என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புத்தாண்டு கொண்டாட்டம்"

    • சென்னையில் இருந்து கோவாவிற்கு செல்ல வழக்கமாக ரூ.4,400 கட்டணம் வசூலிக்கப்படுவதுண்டு.
    • தற்போது பயணிகள் எண்ணிக்கை கடுமையாக உயர்ந்திருப்பதால் ரூ.13 ஆயிரம் முதல் ரூ.16 ஆயிரம் வரை விமான கட்டணம் உயர்ந்துள்ளது.

    சென்னை:

    கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டம் காரணமாக நாடு முழுவதும் விமானங்களில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. இதன்காரணமாக விமான கட்டணங்களும் கணிசமான அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளன.

    புத்தாண்டு ஞாயிற்றுக்கிழமை பிறப்பதால் அது விடுமுறை கொண்டாட்டமாகவும் மாறி உள்ளது. இதனால் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் ஏராளமானோர் விமானங்களில் முன்பதிவு செய்து வருகிறார்கள்.

    இந்திய சுற்றுலா தலங்களில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தினத்தில் கோவாவில் தான் அதிக அளவில் பயணிகள் திரள்வது வழக்கம். இந்த ஆண்டும் கோவாவுக்கு செல்வதற்கு விமானங்களில் முன்பதிவு செய்தவர்கள் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்துள்ளது.

    இதன் காரணமாக டெல்லி, மும்பை, பெங்களூர், சென்னை உள்பட பல்வேறு நகரங்களில் இருந்து கோவாவிற்கு செல்வதற்கான விமான கட்டணம் 4 மடங்கு அதிகரித்து இருக்கிறது. அது போல கோவாவில் இருந்து ஜனவரி முதல் வாரத்தில் முக்கிய நகரங்களுக்கு இயக்கப்படும் விமானங்களின் கட்டணமும் 4 மடங்கு உயந்துள்ளது.

    சென்னையில் இருந்து கோவாவிற்கு செல்ல வழக்கமாக ரூ.4,400 கட்டணம் வசூலிக்கப்படுவதுண்டு. தற்போது பயணிகள் எண்ணிக்கை கடுமையாக உயர்ந்திருப்பதால் ரூ.13 ஆயிரம் முதல் ரூ.16 ஆயிரம் வரை விமான கட்டணம் உயர்ந்துள்ளது.

    டிசம்பர் 23, 24-ந்தேதிகளில் அனைத்து விமான இருக்கைகளும் நிரம்பி விட்டன. அதுபோல ஜனவரி 1, 2-ந்தேதிகளிலும் விமானங்களில் டிக்கெட் இல்லை என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது.

    கோவாவில் இருந்து சென்னை தவிர டெல்லி, மும்பை, பெங்களூர் நகரங்களுக்கும் முன்பதிவு இருக்கைகள் நிரம்பி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • டிசம்பர் மாத இறுதி முதல் ஜனவரி முதல் வாரம் வரை அறைகள் இல்லை என பல விடுதிகள் கைவிரித்து வருகின்றன.
    • ஓட்டல்களில் புத்தாண்டை வரவேற்கும் வகையில் உணவு திருவிழா, கேளிக்கை, நடன, இசை நிகழ்ச்சிகள் நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

    புதுச்சேரி:

    புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக பல்வேறு மாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் புதுவைக்கு வருவது வாடிக்கை.

    கொரோனா தாக்கத்தால் 2 ஆண்டுகள் புதுவையில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெறாமல் போனது. கடந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டம் நடந்தது. இருப்பினும் கொரோனா அச்சம் காரணமாக அதிகளவில் மக்கள் கூடவில்லை. இந்த ஆண்டு கொரோனா அச்சம் முற்றிலுமாக விலகி புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு புதுவை தயாராகி வருகிறது.

    டிசம்பர் மாத தொடக்கத்திலிருந்தே சுற்றுலா பயணிகளின் வருகை நாளுக்கு நாள் புதுவையில் அதிகரித்து வருகிறது. கிறிஸ்துமஸ், அரையாண்டு விடுமுறை விடப்பட உள்ளது. புதுவையில் தற்போது குளு, குளுவென குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவுகிறது. புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக ஓட்டல்கள், விடுதிகளில் முன்பதிவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நட்சத்திர விடுதி முதல் சாதாரண விடுதி வரை ஆன்லைன் மூலம் வெளிமாநிலத்தினர் முன்பதிவு செய்து வருகின்றனர்.

    டிசம்பர் மாத இறுதி முதல் ஜனவரி முதல் வாரம் வரை அறைகள் இல்லை என பல விடுதிகள் கைவிரித்து வருகின்றன. ஓட்டல்களில் புத்தாண்டை வரவேற்கும் வகையில் உணவு திருவிழா, கேளிக்கை, நடன, இசை நிகழ்ச்சிகள் நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

    இதற்காக நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்துகளில் அனுமதி பெற வேண்டும் என அரசு அறிவித்துள்ளது.

