search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு"

    • நேற்று மாலை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகின.
    • கருத்துக்கணிப்புகள் கள நிலவரத்தை பிரதிபலிக்கவில்லை.

    கொல்கத்தா:

    7 கட்டங்களாக நடந்த பாராளுமன்ற தேர்தல் நேற்று முன்தினம் நிறைவடைந்தது. அதன்பிறகு நேற்று மாலை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகின.

    இதில் பா.ஜ.க ஹாட்ரிக் வெற்றி பெறும் என பெரும்பாலான நிறுவனங்கள் தெரிவித்து உள்ளன. மேற்கு வங்காளத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரசை விட பா.ஜ.க அதிக இடங்களை கைப்பற்றும் என்றும் கூறியிருந்தன. இந்த கருத்துக்கணிப்புகளை மாநில முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி நிராகரித்து உள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறுகையில், "தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் எவ்வாறு எடுக்கப்படுகின்றன என்பதை கடந்த 2016, 2019 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் நாங்கள் பார்த்தோம். எந்த கணிப்பும் இதுவரை சரியாக இருக்கவில்லை.

    இந்த கருத்துக்கணிப்புகள் ஊடகங்களுக்காக சிலரால் 2½ மாதங்களுக்கு முன்னரே வீட்டில் தயாரிக்கப்படுகின்றன. அவற்றுக்கு எந்த மதிப்பும் இல்லை. இவை கள நிலவரத்தை பிரதிபலிக்கவில்லை.

    தேர்தல் களத்தில் பிளவுபடுத்துவதற்கு பா.ஜ.க. முயற்சித்த விதம் மற்றும் முஸ்லிம்கள், தலித்துகள், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை பறிக்கிறார்கள் என்று தவறான தகவலை பரப்பியது போன்றவற்றால் பா.ஜ.க.வுக்கு முஸ்லிம்கள் வாக்களிப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை.

    மேற்கு வங்காளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டும், காங்கிரசும் பா.ஜ.க.வின் வெற்றிக்கு உதவியிருக்கும் என நினைக்கிறேன். இந்தியா கூட்டணிக்கான வாய்ப்பை பொறுத்தவரை, அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் உத்தவ் தாக்கரே ஆகியோர் சிறப்பாக செயல்பட்டனர்.

    மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலையிடாதவரை அந்த அரசில் பங்கேற்பதற்கு எந்த தடையும் இருக்காது. எங்களை அழைத்தால் செல்வோம். ஆனால் முதலில் தேர்தல் முடிவுகள் வரட்டும்" என்று மம்தா பானர்ஜி கூறினார்.

    • தி.மு.க. கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக்கு திண்டுக்கல், மதுரை என 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
    • கடந்த தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மதுரை, கோவையில் போட்டியிட்டு வெற்றி பெற்றது.

    சென்னை:

    தி.மு.க. கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு திண்டுக்கல், மதுரை ஆகிய இரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மதுரை மற்றும் கோவையில் போட்டியிட்டு வெற்றி பெற்று இருந்தது.

    இந்த முறை கோவை தொகுதியை தி.மு.க. தனக்கு வைத்துக்கொண்டு அதற்கு பதில் திண்டுக்கல் தொகுதியைக் கொடுத்துள்ளது.

    திண்டுக்கல் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி 35 ஆண்டுக்கு பிறகு தி.மு.க. கூட்டணியுடன் இணைந்து மீண்டும் போட்டியிட உள்ளது.

    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட்டனர்.

    அதன்படி, திண்டுக்கல் தொகுதியில் மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம், மதுரையில் சு.வெங்கடேசன் மீண்டும் போட்டியிடுகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியுடனும் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
    • தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட தி.மு.க. கூட்டணி தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலுக்கு சில மாதங்களே இருக்கும் நிலையில் தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.

    தி.முக. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கி நடைபெற்று வருகிறது.

    தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்துவதற்காக காங்கிரஸ் மேலிட தலைவர்கள் முகுல் வாஸ்னிக், சல்மான்குர்ஷித் ஆகியோர் சென்னை வந்து இருந்தனர். அவர்கள் சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு நேரில் சென்று தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட தலைவர்களும் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.

