search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேஎஸ் தென்னரசு"

    • முதல் 5 சுற்றுகள் முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 39,855 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
    • அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு 13,515 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா 1,620, தே.மு.தி.க. வேட்பாளர் ஆனந்த் 290 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை தொடங்கியது. முதல் 5 சுற்றுகள் முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 39,855 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

    அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு 13,515 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா 1,620, தே.மு.தி.க. வேட்பாளர் ஆனந்த் 290 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஜனநாயகத்திற்கு மதிப்பில்லை, பணநாயகம் வென்றுவிட்டது என தேர்தல் முடிவு குறித்து அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு கூறியுள்ளார்.

    • 25 வது வார்டில் மட்டும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மந்தமாக செயல்படுகின்றனர்.
    • வாக்காளர்களை வெகுநேரம் காத்திருக்க வைப்பதாக கே.எஸ்.தென்னரசு குற்றம்சாட்டினார்.

    ஈரோடு:

    ஈரோடு கருங்கல்பாளையம் கள்ளுப்பிள்ளையார்கோவில் வீதியில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு வாக்களித்தார்.

    வாக்களித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ்.தென்னரசு, தேர்தலில் 100 சதவீதம் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்றுவருகிறது என்றார்.

    முன்னதாக, வாக்கை செலுத்தி விட்டு மற்ற வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறும் வாக்குப்பதிவை கே.எஸ். தென்னரசு கண்காணித்தார். கிருஷ்ணாபாளையம் 25 வது வார்டில் மட்டும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மந்தமாக செயல்படுவதாகவும் வாக்காளர்களை வெகுநேரம் காத்திருக்க வைப்பதாகவும் குற்றம்சாட்டினார்.

    • தி.மு.க. அரசுக்கு எதிரான விஷயங்களை மக்கள் மத்தியில் எடுத்துச் சென்று பிரசாரம் செய்ய எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.
    • காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனுக்கு கடுமையான போட்டியை ஏற்படுத்த முடியும் என்று கணக்கு போட்டுள்ள எடப்பாடி ஆதரவாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    சென்னை:

    ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் தென்னரசுக்கு இரட்டை இலை சின்னம் கிடைப்பது உறுதியாகி இருக்கிறது. இன்று அவர் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார்.

    இரட்டை இலை சின்னம் தங்கள் அணிக்கு கிடைத்திருப்பதை எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் உற்சாகத்தோடு கொண்டாடி வருகிறார்கள். இதைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் களத்தில் முன்பை விட சுறுசுறுப்புடனும் வேகத்துடனும் அ.தி.மு.க.வினர் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    வருகிற 9-ந்தேதி அன்று ஈரோட்டில் அ.தி.மு.க. வேட்பாளர் தென்னரசு அறிமுக கூட்டம் நடைபெறுகிறது. பெருந்துறை ரோடு முத்து மஹால் அருகே பிரமாண்ட மேடை அமைத்து அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இந்த கூட்டம் நடத்தப்படுகிறது. இதில் கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட த.மா.கா. வேட்பாளர் யுவராஜ் சுமார் 9 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலேயே தோல்வியை தழுவினார்.

    அ.தி.மு.க.வில் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பிறகு தான் சந்திக்கும் முதல் தேர்தல் என்பதால் தனது பலத்தை நிரூபிக்கும் தேர்தலாகவே இந்த தேர்தலை எடப்பாடி பழனிசாமி கருதுகிறார். இதன் காரணமாகவே த.மா.கா.வுக்கு பதில் அ.தி.மு.க.வை அவர் களமிறக்கி உள்ளார்.

    தி.மு.க. அரசுக்கு எதிரான விஷயங்களை மக்கள் மத்தியில் எடுத்துச் சென்று பிரசாரம் செய்ய எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார். இதன் மூலம் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனுக்கு கடுமையான போட்டியை ஏற்படுத்த முடியும் என்று கணக்கு போட்டுள்ள எடப்பாடி ஆதரவாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதற்கிடையே அ.தி.மு.க. பொதுக்குழு படிவங்களை டெல்லியில் சமர்ப்பித்து விட்டு இரட்டை இலை சின்னத்துக்கு கையெழுத்து போடும் அதிகாரத்துடன் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் நேற்று இரவு சென்னை திரும்பினார்.

    விமான நிலையத்தில் தமிழ்மகன் உசேன், அ.தி.மு.க. வக்கீல் இன்பதுரை ஆகியோர் கூட்டாக அளித்த பேட்டியில் அ.தி.மு.க. தலைவர்களான எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் ஆன்மா வழி நடத்தியதன் பேரிலேயே வெற்றிச்சின்னமான இரட்டை இலை சின்னம் கிடைத்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் அ.தி.மு.க. நிச்சயம் வெற்றி பெறும் என்று தெரிவித்தனர்.

    • எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.வை சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தலின் பேரில் தேர்தல் ஆணையம் அங்கீகரித்து இருப்பதால் ஓ.பன்னீர்செல்வம் தனது வேட்பாளரை திரும்ப பெற்றுள்ளார்.
    • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. தொண்டர்கள் ஒரே தலைமையின் கீழ் ஒன்றுபட்டு பணியாற்றும் வாய்ப்பு உருவாகி இருக்கிறது.

    சென்னை:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 31-ந்தேதி தொடங்கியது. இன்று மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும்.

    இடைத்தேர்தலில் போட்டியிட இன்று மதியம் வரை 70-க்கும் மேற்பட்டவர்கள் மனுதாக்கல் செய்திருந்தனர். அ.தி.மு.க. வேட்பாளர் தென்னரசும் இன்றுதான் மனு தாக்கல் செய்தார். தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க., அ.ம.மு.க., நாம் தமிழர், தே.மு.தி.க. ஆகிய கட்சிகளுக்கு இடையே 5 முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

    என்றாலும் தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு இடையேதான் வழக்கம் போல பலப்பரீட்சை உருவாகி இருக்கிறது. ஓ.பன்னீர்செல்வமும் போட்டி வேட்பாளரை அறிவித்ததால் அ.தி.மு.க. வேட்பாளராக யார் கருதப்படுவார் என்பதில் சிக்கல் ஏற்பட்டது. அதுபோல யாருக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என்பதிலும் பரபரப்பு நிலவியது.

    இந்தநிலையில் சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தலின் காரணமாக எடப்பாடி பழனிசாமி தலைமையில் இயங்கும் அ.தி.மு.க.வின் அவை தலைவர் தமிழ்மகன் உசேனுக்கு வேட்பாளரை தேர்வு செய்வதற்கு அதிகாரம் வழங்கப்பட்டது. அதன்படி அவர் பொதுக்குழு உறுப்பினர்களில் 98 சதவீதம் பேரிடம் கையெழுத்து பெற்று தேர்தல் ஆணையத்திடம் நேற்று சமர்பித்தார்.

    அதை தலைமை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டு அவைத் தலைவர் தமிழ் மகன் உசேனுக்கு அங்கீகாரம் அளித்துள்ளது. இது தொடர்பாக ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி கே.சிவக்குமாருக்கு டெல்லி தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்து கடிதம் அனுப்பியது.

    அதில், "அ.தி.மு.க. சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளருக்கு ஏ, பி படிவத்தில் கையெழுத்திட்டு வழங்கும் அதிகாரம் தமிழ் மகன் உசேனுக்கு வழங்கப்படுகிறது. அதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்து கொள்ளவும்" என்று கூறி இருந்தது.

    தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவுறுத்தல் மூலம் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ள வேட்பாளருக்கு அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னம் கிடைப்பது உறுதியானது. இதை தேர்தல் அதிகாரி சிவக்குமார் உறுதிப்படுத்தி உள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறுகையில், "தலைமை தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதம் எனக்கு வந்துள்ளது. தலைமை தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப நான் இரட்டை இலை சின்னத்தை அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஒதுக்கீடு செய்வேன்.

    அ.தி.மு.க. அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் கையெழுத்திட்டு தரும் ஏ, பி படிவங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்" என்று கூறினார். இதன் மூலம் அ.தி.மு.க.வில் நிலவி வந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.வை சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தலின் பேரில் தேர்தல் ஆணையம் அங்கீகரித்து இருப்பதால் ஓ.பன்னீர்செல்வம் தனது வேட்பாளரை திரும்ப பெற்றுள்ளார். இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. தொண்டர்கள் ஒரே தலைமையின் கீழ் ஒன்றுபட்டு பணியாற்றும் வாய்ப்பு உருவாகி இருக்கிறது.

    இதனால் உற்சாகம் அடைந்துள்ள அ.தி.மு.க. நிர்வாகிகள் இன்று தங்களது பிரசாரத்தை சுறுசுறுப்புடன் தொடங்கி உள்ளனர். வெளிமாவட்டங்களில் இருந்தும் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஈரோடுக்கு செல்ல தொடங்கி இருக்கிறார்கள்.

