search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சமயபுரம் மாரியம்மன் கோவில்"

    • மாதம் 3 முறை உண்டியல்கள் திறந்து எண்ணப்படும்.
    • உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோவில் பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

    மண்ணச்சநல்லூர்:

    திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவில் தமிழ்நாட்டில் உள்ள அம்மன் தலங்களில் புகழ் பெற்றதாகும். இந்த கோவிலுக்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களிலிருந்தும் மற்றும் அயல்நாடுகளில் இருந்தும் வந்து நேர்த்திக் கடனை நிறைவேற்றி காணிக்கைகளை உண்டியலில் செலுத்தி வருகின்றனர்.

    இங்கு மாதம் 3 முறை உண்டியல்கள் திறந்து எண்ணப்படும். இந்த மாதம் 2-வது முறையாக நேற்று சமயபுரம் மாரியம்மன் கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் வி. எஸ்.பி. இளங்கோவன், கோவில் இணை ஆணையர் கல்யாணி, அறங்காவலர்கள் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன.

    இதில், காணிக்கையாக ரூ.87 லட்சத்து 57 ஆயிரத்து 91-ம், 918 கிராம் தங்கமும், 1 கிலோ 644 கிராம் வெள்ளியும், 103 வெளிநாட்டு பணம் மற்றும் 240 வெளிநாட்டு நாணயங்கள் கிடைத்துள்ளது. உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோவில் பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

    • அம்மன் பச்சை பட்டினி விரதம் இருப்பது தனிச்சிறப்பாகும்.
    • சித்திரை மாதம் தேர்த்திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

    மண்ணச்சநல்லூர்:

    தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சக்தி தலங்களில் திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலும் ஒன்று. இங்கு ஆண்டுதோறும் சித்திரை திருவிழா விமரிசையாக நடைபெறும். திருவிழாவை முன்னிட்டு, மாசி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை முதல் பங்குனி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை வரை 28 நாட்கள் அம்மன் பச்சை பட்டினி விரதம் இருப்பது தனிச்சிறப்பாகும்.

    இத்தகைய பச்சை பட்டினி விரதம் பூரணமடைந்தவுடன் சிவபெருமானிடம் உள்ள சர்வ சக்தியையும் பெற்று படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருள்பாலித்தல் ஆகிய 5 தொழில்களையும் செய்து, சித்திரை பெருவிழா நாட்களில் அம்மன் அருள்புரிந்து வருவதாக ஐதீகம்.

    இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான தேர்த் திரு விழா இன்று காலை கொடி யேற்றத்துடன் தொடங்கியது.

    இன்று காலை அம்மன் சிறப்பு கேடயத்தில் புறப்பாடாகி கொடிமரம் முன்பு எழுந்தருளினார். அதனைத் தொடர்ந்து கொடியேற்றம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவில் அம்மன் கேடயத்தில் எழுந்த ருளி கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி தருகி றார்.

    இதைத்தொடர்ந்து திரு விழா நாட்களில் ஒவ்வொரு நாளும் காலையில் அம்மன் பல்லக்கில் எழுந்தருளி கோவிலை வலம் வருகிறார்.

    அதேபோல் தினமும் இரவு 8 மணிக்கு சிம்மம், பூதம், அன்னம், ரிஷபம், யானை, சேஷம், மரக்குதிரை வாகனம் என ஒவ் வொரு வாகனத்தில் எழுந்து கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.

    வருகின்ற 15-ந் தேதி அம்மன் வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளி வையாளி கண்டருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகின்ற 16-ந்தேதி (செவ்வாய்கிழமை) நடைபெறுகி றது.

    இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை சமயபுரம் மாரியம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் வி.எஸ்.பி.இளங்கோவன், கோவில் இணை ஆணையர் கல்யாணி மற்றும் கோவில் பணியாளர்கள் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

    • சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு பூச்சொரிதல் விழா.
    • மாரியம்மன் பக்தர்களுக்காக 28 நாள் விரதம் இருப்பது சிறப்பம்சமாகும்.