    தி.மு.க. கூட்டணியில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் 9 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 8 இடங்களில் வெற்றி பெற்றது.

    இந்த முறை அதைவிட கூடுதல் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று காங்கிரஸ் தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த தேர்தலை விட குறைவான இடங்களே காங்கிரசுக்கு கிடைக்க வாய்ப்பு இருப்ப தாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள மற்ற கட்சிகளுடனும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்திய கம்யூனிஸ்டு கட்சியுடன் முதல்கட்ட பேச்சுவார்த்தை முடிந்துள்ள நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, ம.தி.மு.க.வுடன் இன்று முதல் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    தி.மு.க. கூட்டணி தொகுதி பங்கீட்டு குழுவில் இடம் பெற்றுள்ள டி.ஆர்.பாலு, ராசா, பொன்முடி, ஐ.பெரியசாமி ஆகியோருடன் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு குழுவில் இடம் பெற்றுள்ள சம்பத், சண்முகம், கனக ராஜ், குணசேகரன் ஆகியோர் இன்று பேச்சு நடத்தினர்.

    இந்த பேச்சுவார்த்தையின்போது மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு போட்டியிட விரும்பும் தொகுதிகளின் விருப்ப பட்டியலை கொடுத்தனர்.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் மதுரை, கோவை ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி இந்த முறை கூடுதலாக தொகுதிகளை கேட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தென்காசி, கன்னியாகுமரி, மதுரை, கோவை, நாகப்பட்டினம் ஆகிய 5 தொகுதிகளின் விருப்ப பட்டியலையும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி வழங்கியுள்ளது.

    இன்று காலையில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியுடன் பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், அதைத் தொடர்ந்து

    ம.தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவினரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    ம.தி.மு.க. நிர்வாகிகள் அர்ஜுனராஜ், செந்தில் அதிபன், ஆவடி அந்தரிதாஸ், சேஷன் ஆகியோர் தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த பேச்சுவார்த்தையின்போது ம.தி.மு.க. சார்பில் 2 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மேல்-சபை எம்.பி. பதவி ஒன்றை தர வேண்டும் எனவும் கேட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    திருச்சி, விருதுநகர், காஞ்சிபுரம், கடலூர், ஈரோடு உள்பட 6 தொகுதிகளை விருப்ப தொகுதிகளாக தேர்வு செய்து அதற்கான பட்டியலை ம.தி.மு.க. நிர்வாகிகள் வழங்கி இருப்பதும் தெரிய வந்துள்ளது.

    அடுத்த கட்டமாக விடுதலை சிறுத்தைகள் கட்சி. முஸ்லிம் லீக் கட்சியுடன் 12-ந்தேதி பேச்சு நடத்தப்படுகிறது.

    கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியுடனும் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இப்படி கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை விரைந்து முடிப்பதற்கு தி.மு.க. தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

    காங்கிரஸ் கட்சியுடன் முதல்கட்ட பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்துள்ள நிலையில் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை விரைவில் நடைபெற உள்ளது. இதற்கிடையே அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலை வர் மல்லிகாார்ஜூன கார்கே வருகிற 13-ந்தேதி சென்னை வருகிறார். அப்போது காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் இறுதி செய்யப்படும் என்று தெரிகிறது.

    சென்னை வரும் கார்கே தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினை சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்புக்கு பிறகு தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை பற்றிய விவரங்கள் மற்றும் போட்டியிடும் தொகுதிகள் ஆகியவை பற்றிய விவரங்கள் வெளியாக உள்ளது.

