அழைப்பு முதல்-அமைச்சர் அலுவலகத்திலிருந்து வந்தது.
ஆளுங்கட்சியைச் சேர்ந்த என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் தரப்பில், தேர்தல் தோல்வியை பற்றி ஆராய்வும் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து பேசவும் முதல்- அமைச்சர் அழைத்து இருக்கலாம் என எண்ணினர்.
இதனால், அங்கு கூட்டத்தில் பேச முன்கூட்டியே தயார் செய்து தீர்மானத்துடன் பல எம்.எல்.ஏ.க்கள் வந்தனர். ஆனால், தனியார் ஓட்டலுக்கு வந்த ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. ஏனெனில் ஒட்டலில் ஏற்கெனவே தலைமைச் செயலர், கலெக்டர், அரசு அதிகாரிகளும் வந்திருந்தனர்.
அரசு அதிகாரிகளை வைத்துக் கொண்டு அரசியல் பேச வாய்ப்பும் இல்லை என்ற சூழலில் முதல்- அமைச்சர் ஏன் அழைத்தார் என குழப்பம் ஏற்பட்டது. இருப்பினும் அமைதியாக காத்திருந்தனர். முதல்-அமைச்சர் ரங்கசாமி சிறிது நேரத்துக்கு பிறகு வந்தார்.
அவர் அனை வரையும் நேரடியாக உணவு சாப்பிட அழைத்து சாப்பிட தொடங்கி னார். விருந்து முடிந்து அதிகாரிகளை அனுப்பிய பிறகு முதல்-அமைச்சர் பேசுவார் என ஆளுங்கட்சியினர் நினைத்தனர். ஆனால், முதல்-அமைச்சர் ரங்கசாமி சாப்பிட்ட பிறகும் ஏதும் பேசாமல் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
இதனால் எதற்காக நம்மை விருந்து சாப்பிட அழைத்தார் என்று தெரியாமலேயே குழப்பத்தில் ஆளுங்கட்சி கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் புறப்பட்டனர். இதன் பிறகுதான் காங்கிரஸ்- தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கும் முதல்- அமைச்சர் அலுவலகத்தில் இருந்து அழைப்பு விடப்பட்டிருந்தது தெரியவந்தது.
ஆனால் காங்கிரஸ்- தி.மு.க., சில சுயேட்சை எம்.எல்.ஏ.க்களும் விருந்தில் பங்கேற்கவில்லை.
இதுதொடர்பாக விசாரித்த போது, தேர்தலை அமைதியாக நடத்தியதற்காக முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகளுக்கு விருந்துக்கு ஏற்பாடு செய்ததாக முதல்-அமைச்சர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.
- அமைச்சர் திருமுருகனுக்கு இலாகா ஒதுக்கப்படவில்லை.
- புதிய அமைச்சர் திருமுருகனுக்கு இலாகா ஒதுக்க காலதாமதம்.
புதுச்சேரி:
புதுச்சேரி அமைச்சரவை யில் இடம் பெற்றிருந்த ஒரே பெண் எம்.எல்.ஏ.வான சந்திரபிரியங்கா, கடந்த அக்டோபர் மாதம் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டார்.
இதன் பிறகு புதிய அமைச்சராக காரைக்கால் பிராந்தியத்தை சேர்ந்த வடக்கு தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமுருகன், கடந்த மார்ச் 14-ந்தேதி அமைச்சராக பொறுப்பேற்றார். வழக்க மாக அமைச்சர் பதவியேற்பு முடிந்ததும், அவருக்கான இலாகா ஒதுக்கப்பட்டு விடும்.
ஆனால், திருமுருகனுக்கு இலாகா ஒதுக்கப்படாமல் இருந்தது. இதனிடையே மார்ச் 16-ந்தேதி பாராளு மன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாகி தேர்தல் நடத்தை விதிகள் அமலானது. இதனால் அமைச்சர் திருமுருகனுக்கு இலாகா ஒதுக்கப்படவில்லை. இலாகா இல்லாத அமைச்சராக திருமுருகன் கடந்த 3 மாதங்களாக வலம் வருகிறார்.
