search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அனுமன் ஜெயந்தி"

    • ஒவ்வொரு மாதமும் மூல மந்திர ஹோமம் நடைபெறும்.
    • பக்தர்களுக்கு பல விதமான வளங்களை தரும் சக்தி கொண்டது.

    திருவள்ளூர் பெரியகுப்பம், ராஜாஜிபுரம், தேவி மீனாட்சி நகரில் 40 அடி உயரம் உள்ள விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் ஒரே பச்சைக் கல்லால் ஆனது. பெங்களூர் ஆர்சன் மடப்பகுதியில் இருந்து கொண்டு வந்து இங்கு நிறுவப்பட்டதாகும்.

    இக்கோவிலில் ஒவ்வொரு மாதமும் மூல மந்திர ஹோமம் நடைபெற்று வருகிறது. அனுமன் ஜெயந்தி மற்றும் முக்கிய விழா காலங்களில் 40 அடி உயரம் உள்ள விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு, வடைமாலை சாற்றி சிறப்பு அபிஷேகம் செய்யப்படும். இந்த விஸ்வ ரூப பஞ்சமுக ஆஞ்சநேய சுவாமியின் பஞ்சமுகங்களும் வழிபடும் பக்தர்களுக்கு பல விதமான வளங்களை தரும் சக்தி கொண்டது.

     பஞ்சமுகங்களும்.. நன்மைகளும்...

    கிழக்கு நோக்கியபடி இருக்கும் ஆஞ்சநேய சுவாமியின் முகம், பாவங்களை நீக்கி, தூய்மையான மனதைக் கொடுக்கும். தெற்கு நோக்கியபடி அமைந்த நரசிம்ம சுவாமியின் முகம், எதிரிகள் மீதான பயத்தை நீக்கி, வெற்றியை பெற்றுத் தரும். மேற்கு நோக்கியபடி இருக்கும் மகா வீர கருட சுவாமியின் முகம், பில்லி சூனியம் - ஏவல் ஆகியவற்றால் ஏற்படக்கூடிய தீய விளைவுகளை போக்கும்.

    உடலில் உள்ள எல்லா விஷத் தன்மையையும் நீக்கும். வடக்கு நோக்கிய லட்சுமி வராக சுவாமியின் முகம் கிரக தோஷங்களை போக்கி, அஷ்ட ஐஸ்வர்யங்களை அளிக்கும்.

    எல்லாவற்றுக்கும் மேலாக, மேல்நோக்கியபடி அமைந்த ஹயக்ரீவ சுவாமியின் முகமானது, சுபிட்சமான வாழ்வையும், கல்வி, தொழில், பயிற்சியில் தேர்ச்சி, கணவன் - மனைவி ஒற்றுமை, புத்திரபாக்கியம் போன்றவற்றை நல்கும்.

    இந்த 40 அடி உயரம் உள்ள விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயரை வழிபட செவ்வாய் மற்றும் சனிக்கிழமை உகந்த நாட்கள் ஆகும். கோவில் காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டு இருக்கும்.

    அமைவிடம்

    சென்னையில் இருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, இந்த ஆஞ்சநேயர் திருத்தலம். ரெயில் மார்க்கத்தில் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து அரக்கோணம், திருத்தணி மார்க்கத்தில் திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் இறங்க வேண்டும். ரெயில் நிலையத்திற்கு அருகாமையிலேயே இந்தக் கோவில் அமைந்திருக்கிறது.

    • அனுமன் ஜெயந்தி இன்று கொண்டாடப்படுகிறது.
    • அதிகாலை முதலே பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    நாமக்கல்:

    அனுமன் ஜெயந்தி இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழகம் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலுக்கு அதிகாலை முதலே பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    நாமக்கல் நகரின் மைய பகுதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட 18 அடி உயர ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா வெகு விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் இன்று (வியாழக்கிழமை) ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

    இதனை முன்னிட்டு இன்று அதிகாலை 5 மணிக்கு ஒரு லட்சத்து 8 வடைமாலை சாத்தப்பட்டது. அதிகாலை முதலே கோவிலுக்கு வருகை தந்த பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    காலை 11 மணி அளவில் சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. தொடர்ந்து ஆஞ்சநேயர் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன், ராஜேஸ்குமார் எம்.பி. ராமலிங்கம் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்ய உள்ளனர்.