    • முன்னாள் அமைச்சர்கள் கே.எஸ். செங்கோட்டையன், கே.வி. ராமலிங்கம் தலைமையில் வேட்பாளர் கே.எஸ். தென்னரசு ஈரோடு மணல்மேட்டில் இரட்டை இலை சின்னத்துடன் பிரசாரத்தை தொடங்கினார்.
    • வீடு வீடாக சென்று பொதுமக்களை சந்தித்து இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் கே.எஸ். தென்னரசு, ஓ.பி.எஸ் அணி சார்பில் செந்தில் முருகன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

    இதன் காரணமாக கடந்த 3-ந்தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய இருந்த தென்னரசு வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. அ.தி.மு.க.வினர் பிரச்சாரத்தையும் தொடங்காமல் இருந்து வந்தனர். எனினும் முக்கிய அமைப்பினர், விசைத்தறியாளர்கள், வணிகர் சங்க பேரமைப்பினரை முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், வேலுமணி, தங்கமணி, கே.வி. ராமலிங்கம், கருப்பணன் ஆகியோர் தலைமையில் அ.தி.மு.க.வினர் சந்தித்து ஆதரவு திரட்டி வந்தனர்.

    இந்நிலையில் இரட்டை இலை சின்னம் தங்களுக்கு ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டு பொதுக்குழுவைக் கூட்டி வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும் என்று கூறியது.

    பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு கடிதங்களை அவைத்தலைவர் தலைமை தேர்தல் கமிஷனில் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். இதன்படி பொதுக்குழு உறுப்பினர்கள் 2501 பேர் அ.தி.மு.க. வேட்பாளர் தென்னரசுக்கு ஆதரவு தெரிவித்து கடிதம் கொடுத்தனர்.

    அந்த கடிதத்தை அவை தலைவர் தமிழ் மகன் உசேன் நேற்று டெல்லி தேர்தல் கமிஷனில் வழங்கினார். இந்நிலையில் ஓ.பி.எஸ்.அணி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த செந்தில் முருகன் தனது வேட்பு மனுவை வாபஸ் பெறுவார் என்று அறிவிக்கப்பட்டது.

    மேலும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிப்போம் என்று கூறினர். இதனால் நீண்ட இழுபறி முடிவுக்கு வந்தது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் கே.எஸ். தென்னரசு இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவது உறுதியானது.

    இதையடுத்து இன்று காலை முன்னாள் அமைச்சர்கள் கே.எஸ். செங்கோட்டையன், கே.வி. ராமலிங்கம் தலைமையில் வேட்பாளர் கே.எஸ். தென்னரசு ஈரோடு மணல்மேட்டில் இரட்டை இலை சின்னத்துடன் பிரசாரத்தை தொடங்கினார்.

    முதலில் அந்த பகுதியில் உள்ள முருகன், எல்லை மாரியம்மன் கோவிலில் சாமி கும்பிட்டு அ.தி.மு.க.வினர் பிரசாரத்தை தொடங்கினர். வீடு வீடாக சென்று பொதுமக்களை சந்தித்து இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தனர். மற்ற அரசியல் கட்சியினர் பிரசாரத்தை தொடங்கிய நிலையில் அ.தி.மு.க. சார்பில் இன்று முதல் பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது. இதனால் தேர்தல் களம் மேலும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

    • தென்னரசுக்கு யாராவது எதிர்ப்பு தெரிவித்து இருந்தால் அதுவும் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பப்பட உள்ளது.
    • அ.தி.மு.க. அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் நாளை டெல்லி சென்று தேர்தல் ஆணையத்தில் நேரிலும் படிவங்களை வழங்குகிறார்.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையேயான மோதல் நீடித்து வரும் நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் இருவருமே வேட்பாளர்களை அறிவித்து களம் இறங்கினார்கள்.

    ஈரோடு கிழக்கு தொகுதியில் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கை விசாரித்த சுப்ரீம்கோர்ட்டு பொதுக்குழு மூலமாக வேட்பாளரை தேர்வு செய்ய அறிவுறுத்தியது. இதில் ஓ.பி.எஸ். அணியினரும் பங்கேற்கவும் அறிவுறுத்தியது.

    இதையடுத்து இதற்கான பணிகள் முடுக்கி விடப்பட்டன. ஈரோடு கிழக்கு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் தென்னரசுக்கு, பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவை பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

    அ.தி.மு.க. பொதுக்குழு முடிவில் தற்போது 2,750 பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் 2,662 பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உள்ளனர். மீதமுள்ள சுமார் 148 பொதுக்குழு உறுப்பினர்கள் மட்டுமே ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக இருக்கிறார்கள்.

