search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சத்யபிரத சாகு"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்திம் வருகிறது.
    • மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியை இந்திய தேர்தல் ஆணையம் நியமிக்கும்.

    சென்னை:

    தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியாக உள்ள சத்யபிரத சாகுவுக்கு மாநில அரசுப் பணியான கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை செயலாளர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டு உள்ளது.

    இதைத்தொடர்ந்து அவர் தலைமைத் தேர்தல் அதிகாரி பொறுப்பில் இருந்து விரைவில் விடுவிக்கப்படுகிறார். புதிய தேர்தல் அதிகாரி நியமிக்கப்படும் வரை அவர் அந்த பதவியில் நீடிப்பார் என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    சத்ய பிரதசாகுவுக்கு பதிலாக புதிய தலைமைத் தேர்தல் அதிகாரியை நியமிக்க இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தி வருகிறது.


    இதற்காக தமிழக பிரிவு மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளில் 3 பேரின் பெயர்களை கொண்ட பட்டியலை மாநில அரசிடம் தேர்தல் ஆணையம் கேட்டுள்ளது.

    அதன்படி தமிழக அரசு செயலாளர் அளவிலான 3 பேர் பெயர் பட்டியலை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த பட்டியலில் இருந்து ஒருவரை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது.

    புதிதாக நியமிக்கப்பட உள்ள தலைமைத் தேர்தல் அதிகாரியே, 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலை நடத்துவார். எனவே அதற்கேற்ப தேர்தலை மனதில் வைத்து மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியை இந்திய தேர்தல் ஆணையம் நியமிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    புதிய தலைமைத் தேர்தல் அதிகாரி குறித்த அறிவிப்பு சில தினங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.

    • புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல்.
    • சத்யபிரத சாகுவுக்கு மாநில தேர்தல் ஆணையம் கடிதம்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட மற்றும் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்பட்டன. கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் இந்த உள்ளாட்சிகளுக்கான பதவிக்காலம் வருகிற டிசம்பர் மாதம் முடிவடைகிறது.

    இதையடுத்து பதவி காலியாகும் ஊரக உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடத்த ஆணையம் தயாராகி வருகிறது.

    இதன் முதற்கட்டமாக சட்டசபை தொகுதி வாரியாக வாக்காளர் பட்டியல் விவரங்களை தருமாறு தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவுக்கு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் கடிதம் எழுதி உள்ளது.

    மாநில தேர்தல் ஆணைய செயலாளர் கே.பாலசுப்பிரமணியன் எழுதி உள்ள அந்த கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் உள்ள உள்ளாட்சிகளில் காலியிடங்களை நிரப்புவதற்கான தேர்தல்களை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் விரைவில் நடத்த உள்ளது.

    தற்போதுள்ள சட்டப் பேரவை வாக்காளர் பட்டியல் அடிப்படையில் உள்ளாட்சிகளுக்கான வாக்காளர் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் தேவைப்படும் காலங்களுக்கு தயாரிக்க வேண்டும்.

    இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி ஆண்டுதோறும் ஜனவரி 1, ஏப்ரல் 1, ஜூலை 1 மற்றும் அக்டோபர் 1-ந் தேதிகளில் தகுதியானவர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டு வருகின்றனர். அதற்கேற்ப மக்கள் பிரதிநிதிகள் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

    இதன் அடிப்படையில் கடந்த மார்ச் மாதம் 27-ந் தேதி பாராளுமன்ற தேர்தலுக்காக தயாரிக்கப்பட்ட சட்டப் பேரவை தொகுதி வாரியான வாக்காளர் பட்டியல் அடிப்படையில் மாநில தேர்தல் ஆணையம் தற்போது உள்ளாட்சிகளுக்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலை தயாரிக்க வேண்டி உள்ளது.

    எனவே கடந்த மார்ச் 28-ந் தேதி சட்டப் பேரவை தொகுதி வாரியாக வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலின் அச்சிடப்பட்ட பிரதிகள் மற்றும் மென் பிரதிகளை வழங்கும்படி மாவட்டத் தேர்தல் அதிகாரிகளாக உள்ள மாவட்ட கலெக்டர்களுக்கு தாங்கள் தகுந்த அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும். அவ்வாறு பெறப்படும் விவரங்கள் அனைத்தும் உள்ளாட்சித் தேர்தலுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும்.

    மாநில தேர்தல் ஆணையம் உரிய கள ஆய்வுகள் நடத்தி சரிபார்த்து தனது சொந்த தரவுகளை உருவாக்கும் தேர்தல் ஆணையம் அளிக்கும் தரவுகளை வேறு யாருக்கும் பகிர மாட்டோம். எனவே தொகுதி வாரியாக தற்போதுள்ள புதிய வாக்காளர் பட்டியல் தரவுகளை அளிக்க அறிவுறுத்த வேண்டும்.

    உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பை தகுந்த நேரத்தில் மாநிலத் தேர்தல் ஆணையம் வெளியிடும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை அமைதியாக நடைபெற்றது.
    • ஏதும் பிரச்சினை நடந்ததாக எனக்கு தகவல் வரவில்லை.

    சென்னை:

    பாராளுமன்ற தோ்தல் தேதி, மாா்ச் 16-ந்தேதி அறிவிக்கப்பட்டது. அன்றைய தினத்தில் இருந்து நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. மத்திய, மாநில அரசுகள் புதிய அறிவிப்புகள் எதையும் வெளியிடவோ, அரசு சாா்பில் நிகழ்ச்சிகளை நடத்தவோ தடை விதிக்கப் பட்டிருந்தது. இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக பாராளுமன்ற தோ்தல் நடத்தி முடிக்கப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-

    வாக்கு எண்ணிக்கையின் போது, மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் பழுதடைந்ததாகவோ அல்லது வேறு காரணங்க ளுக்காகவோ, அரசியல் கட்சிகளிடம் இருந்து தலைமை தோ்தல் அதிகாரி அலுவலகத்துக்கு புகாா்கள் எதுவும் வரவில்லை.

    தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை அமைதியாக நடைபெற்றது. ஏதும் பிரச்சினை நடந்ததாக எனக்கு தகவல் வரவில்லை.

    தோ்தல் முடிவுகள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையங்களில் இருந்து இந்திய தோ்தல் ஆணையத்தின் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். அதை அனை வருமே பாா்க்க முடியும். மக்களவைத் தோ்தல் முடிவு களை இந்திய தலைமை தோ்தல் ஆணையா், டெல்லியில் ஜனாதிபதியிடம் வழங்குவாா். அதன் பின்னா் மத்தியில் புதிய அரசு ஆட்சி அமைக்கும் நடவடிக்கைகள் தொடங்கும். தோ்தல் நடத்தை விதிகள் ஜூன் 6-ந்தேதிவரை அமலில் இருக்கும். பின்னா் அது திரும்பப் பெறப்படும் .

    இவ்வாறு தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தாா்.

    • தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன்பாக இந்த நடைமுறைகள் மேற்கொள்ளப்படும்.
    • தமிழகத்தை பொறுத்தவரை 68 ஆயிரத்து 36 வாக்குச்சாவடிகள் உள்ளன.

    சென்னை :

    மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் வி.வி.பேட் எந்திரம் (வாக்காளர்கள் தாங்கள் பதிவு செய்த வாக்கை உறுதி செய்து தகவல் அளிக்கும் கருவி) ஆய்வு செய்வது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிப்பதற்கான ஒரு நாள் கருத்தரங்கம் சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று நடைபெற்றது.

    இந்த பயிற்சி கருத்தரங்கை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தொடங்கிவைத்தார். இதைத்தொடர்ந்து இந்திய தேர்தல் ஆணையத்தின் பிரதிநிதிகள் மற்றும் பெங்களூரு பாரத் மின்னணு நிறுவனத்தின் தொழில்நுட்ப வல்லுனர்கள் பங்கேற்று மின்னணு வாக்குப்பதிவு எந்திரம், வி.வி.பேட் எந்திரங்கள் தொடர்பான தொழில்நுட்ப வழிகாட்டுதல்களை மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு வழங்கினர்.

    இதைத்தொடர்ந்து சத்யபிரத சாகு நிருபர்களிடம் கூறியதாவது:-

    மின்னணு வாக்குப்பதிவு எந்திரம், வி.வி.பேட் எந்திரம் ஆகியவற்றை ஆய்வு செய்வது தொடர்பாகவும், ஏதேனும் குறைபாடு இருந்தால் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது.

    ஜூலை 4-ந் தேதி முதல் மாவட்டம் தோறும் தேர்தல் அதிகாரிகள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், வி.வி.பேட் எந்திரங்கள் ஆகியவை ஆய்வு செய்யப்படும். இதில், தொழில்நுட்ப வல்லுநர்கள் பங்கேற்பார்கள்.

    வழக்கமாக தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன்பாக இந்த நடைமுறைகள் மேற்கொள்ளப்படும். அதன்படி, இந்த ஆய்வு நடத்தப்படுகிறது. ஆய்வுக்கு பின்பு இந்த எந்திரங்கள் பாதுகாக்கப்பட்டு தேர்தலின் போது பயன்படுத்தப்படும்.

    தமிழகத்தை பொறுத்தவரை 68 ஆயிரத்து 36 வாக்குச்சாவடிகள் உள்ளன. ஒவ்வொரு தொகுதியிலும் வேட்பாளர்களின் எண்ணிக்கையை பொறுத்தே அங்கு தேவைப்படும் வாக்குப்பதிவு எந்திரங்களின் எண்ணிக்கையை கணக்கிட முடியும்.