    பல்வேறு மைதானம், திடல்கள், கடற்கரைகளில் புத்தாண்டு கொண்டாட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. புதுவையில் பல்வேறு கடற்கரைகள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. இங்கும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.

    கிறிஸ்துமஸ் பண்டிகை சில நாட்களே உள்ளதால் பண்டிகை பொருட்கள் விற்பனை சூடுபிடித்துள்ளது.

    மிஷன்வீதி, காந்திவீதி, நேருவீதிகளில் கிறிஸ்துமஸ் குடிலுக்கு தேவையான பொருட்கள் விற்கப்படுகிறது. இவற்றை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். மிஷன்வீதி ஜென்மராக்கினி மாதா கோவில் எதிரே குடில்களுக்கு தேவையான சொரூபங்கள் விற்பனை ஜரூராக நடக்கிறது. கிறிஸ்துமஸ் கேரல்ஸ், கலைநிகழ்ச்சிகளும் களைகட்டியுள்ளது.

    தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் குடில் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வருகிற 24-ந் தேதி நள்ளிரவு கிறிஸ்துமஸ் திருப்பலியும், 25-ந்தேதி காலை பிரார்த்தனையும் நடக்கிறது. கிறிஸ்தவர்கள் தங்கள் வீடுகளில் ஸ்டார், குடில்களை அமைத்து கிறிஸ்து பிறப்பு பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட தயாராகி வருகின்றனர்.

    • சென்னையில் இருந்து புறப்பட்டு செல்லும் 450 அரசு விரைவு பஸ்களில் நாளை பயணம் செய்ய 22 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
    • குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய எல்லா பஸ்களும் நிரம்பிவிட்டதால் 500 சிறப்பு பஸ்கள் நாளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை:

    கிறிஸ்துமஸ் பண்டிகை 25-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுவதால் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் சிறப்பு பஸ்கள் நாளை (வெள்ளிக்கிழமை) இயக்கப்படுகிறது.

    பள்ளி, கல்லூரிகளுக்கு பண்டிகை விடுமுறை 9 நாட்கள் விடப்பட்டுள்ளதால் சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர். நீண்டதூரம் செல்லக்கூடிய அரசு விரைவு பஸ்களில் அனைத்து இடங்களும் நிரம்பிவிட்டன.

    சென்னையில் இருந்து புறப்பட்டு செல்லும் 450 அரசு விரைவு பஸ்களில் நாளை பயணம் செய்ய 22 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய எல்லா பஸ்களும் நிரம்பிவிட்டதால் 500 சிறப்பு பஸ்கள் நாளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    மதுரை, திருச்சி, நாகர்கோவில், திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு பிற போக்குவரத்து கழக பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:-

    பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாலும், கிறிஸ்துமஸ் பண்டிகை வருவதாலும் ரெயில்களில் இடங்கள் நிரம்பிவிட்டதால் மக்கள் அரசு பஸ்களை நோக்கி வரக்கூடும் என்பதால் கூடுதலாக 500 பஸ்களை இயக்க திட்டமிட்டுள்ளோம்.

    நாளை பிற்பகலில் இருந்து சிறப்பு பஸ்கள் கோயம்பேட்டில் இருந்து புறப்படும். வழக்கமாக இயக்கப்படும் 2,100 பஸ்களுடன் சிறப்பு பஸ்கள் கூடுதலாக இயக்கப்படும். பொதுமக்கள் தேவையை பொறுத்து கூடுதல் பஸ்கள் இயக்க தயாராக உள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • பண்டிகை காலங்களில் பொதுவாக ஆம்னி பஸ்களில் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்படுகிறது. அதேபோல தற்போது கட்டணம் அதிகரித்துள்ளது.
    • சென்னையில் இருந்து மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்ட பகுதிகளுக்கு செல்லக்கூடிய ஆம்னி பஸ்களில் வழக்கத்தை விட 3 மடங்கு கட்டணம் உயர்ந்துள்ளது.

    சென்னை:

    கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகை மற்றும் பள்ளி அரையாண்டு தேர்வு விடுமுறை நாளை மறுநாள் (24-ந்தேதி) முதல் விடப்படுகிறது. தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு நாளை (வெள்ளிக்கிழமை) வரை அரையாண்டுத் தேர்வு நடைபெறுகிறது.

    கிறிஸ்தவ பள்ளிகள், சி.பி.எஸ்.இ. பள்ளிகள், தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளுக்கு இன்றுடன் தேர்வு முடிகிறது. மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் அரசு, உதவிபெறும் பள்ளி மாணவர்கள் நாளை வரை தேர்வு எழுதுகின்றனர்.

