search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேரள கவர்னர்"

    • காஷ்மீருக்கு புதிய கவர்னரை நியமிக்க பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார்.
    • கேரளாவில் தற்போது கவர்னராக இருக்கும் ஆரிப் முகமது கான் 5 ஆண்டுகளை நிறைவு செய்திருப்பதால் அவருக்கு மத்திய அரசு வேறு புதிய பணியை ஒதுக்க தீர்மானித்துள்ளது.

    புதுடெல்லி:

    இந்தியாவில் பல மாநிலங்களில் கவர்னர்களின் 5 ஆண்டு பதவிக்காலம் நிறைவு பெற்றிருக்கிறது. சில மாநிலங்களில் கவர்னர்கள் 3 ஆண்டுகளுக்கு மேலாக பதவியில் இருக்கிறார்கள்.

    இதனால் பல மாநிலங்களுக்கு புதிய கவர்னர்களை தேர்வு செய்து நியமிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி இருக்கிறது. இது தொடர்பாக மத்திய அரசு தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறது.

    பா.ஜ.க. ஆளும் உத்தரபிரதேசத்தில் கவர்னராக இருக்கும் அனந்தி பென் படேல் பதவி காலம் 5 ஆண்டுகள் முடிந்துள்ளது. அதுபோல கேரளாவில் கவர்னராக இருக்கும் ஆரிப் முகமது கான் பதவி காலமும் 5 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது.

    அதுபோல யூனியன் பிரதேசங்களான காஷ்மீர், அந்தமான், டாமன் டையூ, தாதர் ஆகியவற்றிலும் கவர்னர்களின் பதவி காலம் 3 ஆண்டுகளை கடந்துள்ளது. தமிழ்நாடு, கோவா, கர்நாடகா, குஜராத், அரியானா, மத்திய பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களிலும் கவர்னர்கள் 3 ஆண்டுகளுக்கு மேல் பதவியில் உள்ளனர்.

    10-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் கவர்னர்கள் 3 முதல் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பதவியில் இருப்பதால் அவர்களை மாற்ற மத்திய அரசு தீர்மானித்துள்ளது. பெரும்பாலான கவர்னர்களை வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

    சில மாநிலங்களில் 3 ஆண்டுகளை கடந்துள்ள கவர்னர்களின் செயல்பாடுகள் மத்திய அரசுக்கு திருப்தி அளித்துள்ளன. அவர்களை தற்போதைய மாநிலத்தில் இருந்து வேறு மாநிலத்துக்கு இடம் மாற்றம் செய்ய மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது.

    தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பொறுப்பேற்று 3 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. எனவே கவர்னர்கள் மாற்றத்தின் போது தமிழக கவர்னர் ரவியும் இடம்மாற்றம் செய்யப்பட வாய்ப்புகள் இருப்பதாக டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

    காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சி வெற்றிபெற்று ஆட்சியை அமைத்துள்ளது. உமர் அப்துல்லா தலைமையிலான ஆட்சிக்கு முழு ஆதரவு கொடுக்கப்போவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். அதன் படி காஷ்மீருக்கு விரைவில் மாநில அந்தஸ்து கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அத்தகைய சூழ்நிலையில் காஷ்மீருக்கு புதிய கவர்னரை நியமிக்க பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார். தற்போது அங்கு கவர்னராக இருக்கும் மனோஜ் சின்கா 4 ஆண்டுகளுக்கு மேல் பதவியில் இருக்கிறார்.

    மனோஜ் சின்காவுக்கு பதில் புதிய கவர்னராக பா.ஜ.க. முன்னாள் தேசிய பொதுச்செயலாளர் ராம் மாதவை கவர்னராக நியமனம் செய்ய ஆலோசனை நடந்து வருகிறது. இவர் ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் நெருங்கிய தொடர்பு உடையவர்.