தேர்தல் முடிவு கடந்த ஜூன் 4-ந்தேதி வெளி யானது. இதைத்தொடர்ந்து நடத்தை விதிகள் வாபஸ் பெறப்பட்டு 10 நாட்களுக்கு மேலாகியும் இதுவரை இலாகா ஒதுக்கப்படவில்லை. தனி தொகுதி எம்.எல்.ஏ.வான சந்திரபிரியங்கா ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக இருந்தார்.
பொதுவாக ஆதிதிராவி டர் நலத்துறை அந்த சமூகத்தை சேர்ந்தவருக்கே ஒதுக்கப்படும். ஆனால், புதிய அமைச்சர் திருமுருகன் அந்த சமூகத்தை சேர்ந்தவரில்லை. எனவே, அந்த இலாகா முதல்-அமைச்சர் ரங்கசாமி தன்வசம் வைத்துக் கொள்ள வேண்டும். அல்லது அந்த சமூகத்தை சேர்ந்த பா.ஜனதா அமைச்சர் சாய் ஜெ. சரவணன்குமாரிடம் வழங்க வேண்டும்.
இதனால், அமைச்சர்களின் இலாகாக்களை மாற்ற முதல்-அமைச்சர் ரங்கசாமி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனாலேயே புதிய அமைச்சர் திருமுருகனுக்கு இலாகா ஒதுக்க காலதாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
- 3 பெண்கள் மரணத்துக்கு ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்த வேண்டும்.
- பாதாள சாக்கடை திட்டம் எங்களுக்கு தேவையில்லை என்று கூறி பொதுமக்கள் விழுப்புரம் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி ரெட்டியார்பாளையம் புதுநகரில் கழிவறையில் வெளியான விஷ வாயுவால் 3 பெண்கள் பரிதாபமாக இறந்தனர்.
இறந்த 3 பெண்களின் உடல் பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இன்று உடல்கூராய்வு நடந்தது. இதனிடையே முதலமைச்சர் ரங்கசாமி, இறந்த செந்தாமரை, காமாட்சி ஆகியோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.20 லட்சமும், சிறுமி செல்வராணி குடும்பத்தினருக்கு ரூ.30 லட்சமும் என மொத்தம் ரூ.70 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.
இந்த நிவாரண தொகை போதாது என்றும், இறந்தவர்களின் குடும்பத்துக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் இன்று கம்யூனிஸ்டு மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் புதுவை- விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர். தேசிய நெடுஞ்சாலையில் கம்பன் நகரில் தரையில் அமர்ந்து கட்சி கொடிகளோடு கோஷம் எழுப்பி மறியல் செய்தனர். போராட்டம் நடத்தியவர்கள், 3 பெண்கள் மரணத்துக்கு ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்த வேண்டும். பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நிர்வாக சீர்கேட்டுக்கு பொறுப்பேற்று அரசு பதவி விலக வேண்டும் என கோஷம் எழுப்பினர்.
இதனால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றது.விழுப்புரத்திலிருந்து வந்த பஸ்கள் மூலக்குளம் வழியாக திரும்பிச்சென்றன. மறுபுறத்தில் இந்திராகாந்தி சிலை வரை பஸ்கள் செல்ல முடியாமல் நின்றது.
சுமார் அரைமணிநேரம் மறியல் போராட்டம் நடந்தது. போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மறியல் போராட்டத்தின்போது மூலக்குளம் வழியாக ஆம்புலன்ஸ் வந்தது. அந்த ஆம்புலன்சிற்கு மறியலில் ஈடுபட்டவர்கள் வழிவிட்டனர்.
நேற்று இரவில் பாதாள சாக்கடை திட்டம் எங்களுக்கு தேவையில்லை என்று கூறி பொதுமக்கள் விழுப்புரம் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் இன்று 2-வது நாளாக மீண்டும் மறியல் போராட்டம் நடந்துள்ளது புதுவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- தமிழகத்தின் ஒரு அங்கம் போன்று புதுவை இருந்தாலும் இங்கும் உலகத்தமிழ் மாநாடு நடத்த வேண்டும் என்பது அரசின் எண்ணம்.