    இருப்பினும் தேவைக்கு அதிகமாகவே வாக்குப்பதிவு எந்திரங்களை கையிருப்பில் வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இந்த எந்திரங்கள் மீதான நம்பகத்தன்மையை உறுதி செய்யும் வகையில் அரசியல் கட்சியினருக்கும் ஆய்வு செய்வதற்கான வாய்ப்பு அளிக்கப்படும்.

    தமிழகத்தில் 1 லட்சத்து 78 ஆயிரத்து 357 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், அதை கட்டுப்படுத்துவதற்காக 1 லட்சத்து 2 ஆயிரத்து 581 எந்திரங்கள், 1 லட்சத்து 8 ஆயிரத்து 732 வி.வி.பேட் எந்திரங்கள் உள்ளன. பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு எந்திரங்கள் தயார்நிலையில் உள்ளன. 30 சதவீத எந்திரங்கள் கூடுதலாகவே உள்ளது.

    ஒரு வாக்குப்பதிவு மையத்துக்கு 1,500 வாக்காளர்கள் வாக்களிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. புதிய வாக்காளர்கள் விண்ணப்பித்து இருந்தால் அடுத்த 3 மாதங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தேர்தல் தொடர்பான புகார்களை சி-விஜில் செயலி மூலமாக தெரிவிக்கலாம்.
    • 27-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

    ஈரோடு :

    காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா மறைவால் காலியான ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு 27-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

    இந்தத் தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே தேர்தல் களம் சூடுபிடிக்கத்தொடங்கி விட்டது. கடந்த பொதுத் தேர்தலைப் போலவே, இடைத்தேர்தலிலும் இந்தத் தொகுதி தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. அந்தக் கட்சியின் சார்பில், மறைந்த எம்.எல்.ஏ. திருமகன் ஈவெராவின் தந்தை ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுகிறார்.

    அவரை எதிர்த்து அ.தி.மு.க. தரப்பில் முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசு நிறுத்தப்பட்டு உள்ளார். தே.மு.தி.க.வின் எஸ்.ஆனந்த், நாம் தமிழர் கட்சியின் மேனகா நவநீதன், சுயேச்சைகள் என மொத்தம் 77 வேட்பாளர்கள் போட்டி போடுகிறார்கள்.

    இன்று மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்கிறது. வெளியூர் நபர்கள் ஈரோடு கிழக்கு தொகுதியில் இருக்கக்கூடாது என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

    இதற்கிடையே தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, சென்னையில் நேற்று நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஈரோடு கிழக்கு தொகுதியில் மொத்தம் உள்ள 238 வாக்குச்சாவடிகளில் இதுவரை 32 வாக்குச்சாவடிகளை பதற்றமானதாக தேர்தல் கமிஷன் கண்டறிந்துள்ளது. அங்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்படும். ஏற்கனவே 5 கம்பெனி துணை ராணுவமும், 2 கம்பெனி ஆயுதப்படை போலீசாரும் பாதுகாப்பு பணியில் உள்ளனர். இவர்கள் தவிர உள்ளூர் போலீசாரும் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள்.

    இடைத்தேர்தல் வாக்குப்பதிவின்போது 1,206 பணியாளர்கள் பணியாற்றுவர். வாக்குப்பதிவிற்காக 1,430 வாக்குப்பதிவு எந்திரங்களும், 286 கட்டுப்பாட்டு எந்திரங்களும், அளித்த வாக்கை உறுதி செய்யும் 310 'விவிபாட்' எந்திரங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. வாக்குச் சாவடிகளில் பொருத்தப்படும் எந்திரங்களின் எண்ணிக்கைக்கு கூடுதலாக 20 சதவீதம் எந்திரங்கள் இருப்பில் வைக்கப்பட்டுள்ளன.

    தேர்தல் நடத்தை விதிமீறல்கள் தொடர்பாக 688 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து வரப்பட்டதாக ரூ.64.34 லட்சம் மதிப்புள்ள பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதில், ரொக்கத் தொகை மட்டும் ரூ.51.31 லட்சமாகும். கைப்பற்றப்பட்ட மதுபான பாட்டில்களின் மதிப்பு ரூ.11.68 லட்சமாகும்.

    தேர்தல் தொடர்பான புகார்களை சி-விஜில் செயலி மூலமாக தெரிவிக்கலாம். இதுவரை சி-விஜில் மூலம் பெறப்பட்ட 2 புகார்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவை பணப்பட்டுவாடா தொடர்பானவை அல்ல. மேலும், 1950 என்ற எண்ணின் மூலம் கட்டுப்பாட்டு மையத்தைத் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். இந்தப் புகார்கள் உடனடியாக மாவட்டத் தேர்தல் அதிகாரிக்கும், தேர்தல் நடத்தும் அதிகாரிக்கும் விசாரணைக்காக அனுப்பி வைக்கப்படும்.

