search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சு வெங்கடேசன்"

    • என்.சி.இ.ஆர்.டி.யின் 3 ஆம் 6 ஆம் வகுப்பு பாடப் புத்தகங்களில் இருந்து அரசியல் சாசன முகவுரை நீக்கம்.
    • அரசியல் சாசனத்தை வணங்கி பதவியேற்ற பிரதமர் அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுப்பாரா?

    சென்னை:

    மதுரை சு.வெங்கடேசன் எம்.பி. தனது எக்ஸ் தளத்தில்,

    வெறும் பக்கம் அல்ல...

    இந்திய அரசியல் சாசனத்தின் அடிநாதம்...

    என்.சி.இ.ஆர்.டி.யின்

    3 ஆம் 6 ஆம் வகுப்பு பாடப் புத்தகங்களில் இருந்து அரசியல் சாசன முகவுரை நீக்கம்.

    அரசியல் சாசனத்தை வணங்கி பதவியேற்ற பிரதமர் என்.சி.இ.ஆர்.டி.யின் அமைச்சர் மற்றும் அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுப்பாரா? என்று தெரிவித்துள்ளார்.

    • மதுரை எய்ம்ஸ் கட்டப்படுவதற்கு ஏற்பட்டுள்ள காலதாமதத்தை நாங்கள் ஒத்துக்கொள்கிறோம்.
    • ஜே.பி.நட்டா எய்ம்ஸ் குறித்த கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் மதுரை எய்ம்ஸ் பற்றிய எந்த விபரமும் இல்லை.

    பாராளுமன்ற மக்களவையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை விவகாரம் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்து பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா,

    மதுரை எய்ம்ஸ் கட்டப்படுவதற்கு ஏற்பட்டுள்ள காலதாமதத்தை நாங்கள் ஒத்துக்கொள்கிறோம் என்றும் தொழில்நுட்ப காரணங்களால் தான் மதுரையின் தாமதம் ஆகிறது என்று விளக்கம் அளித்தார்.

    இந்நிலையில் எம்.பி. சு.வெங்கடேசன் தனது எக்ஸ் தளத்தில்,

    இன்று மக்களவையில் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா எய்ம்ஸ் குறித்த கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் மதுரை எய்ம்ஸ் பற்றிய எந்த விபரமும் இல்லை.

    அவையில் கேள்வி எழுப்பப்பட்டபோது "ஒப்பந்த புள்ளி கோரப்பட்டதில் தொழிற்நுட்ப பிரச்சனை ஏற்பட்டுவிட்டது விரைவில் சரிசெய்து பணிகளை துவக்கிவிடுவோம்" என்றார்.

    மோடி ஆட்சியில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் நடைபெறும் பணிகளில் மட்டும் தொடர்ந்து தொழில்நுட்ப பிரச்சனைகள் ஏற்படக்காரணம் என்ன? என்று அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

    • சான்சட் டிவி இந்தி திணிப்பு நடவடிக்கையை துவக்கியுள்ளது.
    • மக்களவை செயலகம் மன்னிப்பு கோர வேண்டும்.

    பாராளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் 7-வது முறையாக மத்திய பட்ஜெட்டை நாளை தாக்கல் செய்ய உள்ளார்.

    இன்று பாராளுமன்றத்தில் ஆங்கிலம் அல்லது தங்களது தாய்மொழியில் பேசிய எம்.பி.க்களின் உரையை சான்சட் டிவி அப்படியே ஒளிபரப்பாமல் ஹிந்தி மொழிமாற்றத்தை மட்டும் ஒளிபரப்பியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த விவகாரம் தொடர்பாக மதுரை எம்.பி. சு வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "இன்றைய மக்களவையில் ஆங்கிலம் அல்லது தங்களது தாய்மொழியில் பேசிய எம்.பி.க்களின் பேச்சுகளை சான்சட் டிவி அப்படியே ஒளிபரப்பாமல் ஹிந்தி மொழிமாற்றத்தை மட்டும் ஒளிபரப்பி தனது இந்தி திணிப்பு நடவடிக்கையை துவக்கியுள்ளது.

