search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உயர்கல்வி ஊக்கத்தொகை"

    • தேசிய குழந்தைத் தொழிலாளர் சிறப்பு பள்ளிகள் ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்று வந்தது.
    • இத்திட்டத்தை மாநில அரசு ஏற்று நடத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    ஒன்றிய அரசின் நிதி உதவியில் 2005-ம் ஆண்டு முதல் கடந்த மார்ச் மாதம் வரை தேசிய குழந்தைத் தொழிலாளர் சிறப்பு பள்ளிகள் ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்று வந்தது.

    இந்நிலையில் இனிவரும் ஆண்டுகளில் இத்திட்டத்தை மாநில அரசு ஏற்று நடத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    14 வயதுக்கு உட்பட்ட குழந்தைத் தொழிலாளர்களாக இருந்து மீட்கப்பட்டவர்கள் மற்றும் பள்ளியில் இடைநின்ற மாணவ, மாணவிகளுக்கான இச்சிறப்பு பள்ளிகளில் 8-ம் வகுப்பு வரை பயின்றவர்கள் முறைசார் பள்ளிகளில் சேர்க்கப்பட்டு 10-ம்வகுப்பு முதல் பிளஸ்-2 வரை தொடர்கல்வி பயில்வதை இத்திட்ட பணியாளர்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வந்தது.

    தொடர்ச்சியாக தொழிற்பயிற்சி நிலையம், பாலிடெக்னிக்கல்லூரி, கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரி, வேளாண்மைக் கல்லூரி போன்றவற்றில் உயர்கல்வி பயிலும் முன்னாள் குழந்தைத் தொழிலாளர் திட்ட சிறப்பு பள்ளி மாணவ- மாணவிகளுக்கு மாநில அரசின் ஊக்கத்தொகையாக மாதம் ரூ.500 வீதம் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில் இத்தொகை இருமடங்காக உயர்த்தப்பட்டு மாதம் ரூ.1000 வீதம் ஆண்டுக்கு ரூ.12 ஆயிரமாக நடப்பாண்டில் உயர்த்தி மாநில அரசின் தொழிலாளர் மற்றும் திறன்வளர்ப்புத்துறை உத்தரவிட்டுள்ளது.

    ஆகவே இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி இத்திட்டத்தின் முன்னாள் மாணவர்கள் ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் உயர்கல்வி ஊக்கத்தொகை பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறது.

    தற்போது பயிலும் கல்லூரி முதல்வரின் அத்தாட்சி சான்று, 10 அல்லது 12-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், வங்கிக்கணக்குப்புத்தக நகல், 2 புகைப்படங்கள், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை திட்ட இயக்குநர், குழந்தைத் தொழிலாளர் திட்டம் , 6-வது தளம், மாவட்ட ஆட்சியரகம், ஈரோடு என்னும் முகவரிக்கு நேரில் அல்லது அஞ்சல் வழியாக விரைவில் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    ×