search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாலாங்குளத்தில் லேசர் ஷோ"

    • மக்கள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
    • நேரு ஸ்டேடியம் அருகே மாரத்தான் போட்டியும் நடக்கிறது.

    கோவை

    கோவையில் மாநகராட்சி நிர்வாகத்துடன் இணைந்து தனியார் தன்னார்வ அமைப்புகள் சார்பில் ஆண்டு தோறும் கோவையின் வரலாறு, கலாசாரம் ஆகியவற்றை போற்றும் வகையில் கோவை விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டு 15-வது முறையாக கோவை விழா நிகழ்ச்சி நாளை (4-ந் தேதி) தொடங்கி வரும் ஞாயிற்றுக்கிழமை (8-ந் தேதி) வரை நடக்கிறது. இதன் ஒரு பகுதியாக லேசர் ஷோ சுங்கம் வாலாங்குளத்தின் கரைப்பகுதியில் நேற்று முதல் மாலை நேரத்தில் காட்சிப் படுத்தப்படுகிறது.

    இதனை மாவட்ட கலெக்டர் சமீரன், மாநகர போலீஸ் கமிஷனர் பால கிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்று தொடங்கி வைத்தனர். இந்த லேசர் ஷோவை அதிகளவிலான மக்கள் குடும்பத்தினருடன் வந்து புகைப்படங்கள், வீடியோ எடுத்து பார்த்து ரசித்தனர்.

    வரும் 8-ந் தேதி வரை லேசர் ஒளிக்காட்சி நிகழ்ச்சி நடக்கிறது. இதனை தொடர்ந்து நாளை காலை 9 மணி முதல் பீளமேட்டில் உள்ள தனியார் கலை, அறிவியல் கல்லூரி வளாகத்தில் மாற்றுத்திறனாளி களுக்கான விளையாட்டுப் போட்டி நடக்கிறது.

    மேலும், அன்றைய தினம் காலை 10 மணிக்கு ஒருமை பயணம் என்ற பெயரில், பல்வேறு மதம் சார்ந்த இடங்களுக்கு செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது. இறுதியாக போத்தனூரில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் உறுதிமொழி எடுக்கப்படுகிறது.

    நாளை மறுநாள் (5-ந்தேதி) ரேஸ்கோர்சில் இருந்து சரவணம்பட்டி வரை பழங்கால கார்களின் அணிவகுப்பு ஊர்வலமும், சுங்கம் வாலாங்குளம் கரையில் மாலை 6 மணி முதல் இரவு 9.30 மணி வரை உணவு, இசை, கலாச்சார நிகழ்ச்சிகளும் நடக்கிறது.

    சனிக்கிழமை (7-ந் தேதி) ஆர்ட் ஸ்ட்ரீட் என்ற பெயரில் உள்ளூர் ஓவியர்களின் வரைபடக் கண்காட்சி, கலந்துரையாடல் நிகழ்வு ரேஸ்கோர்ஸ் நடைபாதையில் நடக்கிறது. அன்று காலை 10 மணிக்கு கொடிசியா அரங்கில் செட்டிநாடு திருவிழா நிகழ்ச்சியும், தனியார் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் வேளாண் கண்காட்சியும் நடக்கிறது.இறுதி நாளான ஞயிற்றுக்கிழமை (8-ந் தேதி) கோவை நேரு ஸ்டேடியம் அருகே மாரத்தான் போட்டியும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினர் செய்துள்ளனர்.   

    ×