    இந்தி அல்லாத மொழிகளை பேசும் கோடிக்கணக்கான இந்தியர்களை அவமானப்படுத்திய செயலுக்காக மக்களவை செயலகம் மன்னிப்பு கோர வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

    அதே போல் இந்த விவகாரத்தை தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுப்ரியா சுலே தனது எக்ஸ் பக்கத்தில் விமர்சித்துள்ளார்.

    அவரது பதிவில், "ஆங்கிலம் மற்றும் மாநில மொழிகளில் பேசும் உறுப்பினர்களின் பேச்சை ஹிந்தி மொழிமாற்றத்தை கொண்டு சான்சட் தொலைக்காட்சி ஒலிபரப்பி வருகிறது. இந்தி பேசாத மாநிலங்களின் கோடிக்கணக்கான மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பேச்சை தங்களின் சொந்த மொழிகளில் கேட்பதற்கான மக்களின் உரிமையை பறிக்கும் செயல் இது" என்று தெரிவித்துள்ளார்.

    • அயோத்தி, பிரயாக் ராஜ், இராமநாதபுரம், நாசிக், ராம்டெக், சித்ர கூட் அதனைத் தொடர்ந்து தேவபூமி பத்ரிநாத்திலும் தோல்வியடைந்துள்ளது பாஜக.
    • தீமைகள் வீழ்த்தப்படுவதே இராமகதையின் நியதி.

    பத்ரிநாத் தொகுதியில் பா.ஜ.க. தோல்வி அடைந்ததன் மூலம் ராமபிரானின் அனைத்து திருத்தலங்களிலும் பாஜக தோல்வி அடைந்துவிட்டதாக மதுரை எம்பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

    அயோத்தி, பிரயாக் ராஜ், இராமநாதபுரம், நாசிக், ராம்டெக், சித்ர கூட் அதனைத் தொடர்ந்து தேவபூமி பத்ரிநாத்திலும் தோல்வியடைந்துள்ளது பாஜக.

    ஶ்ரீ இராமபிரானின் திருத்தலங்கள் அனைத்திலும் பாஜக தோல்வி.

    தீமைகள் வீழ்த்தப்படுவதே இராமகதையின் நியதி.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ஜனாதிபதி உரையின்போது நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டனர்.
    • பாராளுமன்றத்தில் இன்று நீட் தேர்வு குறித்து எதிர்க்கட்சிகள் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவர முடிவெடுத்தனர்.

    பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு 18-வது மக்களவை அமைக்கப்பட்டு உள்ளது. புதிய அரசின் முதல் கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்று உரை நிகழ்த்தினார்.

    ஜனாதிபதி உரையின்போது நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டனர்.

    இதைத்தொடர்ந்து பாராளுமன்றத்தில் இன்று நீட் தேர்வு குறித்து எதிர்க்கட்சிகள் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவர முடிவெடுத்தனர்.

    இந்நிலையில் மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் எக்ஸ் தளத்தில்,

    பாராளுமன்றத்தில் நீட் தேர்வு குறித்து எதிர்க்கட்சிகள் ஒத்திவைப்பு தீர்மானம் கொடுக்க முடிவெடுத்த பின் நேற்றிரவு முதல் எங்களின் மின்னஞ்சல் வசதிகள் காலாவதியாவிட்டதாகச் சொல்லி முடக்குவது தான் பாஜக-வின் ஜனநாயக மரபு.

    இந்தச் செயலுக்கு பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ பொறுப்பேற்று விளக்கமளிக்க வேண்டும் என்று கிரண் ரிஜிஜூ வெளியிட்டுள்ள தகவலை அவர் பகிர்ந்துள்ளார்.

     

    பாராளுமன்றத்தில் நீட் தேர்வு முறைகேடு அவசர பிரச்சனையாக விவாதிக்க வேண்டுமென இன்று ஒத்திவைப்பு தீர்மானத்திற்கு கைகளில் எழுதி நோட்டீஸ் கொடுத்துள்ளோம் என்று மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

    • கருத்தைக் கண்டு அஞ்சும் கோழைகளுக்கு அடக்கு முறையே ஆயுதம்.
    • அடக்குமுறையை எதிர் கொள்ளும் கூர்மையான ஆயுதமே கருத்துரிமை.