- கம்பன் கலையரங்கம், காமராஜர் மணி மண்டபம், பழைய துறைமுக வளாகம் உள்ளிட்ட இடங்களில் நடத்தலாம்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் உலகத்தமிழ் மாநாடு நடத்தப்படும் என்று கடந்த பட்ஜெ ட் கூட்டத் தொடரின்போது முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்தார்.
இதைத்தொடர்ந்து உலகத்தமிழ் மாநாட்டை நடத்துவது தொடர்பாக கலை பண்பாட்டுத்துறை ஆயத்த ஏற்பாடுகளை செய்துள்ளது. இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் காமராஜர் மணிமண்டபத்தில் நடந்தது. கூட்டத்தில் முதலமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-
புதுச்சேரி தமிழ் வளர்ச்சியில் அக்கறை கொண்ட மாநிலம். கம்பன் விழா, இலக்கிய விழா என பல்வேறு தமிழ் விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. புதுவை தமிழ் அறிஞர்களும் வெளிநாடுகளில் நடக்கும் பல்வேறு விழாக்களுக்கு சென்று வருகின்றனர்.
தமிழகத்தின் ஒரு அங்கம் போன்று புதுவை இருந்தாலும் இங்கும் உலகத்தமிழ் மாநாடு நடத்த வேண்டும் என்பது அரசின் எண்ணம். தமிழகத்தில் ஏற்கனவே உலகத்தமிழ் மாநாடு நடத்தி உள்ளனர்.
புதுவை மாநாட்டிற்கு வெளிநாடுகளில் இருந்தும் தமிழ்அறிஞர்கள் வருவார்கள். தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் வந்து செல்வார்கள்.
இந்த மாநாட்டிற்கு தேவையான நிதியை புதுவை அரசு ஒதுக்கித்தரும். எனவே அது தொடர்பான கவலை வேண்டாம். இந்த மாநாடு சிறப்பாக நடைபெற வேண்டும்.
மாநாட்டிற்கு எத்தனை பேர் வருவார்கள் என்பதை முதலில் தெரிவிக்கவேண்டும். அவர்களுக்கு தேவையான வசதிகளை நாம் செய்து தரலாம்.
2 அல்லது 3 நாட்கள் இந்த மாநாடு நடத்தப்பட வேண்டும். அதற்கு தேவையான குழுக்கள் போட்டு வருபவர் களை கவனித்துக்கொள்ளலாம். மாநாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகள் இருக்கும்.
அவற்றை எங்கெங்கு நடத்தலாம் என்று திட்டமிட வேண்டும். குறிப்பாக கம்பன் கலையரங்கம், காமராஜர் மணி மண்டபம், பழைய துறைமுக வளாகம் உள்ளிட்ட இடங்களில் நடத்தலாம்.
இன்னும் இடங்கள் தேவையென்றால் திருமண மண்டபங்களை வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம்.
மாநாட்டின்போது சிலம்பம், புலியாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகளையும் நடத்தலாம். மாநாட்டை வருகிற தை, மாசி மாதங்களில் நடத்தினால் நன்றாக இருக்கும்.
அதற்கு பின் பாராளுமன்ற தேர்தல் நடவடிக்கைகள் தொடங்கிவிடும். இல்லாவிட்டால் தேர்தல் முடிந்த பின்னர்தான் நடத்த முடியும். எனவே வெளிநாட்டில் உள்ள தமிழ் அறிஞர்களை தொடர்புகொண்டு பேசி அவர்கள் வர வாய்ப்பு உள்ளதா? எப்போது வருவார்கள் என்பதை கேட்டு தெரிவியுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
- நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தால் நோயாளிகள் பயனடைந்து வருகின்றனர்.
- புதுவையில் திட்டம் தோல்வி என சொல்லக்கூடாது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை விரிவுபடுத்தும் நிலையில் உள்ளோம்.