    சில மாநில சட்டசபை தேர்தல்களில் பா.ஜ.க வெற்றிக்கு அடித்தளம் அமைத்து கொடுத்தவர். இதனால் அவருக்கு கவர்னர் பதவி வழங்க பிரதமர் மோடி முடிவு செய்திருப்பதாக தெரிய வந்துள்ளது.

    கேரளாவில் தற்போது கவர்னராக இருக்கும் ஆரிப் முகமது கான் 5 ஆண்டுகளை நிறைவு செய்திருப்பதால் அவருக்கு மத்திய அரசு வேறு புதிய பணியை ஒதுக்க தீர்மானித்துள்ளது. அவருக்கு பதில் அந்தமான் தீவு கவர்னர் தேவேந்திர குமார் கேரளாவின் புதிய கவர்னராக மாற்றப்படலாம் என்று கூறப்படுகிறது.

    அதுபோல கர்நாடகா கவர்னர் கெலாட், குஜராத் கவர்னர் ஆச்சாரியா தேவ்ரத், கோவா கவர்னர் ஸ்ரீதரன் பிள்ளை, அரியானா கவர்னர் பண்டாரு தத்தாத்ரேயா, மத்திய பிரதேச கவர்னர் மங்குபாய் படேல், உத்தரகாண்ட் கவர்னர் குர்மித்சிங் ஆகியோரும் வேறு மாநிலங்களுக்கு மாற்றப்பட வாய்ப்பு உள்ளது.

    புதிய கவர்னர்கள் நியமனம் மற்றும் இடமாற்றம் இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாதம் நடைபெறும் என்று தெரிகிறது. மகாராஷ்டிரா, ஜார்கண்ட் தேர்தல் முடிந்த பிறகு கவர்னர்கள் மாற்றம் நடைபெறலாம் என்றும் கூறப்படுகிறது.

    கவர்னர்கள் மாற்றம் தொடர்பாக மத்திய அரசு ஆலோசிக்க தொடங்கி இருப்பதால் பா.ஜ.க. மூத்த தலைவர்களிடம் கவர்னர் பதவியை பெற கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. பா.ஜ.க. முன்னாள் எம்.பி.க்கள் அஸ்வினி துபே, வி.கே.சிங், முக்தார் அப்பாஸ் நக்வி ஆகியோரது பெயர்கள் புதிய கவர்னர்கள் பதவிக்கு அடிபடுகிறது.

    • கேரளத்தில் உள்ள கண்ணூா் பல்கலைக்கழக துணைவேந்தராக கோபி நாத் ரவீந்திரனை மறுநியமனம் செய்ய மாநில அரசு பரிந்துரைத்தது.
    • தற்போது மாநிலத்தில் உள்ள பல பல்கலைக்கழகங்களில் துணைவேந்தா் பதவி நீண்ட காலமாக காலியாக உள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் நிருபர்களிடம் திருவனந்தபுரத்தில் கூறியதாவது:-

    என்னிடம் ஊடகங்கள் வாயிலாக மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் பேச வேண்டாம். எந்தவொரு மசோதா அல்லது அவசரச் சட்டத்துக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றால், ஏன் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று கவர்னர் மாளிகைக்கு வந்து முதல்-மந்திரி விளக்கம் அளிக்க வேண்டும்.

    அவ்வாறு விளக்கம் அளிக்கப்பட்டால், பாரபட்சம் இல்லாமல் எந்தவொரு மசோதா, அவசரச் சட்டம் அல்லது பரிந்துரையை தகுதி அடிப்படையில் பரிசீலிப்பேன் என உறுதி அளிக்கிறேன் என்று தெரிவித்தாா்.