    சென்னை:

    2010 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அமைதியைச் சீர்லைக்கும் வகையில் பேசியதாக, பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய் மற்றும் முன்னாள் பேராசிரியர் ஷேக் ஷௌகத் ஹுசைன் மீது சட்ட விரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (உபா) கீழ் வழக்குத் தொடர டெல்லி துணை நிலை கவர்னர் வி.கே.சக்சேனா ஒப்புதல் அளித்துள்ளார்.

    இதற்கு மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    அருந்ததி ராய் மீது பாயும் உபா சட்டம். தேர்தலில் பாடம் கற்றுக் கொள்ளாத பாஜக.

    கருத்தைக் கண்டு அஞ்சும் கோழைகளுக்கு அடக்கு முறையே ஆயுதம்.

    அடக்குமுறையை எதிர் கொள்ளும் கூர்மையான ஆயுதமே கருத்துரிமை.

    தேசம் அருந்ததிராயின் பக்கம் நின்று ஜனநாயக விரோதிகளை எதிர்கொள்ளும் என பதிவிட்டுள்ளார்.



    • தியானத்தின்பொழுது இருக்க வேண்டிய சூழல் அமைதி. அது தமிழகத்தில் எப்பொழுதும் இருக்கும்.
    • நல்லவனுக்குப் பரிசாகவும் தீயவனுக்குத் தண்டனையாகவும் விளங்கும் ஆற்றல் நூல்களுக்கு உண்டு.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் விதிமுறைகள் அமலில் இருக்கும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் தியானத்தில் ஈடுபடுவது தேர்தல் விதிமீறல் எனவும், இது தேர்தல் பரப்புரை என்பதால் பிரதமர் மோடி கன்னியாகுமரியில் தியானம் மேற்கொள்ள அனுமதி வழங்கக்கூடாது, பிரதமர் மோடி வருவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் கூறி வந்தனர்.

    இதுகுறித்து, குமரி மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான ஸ்ரீதர், தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவோ, வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாலோ, கட்சி கூட்டம் நடத்தினாலோ தான் சம்பந்தப்பட்ட கட்சியினர் அனுமதி கோருவர். ஆனால் பிரதமரின் வருகையும், தியானமும் தனிப்பட்ட நிகழ்வு என்பதால் யாரும் அனுமதி கோரவில்லை. நாங்களும் அனுமதி கொடுக்கவில்லை. அவரது வருகை தேர்தல் விதிமீறலுக்கு உட்பட்டது அல்ல என்றார்.

    இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி நேற்று முதல் விவேகானந்தர் நினைவு மண்டப தியான மண்டபத்தில் தியானத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    இந்நிலையில், மதுரை பாராளுமன்ற தொகுதி மார்க்சிஸ்ட் வேட்பாளரும், தற்போதைய எம்.பி.யுமான சு.வெங்கடேசன், எக்ஸ் தள பக்கத்தில், திருடர்களின் நிலத்தில் தியானம் எதற்கு? என்ற தலைப்பில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:-

    பிரதமர் மோடி தியானம் செய்வதற்காகக் குமரி முனையில் உள்ள விவேகானந்தர் பாறைக்கு வந்துள்ளார். அவரது தனிப்பட்ட ஈடுபாட்டை கேள்விக்கு உட்படுத்துவது எமது நோக்கமன்று. விவேகானந்தர் பாறை உள்ள மண்டபத்தை அரசதிகாரத்தைச் சார்ந்த ஒருவர் பயன்படுத்துவது தேர்தல் நடத்தை விதிப்படி தவறென்பது அனைவருக்கும் தெரியும், தேர்தல் ஆணையத்தைத் தவிர.