    • அஞ்சனையின் மைந்தனாகத் தோன்றியவன்.
    • நித்திய சிரஞ்ஜீவியாகத் திகழ்பவன்.

    மார்கழி அமாவாசை என்றாலே அனுமன் ஜெயந்தி தினம் நினைவுக்கு வரும். அஞ்சனையின் மைந்தனாகத் தோன்றியவன். ஐம்புலன்களை வென்றவன். சூரியதேவனிடம் கல்வி கற்றவன். அசாத்திய சாதனை செய்யும் ஆற்றல் படைத்தவன். ராமதூதன். நித்திய சிரஞ்ஜீவியாகத் திகழ்பவன். வரபலம் உடையவன். மார்கழி அமாவாசையில் மூலநட்சத்திரத்தில் பிறந்தவன். ஆஞ்சநேயர் ஜெயந்தி அன்று விரதமிருந்து ஆஞ்சநேயருக்கு அபிஷேக ஆராதனையை நடத்தி, வடைமாலை, துளசி மாலை, வெற்றிலை மாலை, வெண்ணெய் காப்பு அலங்காரம் செய்து வழிபடுவது வழக்கமாக உள்ளது.

    கீழ்க்கண்ட ஸ்லோகத்தைச் சொல்லி ஆஞ்சநேயர் ஜெயந்தி அன்று ஆஞ்சநேயரை வழிபட எல்லாவிதமான நலன்களும் கிடைக்கும்.

    ஆஞ்சநேயர் காயத்ரி மந்திரம்;

    "ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே,

    வாயுபுத்ராய தீமஹி,

    தந்தோ ஹனுமன் ப்ரசோதயாத்''

    • ஒவ்வொரு நாளும் பீடாதிபதிகள் உபன்யாசங்கள் செய்வார்கள்.
    • அனைத்து நிகழ்ச்சிகளும் பக்தி சேனலில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.

    திருமலையில் அனுமன் ஜெயந்தி விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி 18-ந்தேதி வரை 5 நாட்கள் பிரமாண்டமாக நடக்கிறது. மேலும் 16-ந்தேதி தர்மகிரி வேத விஞ்ஞான பீடத்தில் சம்பூர்ண சுந்தரகாண்ட அகண்ட பாராயணம் நடக்கிறது.

    அதையொட்டி திருப்பதி பத்மாவதி விருந்தினர் மாளிகையில் தேவஸ்தான அதிகாரிகள் ஆய்வுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி பங்கேற்றுப் பேசினார்.

    அவர் பேசியதாவது:-

    அஞ்சனாத்ரி மலையில் உள்ள ஆகாச கங்கை, ஜபாலி தீர்த்தம், திருமலை கோவில் எதிரில் உள்ள நாத நீராஞ்சன மண்டபம், தர்மகிரி வேத விஞ்ஞான பீடம், பேடி ஆஞ்சநேயர் கோவில் ஆகிய 5 இடங்களில் 5 நாட்கள் அனுமன் ஜெயந்தி விழா நடக்க உள்ளது.

    ஒவ்வொரு நாளும் பீடாதிபதிகள் உபன்யாசங்கள் செய்வார்கள். திருமலையில் உள்ள வேத விஞ்ஞான பீடத்தில் 16-ந்தேதி காலை 6 மணியில் இருந்து இரவு 11 மணி வரை 18 மணி நேரம் அகண்ட பாராயண யாகத்தை 67 அறிஞர்கள் நடத்துகிறார்கள்.

    அனைத்து நிகழ்ச்சிகளும் பக்தி சேனலில் நேரடியாக ஒளிபரப்பப்படும். பொதுமக்கள், பக்தர்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் டி.வி. நிகழ்ச்சிகளை பார்த்து சுந்தரகாண்ட பாராயணத்தில் பங்கேற்கலாம்.

    ஆஞ்சநேயரின் பிறந்த இடத்தில் யாருக்கேனும் சந்தேகம் இருந்தால் கருத்துத் தெரிவிக்கலாம். புராணங்கள், வரலாற்றுத் தகவல்கள், ஆதாரங்களுடன் அஞ்சனாத்ரி அஞ்சநேயரின் பிறந்த இடம் என்பதை திருப்பதி தேவஸ்தானம் ஏற்கனவே உறுதிப்படுத்தி உள்ளது.