    இதைத் தொடர்ந்து கம்யூனிஸ்டு கட்சிகள், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் இடங்கள் பற்றிய விவரங்களும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த மாத இறுதிக்குள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை முடித்து போட்டியிடும் தொகுதிகளை பிரித்துக்கொள்ள தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் முடிவு செய்து உள்ளன. இதன் பின்னர் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட தி.மு.க. கூட்டணி தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

    கூட்டணியில் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தி இருக்கும் தி.மு.க. தேர்தல் அறிக்கையை தயாரிப்பதிலும் முழு கவனம் செலுத்தி வருகிறது. தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இடம் பெற வேண்டிய அம்சங்கள் குறித்து பொது மக்களின் கருத்துக்களை கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதற்காக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள தி.மு.க. தேர்தல் அறிக்கை குழு தூத்துக்குடியில் இருந்து சுற்றுப்பயணத்தை நாளை தொடங்குகிறது. இதன் பின்னர் பல்வேறு ஊர்களுக்கு சென்று இந்த குழு கருத்துக்களை கேட்கிறது.

    இதன் மூலம் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை மற்றும் தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணி ஆகியவற்றை இறுதி செய்யும் பணிகளில் தி.மு.க. வேகம் காட்டி உள்ளது. இதனால் தேர்தல் களம் களை கட்டியுள்ளது.

    • மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் பேட்டி
    • குமரி மாவட்டத்தில் வரும் 7-ந் தேதி நடக்கிறது

    நாகர்கோவில், ஆக.26-நாகர்கோவிலில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வருகிற 1-ந்தேதி முதல் 7-ந் தேதி வரை 4 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி பிரச்சார பயணம் மேற்கொள்கிறது. 7-ந்தேதி அன்று மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் ெரயில் நிலையங்கள் முன்பு மறியல் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது.

    குமரி மாவட்டத்தை பொருத்தமட்டில் 3-ந்தேதி நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கம் முன்பு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் கலந்து கொள்கிறார்.

    7-ந்தேதி 17 இடங்களில் மறியல் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. வருகிற 1-ந் தேதி குமரி மாவட்டத்தில் 4 இடங்களில் பிரச்சார நடைபயணம் தொடங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் உணவுப் பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. காய்கறிகள், அரிசி விலையும் கடுமையாக உயர்ந்துள்ளதால் ஏழை எளிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தேங்காபட்டணம் துறைமுகத்தில் உரிய திட்டமிடுதல் இல்லாத காரணத்தினால் தான் விபத்துக்கள் நடந்து வருகிறது. இதில் மாநில அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். நீரோடி முதல் ஆரோக்கியபுரம் வரை உள்ள கடற்கரை கிராமங்களில் கடல் தடுப்புச் சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். குமரி மாவட்டத்தில் சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இந்து சமய அறநிலை துறை கோயில்களில் அரசியல் புகுத்தப்படுகிறது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது மாவட்ட செயலாளர் செல்லசாமி, முன்னாள் எம்.பி. பெல்லார்மின், முன்னாள் எம்.எல்.ஏ. லீமாரோஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • முதலமைச்சரின் ஆலோசனை இன்றி அமைச்சர்களை நியமிக்கவோ நீக்கவோ கவர்னருக்கு அதிகாரம் இல்லை.
    • கவர்னர் ஆர்.என்.ரவி, மாநில அரசியலிலும், மாநில அரசு நிர்வாகத்திலும் தலையிடும் வகையில் தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

    சென்னை:

    மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமைக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழக அமைச்சர் செந்தில்பாலாஜியை கவர்னர் ஆர்.என்.ரவி பதவி நீக்கம் செய்ததற்கு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது. இது முழுக்க முழுக்க அரசியல் சாசனத்துக்கு எதிரான செயல். முதலமைச்சரின் ஆலோசனை இன்றி அமைச்சர்களை நியமிக்கவோ நீக்கவோ கவர்னருக்கு அதிகாரம் இல்லை.

    கவர்னர் ஆர்.என்.ரவி, மாநில அரசியலிலும், மாநில அரசு நிர்வாகத்திலும் தலையிடும் வகையில் தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். ஒரு அமைச்சரை பதவி நீக்கம் செய்வதற்கான மூர்க்கத்தனமான நடவடிக்கையை நிறுத்தி வைத்தாலும், அவர் கவர்னர் பதவியை வகிக்க தகுதியற்றவர் என்பதை தெளிவாக காட்டுகிறது. அவரை உடனடியாக ஜனாதிபதி திரும்ப அழைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • திரௌபதி அம்மன் கோவிலில் தலித் மக்கள் கோவிலுக்குள் சென்று இறைவழிபாடு நடத்த அனுமதிக்கப்படுவதில்லை.
    • தலித் மக்கள் சென்று வழிபடுவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அனுப்பி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