    தியானம் என்ற செயல் நேர்மை என்ற பண்பின் ஈடுபாட்டோடு தொடர்புடையது என்பதை சம்பந்தப்பட்டவர்களே நம்பாதபோது தேர்தல் ஆணையம் ஏன் நம்பவேண்டும்?

    தேர்தல் ஆணையத்தை நேர்மைப்படுத்துவதோ, நேர்மையாளர்களை மட்டுமே தியானம் செய்ய வைப்பதோ நம்முடைய வேலையல்ல. நாம் எழுப்ப நினைப்பது ஒரேயொரு கேள்வியை மட்டுந்தான்.

    தமிழகத்திற்கு தியானம் செய்ய வருவதற்கு முன்பு ஒடிசாவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் புகழ்பெற்ற ஜெகந்நாதர் ஆலயத்தின் பொக்கிஷ அறையின் சாவி தமிழ்நாட்டில் இருப்பதாக கூறினார் மோடி. ஆலயத்தின் பொக்கிஷத்தைக் களவாடும் திருடர்கள் என்ற பழியை தமிழ்நாட்டு மக்கள் மீது சுமத்தினார். இப்பொழுது திருடர்களின் நிலத்தில் தியானம் செய்ய வந்துள்ளார்.

    தியானத்தின்பொழுது இருக்க வேண்டிய சூழல் அமைதி. அது தமிழகத்தில் எப்பொழுதும் இருக்கும். உத்தரபிரதேசத்தில் போய் எங்களை இழித்துப் பேசியதையும், ஒடிசாவில் போய் பழித்துப் பேசியதையும் ஒவ்வொரு தமிழரும் அறிவோம். எங்கோ நின்று பொல்லாங்கு பேசுதலுக்குத் தமிழ் இலக்கியம் சூட்டியுள்ள பெயர் "புறம் பேசுதல்".

    நீங்கள் அங்கு பேசியதை இங்கு பேசி உங்கள் நேர்மையை நிரூபியுங்கள் என்று கூட நாங்கள் கேட்கமாட்டோம். எந்த ஒரு மனிதரிடமும் அவரிடம் இல்லாத ஒன்றை கேட்பது நாகரீகம் அன்று என்பது எங்களுக்குத் தெரியும்.

    திருடர்களின் நிலத்திற்கு வந்துள்ள உங்களுக்கு உரிய எழுத்தாளர் சுரேந்திர மஹாந்தி எழுதிய " நீலமலை" என்கிற நூலைப் பரிசளிக்க விழைகிறோம். விவேகானந்தர் பாறையின் அமைதியான, தனித்த சூழலில் அந்நூலினைப் படிக்க முயலுங்கள்.

    சாகித்ய அகாதமி விருது பெற்று பாராளுமன்ற உறுப்பினரான சுரேந்திர மஹாந்தி எழுதிய நூலினை சாகித்ய அகாதமி விருதுபெற்று பாராளுமன்ற உறுப்பினரான சு. வெங்கடேசனாகிய நான் இதைப் பரிந்துரைப்பதாகக் கூட எடுத்துக் கொள்ளாதீர்கள்.

    நீங்கள் யாரைத் திருடர்கள் என்று கூறினீர்களோ அந்தக் கூட்டத்தின் சார்பாக, திருடு போனதாக நீங்கள் சொன்ன பொருள் பற்றிய பூர்வீக ஆவணம் ஒன்றை உங்களிடம் ஒப்படைக்கிறோம். ஆம், இந்த நூல் ஜெகந்நாதர் கோவிலையும் அதனுடைய பொக்கிஷத்தையும் பற்றியது.

    நல்லவனுக்குப் பரிசாகவும் தீயவனுக்குத் தண்டனையாகவும் விளங்கும் ஆற்றல் நூல்களுக்கு உண்டு. விவேகானந்தருக்கும் எங்களுக்கும் உடன்பாடுள்ள இந்தக் கருத்தில் உங்களுக்கும் உடன்பாடு இருக்குமாயின் இதனைப் படித்து பாருங்கள்.