    இது பற்றிய விவரங்கள் திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பல்வேறு மொழிகளில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த விஷயத்தில் யாருக்கேனும் சந்தேகம் இருந்தால், அதற்கு பதில் அளிக்க திருப்பதி தேவஸ்தான பண்டிதர்கள் குழு தயாராக உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் தேவஸ்தான இணை அதிகாரி சதாபார்கவி, பக்தி சேனல் அதிகாரி சண்முகக்குமார், வெங்கடேஸ்வரா வேத பல்கலைக்கழக துணை வேந்தர் ராணிசதாசிவமூர்த்தி, அன்னமாச்சாரியார் திட்ட இயக்குனர் விபீஷண சர்மா, தேசிய சமஸ்கிருத பல்கலைக்கழக மக்கள் தகவல் தொடர்பு அதிகாரி ராகவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • தர்மகிரி வளாகத்தில் ஒட்டுமொத்த மனித குலத்தின் நலம் வேண்டி ஹோமம் நடத்தப்படும்.
    • இந்த நிகழ்ச்சி சுமார் 16 மணி நேரம் வரை நடக்கிறது.

    திருமலையில் வருகிற 14-ந்தேதியில் இருந்து 18-ந்தேதி வரை 5 நாட்கள் நடக்கும் அனுமன் ஜெயந்தி உற்சவத்தின் ஒரு பகுதியாக மே 16-ந்தேதி திருமலையில் உள்ள தர்மகிரி வேத விஞ்ஞான பீடத்தில் அகண்ட சம்பூர்ண சுந்தரகாண்ட பாராயணத்தை திருப்பதி தேவஸ்தானம் நடத்துகிறது.

    இந்த நிகழ்ச்சி அன்று காலை 5.50 மணிக்கு தொடங்கி இரவு 10.30 மணி வரை சுமார் 16 மணி நேரம் வரை நடக்கிறது. ஏறக்குறைய 2 ஆயிரத்து 900 சுலோகங்களை கொண்ட இந்தப் பாராயண யக்ஞம் 67 வேத பண்டிதர்களால் வெவ்வேறு சுழற்சிகளில் இடையூறு இல்லாமல் ஓதப்படும்.

    தர்மகிரி வேத பண்டிதர்கள் மற்றும் மாணவர்கள் தவிர, எஸ்.வி.வேத பல்கலைக்கழகம், தேசிய சமஸ்கிருத பல்கலைக்கழகம், எஸ்.வி. உயர் வேத ஆய்வு மையம் மற்றும் பக்தர்களும் பங்கேற்கின்றனர். மேலும் தர்மகிரி வளாகத்தில் ஒட்டுமொத்த மனித குலத்தின் நலம் வேண்டி ஹோமமும் நடத்தப்படும்.

    மேற்கண்ட தகவலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

    • அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
    • 16 வகை திரவியங்களால் சிறப்பு அபிசேகம் நடைபெற்றது.

    பல்லடம் :

    பல்லடம் பகுதியில் உள்ள அனுமன் சுவாமி கோவில்களில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பல்லடம் அஞ்சலக வீதியில் உள்ள காளிங்க நர்த்தன கோபாலகிருஷ்ண ஆஞ்சநேயர் கோவிலில் அதிகாலை சிறப்பு யாக பூஜை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, அனுமன் சுவாமிக்கு வெண்ணை, சந்தனம், பால், பன்னீர், உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் சிறப்பு அபிசேகம் நடைபெற்றது. திரிசதி மற்றும் சகஸ்ரநாம அர்ச்சனையும் 1001 முறை இராம நாம பாராயணம் பாடப்பட்டது. பின்னர் அனுமன் சுவாமிக்கு வெண்ணை- சந்தனக் காப்பு ,மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.இதைத் தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.இதில் பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    திருப்பூர் பல்லடம் சாலை இந்திராநகரில் அமைந்துள்ளஸ்ரீ ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் , அலங்காரம் நடைபெற்று 5008வடமாலை சாற்றப்பட்டது .இதில் சுற்று வட்டாரத்தில் உள்ள பக்தர்களும் பொதுமக்களும் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    • சிறப்பு தீபாராதனை நடந்தது
    • பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அடுத்த சிப்காட் சபரி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ நவசபரி அய்யப்பன் கோவில் வளாகத்தில் 18 அடி உயரத்தில் ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் எழுந்தருளி உள்ளார்.

    ஒவ்வொரு ஆண்டும் ஸ்ரீ நவசபரி அய்யப்பன் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    நேற்று அனுமன் ஜெயந்தி விழா முன்னிட்டு காலை அஷ்டாபிஷேகம் நடைபெற்றது.