    இதைத்தொடர்ந்து ஜனவரி 1-ந்தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. பள்ளிகள் மீண்டும் ஜனவரி 2-ந்தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இதனால் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட சொந்த ஊர் செல்பவர்கள் இன்று முதல் பயணத்தை தொடங்கி உள்ளனர். கிறிஸ்துமஸ் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில் வருவதால் பெரும்பாலானவர்கள் நாளை (வெள்ளிக்கிழமை) வெளியூர் பயணத்தை மேற்கொள்கிறார்கள்.

    பண்டிகை காலங்களில் பொதுவாக ஆம்னி பஸ்களில் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்படுகிறது. அதேபோல தற்போது கட்டணம் அதிகரித்துள்ளது. சென்னையில் இருந்து மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்ட பகுதிகளுக்கு செல்லக்கூடிய ஆம்னி பஸ்களில் வழக்கத்தை விட 3 மடங்கு கட்டணம் உயர்ந்துள்ளது.

    நாளை (23-ந்தேதி) பயணம் செய்ய ஆம்னி பஸ்களில் குறைந்த அளவில் இடங்கள் உள்ளன. ரெட் பஸ் இணையதளத்தில் ஆம்னி பஸ்களின் கட்டணம் பல்வேறு விதமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    சென்னை கோயம்பேட்டில் இருந்து திருநெல்வேலி, தூத்துக்குடிக்கு வழக்கமாக குளிர்சாதன வசதி இல்லாத இருக்கைக்கு ரூ.1000 வரை கட்டணம் வசூலிக்கப்படும். தற்போது ரூ.1,800 முதல் ரூ.2,300 வரை டிக்கெட் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    ஏ.சி. செமி சிலீப்பருக்கு ரூ.2,200 வரை வசூலிக்கப்படுகிறது. ஏ.சி. படுக்கை வசதிக்கு ரூ.3000 முதல் ரூ.4,500 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தனி டிவி வசதி அதில் கூடுதலாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு சில பஸ்களில் ரூ.3,500, ரூ.4000-மும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    தூத்துக்குடிக்கு ஏசி வசதி இல்லாத இருக்கைக்கு ரூ.1,500 முதல் ரூ.2,500 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நாகர்கோவிலுக்கு ஏசி படுக்கை வசதிக்கு ரூ.3,600 வரையிலும், மதுரைக்கு ஏசி படுக்கை வசதிக்கு ரூ.1,700 முதல் ரூ.3000 வரை வசூலிக்கிறார்கள்.

    ஒரு சில ஆம்னி பஸ்களில் ரூ.2,400, ரூ.2,700, ரூ.2,800 என பல்வேறு விதமான கட்டணம் பெறப்படுகிறது. ஏ.சி. இருக்கைக்கு ரூ.1,200 முதல் ரூ.2,300 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏசி வசதி இல்லாத இருக்கைக்கு ரூ.1,800, ரூ.2000 கட்டணம் வசூலிக்கிறார்கள்.

    பொதுமக்களின் தேவையை அறிந்து கட்டணம் அதிகளவில் வசூலிப்பதால் மக்கள் அரசு பஸ்களை நோக்கி செல்கிறார்கள். ஒரு நிலையான கட்டணத்தை வசூலிக்காமல் பண்டிகை காலத்தை மையமாக வைத்து கட்டணத்தை உயர்த்தி வருவதை அரசு தடுக்க வேண்டும் என பயணிகள் தரப்பில் கோரிக்கை வைக்கின்றனர்.

    தற்போது ரெயில்களில் இடம் நிரம்பிவிட்டதால் வேறு வழியில்லாமல் மக்கள் ஆம்னி பஸ்களை நாடி செல்வார்கள் என்ற நோக்கத்தில் விமான கட்டணத்திற்கு இணையாக உயர்த்தி உள்ளனர்.

    சனிக்கிழமையிலும் ஆம்னி பஸ்களில் கட்டணம் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமைக்கு பிறகு தான் இயல்பான கட்டணத்தில் பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது.

    • சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வசிக்கும் தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் நேற்று மதியம் முதலே சொந்த ஊருக்கு செல்ல தொடங்கினர்.
    • கூடுதலாக இயக்கப்பட்ட அரசு பஸ்களிலும் பொது மக்கள் பயணம் செய்தனர். நேற்று ஆம்னி பஸ்களும் அதிக அளவில் சென்றன.

    போரூர்:

    கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. ஏற்கனவே பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக சொந்த ஊர் செல்பவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாகவே அதிகரித்து உள்ளது.