    ஒடிசாவின் ஒவ்வொரு உயிரிலும் ஜெகந்நாதரின் ஈடுபாட்டுக்கென ஓர் இடம் உண்டு என்பதை முழுமுற்றாக நம்பும் ஒடிசாவின் மைந்தனான சுரேந்திர மஹாந்தியின் எழுத்தை வாசியுங்கள்.

    கங்கை முதல் கோதாவரி வரை பரந்து விரிந்த உத்கல சாம்ராஜ்யத்தின் நிரந்தர அதிபதியாக ஒடிசா மக்களால் காலமெல்லாம் போற்றப்படும் ஜெகந்நாதரின் பொக்கிஷ அறையின் சாவியை மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், கூத்தப்பன்பட்டி கிராமத்தைச் சார்ந்த ஒருவரால் திருடப்பட்டதாகக் கூறுவது ஆன்மீகமா? அரசியலா? அல்லது அருவருப்பா?

    இதற்கும்மேல் பகவான் ஜெகந்நாதர் உங்களின் பக்தர் என்கிறார்கள் உங்கள் கட்சிக்காரர்கள்.

    இரண்டு மாதங்கள் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் தமிழர்கள் திருடர்களாக்கப்பட்டார்கள். தெய்வங்கள் உங்களின் பக்தர்களாக்கப்பட்டார்கள். இப்பொழுது விவேகானந்தர் பாறைக்கு வந்திருக்கிறீர்கள். உங்களின் 45 மணி நேர தியானத்திற்கு பின் உங்கள் விசுவாசிகள் விவேகானந்தரை என்ன சொல்லப் போகிறார்களோ என்ற பதட்டம் தேசத்துக்கு ஏற்பட்டுள்ளது. பகவானே உங்களின் பக்தராக்கப்பட்ட பின் பரமஹம்சரின் எளிய சீடனுக்கு எந்த இடம் மிச்சமிருக்கப் போகிறது?

    இந்து பெண்களின் தாலியில் இருக்கும் தங்கத்தை எடுத்து இஸ்லாம் பெண்களுக்கு எதிர்கட்சிகள் கொடுத்துவிடுவார்கள் என்றும் இஸ்லாமியர்கள் அதிகப் பிள்ளைகளைப் பெற்றுக்கொள்பவர்கள், ஊடுருவல்காரர்கள் என்றெல்லாம் பேசிவிட்டுத்தான் தியான மேடைக்கு வந்திருக்கிறீர்கள். இங்கு வந்த உங்களிடம் சுரேந்திர மஹாந்தியின் நூலினை பரிந்துரைப்பதற்கு காரணம் உண்டு.

    ஜெகந்நாதரின் மரியாதையைக் காக்கும் பொருட்டு சொல்லவொண்ணாத் துயரத்தைச் சந்திக்கும் ஹாபிஸ் காதர் என்கிற இஸ்லாமிய அரசனின் போராட்டமே இந்நூல்.

    நீங்கள் எவ்வளவு வெறுப்பை விதைத்தாலும் இந்தியா மீளும் என்பதற்கு எங்களின் வேர்களே சான்று. நீங்கள் விஷத்தை தெளித்தாலும் விழுங்கி எழும் ஆற்றல் எம்மண்ணுக்கு உண்டு.

    எல்லா மார்க்கத்திலும் மனதை ஒருமுகப்படுத்தும் செயல்முறை உண்டு. மனதை ஒருமுகப்படுத்தலே தியானம். ஆனால் எதில் என்ற கேள்வியில்தான் ஆன்மீகமும் அரசியலும் அடங்கியுள்ளது. நீங்கள் செய்துமுடித்து வந்துள்ள தேர்தல் பிரசாரங்களின் வழியே உங்கள் மனமும் சிந்தனையும் என்னவாக உள்ளது என்பதை நாடறிந்துள்ளது.

    நீங்கள் பேசிய எல்லாவற்றிலிருந்தும் தேசத்தைத் திசை திருப்ப தியானம் பயன்படலாம் என்று நீங்கள் கருதுவீர்களானால் அதில் தோல்வியே அடைவீர்கள். தியாகமும் தியானமும் விளம்பரத்தின் பொருட்டு அமையுமேயானால் அச்செயலுக்கு விவேகானந்தர் சூட்டும் பட்டத்தை நான் இங்கு குறிப்பிட விரும்பவில்லை.