    கேரளத்தில் உள்ள கண்ணூா் பல்கலைக்கழக துணைவேந்தராக கோபி நாத் ரவீந்திரனை மறுநியமனம் செய்ய மாநில அரசு பரிந்துரைத்தது. அந்தப் பரிந்துரைக்கு கவர்னர் ஆரிப் முகமது கான் ஒப்புதல் அளித்தாா். இதற்கு எதிரான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, 'பல்கலைக்கழகங்களின் துணைவேந்தரை நியமிக்கவோ, மறு நியமனம் செய்யவோ கவர்னர் மட்டுமே தகுதியுடையவா். ஆனால், ரவீந்திரனின் மறுநியமனத்தில் மாநில அரசின் தலையீடு இருந்தது தெளிவாகத் தெரிகிறது' என்று கூறி, ரவீந்திரனின் மறுநியமனத்தை அண்மையில் ரத்து செய்தது.

    இது தொடா்பாக கவர்னர் ஆரிப்பிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது, 'ரவீந்திரனின் மறுநியமன விவகாரத்தில் மாநில அரசின் தலைமை வக்கீலிடம் ஆலோசனை கோரினேன். அப்போது ரவீந்திரனை மறுநியமனம் செய்யலாம் என்று அரசுத் தலைமை வழக்குரைஞா் கூறினாா். அவா் சட்டரீதியாக அளித்த ஆலோசனையைத் தொடா்ந்து, அந்த விவகாரத்தில் மாநில அரசின் அழுத்தத்துக்கு அடி பணிந்தேன். எனினும் நான் செய்தது தவறு என்பதை ஊடகத்தின் முன்பாக ஏற்கெனவே தெரிவித்திருந்தேன்.

    தற்போது மாநிலத்தில் உள்ள பல பல்கலைக்கழகங்களில் துணைவேந்தா் பதவி நீண்ட காலமாக காலியாக உள்ளது. அதற்கு மாநில அரசே காரணம். உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடா்ந்து பல்கலைக்கழகங்களின் வேந்தராக துணைவேந்தா்களை நியமிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளேன். துணைவேந்தா்கள் நியமனத்தில் மாநில அரசின் அறிவுரைகளை ஏற்கத் தயாா். ஆனால், அரசின் அழுத்தத்துக்கு அடி பணியமாட்டேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 8 மசோதாக்களில் 3 மசோதாக்கள் 2 ஆண்டுகளுக்கு மேலாக கவர்னர் நிலுவையில் வைத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
    • பஞ்சாப் மாநில அரசும், அம்மாநில கவர்னருக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    திருவனந்தபுரம்:

    கேரள கவர்னர் ஆரிப் முகம்மதுகானுக்கும், கேரள மாநில அரசுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக மோதல் போக்கு இருந்து வருகிறது. இதனால் சட்டமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்ட சில மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் வழங்காமல் காலம் தாழ்த்தி வந்தார்.

    இந்நிலையில் கவர்னர் ஆரிப் முகம்மதுகானுக்கு எதிராக கேரள அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளது. அதில், சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 8 மசோதாக்களில் 3 மசோதாக்கள் 2 ஆண்டுகளுக்கு மேலாக கவர்னர் நிலுவையில் வைத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை நிலுவையில் வைத்துள்ளதாக தமிழக கவர்னர் ஆர்.என். ரவி மீது கடந்த சில நாட்களுக்கு முன்பு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதேபோல் பஞ்சாப் மாநில அரசும், அம்மாநில கவர்னருக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • நான் கேரள ஸ்டோரி திரைப்படத்தை பார்க்கவில்லை.
    • படத்தின் கருப்பொருள் உண்மை சம்பவங்களுடன் தொடர்புடையதாக இருந்தால் அது குறித்து விசாரிக்க வேண்டும்.

    திருவனந்தபுரம்:

    கேரள கவர்னர் ஆரிப் முகம்மது கான் நேற்று முன்தினம் குருவாயூர் சென்றார். அங்கு மாடம்பு ஸ்மிருதி வர்ஷம் 23 என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் குருவாயூர் கோவிலில் வழிபாடு நடத்த விரும்புவதாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களிடம் கூறினார்.