    இப்படி இருதரப்பை சேர்ந்த பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் பாரபட்சமின்றி அ.தி.மு.க. தலைமை கழகம் மூலமாக விண்ணப்ப படிவமும், உறுதிமொழி பத்திரமும் கொண்டு சேர்க்கப்பட்டது.

    இதையடுத்து பொதுக்குழு உறுப்பினர்கள் தங்களது அ.தி.மு.க. உறுப்பினர் அட்டை, ஆதார் கார்டு ஆகியவற்றின் ஜெராக்சை இணைத்து இந்த படிவங்களில் கையெழுத்து போட்டு அ.தி.மு.க. தலைமைக்கு நேற்று முதல் வழங்கி வருகிறார்கள்.

    பெரும்பாலான உறுப்பினர்கள் தென்னரசுவுக்கு ஆதரவு அளித்து கையெழுத்து போட்டிருக்கிறார்கள். இன்று காலையிலும் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேனை சந்தித்து பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு படிவத்தை வழங்கினார்கள்.

    வெளி மாவட்டங்களை சேர்ந்த பொதுக்குழு உறுப்பினர்களின் ஒப்புதல் படிவங்களை கட்சி நிர்வாகிகள் சிலர் மொத்தமாக வாங்கி வந்தும் கொடுத்தனர். பொதுக்குழு உறுப்பினர்களில் பெரும்பான்மையானவர்கள் எடப்பாடி பழனிசாமி நிறுத்திய வேட்பாளர் தென்னரசுவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரிப்போம் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறி இருப்பதால் அவரது அணியை சேர்ந்த பொதுக்குழு உறுப்பினர்களும் தென்னரசுவுக்கு ஆதரவு தெரிவிக்க இருப்பதாகவே தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இதுதொடர்பாக ஓ.பி.எஸ். இன்று தனது அணி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இருப்பினும் பொதுக்குழு உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவுடன் தென்னரசு வேட்பாளராக களம் இறங்குவது உறுதியாகி உள்ளது.

    இன்று இரவு 7 மணிக்குள் ஆதரவு ஒப்புதல் படிவங்களை பொதுக்குழு உறுப்பினர்களிடம் இருந்து பெற்று தேர்தல் ஆணையத்துக்கு அவற்றை அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலமாக பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்ட படிவங்கள் டெல்லி தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

    தென்னரசுக்கு யாராவது எதிர்ப்பு தெரிவித்து இருந்தால் அதுவும் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பப்பட உள்ளது. அதேநேரத்தில் அ.தி.மு.க. அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் நாளை டெல்லி சென்று தேர்தல் ஆணையத்தில் நேரிலும் இந்த படிவங்களை வழங்குகிறார்.

    அவருடன் சி.வி.சண்முகம் எம்.பி., அ.தி.மு.க. வக்கீல் இன்பதுரை ஆகியோரும் செல்கிறார்கள். பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு படிவங்களை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ளும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

    நாளை மறுநாள் (7-ந்தேதி) தென்னரசு தனது வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார். வேட்பு மனு தாக்கலுக்கு அன்றே கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு ஈரோடு தொகுதி மறுசீரமைப்புக்கு முன்பு 2001-ல் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
    • பின்னர் தொகுதி மறுசீரமைப்புக்கு பின்பு 2016-ம் ஆண்டு அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் கே.எஸ். தென்னரசு போட்டியிடுவார் என்று இன்று காலை அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

    வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கே.எஸ்.தென்னரசு (வயது 65) 1988-ம் ஆண்டு ஈரோடு நகர அ.தி.மு.க. செயலாளராக பணியாற்றினார்.

    * 1992-ம் ஆண்டு ஈரோடு நகர இணைச் செயலாளராகவும், 1995-ம் ஆண்டு நகர செயலாளராகவும், 1999-ம் ஆண்டு கிழக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளராகவும் இருந்தார்.

    * மீண்டும் 2000-ம் ஆண்டு ஈரோடு நகர அ.தி.மு.க. செயலாளர் ஆனார். 2010-ம் ஆண்டு முதல் மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளராகவும் பணியாற்றி வருகிறார்.

    * அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு ஈரோடு தொகுதி மறுசீரமைப்புக்கு முன்பு 2001-ல் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் தொகுதி மறுசீரமைப்புக்கு பின்பு 2016-ம் ஆண்டு அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    * கடந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் த.மா.கா.வுக்கு ஒதுக்கப்பட்டதால் போட்டியிடவில்லை.

    இவர் ஈரோடு கருங்கல்பாளையம் சொக்காய் தோட்டம் பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கு பத்மினி என்ற மனைவியும், கலையரசன் என்ற மகனும், கலைவாணி என்ற மகளும் உள்ளனர்.

    ×