    தென் மாவட்டத்துக்கு செல்லும் அனைத்து ரெயில்களிலும் இருக்கைகள் நிரம்பி விட்டது. ஆம்னி பஸ்களில் பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களை பயன்படுத்தி தொடர்ந்து கூடுதல் கட்டணம் வசூலித்து வருவதால் பெரும்பாலான மக்கள் தற்போது அரசு பஸ்களில் பயணம் செய்யவே அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். 

    இந்த நிலையில் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்பவர்களின் வசதிக்காக 2 நாட்களுக்கு வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன் தலா 300 பஸ்கள் வீதம் கூடுதலாக 600 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று அரசு போக்குவரத்து கழகம் அறிவித்து இருந்தது.

    அதன்படி நேற்று காலை முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இதன் காரணமாக கோயம்பேடு பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. சென்னை மக்கள் பெரும்பாலானோர் சொந்த ஊருக்கு படை எடுத்தனர்.

    தினசரி இயக்கப்படும் 2100 பஸ்களுடன் நேற்று கூடுதலாக 300 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. இதன்மூலம் ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றுள்ளனர். இன்று வழக்கமான பஸ்களுடன் கூடுதலாக 300 பஸ்கள் இயக்க திட்டமிட்டுள்ளனர். மேலும் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் தேவைக்கு ஏற்ப கூடுதல் பஸ்களை இயக்கவும் தயார் நிலையில் இருப்பதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வசிக்கும் தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் நேற்று மதியம் முதலே சொந்த ஊருக்கு செல்ல தொடங்கினர். கூடுதலாக இயக்கப்பட்ட அரசு பஸ்களிலும் பொது மக்கள் பயணம் செய்தனர். நேற்று ஆம்னி பஸ்களும் அதிக அளவில் சென்றன.

    பெரும்பாலான சென்னை மக்கள் கார்கள் மற்றும் வாகனங்களில் சொந்த ஊருக்கு புறப்பட்டனர். இதனால் நேற்று மதியத்துக்கு பிறகு தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர் பகுதிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்தன. ஒரே நேரத்தில் பஸ்கள் கிளம்பியதால் இந்த பகுதிகளில் வாகனங்கள் மிகவும் ஊர்ந்தே சென்றன. இரும்புலியூரில் ராஜகரை முதல் பெருங்களத்தூர் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

    செங்கல்பட்டு அடுத்த பரனூர் டோல்கேட்டில் நேற்று மாலை 4-மணியில் இருந்து சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தினத்தை கொண்டாட செல்லும் பொதுமக்கள் கார், பேருந்து மற்றும் மோட்டார் சைக்கிள்களில் பயணம் செய்தனர். இதனால் பரனூர் சுங்கச்சாவடியில் விடிய விடிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரதீப் உத்தரவின் பேரில் செங்கல்பட்டு கூடுதல் எஸ்.பி.பரத் மேற்பார்வையில் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் பணிபுரியும் ஊழியர்கள் கூறுகையில், நேற்று அமாவாசையையொட்டி மேல்மலையனூர் கோவிலுக்கு செல்கின்ற பக்தர்கள் ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் மற்றும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழாக்களை கொண்டாட தென்மாவட்டங்களுக்கு அதிகளவில் மக்கள் பயணம் மேற்கொள்வதால் செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.

    • சென்னை மாநகரம் முழுவதும் வருகிற 31-ந்தேதி அன்று இரவு முதல் மறுநாள் வரையில் 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
    • சென்னை மாநகரில் உள்ள 30-க்கும் மேற்பட்ட பெரிய மேம்பாலங்கள் மூடப்பட உள்ளன. சுமார் 500 இடங்களில் வாகன சோதனை நடத்தப்பட உள்ளது.

    சென்னை:

    2022-ம் ஆண்டு முடிந்து 2023-ம் ஆண்டு பிறப்பதற்கு இன்னும் 4 நாட்களே இருக்கும் நிலையில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு சென்னை மாநகரம் தயாராகி வருகிறது.

    கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகளை இந்த ஆண்டு சிறப்பாக நடத்துவதற்கு நட்சத்திர ஓட்டல் நிர்வாகிகள் தயாராகி வருகிறார்கள்.

    கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பண்ணை வீடுகளிலும் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகள் களைகட்டி உள்ளன. வருகிற 31-ந்தேதி மாலையில் தொடங்கி ஜனவரி 1-ந்தேதி அதிகாலை வரையில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடத்தப்படுவது வழக்கம்.

    புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் தடுப்பதற்காக தேவையான முன்ஏற்பாடுகளை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் மேற்கொண்டுள்ளார்.

    சென்னை மாநகரம் முழுவதும் வருகிற 31-ந்தேதி அன்று இரவு முதல் மறுநாள் வரையில் 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    சென்னை மாநகரில் உள்ள 30-க்கும் மேற்பட்ட பெரிய மேம்பாலங்கள் மூடப்பட உள்ளன. சுமார் 500 இடங்களில் வாகன சோதனை நடத்தப்பட உள்ளது.

    புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி பைக் ரேசில் ஈடுபடுபவர்களை பிடிக்க சிறப்பு சோதனை சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. இதற்காக 30 சாலை பாதுகாப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவர்கள் மோட்டார் சைக்கிளில் ரோந்து சுற்றி வருவார்கள்.

    மெரினா கடற்கரை உள்ளிட்ட அனைத்து கடற்கரை பகுதிகளிலும் போலீசார் ரோந்து சுற்றி வந்து பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.

    புத்தாண்டு அன்று வாழ்த்து சொல்வதாக கூறிக்கொண்டு பெண்களிடம் பாலியல் சீண்டலில் யாராவது ஈடுபட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் என்றும் போலீசார் எச்சரித்துள்ளனர்.

    புத்தாண்டு அன்று பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள அந்தந்த பகுதி துணை கமிஷனர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. நட்சத்திர ஓட்டல்களில் இதற்காக தனி பாதுகாவலர்களை நியமிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    நட்சத்திர ஓட்டல்களில் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

    இதுதொடர்பாக கமிஷனர் சங்கர் ஜிவால் தலைமையில் நாளை மறுநாள் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இதில் நட்சத்திர ஓட்டல் நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள்.

    நீச்சல் குளங்கள் இருக்கும் பகுதியை மூடி வைத்து தேவையான அளவுக்கு கண்காணிப்பு கேமராக்களை பொருத்தவும் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

    • வருகிற ஜனவரி 1-ந்தேதியான புத்தாண்டு தினத்தன்று சசிகலா ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்களை சந்திக்கிறார்.
    • தி.நகரில் உள்ள இல்லத்தில் அன்று காலை 10 மணி அளவில் ஆதரவு நிர்வாகிகளை சந்திக்கும் சசிகலா, புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறார்.

    சென்னை:

    அ.தி.மு.க.வுக்கு விரைவில் தலைமை தாங்குவேன் என்று சசிகலா தொடர்ந்து கூறிக்கொண்டே இருக்கிறார். அ.தி.மு.க.வை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டிருக்கும் நிலையில் சசிகலாவும் தனது லெட்டர் பேடில் பொதுச்செயலாளர் என்றே குறிப்பிட்டு அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார்.

    அதே நேரத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் நான்தான். கட்சிக்கு தலைமை தாங்குவதும் நான்தான் என்று கூறிக்கொண்டு செயல்பட்டு வருகிறார். இதனால் அ.தி.மு.க.வில் நீடிக்கும் குழப்பம் முடிவுக்கு வராமலேயே உள்ளது.

    இதுதொடர்பான கேள்விக்கு சமீபத்தில் பதில் அளித்த சசிகலா, பாராளுமன்ற தேர்தலுக்குள் எல்லாம் சரியாகிவிடும். அனைவரையும் ஒருங்கிணைத்து அ.தி.மு.க. தேர்தலை சந்திக்கும் என்றும் தெரிவித்தார்.

    இப்படி அ.தி.மு.க.வில் நடக்கும் பிரச்சினைகளை என்னால் தான் சரி செய்ய முடியும் என்று சசிகலா தொடர்ந்து கூறி வருகிறார். அதே நேரத்தில் அவர் தனியாக கூட்டம் எதையும் இதுவரை நடத்தியது இல்லை. மாவட்டம் வாரியாக சென்று ஆதரவாளர்களை மட்டுமே சந்தித்து உள்ளார்.

    இந்த நிலையில் வருகிற ஜனவரி 1-ந்தேதியான புத்தாண்டு தினத்தன்று சசிகலா ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்களை சந்திக்கிறார். தி.நகரில் உள்ள இல்லத்தில் அன்று காலை 10 மணி அளவில் ஆதரவு நிர்வாகிகளை சந்திக்கும் சசிகலா, புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறார்.

    சசிகலாவை சந்திக்க வருபவர்கள் பூங்கொத்து, பரிசு பொருட்கள் உள்ளிட்டவற்றை எடுத்து வருவதை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.

    புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்க வருபவர்கள் எதையும் எடுத்து வராமல் வாழ்த்துக்களை மட்டுமே தெரிவிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    ஆதரவாளர்கள் சந்திப்பின்போது சசிகலா பத்திரிகையாளர்களையும் சந்திக்க முடிவு செய்துள்ளார். அப்போது அ.தி.மு.க.வில் தற்போது நிலவும் பிரச்சினைகள் மற்றும் தனது எதிர்கால அரசியல் பயணம் ஆகியவை பற்றி முக்கிய முடிவுகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • புத்தாண்டு கொண்டாட்டத்துக்கும் புதுவை தயாராகி வருகிறது.
    • நகர் மற்றும் கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் உள்ள ஓட்டல், விடுதிகள், ரெஸ்டாரண்டுகளில் அனைத்து அறைகளும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.