    அந்தத் தொகுதியில் தி.மு.க. மற்றும் நாம் தமிழர் கட்சியினர் இடையே நடந்த மோதல் மட்டுமே சட்டம்-ஒழுங்கு பிரச்சினையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு அன்று அனைத்து வாக்குச்சாவடிகளும் 'வெப் காஸ்டிங்' மூலம் கண்காணிக்கப்படும். இதுவரை 400-க்கும் மேற்பட்ட தபால் ஓட்டுகள் வந்துள்ளன. ஓட்டு எண்ணிக்கை தொடங்கும் நாள் காலை 8 மணிவரை தபால் ஓட்டுகள் பெறப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திருமங்கலம் பார்முலாவை இந்த இடைத்தேர்தல் மிஞ்சிவிடும்.
    • பண பலம், அதிகார பலத்தின் மூலம் வெற்றி பெற தி.மு.க. முயல்கிறது.

    சென்னை :

    சென்னை தலைமைச்செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவிடம் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று புகார் மனு அளித்தார். பின்னர் பத்திரிகையாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:-

    ஈரோட்டில் அ.தி.முக. வேட்பாளர் அறிமுக கூட்டம் 9-ந் தேதி நடைபெற்றது. அந்த கூட்டத்துக்கு மக்கள் அதிகமாக சென்றுவிடக்கூடாது என்பதற்காக தி.மு.க.வினர் ஆங்காங்கே சட்டவிரோதமாக பந்தல் போட்டு, பிரியாணி மற்றும் ஆயிரம் ரூபாய் கொடுத்து ஏழை எளிய மக்களை கூட்டத்துக்கு வரவிடாமல் தடுத்துவிட்டனர். திருமங்கலம் பார்முலாவை இந்த இடைத்தேர்தல் மிஞ்சிவிடும்.

    ஆனால் அ.தி.முக. வேட்பாளர் அறிமுக கூட்டத்துக்கு 50 ஆயிரம் பேர் வந்தார்கள். எனவே தி.மு.க. எடுத்த முயற்சி தோல்வி அடைந்துவிட்டது.

    பண பலம், அதிகார பலத்தின் மூலம் வெற்றி பெற தி.மு.க. முயல்கிறது. அ.தி.முக. கூட்டத்துக்கு மக்களை வர விடாமல் பணம், பிரியாணி கொடுத்து தடுக்கிறது.

    கூட்டணிக் கட்சி தர்மத்தின்படி த.மா.கா.விடம் கேட்டு அ.தி.மு.க. போட்டியிடுகிறது. ஆனால் தி.மு.க. அங்கு ஏன் காங்கிரஸ் கட்சியை நிற்க வைத்துள்ளது? தோல்வி பயம்தான் காரணம். தைரியம் இருந்தால் தி.மு.க. அங்கு போட்டியிட்டிருக்க வேண்டும்.

    வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பா.ஜ.க. கட்சித் தலைவர் அண்ணாமலை பங்கேற்கவில்லை என்றாலும், அந்த கட்சியின் சார்பில் பங்கேற்றுள்ளனர். ஏற்கனவே திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி இருந்ததால், இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியவில்லை என்று அண்ணாமலை கூறியுள்ளார்.

    இரட்டை இலைக்கான மவுசு போய்விட்டது என்று டி.டி.வி.தினகரன் கூறியிருப்பதை, நன்றி கெட்டவர்களின் வாக்குமூலமாகத்தான் பார்க்கிறேன். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் இல்லை என்றாலும்கூட இரட்டை இலை வெற்றி சின்னம்தான். அதன் மவுசு குறைந்துவிட்டது, இனிமேல் வாய்ப்பு இல்லை என்று அவர் கூறுவதை, உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்கிற நிலையாகத்தான் நாங்கள் எடுத்துக்கொள்ள முடியும்.

    தேர்தல் கமிஷனிடம் அளிக்கும் புகார்களுக்கு ஆதாரமாக அனைத்து ஆவணங்களும் அளிக்கப்பட்டுள்ளன. ஜனநாயக அமைப்பில் புகார் அளிப்பது, அடிப்படை உரிமை. அதை நாங்கள் தெளிவாகச் செய்து வருகிறோம். நாங்க சொல்ல வேண்டியதைச் சொல்கிறோம். செய்ய வேண்டியதை அவர்கள் செய்யட்டும். தேர்தல் கமிஷனுக்கு பிறகு கோர்ட்டு உள்ளது. இது மன்னர் ஆட்சி கிடையாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×