    கோவில் வளாகத்தில் 18 அடியில் அமைந்துள்ள ஸ்ரீ பக்த ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் நடந்தது. பூமாலை, 1008 வடமாலை, துளசி மாலை, வெற்றிலை மாலை அணிவித்து பல்வேறு வண்ண மலர்களால் பூஜை செய்து சந்தன காப்பு அலங்காரத்தில் ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    கோவில் குருசாமி ஜெயச்சந்திரன் தலைமையில் சிறப்பு பூஜைகள் நடத்தி மஹா தீபாராதனை நடைபெற்றது.

    இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    • மதுரை கைத்தல கமல ஜெயவீர ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா நடைபெற்று வருகிறது.
    • ஆஞ்சநேயருக்கு வடை மாலை அணிவித்து வழிபாடு நடந்தது.



    மதுரை

    மதுரையில் இன்று அனுமன் ஜெயந்தி விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. தெற்கு கிருஷ்ணன் கோவில் தெருவில் உள்ள பிரசன்ன வேங்கடேச பெருமாள் கோவிலில் உள்ள ஆஞ்சநேயருக்கு 108 வடை மாலைகள் சார்த்தப்பட்டது. சிறப்பு பூஜைகள் நடந்தன.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதே போல் கூடலழகர் பெருமாள் கோவில் அருகே தென்மாட வீதியில் உள்ள கைத்தல கமல ஜெயவீர ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா நடைபெற்று வருகிறது.

    இன்று கோவிலில் சிறப்பு யாகம் நடந்தது. முன்னதாக ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வடை, வெற்றிலை மாலைகள் அணிவிக்கப்பட்டது.

    இன்று இரவு ஆஞ்சநேயர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். பூஜை ஏற்பாடுகளை கோவில் பட்டர் பாண்டுரங்கன் செய்திருந்தார்.

    தல்லாக்குளம், சிம்மக்கல், டி.எம்.கோர்ட்டு சந்திப்பு, திருப்பரங்குன்றம் திருக்கூடல் மலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில் அனுமன் ஜெயந்தி விழா நடந்தது.

    • கலியுக்தில் கண்கண்ட தெய்வமாக ஆஞ்சநேயர் திகழ்கிறார்.
    • ‘சர்வமங்கள கார்யானு கூலம் ‘ என்று ஆஞ்சநேயர் வழிபாட்டின் பலனைக் குறிப்பிடுவார்கள்.

    இறை அவதாரங்களில் ஆஞ்சநேயருக்கு மட்டுமே இந்த சிறப்பு உண்டு. எனவே வைணவத் தலங்களுக்கு வழிபாடு செய்யச்செல்லும் போது, மறக்காமல் ஆஞ்சநேயரை வழிபட வேண்டும். ஆஞ்சநேயர் வழிபாட்டின் ஒவ்வொரு விஷயத்திலும் அர்த்தம் பொதிந்துள்ளது. அந்த தர்ப்பயத்தை அறிந்து, உணர்ந்து நாம் ஆஞ்ச நேயரை வழிபாடு செய்தல் வேண்டும்.

    பெரும்பாலும் ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாற்றி வழிபாடு செய்வது வழக்கமாக உள்ளது. எப்போதும் ராமருக்கு சேவை செய்து கொண்டிருந்த ஆஞ்சநேயருக்கு களைப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக உளுந்து தானியத்தில் அஞ்சனாதேவி வடை தயாரித்து கொடுத்தாள். இதனால் தான் ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாற்றும் பழக்கம் ஏற்பட்டது.

    வெற்றிலை மாலை வழிபாடு, வெண்ணெய் காப்பு அலங்காரம் ஆகியவையும் பக்தர்களால் ஆஞ்சநேயருக்கு விரும்பி செய்யப்படுகிறது. இலங்கை அசோகவனத்தில் தன்னை சந்திக்க வந்த அனுமனை வாழ்த்தி அருகில் இருந்த வெற்றிலையைப்பறித்து சீதை மாலையாக அணிவித்தார். அன்று முதல் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை அணிவிப்பது வழக்கமாகி விட்டது.