    மண்ணச்சநல்லூர்:

    சக்தி தலங்களில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவில் ஆகும். இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் தேரோட்டம் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு பூச்சொரிதல் விழா இன்று காலை தொடங்கியது.

    மும்மூர்த்திகளை நோக்கி மாயாசூரனை வதம் செய்த பாவம் நீங்கவும், உலக நன்மைக்காகவும், இத்தலத்தில் தன்னைத் தரிசிக்க வரும் பக்தர்களுக்கு எல்லா விதமான நோய்களும் நீங்கவும், தீவினைகளையும் அணுகாமல் இருக்கவும், சகல சவுபாக்கியங்களும் கிடைக்க மாரியம்மன் பக்தர்களுக்காக 28 நாள் விரதம் இருப்பது சிறப்பம்சமாகும்.

    வருடம் தோறும் மாசி மாத கடைசி ஞாயிறு முதல் பங்குனி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை வரை அம்மன் விரதம் இருப்பார்.இதற்கு பச்சைப் பட்டினி விரதம் என பக்தர்கள் அழைக்கின்றனர்.இந்த 28 நாட்களும் திருகோவிலில் அம்மனுக்கு தளிகை நைவேத்தியம் கிடையாது. துள்ளு மாவு நீர்மோர், பானகம், மற்றும் இளநீர் மட்டுமே நைவேத்தியமாக செய்யப்படுகிறது.

    பூச்சொரி தல் விழாவை ஒட்டி இன்று அதிகாலை விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வாஜனம் அனுக்ஞை, வாஸ்து சாந்தி, அங்குரார்ப் பணம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன.

    தொடர்ந்து மீன லக்னத்தில் அம்மனுக்கு காப்பு கட்டுகளுடன் தொடங்கி பூச்சொரிதல் விழா நடைபெற்றது. இன்று முதல் பூச்சொரிதல் விழா தொடங்கியதால் சமயபுரம் மாரியம்மன் கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விழாக்கோலம் பூண்டது.

    • சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூச திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும் வழக்கம்.
    • 8 ம் நாளன்று அம்மன் வெள்ளிக் குதிரை வாகனத்தில் காட்சி தருகிறார். 9ம் நாள் தெப்பத் திருவிழா நடைபெறுகிறது.

    மண்ணச்சநல்லூர்:

    திருச்சி அருகே உள்ள சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூச திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும் வழக்கம். அதன்படி இந்த ஆண்டு தைப்பூசத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதனையொட்டி இன்று உற்சவம் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அம்மன் மரக்கேடயத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருளினார். இதனையடுத்து காலை 7.28 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது.

    விழாவை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் இரவில் அம்மன் சிம்மம், பூதம், அன்னம், ரிஷபம், யானை,வெள்ளி சேஷ வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி தருகிறார். 8 ம் நாளன்று அம்மன் வெள்ளிக்குதிரை வாகனத்தில் காட்சி தருகிறார். 9ம் நாள் தெப்பத் திருவிழா நடைபெறுகிறது.

    10-ம் நாளான 25-ந் தேதி காலை 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் தைப்பூச விழாவிற்காக அம்மன் கண்ணாடி பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயம் கண்டருளி நொச்சியம், மண்ணச்சநல்லூர் வழியாக வடக்காவேரிக்கு சென்று அடைகிறார். அன்று மாலை கொள்ளிடம் வடகாவிரியில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது .

    இதனை தொடர்ந்து இரவு 10 மணிக்கு மேல் தனது அண்ணனான ஸ்ரீரங்கம் ரங்கநாதரிடம் சீர்வரிசை பெரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னர் 26-ந் தேதி இரவு ஒரு மணி முதல் அதிகாலை 2 மணி வரை மகா அபிஷேகம் நடைபெறுகிறது.

    தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். அன்று காலை முதல் இரவு வரை அம்மன் வழிநடை உபயம் கண்டருளுகிறார். பின்னர் இரவு பாஸான மண்டபத்திற்கு சென்றடைகிறார்.