    விழுப்புரம் மாவட்டம், கோலியனூர் ஒன்றியம், மேல்பாதி கிராமத்தில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திரௌபதி அம்மன் கோவிலில் தலித் மக்கள் கோவிலுக்குள் சென்று இறைவழிபாடு நடத்த அனுமதிக்கப்படுவதில்லை. இந்தாண்டு கோவில் திருவிழாவின் போது கோவிலுக்குள் சென்ற தலித் இளைஞர் கதிரவன் என்பவர் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளதுடன் சாதியைச் சொல்லி இழிவாகத் திட்டி அவமானப்படுத்தப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தும் இதுவரை தாக்குதல் தொடுத்தவர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை.

    எனவே, தமிழ்நாடு அரசு தலையிட்டு தலித் மக்களின் உரிமைகளை நிலைநாட்டும் வகையில் இக்கிராமத்தில் நிலவும் தீண்டாமை கொடுமைகளுக்கு முடிவுகட்டுவதோடு திரௌபதி அம்மன் கோவிலுக்குள் தலித் மக்கள் சென்று வழிபடுவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் பேருள்ளம் நடுநிலையாளர்களால் போற்றப்பட்டு வருகிறது.
    • தமிழ்நாடு சி.பி.எம். கட்சியை தவறாக யாரோ வழிநடத்தி வருகிறார்கள் என்பதுதான் நம்முடைய சந்தேகம்.

    சென்னை:

    மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான டி.கே. ரங்கராஜன் கோயம்பேட்டில் நடந்த மே தின விழாவில் பேசும்போது தமிழகத்தை தி.மு.க. அரசு ஆட்சி செய்கிறதா? அல்லது அதிகாரிகளும் முதலாளிகளும் சேர்ந்து ஆட்சி செய்கிறார்களா? என்று பேசி இருந்தார்.

    அரசாங்கத்தை அதிகாரிகள் தவறாக வழிநடத்துகிறார்கள். தி.மு.க. அரசு தொடர்ந்து இருக்க வேண்டுமானால் இந்த சட்டத்தை கொண்டுவர காரணமாக அதிகாரிகளையும் பணியில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.

    டி.கே.ரங்கராஜனின் இந்த பேச்சுக்கு தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அதில் எழுதி இருப்பதாவது:-

    தொழிலாளர் சட்டத்தில் ஒரு திருத்தம் தமிழ்நாடு அரசால் கொண்டு வரப்பட்டது. அதில் தொழிற் சங்கத்தினர், அரசியல் இயக்கங்கள் சில விமர்சனங்களை வைத்தார்கள். சந்தேகங்களைக் கிளப்பினார்கள். உடனடியாக இரண்டே நாளில் அந்த திருத்த சட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திரும்பப் பெற்று விட்டார்.

    மக்களாட்சியின் மாண்பையும், ஜனநாயகத்தின் குரலையும் அந்த அளவுக்கு கண்ணைப் போலக் காத்து நின்றார் 'திராவிட மாடல்' முதலமைச்சர்.

    மக்களாட்சியின் அறத்தை, அரசியல் அறத்தை இதைவிட மதிக்கும் தன்மை வேறு எதுவும் இருக்க முடியாது.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் பேருள்ளம் நடுநிலையாளர்களால் போற்றப்பட்டு வருகிறது. ஆனால் அதனைத் தாங்கிக் கொள்ள முடியாத வகையில் சி.பி.எம். கட்சியில் சிலபேர் இருக்கிறார்கள் என்பதை அறிய முடிகிறது.

    அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான டி.கே.ரங்கராஜன். கோயம்பேட்டில் நடந்த மே தின விழாவில் பேசும்போது, தமிழ்நாடு அரசு குறித்த தவறான கற்பிதங்களை உருவாக்கி உள்ளார்.