    அதுபோல ராமரின் ஆயுள் பலத்துக்காக நெற்றியில் செந்தூரம் பூசுவதாக சீதாதேவி கூறியதை கேட்ட ஆஞ்சநேயர், 'என் பிரபு ராமனின் ஆயுள் கூடுமென்றால் நானும் உடல் முழுவதும் செந்தூரம் பூசிக்கொள்வேன்' என்று பூசிக்கொண்டார். இதில் இருந்தே ஆஞ்சநேயருக்கு செந்தூரம் பூசி வழிபடும் பழக்கம் ஏற்பட்டது.

    சனி, செவ்வாய்க்கிழமைகளில் ஸ்ரீராமஜெயம் கூறி ஆஞ்சநேயருக்கு செந்தூரம் சாற்றி வழிபட்டால் பலன்கள் கிடைக்கும்.

    ஆஞ்சநேயருக்கு வாலில் தான் சக்தி அதிகம் என்பதால் வாலில் சந்தனம், குங்குமம் பொட்டு வைத்து 48 நாட்கள் வழிபாடு செய்தால் உரிய பலனை பெறலாம். இது நவக்கிரக வழிபாட்டுக்கு நிகரானது.

    மனதில் தாங்க முடியாத அளவுக்கு வேதனை உள்ளதா? ஆஞ்சநேயரின் சிறப்புகளை கூறும் சுந்தர காண்டம் படியுங்கள். துன்பங்கள் தூசியாக பறந்தோடி விடும். அவரை நினைத்தாலே புத்தி வரும், பக்தி வரும், புகழ் வரும், செல்வம் வரும், மன உறுதி வரும், வீரம் வரும்.அனைத்துக்கும் மேலாக அவர் கடும் பிரம்மச்சார்யத்தை கடை பிடிப்பதால் நம் மனதில் ஒரு நொடி கூட தேவை இல்லாத காம உணர்வு வரவே வராது. ஆஞ்சநேய விரதம் இருந்தால், குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். எதிரிகளின் தொல்லை நீங்கி வெற்றி கிடைக்கும். உறவினர்களிடையே நட்பு அதிகரிக்கும். இதன் மூலம் குபேரனுக்கு இணையான வாழ்வை பெறலாம்.

    தினமும் காலை அருகில் உள்ள பெருமாள் ஆலயத்தில் ஆஞ்சநேயரை வழிபட்டு, உங்கள் பணிகளை செய்து வந்தால் வெற்றி மீது வெற்றி வரும். 13 முடிச்சுள்ள அனுமன் விரத கயிறை கையில் கட்டிக் கொண்டால் உங்களது எல்லா முயற்சிகளும் இடையூறு இல்லாமல் நிறைவேறும்.

    ஆஞ்சநேயரின் சன்னதி முன்பு நின்று, அவரது மூல மந்திரத்தை 9 தடவை சொல்லி வழிபட்டால் வாழ்வில் மறுமலர்ச்சி உண்டாகும். கடுமையான வியாதிகள் குணமாகும்.

    ஆஞ்சநேயரிடம் மனம் உருக, உருக நம்மை பிடித்த தோஷங்கள், கரைந்தோடிவிடும்.

    அவரை வழிபட்டால் இத்தனை சிறப்புகளும் நமக்கும் நிச்சயம் வந்துசேரும்.

    • பெண்கள் ஆஞ்சநேயருக்கு தீபம் ஏற்றி வழிபட்டனர்.
    • பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    அனுமன்ஜெயந்தி விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி திருவள்ளூர் பெரிய குப்பம் தேவி மீனாட்சி நகர் பகுதியில் உள்ள 32 அடி உயரம் உள்ள விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    காலை 7 மணிக்கு மங்கல இசையுடன் விழா தொடங்கியது. இதை தொடர்ந்து மூல மந்திர யாகம் நடைபெற்றது.

    பின்னர் 32 அடி உயர முள்ள விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு 100 கிலோ எடை கொண்ட பல்வேறு வகையான மலர்களால் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. மேலும் 32 அடி உயரம் கொண்ட வடமாலை சாற்றப்பட்டது.

    சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மற்றும் பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து சென்றனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    இதேபோல் திருவள்ளூரை அடுத்த திருப்பந்தியூர் கிராமத்தில் உள்ள பஞ்சமுக ஆஞ்ச நேயருக்கு 67 ஆயிரம் வடை மாலைகள் சாற்றி சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

    இதில் திருப்பந்தியூர், வய லூர், கொட்டையூர், மப்பேடு, கண்ணூர், பண்ணூர், ஸ்ரீபெ ரும்புதூர், திருவள்ளூர், பேரம்பாக்கம், சுற்றுவட்டார பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் நீ்ண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டனர்.