    ஆண்டுதோறும் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் புதுவையில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். கிறிஸ்துமஸ், அரையாண்டு விடுமுறை, புத்தாண்டு, பொங்கல் என தொடர் நிகழ்வுகளும் விடுமுறையும் இருப்பது சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்க செய்கிறது.

    அதோடு இந்த மாதங்களில் புதுவை குளிர்பிரதேசம் போல் சில்லென்ற குளிர்ந்த காற்றுடன் வரவேற்பது சுற்றுலா பயணிகளுக்கு கூடுதல் உற்சாகத்தை தருகிறது. இதனால் புதுவை நகரமே சுற்றுலா பயணிகளால் நிரம்பி வழிகிறது.

    புத்தாண்டு கொண்டாட்டத்துக்கும் புதுவை தயாராகி வருகிறது. நகர் மற்றும் கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் உள்ள ஓட்டல், விடுதிகள், ரெஸ்டாரண்டுகளில் அனைத்து அறைகளும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. புத்தாண்டு என்றாலே மது விருந்துதான். பிரெஞ்சு ஆட்சி காலத்தில் இருந்தே மது வகைகளுக்கு புகழ்பெற்ற பகுதியாக புதுவை விளங்குகிறது. விலை குறைவு மட்டுமல்லாது விதவிதமான மதுவகைகள், வெளிநாட்டு மதுபானங்கள் போன்றவை தான் மது பிரியர்களை புதுவையை நோக்கி இழுக்கிறது.

    இதனை கூடுதலாக்கும் நோக்கில் இந்த முறை புத்தாண்டையொட்டி மதுபார்கள் புதுபொலிவாக மாற்றப்பட்டு வருகிறது. பார்களின் உள் அமைப்புகள் மதுபிரியர்களை கவரும் வகையில் மின்னொலியில் ஜொலிக்கின்றன.

    மேலும் வெளிநாடுகளில் இருந்தும் வெளிமாநில மாநிலங்களில் இருந்தும் 50-க்கும் மேற்பட்ட புதிய மதுவகைகள் புதுவையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ன.

    ஜப்பானிய விஸ்கி, மெக்சிக்கோ டக்கீலா, லண்டன் ஜின், பிரான்ஸ் ஒயின், இத்தாலி பீர், அமெரிக்கன் ஓட்கா மற்றும் கோவா பென்னி என விதவிதமான மதுவகைகள் வரிசை கட்டி மதுபிரியர்களை வரவேற்க காத்திருக்கிறது.

    மது வகைகளை போல புதிய சைடிஷ்களும் தயாராகியுள்ளன. கடற்கரை பகுதியாக புதுவை இருப்பதால் கடல் உணவுகள், சிக்கன், மட்டன் வகைகள் சிறப்பு சலுகைகளுடன் தயாராகி வருகிறது.

    புதுவையில் 1400 வகையான மதுவகைகள் ஏற்கனவே சந்தையில் உள்ளது. அத்துடன் புத்தாண்டை குறிவைத்து 50 புதிய மதுவகைகள் களத்தில் இறங்கியுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இலவச தரிசன டைம் ஸ்லாட் டோக்கன் பெற்ற பக்தர்கள் குறிப்பிட்ட நேரத்தில் சென்றால் சுமார் 2 மணி நேரத்தில் தரிசனம் செய்து வருகின்றனர்.
    • டைம் ஸ்லாட் டோக்கன் பெறாத இலலச தரிசன பக்தர்கள் அங்குள்ள குடோன்களில் தங்க வைக்கப்பட்டு பின்னர் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த வாரம் தொடர் மழை மற்றும் கடும் பனி காரணமாக தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் கூட்டம் குறைந்து காணப்பட்டது.

    தற்போது மழை இல்லாமல் குளிரின் தாக்கமும் குறைந்து உள்ளதால் மீண்டும் தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. மேலும் ஆங்கில புத்தாண்டு மற்றும் வைகுண்ட ஏகாதசி நெருங்கி வருவதாலும் பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் அதிக அளவில் வருகின்றனர்.

    இலவச தரிசன டைம் ஸ்லாட் டோக்கன் பெற்ற பக்தர்கள் குறிப்பிட்ட நேரத்தில் சென்றால் சுமார் 2 மணி நேரத்தில் தரிசனம் செய்து வருகின்றனர்.