    "இதுவரை இருந்த பிரதமர்களிலே அப்பதவிக்கான தகுதியை மிகவும் தாழ்த்தியவர்" நீங்கள் என மன்மோகன்சிங் சொன்னதை மேலும் தாழ்த்த விவேகானந்தரைச் சான்றாக்க விரும்பவில்லை என கூறியுள்ளார்.


    • கர்நாடகாவிற்கு வறட்சி நிவாரணமாக ரூ.3,454 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது.
    • தமிழ்நாட்டிற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை. மிச்சாங் புயல் மற்றும் வெள்ளத்திற்கு 275 கோடி மட்டுமே.

    மதுரை:

    மிச்சாங் புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு ரூ.115 கோடி நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ள பாதிப்பிற்கு ரூ.160.61 கோடி நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த 24-ந்தேதி மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கிய பரிந்துரையின் அடிப்படையில் நிதியை விடுவிக்க மத்திய நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

    கர்நாடகாவிற்கு வறட்சி நிவாரணமாக ரூ.3,454 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

    கர்நாடகாவில் முதல் கட்டம் சாதகமாக இல்லை போல... வறட்சி நிவாரணம் என ரூ.3454 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டிற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை. மிச்சாங் புயல் மற்றும் வெள்ளத்திற்கு 275 கோடி மட்டுமே. தமிழ்நாடு கேட்டதோ 38,000 கோடி.

    பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல… வன்மம். தீராத வன்மம் என்று தெரிவித்துள்ளார்.


    • தி.மு.க. கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக்கு திண்டுக்கல், மதுரை என 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
    • கடந்த தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மதுரை, கோவையில் போட்டியிட்டு வெற்றி பெற்றது.

    சென்னை:

    தி.மு.க. கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு திண்டுக்கல், மதுரை ஆகிய இரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மதுரை மற்றும் கோவையில் போட்டியிட்டு வெற்றி பெற்று இருந்தது.

    இந்த முறை கோவை தொகுதியை தி.மு.க. தனக்கு வைத்துக்கொண்டு அதற்கு பதில் திண்டுக்கல் தொகுதியைக் கொடுத்துள்ளது.

    திண்டுக்கல் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி 35 ஆண்டுக்கு பிறகு தி.மு.க. கூட்டணியுடன் இணைந்து மீண்டும் போட்டியிட உள்ளது.

    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட்டனர்.

    அதன்படி, திண்டுக்கல் தொகுதியில் மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம், மதுரையில் சு.வெங்கடேசன் மீண்டும் போட்டியிடுகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மதுக்கூர் ராமலிங்கம் சிறந்த எழுத்தாளர், சிறந்த பேச்சாளர் என்பதால் திண்டுக்கல் தொகுதி மக்களை அதிகம் கவர வாய்ப்புள்ளது.
    • மதுக்கூர் ராமலிங்கத்தை திண்டுக்கல் தொகுதியில் வேட்பாளராக நிறுத்த பிரகாசமாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

    சென்னை:

    தி.மு.க. கூட்டணியில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சிக்கு திண்டுக்கல், மதுரை ஆகிய இரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மதுரை மற்றும் கோவையில் போட்டியிட்டு வெற்றி பெற்று இருந்தது.

    இந்த முறை கோவை தொகுதியை தி.மு.க. தனக்கு வைத்துக்கொண்டு அதற்கு பதில் திண்டுக்கல் தொகுதியை கொடுத்து இருக்கிறது.

    திண்டுக்கல் தொகுதியில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி 35 ஆண்டுகளுக்கு பிறகு தி.மு.க. கூட்டணியுடன் இணைந்து மீண்டும் போட்டியிட உள்ளது. 1977-ம் ஆண்டு அந்த தொகுதியில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்டது. அப்போது அ.தி.மு.க. வேட்பாளரிடம் கம்யூனிஸ்டு வேட்பாளர் தோல்வியை தழுவினார்.

