search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாகர்கோவில் மாநகர்"

    • கடைகளிலிருந்து குப்பைகளை வெளியே கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
    • மேயர் மகேஷ் தகவல்

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் டதி பள்ளியில் இருந்து வேப்பமூடு வரை ரூ. 2 கோடி செலவில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. டதி பள்ளி பகுதியில் கார் பார்க்கிங் வசதியும் செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது இந்த பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த பணிகளை மாநகராட்சி மேயர் மகேஷ் இன்று காலை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது அந்த பகுதியில் கழிவு நீர் ஓடை மழை நீர் ஓடைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அந்த பகுதியில் இருந்து ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற மேயர் மகேஷ் உத்தரவிட்டார். வேப்பமூடு பகுதியில் மேயர் மகேஷ் ஆய்வு செய்தபோது அந்த பகுதியில் உள்ள கடைக்காரர்கள் குப்பைகளை சாலை ஓரத்தில் போட்டிருந்ததை பார்த்தார். அதை உடனே அகற்ற உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து மேயர் மகேஷ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாகர்கோவில் டதி பள்ளியில் இருந்து வேப்பமூடு வரை உள்ள சாலை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சாலை சீரமைப்பு பணிகள் விரைவில் முடிக்கப்படும். அதன்பிறகு அந்த பகுதியில் இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் சாலை ஓரத்தில் நிறுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் .

    இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை அதற்கான ஒதுக்கப்பட்ட பகுதியில் மட்டுமே நிறுத்த வேண்டும். கோர்ட் ரோட்டில் சில இடங்களில் ஆக்கிரமிப்புகள் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அந்த ஆக்கிரமிப்புகளை பாரபட்சமின்றி அகற்ற உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். நாகர்கோவில் மாநகரை குப்பையில்லா நகரமாக மாற்ற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். கடைகளிலிருந்து குப்பைகளை வெளியே கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின் போது மண்டல தலைவர் ஜவகர், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் சதாசிவம், பகுதி செயலாளர் ஷேக் மீரான் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    ×