    அங்கு அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்று பின்னர் கொடி மரம் முன்பு எழுந்தருளி கொடி இறக்கப்படுகிறது. தொடர்ந்து நள்ளிரவில் அம்மன் கேடயத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் கோயில் பணியாளர்கள், கோயில் குருக்கள் செய்து வருகின்றனர். 

    • திருவெண்ணெய்நல்லூர் கிருபாபுரீஸ்வரர் கோவிலில் 1 கோடியே 63 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள திருமண மண்டபம்.
    • கிரானைட் கற்களால் ஆன இருக்கைகள், எஸ்.எஸ். தடுப்புகள், கண்கவர் விளக்குகள், மின் விசிறிகள் உள்ளிட்ட வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள பக்தர்கள் வரிசை வளாகம்.

    சென்னை:

    இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையில், ஆணையர் அலுவலக வளாகத்தில் நவீன வசதிகளுடன் கூடிய கூடுதல் கட்டிடம் 15 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது.

    அதனை செயல்படுத்திடும் வகையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 25.04.2022 அன்று ஆணையர் அலுவலக வளாகத்தில் 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் கூடிய கூடுதல் கட்டிடத்திற்கான கட்டுமான பணிகளை தொடங்கி வைத்திருந்தார்.

    ஒப்பந்த காலத்திற்கு 6 மாதங்களுக்கு முன்னதாகவே 15 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அலுவலக கூடுதல் கட்டிடத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    இந்த ஆணையர் அலுவலக கூடுதல் கட்டிடமானது, 3 தளங்களுடன், 33,202 சதுரடி பரப்பளவில், மாவட்ட வருவாய் அலுவலர் நிலையிலான தனி அலுவலர்களின் அறைகள், தலைமைப் பொறியாளரின் அறை, இணை ஆணையர்களின் அறைகள், உதவி ஆணையர்களின் அறைகள், திருப்பணி பிரிவு, பொறியியல் பிரிவு, உணவகம், வாகனங்கள் நிறுத்துமிடம், மின்தூக்கி போன்ற வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளன.

    திருச்சி மாவட்டம், சமயபுரம், மாரியம்மன் கோவிலில் 13 கோடியே 80 லட்சம் ரூபாய் செலவில், கோவில் வரிசை வளாகத்தில் 4 நுழைவு மண்டபங்கள், 4 அவசர கால வழிகள், காத்திருப்பு கூடம், பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி, கழிப்பறைகள், கோவில் பயன்பாட்டிற்கான கடைகள், மருத்துவ மையம், கட்டண சீட்டு விற்பனை மையம், பிரசாத விற்பனை நிலையம், பக்தர்கள் அமர்ந்து செல்லும் வகையில் கிரானைட் கற்களால் ஆன இருக்கைகள், எஸ்.எஸ். தடுப்புகள், கண்கவர் விளக்குகள், மின் விசிறிகள் உள்ளிட்ட வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள பக்தர்கள் வரிசை வளாகம்.

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் கிருபாபுரீஸ்வரர் கோவிலில் 1 கோடியே 63 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள திருமண மண்டபம் ஆகியவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, துறை முதன்மைச் செயலாளர் சந்தர மோகன், சிறப்பு பணி அலுவலர் ஜெ.குமர குருபரன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • அவிநாசி லிங்கே ஸ்வரர் கோவிலில் இருந்து பெண்கள், தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர்.
    • அம்மனுக்கு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது.

    அவிநாசி :

    அவிநாசி புதிய பஸ் நிலையம் அருகிலுள்ள ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன், ஸ்ரீ அரசமரத்து விநாயகர் கோவிலில் பொங்கல் பூச்சாட்டு விழா நடைபெற்றது.இதற்காக அவிநாசி லிங்கே ஸ்வரர் கோவிலில் இருந்து, நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். அதன்பின், அம்மனுக்கு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. இரவு படைக்கலம் எடுத்தல், அம்மை அழைத்தல் நடைபெற்றது. பெண்கள் மாவிளக்கு எடுத்து கோவிலுக்கு சென்று பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார்.