    டைம் ஸ்லாட் டோக்கன் பெறாத இலலச தரிசன பக்தர்கள் அங்குள்ள குடோன்களில் தங்க வைக்கப்பட்டு பின்னர் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

    அவர்கள் சுமார் 30 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

    திருப்பதியில் நேற்று 71, 299 பேர் தரிசனம் செய்தனர். 28,288 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 3.26 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    • புத்தாண்டையொட்டி சென்னை மாநகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன.
    • நாளை மறுநாள் இரவு 10 மணியில் இருந்தே போலீசார் ரோந்து பணிகளை தீவிரப்படுத்த உள்ளனர்.

    சென்னை:

    புத்தாண்டு பிறப்பதற்கு இன்னும் 2 நாட்களே இருக்கும் நிலையில் தமிழகம் முழுவதும் கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 2022-ம் ஆண்டு முடிந்து 2023 ஆண்டு பிறப்பதையொட்டி அதனை வரவேற்க மக்கள் உற்சாகத்தோடு தயாராகி வருகிறார்கள்.

    சென்னை முதல் கன்னியாகுமரி வரை அனைத்து முக்கிய நகரங்களிலும் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக நட்சத்திர விடுதிகள், பண்ணை வீடுகள் ஆகியவற்றில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    மதுவிருந்துடன் விதவிதமான உணவு வகைகளும் நட்சத்திர ஓட்டல்களில் பரிமாறப்பட உள்ளன.

    இப்படி நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் பண்ணை வீடுகளில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டி இருக்கும் நிலையில் மெரினா உள்ளிட்ட கடற்கரை பகுதிகளிலும் மக்கள் கொண்டாட்டத்துக்கு தயாராகி வருகிறார்கள்.

    புத்தாண்டு பிறக்கும் 31-ந்தேதி நள்ளிரவில் மெரினா கடற்கரையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு 'ஹேப்பி நியூ இயர்' என உற்சாகம் பொங்க கூச்சலிட்டு புத்தாண்டை வரவேற்பார்கள்.

    இந்த கொண்டாட்டத்தின் போது அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் தடுப்பதற்காக போலீசார் தேவையான முன்னேற்பாடுகளையும் செய்து வருகிறார்கள்.

    புத்தாண்டையொட்டி சென்னை மாநகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. நாளை மறுநாள் இரவு 10 மணியில் இருந்தே போலீசார் ரோந்து பணிகளை தீவிரப்படுத்த உள்ளனர்.

    சென்னை மாநகர் முழுவதும் சுமார் 450 இடங்களில் வாகன சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

    தங்களது பகுதியில் பிரச்சினை ஏற்படக்கூடிய பகுதிகளை முன்கூட்டியே கண்டறிந்து தேவையான முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    நள்ளிரவு 1 மணிக்கு பிறகு சாலைகளில் சுற்றுபவர்களை எச்சரித்து வீடுகளுக்கு செல்லுமாறு அறிவுரை கூறி அனுப்பி வைக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    மெரினா உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் புத்தாண்டுக்கு முந்தைய நாள் இரவிலும், புத்தாண்டு தினத்தன்றும் கடலில் இறங்கி குளிக்க தடை விதிக்கப்படுகிறது. பொதுமக்கள் கடலில் இறங்குவதை தடுக்கும் வகையில் சவுக்கு கட்டைகளை வைத்து தடுப்புகளை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களை பிடிக்க சிறப்பு தனிப்படைகளும் அமைக்கப்பட உள்ளது. வேகமாக வாகனம் ஓட்டுபவர்களை கட்டுப்படுத்தும் வகையில் முக்கிய சாலைகளில் தடுப்புகள் அமைத்தும் போலீசார் கண்காணிக்க உள்ளனர்.

    நெடுஞ்சாலைகளில் உள்ள ஓட்டல்கள் இரவு முழுவதும் செயல்பட போலீசார் அனுமதி அளித்துள்ளனர். கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் புத்தாண்டுக்கு முந்தைய நாள் இரவு நீண்ட தூரம் பயணிக்கும் வாகன ஓட்டிகளின் வசதிக்காக இந்த அனுமதியை போலீசார் வழங்கி இருக்கிறார்கள்.

    புத்தாண்டு அன்று போலீசார் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள், கட்டுப்பாடுகளை விதித்து செயல்பட்டாலும் மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களில் வேகமாக செல்வதை தடுப்பது என்பது சில நேரங்களில் இயலாத காரியமாகவும் மாறிவிடுகிறது.

    இதை கருத்தில் கொண்டு அதற்கு தேவையான நடவடிக்கைகளையும் போலீசார் மேற்கொள்ள உள்ளனர்.

    இதன்படி சென்னையில் உள்ள பெரிய மேம்பாலங்களை மூடிவைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகரங்களில் உள்ள 40 மேம்பாலங்களின் நுழைவு பகுதி, இறங்கும் பகுதி ஆகியவற்றில் தடுப்புகளை அமைக்க உள்ளனர்.