    1989-ம் ஆண்டு மீண்டும் போட்டியிட்ட போது மீண்டும் தி.மு.க. கூட்டணியில் களம் இறங்கிய கம்யூனிஸ்டுக்கு தோல்வியே கிடைத்தது. கடந்த 2014-ம் ஆண்டு அந்த தொகுதியில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு போட்டியிட்டு 1.81 சதவீத வாக்குகளே பெற்றது.

    இந்த நிலையில் தற்போது தி.மு.க. கூட்டணியில் 4-வது முறையாக திண்டுக்கல் தொகுதியில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி போட்டியிட உள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பிரமாண்டமான வெற்றி பெற்று இருந்தார்.

    எனவே இந்த தடவை மிக எளிதான வெற்றியை மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி பெற முடியும் என்று தி.மு.க. கூட்டணி தலைவர்கள் நம்புகிறார்கள். அதற்கு ஏற்ப வேட்பாளர்களை தேர்வு செய்ய மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

    திண்டுக்கல் தொகுதியில் இதுவரை மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி வெற்றி பெற்றது இல்லை. ஆனால் திண்டுக்கல் சட்டசபை தொகுதியில் 7 தடவை மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. எனவே இந்த தடவை நிச்சயம் வெற்றியை அறுவடை செய்ய முடியும் என்ற நம்பிக்கையில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி தலைவர்கள் உள்ளனர்.

    இதற்காக 3 பேர் பெயரை மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி தலைவர்கள் வேட்பாளராக தேர்வு செய்து ஆய்வு நடத்தி வருகிறார்கள். மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் என்.பாண்டிக்கு வாய்ப்பு கொடுக்கலாமா? என்று ஆலோசிக்கப்பட்டது.

    இதற்கிடையே தீக்கதிர் பத்திரிகை ஆசிரியர் மதுக்கூர் ராமலிங்கத்தை வேட்பாளராக நிறுத்தலாமா? என்று பரிசீலனை செய்யப்படுகிறது. மதுக்கூர் ராமலிங்கம் சிறந்த எழுத்தாளர், சிறந்த பேச்சாளர் என்பதால் திண்டுக்கல் தொகுதி மக்களை அதிகம் கவர வாய்ப்புள்ளது. எனவே மதுக்கூர் ராமலிங்கத்தை திண்டுக்கல் தொகுதியில் வேட்பாளராக நிறுத்த பிரகாசமாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

    மதுரை தொகுதியில் தற்போது சு.வெங்கடேசன் எம்.பி.யாக உள்ளார். அவரையே மீண்டும் மதுரை வேட்பாளராக நிறுத்தலாமா? என்று மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மூத்த தலைவர்கள் ஆலோசித்து வருகிறார்கள்.

    கடந்த 5 ஆண்டுகளில் சு.வெங்கடேசன் எம்.பி. மதுரை தொகுதிக்கு மிக சிறப்பான சேவை செய்திருப்பதாக தி.மு.க. தலைவர்கள் பாராட்டுகிறார்கள். குறிப்பாக முக்கிய பிரச்சனைகளை உடனுக்குடன் வெளியில் தெரிவித்து அடித்தட்டு மக்களிடம் கொண்டு சேர்ப்பதாக சு.வெங்கடேசனுக்கு நல்ல பெயர் உள்ளது.

    அவரையே மீண்டும் களம் இறக்குமாறு தி.மு.க. தரப்பில் கூறப்பட்டு இருப்பதாக தெரிகிறது.

    • தேர்தல் பத்திர விவரங்களை நாளைக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
    • தேர்தல் பத்திர விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மதுரை எம்.பி சு.வெங்கடேசன் வரவேற்றுள்ளார்

    தேர்தல் பத்திரம் தொடர்பான தகவல்களை இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், எஸ்பிஐ வங்கி கால அவகாசம் கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்தது. இந்த மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது, நன்கொடை அளித்தவர்கள் பெயர்களை கவனமாக ஒப்பிட்டு பார்க்க வேண்டியுள்ளது. அதற்கு கால அவகாசம் வேண்டும் என எஸ்பிஐ வங்கி சார்பில் வாதம் முன் வைக்கப்பட்டிருந்தது.