புதுச்சேரி:
புதுவை சட்டசபையில் கேள்விநேரத்தின்போது நடந்த விவாதம் வருமாறு:
பிஆர்.சிவா(சுயே): சுகாதாரத்துறையில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் புதுவை, காரைக்காலில் எத்தனை பேர் பயனடைந்துள்ளனர்? பழைய காப்பீடு திட்டத்தின் கீழ் மஞ்சள் மற்றும் சிவப்பு ரேஷன்கார்டுதாரர்களுக்கு வருமான சான்றிதழ் அடிப்படையில் காப்பீடு திட்டத்தை அமல்படுத்த அரசு முன்வருமா?
முதலமைச்சர் ரங்கசாமி: ஆயுஷ்மான் காப்பீடு திட்டத்தில் புதுவையில் ரூ.20 கோடியே 25 லட்சத்தில் 34 ஆயிரத்து 327 பயனாளிகள் பயனடைந்துள்ளனர். காரைக்காலில் ரூ.2 கோடியே 54 லட்சத்தில் 2 ஆயிரத்து 417 பயனாளிகள் பயனடைந்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து எதிர்கட்சி வரிசையிலிருந்த தி.மு.க.-காங்கிரஸ் மற்றும் சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தால் புதுவையில் எந்த நோயாளிகளும் பயனடைவதில்லை.
இந்த திட்டம் முறையாக புதுவையில் செயல்படுத்தவில்லை. இதனால் பலர் உரிய காலத்தில் நிதி கிடைக்காமல் இறந்துள்ளனர் என சரமாரியாக ஒரே நேரத்தில் குற்றம் சாட்டி பேசினர்.
இதனால் சபையில் கடும் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. சபாநாயகர் ஏம்பலம் செல்வம், உறுப்பினர்கள் தனித்தனியாக கருத்து தெரிவிக்கும்படி கூறினார்.
எதிர்கட்சித்தலைவர் சிவா:-பிரதமர் மிகுந்த நல்லெண்ணத்தோடு கொண்டு வந்திருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் புதுவையில் அதிகாரிகள் முறையாக இதை செயல்படுத்தவில்லை. இதற்கான காப்பீடு அட்டையை மருத்துவமனைகளில் காண்பிக்கும் போது தூக்கி வீசி விடுகின்றனர். புதுவையில் இத்திட்டம் தோல்வியடைந்துள்ளது.
கல்யாணசுந்தரம் (பா.ஜனதா): தவறு செய்த அதிகாரிகள் மீதுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். என் தொகுதியில் உள்ள மருத்துவமனையில் இத்திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்கின்றனர்.
வி.பி.ராமலிங்கம் (பா.ஜனதா): நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தால் நோயாளிகள் பயனடைந்து வருகின்றனர். இத்திட்டத்தில் குறைபாடுகள் இருந்தால் அதை களைய அரசு முழு முயற்சி எடுக்க வேண்டும்.
முதலமைச்சர் ரங்கசாமி: திட்டம் தோல்வி என சொல்லக்கூடாது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை விரிவுபடுத்தும் நிலையில் உள்ளோம். அனைவருக்குமான சுகாதார திட்டத்தின் கீழ் அனைத்து ரேஷன்கார்டு தாரர்களையும் உள்ளடக்கும் காப்பீடு திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளது.
இவ்வாறு விவாதம் நடந்தது.
- ரங்கசாமி சட்டைபையில் இருந்து பணத்தை எடுத்து தமிழக நோயாளியிடம் கொடுத்தார்.
- திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த நோயாளி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
புதுச்சேரி:
புதுவை முதலமைச்சர் ரங்கசாமி தனது ஆன்மீக குருவான அப்பா பைத்தியம் சாமிக்கு திலாசுப்பேட்டை அருகில் கோவில் எழுப்பி உள்ளார்.
இங்கு சனிக்கிழமை தோறும் சிறப்பு பூஜை செய்து மக்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். கடந்த சனிக்கிழமை பூஜை முடித்து அன்னதானம் செய்ய சென்ற முதலமைச்சரை அங்கே அமர்ந்திருந்த ஒரு முதியவர் கைகூப்பி வணங்கினார்.