    மஞ்சள் நீராடுதல், அம்மன் திருவீதி உலா வருதல், மறுபூஜையூடன் பொங்கல் பூச்சாட்டு விழா நிறைவு பெற்றது. விழாவை முன்னி ட்டு பக்தர்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது.

    • பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் புதிய அணுகுமுறையை இன்ஸ்பெக்டர் கருணாகரன் பின்பற்றினார்.
    • கையில் குழந்தையுடன் நீண்ட வரிசையில் சென்று சாமி தரிசனம் செய்யும் தாய்மார்களின் துயர் துடைக்கும் வகையில் சமயபுரம் போலீசார் மேற்கொண்டுள்ளனர்.

    மண்ணச்சநல்லூர்:

    அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவிலாகும். தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் வரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், அம்மனை தரிசனம் செய்து வேண்டுதல்களை நிறைவேற்றி வருகின்றனர். விசேஷ மற்றும் விடுமுறை நாட்களில் இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்கின்றனர்.

    சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான நேற்று ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய குவிந்தனர். இதற்கிடையே சபரிமலை செல்லும் பக்தர்களும், வேண்டுதல் நிறைவேற நடைபயணம் செய்து வரும் பக்தர்களும் அதிகளவில் கோவிலுக்கு வருகை தருகிறார்கள்.

    இந்தநிலையில் குழந்தைகளுடன் வரும் பெண்கள் அவதிக்குள்ளாவதை கண்ட சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயசீலன், முதல்நிலை காவலர் பாண்டியராஜன் உள்ளிட்ட போலீசார் இதற்கு ஒரு தீர்வு காண முடிவு செய்தனர்.

    அதன்படி பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் புதிய அணுகுமுறையை இன்ஸ்பெக்டர் கருணாகரன் பின்பற்றினார். கையில் குழந்தையுடன் நீண்ட வரிசையில் சென்று சாமி தரிசனம் செய்யும் தாய்மார்களின் துயர் துடைக்கும் வகையில் சமயபுரம் போலீசார் மேற்கொண்டுள்ளனர்.

    இதனைத்தொடர்ந்து குழந்தைகளுடன் வரும் பெண்கள், குழந்தைகளுக்கு உணவு ஊட்ட தேவையான வசதிகள் மற்றும் குழந்தைகளுக்கு பொழுது போக்குவதற்கான விளையாட்டுப் பொருட்கள், பொழுதுபோக்குடன் கல்வியையும் கற்றுக்கொள்ள வசதியாக சிலேட்டுகளையும் வாங்கி கொடுத்து அதற்கென ஒரு தனி இடம் ஏற்பாடு செய்து வைத்துள்ளனர்.

    வித்தியாசமான இந்த அணுகுமுறை பொதுமக்களின் பாராட்டையும், வரவேற்பையும் பெற்றுள்ளது.

    • உண்டியலில் இருந்த பணம், வெள்ளி மற்றும் தங்க காசுகள் தனித்தனியாக பிரிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
    • வேலியே பயிரை மேய்ந்த கதையாக கோவில் செயல் அலுவலர் ஒருவரே காணிக்கை தங்க காசுகளில் கை வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் பிரசித்தி பெற்ற சக்தி வாய்ந்த மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். இந்த பக்தர்கள் செலுத்தும் காணிக்கை, கோவில் நிர்வாகம் சார்பில் மாதம் இருமுறை எண்ணப்படுவது வழக்கமானது.

    அதன்படி நேற்று முன் தினம் கோவில் மைய மண்டபத்தின் மாடியில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. அந்த கோவிலின் இணை ஆணையர் கல்யாணி முன்னிலையில் நடைபெற்ற இந்த பணியில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், வங்கி ஊழியர்கள், கோவில் பணியாளர்கள், தன்னார்வலர்கள் பக்தர்கள் பங்கேற்றனர்.