    ஆனால், எஸ்பிஐ வங்கியின் கோரிக்கையை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், தேர்தல் பத்திர விவரங்களை நாளைக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், தேர்தல் பத்திர விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மதுரை எம்.பி சு.வெங்கடேசன் வரவேற்றுள்ளார்.

    இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அதில், "ஸ்டேட் வங்கியின் தலையில் நீதிமன்றம் சுத்தியல் வைத்துள்ளது. 26 நாட்களாக என்ன செய்தீர்கள்? நாளை விவரங்களை தர வேண்டும். மார்ச் 15 தேர்தல் ஆணையம் இணையத்தில் வெளியிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நீதியின் மீது நம்பிக்கை ஏற்படுத்தும் தீர்ப்பு இது. வரவேற்போம்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

    இதற்கு முன்னதாக தேர்தல் பத்திர விவரங்களை வெளியிட ஜூன் 30-ந்தேதி வரை கால அவகாசம் வேண்டும் என எஸ்.பி.ஐ. உச்சநீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுத்திருந்தது.

    அப்போது, "சந்திராயன் நிலவுக்கு செல்ல 41 நாள் ஆனது. அது நவீன அறிவியலின் சாதனை. மும்பையிலிருக்கும் எஸ்.பி.ஐ. டெல்லியிலிருக்கும் உச்ச நீதிமன்றத்தில் நன்கொடையாளர்களின் பெயரை கொடுக்க 140 நாள் கேட்கிறது. இது நவீன ஊழலின் சாதனை. 48 கோடி வாடிக்கையாளர்களின் நம்பிக்கை எஸ்பிஐ. இனி பின்னொட்டாக Modi Ka Parivar-ஐ இணைத்துக் கொள்ளட்டும் என்று சு. வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தேர்தல் பத்திரம் திட்டம் செல்லாது. உடனடியாக வினியோகத்தை நிறுத்தவும் என நீதிமன்றம் உத்தரவு.
    • தேர்தல் ஆணையம் மார்ச் 31-ந்தேதிக்குள் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய வலியுறுத்தல்.

    தேர்தல் பத்திரம் மூலமாக ஒவ்வொரு கட்சிகளுக்கும் நன்கொடையாளர்கள் அளித்த தொகை உள்ளிட்ட தகவல்களை இந்திய தேர்தல் ஆணையத்திடம் வழங்க வேண்டும்.

    தேர்தல் ஆணையம் மார்ச் 31-ந்தேதிக்குள் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

    இந்த நிலையில் ஜூன் 30-ந்தேதி வரை கால அவகாசம் வேண்டும் என எஸ்.பி.ஐ. உச்சநீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளது.

    இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றன. நவீன தொழில்நுட்ப காலத்தில் அனைத்தும் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்ட நிலையில், அவகாசம் கேட்பது யாரை காப்பாற்றுவதற்கு? என கேள்வி எழுப்பி வருகின்றன.

    இந்த நிலையில் மதுரை தொகுதி எம்.பி.யான ஏ. வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    சந்திராயன் நிலவுக்கு செல்ல 41 நாள் ஆனது.

    அது நவீன அறிவியலின் சாதனை.

    மும்பையிலிருக்கும் எஸ்.பி.ஐ. டெல்லியிலிருக்கும் உச்ச நீமன்றத்தில் நன்கொடையாளர்களின் பெயரை கொடுக்க 140 நாள் கேட்கிறது. இது நவீன ஊழலின் சாதனை.

    48 கோடி வாடிக்கையாளர்களின் நம்பிக்கை எஸ்பிஐ. இனி பின்னொட்டாக Modi Ka Parivar-ஐ இணைத்துக் கொள்ளட்டும்.

    இவ்வாறு சு. வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    ×