மேலும் தன் கையில் இருந்த ஒரு மருந்து சீட்டை காண்பித்து 'மருந்து வாங்க காசு இல்லை' என்றும் கூறினார். உடனடியாக முதல்-அமைச்சர் தனது சட்டைபையில் இருந்து பணத்தை எடுத்து தமிழக நோயாளியிடம் கொடுத்தார். அவர் யார் என்பது குறித்து அங்கு இருந்த போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த நோயாளியான அவர் ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 2 கால்களும் பாதிக்கப்பட்டு நடக்க முடியாத நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். கோவிலில் அன்னதானம் நடைபெறுவது கேள்விப்பட்டு வந்ததாகவும் தெரியவந்தது.
அவருக்கு அன்னதானம் வழங்கி காவலர்கள் பஸ்சில் ஏற்றி அனுப்பினர். முதலமைச்சர் திருவண்ணாமலை நோயாளிக்கு எவ்வளவு தொகை கொடுத்தார் என யாருக்கும் தெரியாது. புதுவை முதலமைச்சரிடம் தமிழக நோயாளி பண உதவி பெறும் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
- மத்திய அரசு ரூ.80 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளது விரைவில் கட்டடம் கட்டி முடிக்கப்படும்.
- புதுவை சிறந்த மாநிலமாக வரவேண்டும் என்பதே அரசின் எண்ணம்.
புதுச்சேரி:
புதுவை கடலூர் சாலையில் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம் உள்ளது.
புதுவை கோர்ட்டு வளாகத்தில் ரூ.13.79 கோடியில் வக்கீல்களுக்கு 105 அறைகள் கொண்ட புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளது. இதன் அடிக்கல் நாட்டு விழா இன்று நடந்தது. புதுவை தலைமை நீதிபதி செல்வநாதன் வரவேற்றார். மத்திய சட்டத்துறை மந்திரி கிரண்ரிஜிஜூ தலைமை வகித்து அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.
விழாவுக்கு கவர்னர் தமிழிசை முன்னிலை வகித்தார். விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-
புதுவையில் சிறிய பள்ளிக்கூடத்தில் சட்டக்கல்லூரி இயங்கி வந்தது. அதில் படித்தவர்கள் இன்று சிறந்த வக்கீல்களாகவும், நீதிபதிகளாகவும் உள்ளனர். தற்போது சட்டக்கல்லூரி பெரிய வளாகத்தில் காலாப்பட்டில் இயங்கி வருகிறது. சட்ட பல்கலைக்கழகம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும்.
ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம் கட்ட நிலத்தை தேர்வு செய்தபோது, மரங்கள் அடர்ந்து காடுகள் இருந்த பகுதியை தேர்வு செய்தோம். இங்கு விரைந்து பணிகளை முடித்து கோர்ட்டு வளாகத்தை உருவாக்கினோம். இன்று பிற மாநிலத்தினர் வியக்கும் வகையில் கோர்ட்டு வளாகம் அமைந்துள்ளது. இங்கு வக்கீல்கள் அறைகள் கட்ட ரூ.13 கோடி அரசு ஒதுக்கியுள்ளது.
மத்திய அரசு ரூ.80 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளது. விரைவில் இந்த கட்டடம் கட்டி முடிக்கப்படும். அதை திறந்து வைக்கவும் அனைவரும் வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
வக்கீல்கள், நீதிபதிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றித்தர அரசு நடவடிக்கை எடுக்கும். கோர்ட்டு வளாகத்தில் சிறிய மருத்துவ சிகிச்சை மையம் அமைத்துத்தரப்படும்.
இளம் வக்கீல்கள் உதவித்தொகை உயர்த்தித்தரப்படும். புதுவை மக்கள் நீதிமன்றத்தில் அதிக வழக்குகள் தீர்க்கப்படுகிறது. வக்கீல்கள் விரைவாக நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுவை சிறந்த மாநிலமாக வரவேண்டும் என்பதே அரசின் எண்ணம். நிர்வாகம், செயல்பாடுகள் சிறப்பாக இருக்க வேண்டும்.
அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகள் தீர்க்கப்பட வேண்டும். புதுவை மாநில தகுதி பெற தேவையான ஆலோசனைகளை நீதிபதிகள் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மத்திய சட்டத்துறை மந்திரி கிரண்ரிஜிஜூ பேசும் போது புதுவையில் ஐகோர்ட்டு கிளை அமைக்கப்படும் என்றார்.
விழாவில் அட்டர்னி ஜெனரல் வெங்கட்ராமன், சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி (பொறுப்பு) ராஜா, புதுவை மாவட்ட பொறுப்பு நீதிபதிகள் வைத்தியநாதன், இளந்திரையன், புதுவை சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் லட்சுமிநாராயணன், செல்வகணபதி எம்.பி., நேரு எம்.எல்.ஏ., தலைமை செயலர் ராஜீவ்வர்மா, சட்டத்துறை செயலர் செந்தில்குமார், புதுவை வக்கீல்கள் சங்க தலைவர் குமரன், செயலாளர் கதிர்வேல் உட்பட பலர் கலந்துகொண்டனர். தலைமை குற்றவியல் நீதிபதி மோகன் நன்றி கூறினார்.
- நான் கடந்த சட்டசபை தேர்தலில் ஏனாம் தொகுதியில் போட்டியிட்டேன்.
- புதுவை அரசு சுற்றுலாவை மேம்படுத்த மிகுந்த கவனம் செலுத்தி தேவையான நிதியை ஒதுக்கி வருகிறது.
புதுச்சேரி:
புதுவை பிராந்தியமான ஏனாமில் நலத்திட்டங்களை நிறைவேற்றக்கோரி பா.ஜனதா ஆதரவாளரான சுயேச்சை எம்.எல்.ஏ. கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக் கடந்த 6-ந்தேதி முதல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
தொடர் போராட்டத்தில் ஈடுபட்டதால் கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக்குக்கு நேற்று திடீரென்று உடல்நலம் பாதிக்கப்பட்டது. அவருக்கு உடனடியாக டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். இருப்பினும் அவர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு ஆதரவாக ஏனாம் பகுதி மக்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக், முதலமைச்சர் ரங்கசாமி குறித்து அவதூறாக பேசியதுடன், அவர் ஏனாம் வந்தால் அவருக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்று தெரிவித்து இருந்தார். இதை கண்டித்து என்.ஆர்.காங்கிரஸ் கட்சியினர் புதுவையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் முதலமைச்சர் ரங்கசாமி ஏனாம் செல்ல முடிவு செய்தார். அதன்படி நேற்று அங்கு நடைபெற்ற மக்கள் கலாசார நிறைவு விழாவில் ரங்கசாமி கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
நான் கடந்த சட்டசபை தேர்தலில் ஏனாம் தொகுதியில் போட்டியிட்டேன். எனக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். என்னால் உடனடியாக இங்கு வரமுடியவில்லை . ஏனாம் மக்கள் கலாச்சார நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்பதால் கலந்துகொண்டுள்ளேன். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது.
புதுவை அரசு சுற்றுலாவை மேம்படுத்த மிகுந்த கவனம் செலுத்தி தேவையான நிதியை ஒதுக்கி வருகிறது. புதுவையின் அனைத்து பிராந்திய பகுதிகளான காரைக்கால், மாகி, ஏனாம் ஆகியவை அனைத்தும் முழுமையாக வளர்ச்சி அடைய வேண்டும் என்பதுதான் அரசின் எண்ணம்.
அரசின் ஒருசில திட்டங்களை நிறைவேற்ற தாமதம் ஆகலாம். அதற்கு நம்மிடம் முழு அதிகாரம் இல்லாதது தான் காரணம். எனவே எம்.எல்.ஏ.க்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற முடியாத சூழ்நிலை உள்ளது.
