என் மலர்
நீங்கள் தேடியது "சைக்கிள் பறிப்பு"
- வாலிபர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
- மோட்டார் சைக்கிள் மற்றும் ஒரு கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.
கோவை,
கோவை மருதமலை அடிவாரம் பகுதியை சேர்ந்தவர் மனோஜ்குமார் (வயது 21). இவர் கோவை அரசு கலை கல்லூரியில் பி.எஸ்.சி 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.
மனோஜ்குமார் தனது நண்பருடன் ராம்நகரில் உள்ள நேரு வீதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது அங்கு வந்த 3 பேர் கும்பல் மனோஜ்குமாரை கத்தி முனையில் மிரட்டி மோட்டார் சைக்கிளை பறித்தனர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மனோஜ்குமார் சத்தம் போட்டார். அவரின் சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் உதவியுடன் மனோஜ்குமார் ஒரு வாலிபரை மடக்கி பிடித்தார். மற்ற 2 பேரும் மோட்டார் சைக்கிளுடன் தப்பி சென்றனர். இதனையடுத்து அவர் பிடிபட்ட வாலிபரை காட்டூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் கோவை ரத்தினபுரியை சேர்ந்த பிளம்பர் வேலை செய்து வரும் தினேஷ் (23) என்பது தெரியவந்தது.
அவரை போலீசார் கைது செய்தனர். அவர் கொடுத்த தகவல் மற்றும் சம்பவம் நடந்த பகுதியில் கைப்பற்றப்பட்ட சி.சி.டி.வி காமிரா காட்சிகளை ஆய்வு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
அதில், மோட்டார் சைக்கிளை பறித்து தப்பி சென்றது ரத்தினபுரி 7-வது வீதியை சேர்ந்த வெல்டிங் தொழிலாளி வைஷ்ணவ் (24) மற்றும் நியூ சித்தாபுதூரை சேர்ந்த சிங்காராம்(21) என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள் மற்றும் ஒரு கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.