    'தமிழகத்தை தி.மு.க. அரசு ஆட்சி செய்கிறதா? அல்லது அதிகாரிகளும் முதலாளிகளும் சேர்ந்து ஆட்சி செய்கிறார்களா? அதிகாரிகள் அரசை தவறாக வழிநடத்துகிறார்கள். தி.மு.க. அரசு தொடர்ந்து இருக்க வேண்டுமானால், இந்தச் சட்டத்தை கொண்டுவரக் காரணமான அதிகாரிகளையும் பணியில் இருந்து விடுவிக்க வேண்டும்" என்று பேசி இருக்கிறார்.

    தி.மு.க. அரசை அதிகாரிகள் தவறாக வழிநடத்துகிறார்கள் என்ற தவறான தகவலை டி.கே.ஆருக்கு சொன்னது யார்? எதைவைத்து அவர் சொல்கிறார்? எந்த முதலாளி இந்த ஆட்சியை நடத்துகிறார்? டி.கே.ஆர். இதனைச் சொல்ல வேண்டும்.

    பொத்தாம் பொதுவாக நாலாந்தரப் பேச்சாளர் போல கூட்டணியில் இருந்து கொண்டே பொது வெளியில் கூக்குரலிடுவதுதான் கூட்டணி தர்மமா?

    அப்படி ஒரு அவதூறு குற்றச்சாட்டை கூட்டணிக் கட்சியான சி.பி.எம்., தனது அதிகாரப்பூர்வ நாளிதழில் தலைப்பு போட்டு வெளியிடலாமா?

    இரண்டே நாளில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்த சட்டத்தை திரும்ப பெற்றாரே? டி.கே.ஆர். சொல்லும் 'முதலாளி' அப்போது எங்கே போனார்? என்ன குற்றச்சாட்டு இது? எத்தகைய வன்மம் டி.கே.ஆர். மனதில் இருந்தால் இப்படிப் பேசுவார்?

    தமிழ்நாடு சி.பி.எம். கட்சியை தவறாக யாரோ வழிநடத்தி வருகிறார்கள் என்பதுதான் நம்முடைய சந்தேகம்.

    சில நாட்களுக்கு முன்னால், அக்கட்சியைச் சேர்ந்த வே.மீனாட்சி சுந்தரம் எழுதிய நூல் ஒன்றை, அக்கட்சியின் சார்பில் வெளியிட்டுள்ளது. சர்வாதிகார இந்துத்துவா மாடலுக்கு திராவிட மாடல் மாற்றாகுமா? என்பது தலைப்பு.

    பிரதமர் மோடியையும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினையும் கார்ட்டூன் போட்டுள்ளார்கள். 'திராவிட மாடல்' மாற்றாகாது என்று சொல்லும் இந்த நூல், 95 ஆண்டு காலம் தமிழ்ச் சமுதாயத்துக்காக உழைத்த தலைவர் கலைஞரை கொச்சைப்படுத்துகிறது.

    'திராவிடம்' என்பது இன வாதமாம். நிறை குறைகளைச் சொல்கிறோம் என்ற போர்வையில் திராவிட இயக்கத்தை குறிப்பாக தலைவர் கலைஞரை கொச்சைப்படுத்தும் நூலை வெளியிட்டு மகிழ்ந்துள்ளார்கள். இத்தகையவர்களால்தான் சி.பி.எம். வழி நடத்தப்படுகிறதோ? அதன் குரல்தான் டி.கே.ஆர். போன்றோரது குரலோ? இதுதான் சி.பி.எம்.குரலா? என்பதே நமது கேள்வி!

    'தி.மு.க. அரசு தொடர்ந்து இருக்க வேண்டுமானால்....' என்று சொல்லும் தகுதியோ, யோக்கிய தையோ டி.கே.ஆர். போன்றோருக்கு இல்லை.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • எதிர்ப்பு தெரிவித்த மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் தமிழகத்தில் கவர்னர் செல்லும் இடங்களில் எல்லாம் கருப்பு கொடி காட்டுவோம் என அறிவித்தனர்.
    • 50க்கும் மேற்பட்ட மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் மாவட்ட செயலாளர் பத்மநாபன் தலைமையில் சிட்ரா சிக்னல் அருகே குவிந்தனர்.