நமது அரசு மத்திய அரசின் உதவியோடு சிறப்பான நிலையை அடைய அனைத்து நடவடிக்கைகள் எடுக்கும். மத்திய அரசிடம் கூடுதல் நிதியை பெறவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். மத்திய அரசு புதுவையில் ஜி20 மாநாட்டின் பிரதிநிதிகள் கூட்டம் நடத்த அனுமதி அளித்துள்ளது. இது நமக்கு கிடைத்த பெருமை.
புதுவை அரசின் டெல்லி பிரதிநிதியான மல்லாடி கிருஷ்ணாராவ் ஏனாம் மக்கள் குறைகள் குறித்து மனுவாக அளித்துள்ளார். இதில் குறிப்பாக ஏனாமில் சூதாட்ட விடுதிகள் அமைக்க கூடாது என்பது தான். சூதாட்டம் மிகவும் மோசமானது. எந்த இடத்திலும் சூதாட்ட விடுதி இருக்கக்கூடாது என்பது தான் அரசின் எண்ணம். எனவே சூதாட்ட விடுதிகளுக்கு அரசு அனுமதி அளிக்காது. புதுவை மக்களின் வளர்ச்சிக்காக எம்.எல்.ஏ.க்களின் கோரிக்கைகளை ஏற்று, அவற்றை விரைவில் நிறைவேற்றப்படும்.
இவ்வாறு முதலமைச்சர் ரங்கசாமி பேசினார்.
விழாவில் எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே .டி. ஆறுமுகம், கே.எஸ்.பி. ரமேஷ், பாஸ்கரன், லட்சுமிகாந்தன், மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
- யோகக் கலை இறைவன் அருளியது. புதுவை மண்ணில் சித்தர்கள் வாழ்ந்துள்ளனர்.
- அமைதி உடலை காக்கும் அத்தகைய அமைதியை தருவதாக யோக கலை உள்ளது.
புதுச்சேரி:
புதுவை காமராஜர் மணிமண்டபத்தில் சுற்றுலா துறை சார்பில் சர்வதேச யோகா திருவிழா தொடங்கியது. இந்த திருவிழா வருகிற 7-ந் தேதி வரை நடக்கிறது.
தொடக்க விழா நிகழ்ச்சிக்கு முதலமைச்சர் ரங்கசாமி தலைமை தாங்கினார். கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் யோகா திருவிழாவை தொடங்கி வைத்தார்.
சுற்றுலா துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் முன்னிலை வகித்தார். சுற்றுலா துறை செயலாளர் குமார் வரவேற்றார்.
நமது வாழ்க்கையுடன் யோகக்கலை ஒன்றிணைந்து உள்ளது. யோகக் கலையானது அனைத்து நோய்களுக்கும் பிரதான மருந்தாக உள்ளதை அனுபவ ரீதியாகவே உணரமுடியும், இந்தக் கலையை சர்வதேச அளவில் எடுத்துச் சென்றவர் பிரதமர் மோடி. இஸ்லாமிய நாடுகளிலும் யோகக் கலையைக் கடைப்பிடித்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
யோகக் கலை இறைவன் அருளியது. புதுவை மண்ணில் சித்தர்கள் வாழ்ந்துள்ளனர். நமது கோவில்களில் இறைவன் யோக நிலையில் இருப்பதை காணலாம். மனதையும் உடலையும் நலமுடன் வைப்பதற்கு யோக கலை அவசியம். கோபம் உடல் நலத்தை கெடுக்கும். அமைதி உடலை காக்கும் அத்தகைய அமைதியை தருவதாக யோக கலை உள்ளது. மருத்துவமனை நோயாளிகளுக்கு யோக கலை பயிற்சி அளிக்க புதுவையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அரசு பள்ளிகளில் விருப்பப்படும் மாணவகளுக்கு யோகா கற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முடிவில் சுற்றுலா துறை இயக்குனர் பிரியதர்ஷினி நன்றி கூறினார்.
- புதுவை அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் 1971 இந்தியா-பாகிஸ்தான் போர் வெற்றி தினம் அரசு விழாவாக கொண்டாடப்பட்டது.
- போர் வீரர்கள் நினைவு சின்னத்தில் முதலமைச்சர் ரங்கசாமி மலர் வளையம் வைத்து போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.