    அதைத்தொடர்ந்து அவருடைய விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் கோவிலுக்கு வெளியே நடத்தப்படும் துலாபாரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி கோவிலின் கிழக்கு நடைபந்தலில் அவருடைய எடைக்கு எடை (83 கிலோ) கதலிப்பழம் துலாபாரமாக வழங்கினார். அதற்கான தொகை ரூ.4 ஆயிரத்து 250-ஐ கவர்னர் ஆரிப் முகமது கான் கோவிலுக்கு செலுத்தி ரசீது பெற்றுக்கொண்டார்.

    முன்னதாக கிழக்கு கோபுரத்தின் வெளி நடையில் இருந்து குருவாயூரப்பனை நோக்கி வழிபாடு செய்தார்.

    பின்னர் கவர்னர் ஆரிப் முகம்மது கான் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கோவில் தரிசனம் மூலம் கிடைத்த ஆன்மிக அனுபவம் குறித்து வார்த்தைகள் மூலம் விவரிக்க முடியாது.

    நான் கேரள ஸ்டோரி திரைப்படத்தை பார்க்கவில்லை. ஆதலால் அந்த சினிமா குறித்தான எந்த விவாதத்திலும் எனக்கு உடன்பாடு இல்லை. அது குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.

    பிரதமர் நரேந்திர மோடி தி கேரள ஸ்டோரி திரைப்படத்தை பார்த்து இருக்கலாம். ஆதலால் அவர் கருத்து தெரிவித்து இருப்பார். இப்படம் குறித்து பல்வேறு கருத்துகள் வெளி வந்துள்ள நிலையில், படத்தின் கருப்பொருள் உண்மை சம்பவங்களுடன் தொடர்புடையதாக இருந்தால் அது குறித்து விசாரிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திருவனந்தபுரத்தில் உள்ள கவர்னர் மாளிகையில் நாளை கிறிஸ்துமஸ் விழா மற்றும் விருந்து நிகழ்ச்சிக்கு கவர்னர் ஆரிப் முகமது கான் ஏற்பாடு செய்தார்.
    • கவர்னர் நடத்த இருக்கும் கிறிஸ்துமஸ் விருந்து நிகழ்ச்சியில் கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் மற்றும் மந்திரிகள் யாரும் பங்கேற்க போவதில்லை என்று தெரிகிறது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கவர்னர் ஆரிப் முகமது கானுக்கும் அரசுக்கும் இடையே பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக கருத்து வேறுபாடு நிலவுகிறது. இந்த நிலையில் திருவனந்தபுரத்தில் உள்ள கவர்னர் மாளிகையில் நாளை கிறிஸ்துமஸ் விழா மற்றும் விருந்து நிகழ்ச்சிக்கு கவர்னர் ஆரிப் முகமது கான் ஏற்பாடு செய்தார்.

    கடந்த ஆண்டு நடந்த கிறிஸ்துஸ் விழாவில் மத தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆண்டு இவ்விழாவில் பங்கேற்க முதல் மந்திரி பினராயி விஜயன் மற்றும் மந்திரிகள், எதிர்கட்சி தலைவர்களுக்கு கவர்னர் ஆரிப் முகமது கான் அழைப்பு அனுப்பி இருந்தார்.

    கவர்னர் நடத்த இருக்கும் கிறிஸ்துமஸ் விருந்து நிகழ்ச்சியில் கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் மற்றும் மந்திரிகள் யாரும் பங்கேற்க போவதில்லை என்று தெரிகிறது. இதுபோல கேரள எதிர்கட்சி தலைவர் சதீசனும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டார் என தெரிகிறது. அன்றைய தினம் அவர் வேறு நிகழ்ச்சியில் பங்கேற்க இருப்பதாக கூறப்படுகிறது. கவர்னரின் அழைப்பை கேரள மந்திரிகள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் புறக்கணித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×