    கோவை:

    தமிழக கவர்னர் 5 நாள் பயணமாக 8-ந் தேதி ஊட்டிக்கு வந்தார்.

    இன்று அவர் ஊட்டியில் இருந்து கார் மூலமாக கோவைக்கு வந்தார். பின்னர் கோவை ஈஷா யோகா மையத்திற்கு சென்ற அவர், கோவை விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு செல்ல இருந்தார்.

    இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு விழா ஒன்றில் பங்கேற்ற கவர்னர் ஆர்.என்.ரவி காரல்மார்க்ஸ் குறித்து இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக கூறப்படுகிறது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் தமிழகத்தில் கவர்னர் செல்லும் இடங்களில் எல்லாம் கருப்பு கொடி காட்டுவோம் என அறிவித்தனர்.

    இந்த நிலையில் ஊட்டியில் இருந்து இன்று சென்னை திரும்புவதற்காக கோவை விமான நிலையத்திற்கு கவர்னர் வருவதை அறிந்ததும், 50க்கும் மேற்பட்ட மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் மாவட்ட செயலாளர் பத்மநாபன் தலைமையில் சிட்ரா சிக்னல் அருகே குவிந்தனர்.

    அவர்கள் சாலையோரம் நின்றபடி கவர்னர் ரவிக்கு எதிராக கருப்பு கொடி காட்ட முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

    பின்னர் போலீசார் கவர்னருக்கு கருப்பு கொடி காட் முயன்ற மாவட்ட செயலாளர் பத்மநாபன் உள்பட 50க்கும் மேற்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினரை கைது செய்தனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து கவர்னர் ஆர்.என்.ரவி சென்னை புறப்பட்டு சென்றார்.

    • தமிழ்நாட்டின் பெருமைகளையும், சட்டப்பேரவையின் மாண்புகளையும் சிதைத்து அரசியல் சாசன சட்டத்திற்கு விரோதமாக செயல்படுகிறார்.
    • ஒன்றிய அரசு கவர்னரை திரும்ப பெற வேண்டும்.

    சென்னை:

    தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பதவி விலகக்கோரி மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கவர்னர் மாளிகை முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டது.

    சைதாப்பேட்டை சின்னமலையில் ஆர்ப்பாட்டம் நடத்த போலீஸ் அனுமதி அளித்தது. அங்கு தடுப்பு வேலி அமைக்கப்பட்டு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை சேர்ந்த தொண்டர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் அங்கு குவிந்தனர். முற்றுகை போராட்டம் மாநில தலைவர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் நடந்தது.

    அரசியல் தலைமைகுழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்திய குழு உறுப்பினர்கள் சம்பத், வாசுகி, சண்முகம், வெங்கடேசன் எம்.பி., சின்னதுரை எம்.எல்.ஏ. மற்றும் மாவட்ட செயலாளர்கள் சுந்தர்ராஜன், செல்வா, வேல்முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    பின்னர் கே.பாலகிருஷ்ணன் பேசியதாவது:-

    தமிழ்நாடு பெயர் பயன்படுத்த கவர்னர் ஆர்.என். ரவி மறுத்தது தமிழ்நாட்டுக்கான நீண்ட நெடிய போராட்டத்தை சிறுமைப்படுத்தும் செயலாகும். தமிழக அரசுக்கு எதிராக பொதுஇடங்களில் பேசி வருகிறார்.

    தமிழ்நாட்டின் பெருமைகளையும், சட்டப்பேரவையின் மாண்புகளையும் சிதைத்து அரசியல் சாசன சட்டத்திற்கு விரோதமாக செயல்படுகிறார். கூட்டாட்சி தத்துவத்தை சீர்குலைக்கும் கவர்னர் ஆர்.என்.ரவி பதவியை விட்டு வெளியேற வேண்டும். ஒன்றிய அரசு அவரை திரும்ப பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மாநில நிர்வாகிகள் தொடர்ந்து பேசியதையடுத்து கவர்னர் மாளிகையை நோக்கி பேரணியாக செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து மறித்தனர். பின்னர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட அனைவரையும் போலீசார் கைது செய்து வேனில் அழைத்து சென்றனர்.

    ×