    பின்னர் உண்டியலில் இருந்த பணம், வெள்ளி மற்றும் தங்க காசுகள் தனித்தனியாக பிரிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோவில் செயல் அலுவலர் வெற்றிவேல் சில தங்க காசுகளை எடுத்து மறைத்து வைத்ததை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த பக்தர்கள் சிலர் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    இது பற்றி அவர்கள் கோவில் இணை ஆணையர் கல்யாணிடம் புகார் தெரிவித்தனர். உடனே புகார் கூறப்பட்ட அவரை தனி அறைக்கு அழைத்து சென்று கோவில் பணியாளர்கள் மூலம் பரிசோதனை செய்தனர். அப்போது அவரது சட்டை பையில் தங்க காசுகள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அவரிடமிருந்து 30 கிராம் எடையுள்ள 5 தங்க காசுகள் அப்போதே பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது.

    இந்த நிலையில் தன் மீது நடவடிக்கை எடுத்தால் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்வதாக வெற்றிவேல் மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் சக அதிகாரிகள் செய்வதறியாது திகைத்தனர். பின்னர் இதுபற்றி உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் அதே நேரத்தில் பக்தர்கள் தரப்பில் நகை திருடிய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

    அதைத்தொடர்ந்து கோவில் இணை ஆணையர் கல்யாணி சமயபுரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் எறும்பீஸ்வரர் கோவில் செயல் அலுவலர் வெற்றிவேல் மீது நேற்று வழக்குப் பதிவு செய்தார். இதனை அறிந்த அவர் தலைமறைவாகியுள்ளார். அவரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    அவரைப் பிடித்தால் திடுக்கிடும் புதிய தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தான் அதிகாரியாக இருக்கும் திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோவிலில் அதே நாளில் உண்டியல் எண்ணும் பணி நடந்தபோது, அவர் அங்கு பணியில் இல்லாமல் சமயபுரம் கோவிலுக்கு வந்தது ஏன்? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. வேலியே பயிரை மேய்ந்த கதையாக கோவில் செயல் அலுவலர் ஒருவரே காணிக்கை தங்க காசுகளில் கை வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • சபரிமலை சீசன் என்பதால் பல்லாயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்களும் அம்மனை தரிசிக்க வருகின்றனர்.
    • உண்டியல் பணத்தை எண்ணும்போது பதிவான சி.சி.டி.வி. கேமரா காட்சி பதிவுகளை கைப்பற்றி விசாரணையை தொடங்கியுள்ளனர்.

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. சக்தி ஸ்தலங்களில் முதன்மையானதாக கருதப்படும் இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து அம்மனை தரிசித்து செல்கின்றனர்.

    இதற்கிடையே தற்போது சபரிமலை சீசன் என்பதால் பல்லாயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்களும் அம்மனை தரிசிக்க வருகின்றனர். அதேபோல் அண்டை மாவட்டங்களை சேர்ந்த ஆண், பெண் பக்தர்கள் பாதயாத்திரையாகவும் வந்து மாரியம்மனை தரிசிக்கிறார்கள்.

    இந்த நிலையில் நேற்று கோவிலில் மாதாந்திர உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. அப்போது திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோவில் செயல் அலுவலர் தங்க நாணயங்களை மறைத்து எடுத்து சென்றதாக புகார் எழுந்தது. இது பக்தர்களுக்கு கடும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளித்தது.

    இன்று சமயபுரம் கோவில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கல்யாணி சமயபுரம் போலீசில் இது தொடர்பாக புகார் அளித்துள்ளார். அதைத் தொடர்ந்து போலீசார் கோவிலுக்கு விரைந்தனர். உண்டியல் பணத்தை எண்ணும்போது பதிவான சி.சி.டி.வி. கேமரா காட்சி பதிவுகளை கைப்பற்றி விசாரணையை தொடங்கியுள்ளனர்.

    இதில் மேற்கண்ட அதிகாரி கைவரிசை காட்டி இருந்தால் உடனடியாக அவரை கைது செய்ய நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ளனர். இந்த சம்பவம் கோவில் வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    ×