    இதனால் போதையில் பாலங்களின் மீது மக்கள் பயணம் செய்வது முற்றிலும் தவிர்க்கப்படும் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    புத்தாண்டையொட்டி போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தலைமையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட உள்ளன. சென்னையில் 20 ஆயிரம் போலீசாரும் மாநிலம் முழுவதும் 1 லட்சம் காவலர்களும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

    • நீச்சல் குளத்தின் அருகே மேடை அமைக்க கூடாது.
    • புத்தாண்டு கொண்டாட்டத்தில் போதைப்பொருள் பயன்படுத்தப்பட்டால் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு சீல் வைக்கப்படும்.

    சென்னை:

    சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கமிஷனர் சங்கர் ஜிவால் தலைமையில் இன்று ஓட்டல் உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.

    இந்த கூட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. கூட்டம் முடிந்த பின்னர் தனியார் ஓட்டல் நிர்வாகி சுரேஷ் கூறியதாவது:-

    புத்தாண்டு கொண்டாட்டத்தில் போதை பொருட்களை எடுத்து வர தடை விதிக்கப்பட்டு உள்ளது. கொண்டாட்டங்களுக்கு வருபவர்கள் போதை பொருட்களை வைத்துள்ளார்களா என்று பரிசோதித்த பின்னரே அனுமதிக்கப்படுவார்கள்.

    ஆம்புலன்ஸ் வாகனங்களை தயாராக வைத்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நீச்சல் குளத்தின் அருகே மேடை அமைக்க கூடாது. 80 சதவீதம் அளவுக்கே நபர்களை அனுமதிக்க வேண்டும் என்று போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    பிரச்சினை ஏற்பட்டால் உடனடியாக போலீசாரை அழைக்க வேண்டும் என்பது போன்ற அறிவுரைகளையும் போலீசார் வழங்கினர்.

    1 மணிக்கு மேல் கொண்டாட்டங்களை முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    புத்தாண்டு கொண்டாட்டத்தில் போதைப்பொருள் பயன்படுத்தப்பட்டால் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு சீல் வைக்கப்படும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்கள் முடிவடைந்ததும், அடுத்த 2 வாரத்தில் பொங்கல் பண்டிகை வர உள்ளது.
    • பொங்கல் பண்டிகையையொட்டியும் கூடுதல் மது விற்பனைக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் 5 ஆயிரத்துக்கும் அதிகமான டாஸ்மாக் கடைகள் உள்ளன.

    இந்த மதுக்கடைகளில் தினமும் சராசரியாக 100 கோடி வரையில் மது விற்பனை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் புத்தாண்டு, தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் மது விற்பனை 2 மடங்கை தாண்டுகிறது.

    அந்த வகையில் ஒவ்வொரு பண்டிகை காலங்களில் மது பிரியர்கள் குடித்து கும்மாளமிடுவதை வாடிக்கையாகவே வைத்துள்ளனர்.

    அந்த வகையில் வருகிற புத்தாண்டு தினத்தன்றும் குடிமகன்கள் மது விருந்து மற்றும் கொண்டாட்டத்துக்கு தயாராகி வருகிறார்கள். இதனை கருத்தில் கொண்டு டாஸ்மாக் நிர்வாகம் தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளது.

    கடந்த பொங்கல் தினத்தில் தொடர்ச்சியாக விடுமுறை என்பதால் 3 நாட்களில் ரூ.675 கோடி அளவுக்கு மது விற்பனையாகி இருந்தது. தற்போது ஆங்கில புத்தாண்டையொட்டி சனி, ஞாயிறு 2 நாட்கள் விடுமுறை உள்ளது.

    வார இறுதி நாட்களில் புத்தாண்டு தினம் வருவதால் அதையொட்டி 2 நாட்கள் மதுவிற்பனை களைகட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய 2 நாட்களிலும் சேர்த்து ரூ.300-ல் இருந்து ரூ.400 கோடி வரையில் மது விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    குறைந்த விலை மதுவில் தொடங்கி நடுத்தர மற்றும் விலை உயர்ந்த மதுபானங்கள் என அனைத்துவிதமான சரக்கு வகைகளும் டாஸ்மாக் கடைகளில் தாராளமாக கிடைக்கும் வகையில் இருப்பு வைத்துக்கொள்ள டாஸ்மாக் பணியாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    தினசரி இருக்கும் மதுபானங்களின் அளவை விட 3 மடங்கு கூடுதலாக மதுபானங்களை இருப்பு வைக்க வேண்டும் என்றும், டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அதிகமாக இருந்தால் போலீசாரை பாதுகாப்புக்காக உடனடியாக அழைத்துக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்கள் முடிவடைந்ததும், அடுத்த 2 வாரத்தில் பொங்கல் பண்டிகை வர உள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டியும் கூடுதல் மது விற்பனைக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    ×