புதுச்சேரி:
புதுவை அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் 1971 இந்தியா-பாகிஸ்தான் போர் வெற்றி தினம் அரசு விழாவாக கொண்டாடப்பட்டது.
இதனையொட்டி, கடற்கரைச் சாலையில் பிரெஞ்சு தூதரகம் எதிரில் அமைந்துள்ள போர் வீரர்கள் நினைவுச் சின்னத்தில் முதலமைச்சர் ரங்கசாமி மலர் வளையம் வைத்து போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.
சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், சாய்.ஜெ.சரவணன்குமார், துணை சபாநாயகர் ராஜவேலு, அரசு கொறடா ஏ.கே.டி. ஆறுமுகம், பாஸ்கர் எம்.எல்.ஏ., தலைமைச் செயலாளர் ராஜீவ் வர்மா, போலீஸ் டி.ஜி.பி. மனோஜ் குமார் லால், ஏ.டி.ஜி.பி. ஆனந்தமோகன், முப்படை நலத்துறை இயக்குநர் சந்திரமோகன் மற்றும் கடலோர காவல் படை, தேசிய மாணவர் படை, முன்னாள் ராணுவ வீரர்கள் நல சங்க நிர்வாகிகள் பங்கேற்று நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
- புதுவைக்கு வந்த மத்திய மந்திரி கிஷன்ரெட்டியிடமும் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள், பா.ஜனதா ஆதரவு, நியமன எம்.எல்.ஏ.க்கள் புகார் கூறியுள்ளனர்.
- எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தைக்கூட பா.ஜனதா, ஆதரவு எம்.எல்.ஏ.க்களுக்கு அளிப்பதில்லை என்றும் கூறினர்.
புதுச்சேரி:
புதுவையில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.
கூட்டணி ஆட்சி அமைந்து 1 1/2 ஆண்டாகியும் இதுவரை எம்.எல்.ஏ.க்களுக்கு கூட வாரியதலைவர் பதவி வழங்கப்படவில்லை. இது என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் பா.ஜனதா மற்றும் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தங்கள் தொகுதிகளை புறக்கணிப்பதாக குற்றம் சாட்டி வருகின்றனர்.
எதிர்க்கட்சி தொகுதிகளில் நடைபெறும் பணிகள்கூட தங்கள் தொகுதிகளில் நடைபெறவில்லை என பா.ஜனதாவுக்கு ஆதரவு தரும் எம்.எல்.ஏ.க்கள் போராட்டம் நடத்தினர். அதோடு பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். கட்சி தலைமையிடமும் ஒரு சிலர் நேரடியாக புகார் செய்துள்ளனர்.
இந்த நிலையில் புதுவைக்கு வந்த மத்திய மந்திரி கிஷன்ரெட்டியிடமும் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள், பா.ஜனதா ஆதரவு, நியமன எம்.எல்.ஏ.க்கள், முதலமைச்சர் ரங்கசாமி மீது புகார் கூறியுள்ளனர். ரங்கசாமி கூட்டணி கட்சியான பா.ஜனதாவை எந்த வகையிலும் ஆலோசனை செய்யாமல் பல முடிவுகளை எடுப்பதாகவும், தன்னிச்சையாக அவர் செயல்படுவதாகவும் தெரிவித்தனர்.
எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தைக்கூட பா.ஜனதா, ஆதரவு எம்.எல்.ஏ.க்களுக்கு அளிப்பதில்லை என்றும் கூறினர். இதுகுறித்து கட்சி தலைமையிடம் தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுகுறித்து கட்சித் தலைமையிடம் தெரிவிக்க வேண்டும் என தெரிவித்தனர்.
மத்திய மந்திரி கிஷன்ரெட்டி, உள்துறை மந்திரி அமித்ஷாவிடம் இதுகுறித்து தெரிவித்து, நேரம் பெற்று தருவதாக உறுதியளித்தார். அமித்ஷாவை சந்தித்து உங்கள் புகார்களை நேரடியாக தெரிவியுங்கள் என தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்