    திருத்தணி மேட்டுத் தெருவில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும், பூஜைகளும் நடை பெற்றது. 1008 மிளகு வடையால் மாலை அணிவித்தும், பாதாம் முந்திரியால் தயாரிக்கப்பட்ட 5 கிலோ வெண்ணையை கொண்டு அலங்காரமும் செய்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    இதில் திருத்தணி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆஞ்சநேயரை வழிபட்டு சென்றனர். பெண்கள் அனைவரும் ஆஞ்சநேயருக்கு தீபம் ஏற்றி வழிபட்டனர். பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

    • அனுமனை வழிபட்டால் காரியங்கள் கைகூடும் என்பது ஐதீகமாகும்.
    • அனுமன் சிலைக்கு சிறப்பு அபிஷேகம், லட்சார்ச்சனை நிகழ்ச்சி நடந்தது.

    அனுமன் ஜெயந்தியை யொட்டி சென்னை அசோக் நகர் 12 அடி உயர ஆஞ்ச நேயர் கோவில், ஆழ்வார்பேட்டை ஆஞ்சநேயர் கோவில் உள்ளிட்ட அனைத்து ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு தரிசனம் நிகழ்ச்சி இன்று நடந்தது.

    ஆஞ்சநேயர் மார்கழி மாதம் மூலம் நட்சத்திரத்தில் அவதரித்தார். ஒவ்வொரு ஆண்டும் இந்த தினத்தில் அனுமன் ஜெயந்தி விழாவாக கொண்டாடப்படுகிறது. அனுமனை வழிபட்டால் காரியங்கள் கைகூடும் என்பது ஐதீகமாகும்.

    இன்று அனுமன் ஜெயந்தியையொட்டி சென்னை அசோக்நகர் ஆஞ்சநேயர் கோவில், ஆழ்வார்பேட்டை ஆஞ்சநேயர் கோவில் உள்ளிட்ட அனைத்து ஆஞ்ச நேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு, தரிசனம் அதிகாலை 5 மணிக்கு தொடங்கியது. அனுமன் சிலைக்கு சிறப்பு அபிஷேகம், லட்சார்ச்சனை நிகழ்ச்சி நடந்தது.

    அதை தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, வெண்ணெய் சாத்தி, வடை மாலை, வெற்றிலை மாலை அணிவித்து சிறப்பு பூஜை நடந்தது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்த பக்தர்களுக்கு துளசி இலை, தீர்த்தம் பிரசாதமாக வழங்கப்பட்டது.

    இதேபோல சென்னையில் உள்ள பெருமாள் கோவில்களில் உள்ள ஆஞ்சநேயருக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தது. 

    நங்கநல்லூரில் உள்ள 32 அடி உயர ஆஞ்சநேயர் கோவிலில் அதிகாலையில் நடை திறக்கப்பட்டு ஆஞ்ச நேயருக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது. நீண்ட வரிசையில் பக்தர்கள் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    • ஆஞ்சநேயருக்கு வெண்ணை- சந்தனக் காப்பு ,மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
    • ஸ்ரீராமபஜனைமடம் அனுமந்தராயசுவாமி கோவில்களில் நடைபெற்ற வழிபாட்டில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

    திருப்பூர் :

    அனுமன் ஜெயந்தியையொட்டி திருப்பூரில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. பழங்கள் - வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டு 108 வடமாலை சாற்றப்பட்டது.மேலும் ஆஞ்சநேயருக்கு வெண்ணை- சந்தனக் காப்பு ,மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

    திருப்பூர் வாலிபாளையம் கல்யாணசுப்பிரமணியர் கோவிலில் உள்ள ஆஞ்சநேயருக்கு மெகா சைஸ் லட்டு படைக்கப்பட்டது. ஆலாங்காடு சித்தி விநாயகர் கோவில், திருப்பூர் வீரராகவப்பெருமாள் கோவில், மானூர் அனுமந்தராயசுவாமி கோவில், கோர்ட் வீதி, ஸ்ரீராமபஜனைமடம் அனுமந்தராயசுவாமி கோவில்களில் நடைபெற்ற வழிபாட்டில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று அதிகாலை முதலே பக்தர்கள் கோவில்களுக்கு சென்று நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    ×