search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விடுதலைப்புலிகள்"

    • போலி ஆவணங்களை ஆள் கடத்தல் கும்பல் தயாரித்திருப்பதும் அம்பலம்.
    • என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணை.

    சென்னை:

    இலங்கையில் இருந்து கடந்த 2021-ம் ஆண்டு 13 இலங்கை தமிழர்கள் சட்ட விரோதமாக கர்நாடக மாநிலம் மங்களூரில் புகுந்தது தெரிய வந்தது.

    இலங்கையில் இருந்து கடல் வழியாக தமிழக பகுதிக்கு வந்து பின்னர் பஸ், ரெயில், கார், மோட்டார் சைக்கிள் மூலமாக இவர்கள் மங்களூருக்கு அனுப்பி வைக்கப்பட்டதை அம்மாநில போலீசார் கண்டு பிடித்தனர்.

    இதை தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் விடுதலைப்புலிகள் அமைப்புடன் நெருங்கிய தொடர்பில் இருந்து வந்த சீனிஆபுல்கான் என்பவர் உள்பட சிலர் அனுப்பி வைத்திருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து மங்களூர் போலீசார் 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து 7 பேரை கைது செய்தனர். இவர்களில் 3 பேர் தலை மறைவானார்கள்.

    மங்களூர் போலீசார் நடத்தி வந்த இந்த வழக்கின் விசாரணை என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்டது.

    இதைத்தொடர்ந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் சட்ட விரோதமாக இலங்கை தமிழர்களை கடத்திச் சென்றதாக குற்றம்சாட்டி புதிய வழக்கை பதிவு செய்திருந்தார்கள்.

    இதுபற்றி அதிகாரிகள் நடத்திய தொடர் விசாரணையில் ஆள் கடத்தலின் பின்னணி பற்றி பரபரப்பான தகவல்கள் கிடைத்தன. இலங்கையில் இருந்து 38 தமிழர்களை கனடாவில் குடியேற வைப்பதற்காக போலி ஆவணங்களை ஆள் கடத்தல் கும்பல் தயாரித்திருப்பதும் அம்பலமானது.

    இதை தொடர்ந்து கடந்த 3 ஆண்டுகளாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். இது தொடர்பாக 10 பேர் மீதும் கோர்ட்டில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தலைமறைவாக இருந்த 3 பேரில் சீனி ஆபுல்கான் என்கிற விடுதலைப் புலிகளின் நெருங்கிய ஆதரவாளர் ராமநாதபுரத்தில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டார்.

    அவரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தினார்கள். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

    • மே 18-ந்தேதி தமிழ் இனப்படுகொலை நினைவு தினமாக கடைபிடிக்க அங்கீகாரம்.
    • இலங்கையில் மனித உரிமைகளைப் பாதுகாக்கும் வலுவான நாடாக கனடா உள்ளது.

    விடுதலைப்புலிகள்- இலங்கை ராணுவத்திற்கு இடையிலான சண்டை 2009-ம் ஆணடு உச்சக்கட்டத்தை அடைந்தது. இந்த சண்டையில் ஆயிரக்கணக்கான ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டனர். இளைஞர்கள் மாயமானர்கள்.

    விடுதலைப்புலிகளுக்கு எதிராக இலங்கை ராணுவத்தின் நடவடிக்கை இனப்படுகொலை என அறிவிக்க வேண்டும் என்று பல்வேறு நாடுகள் வலியுறுத்தின. ஆனால் இலங்கை அரசு குற்றச்சாட்டை மறுத்து வருகின்றன.

    இந்த நிலையில் மே 18-ந்தேதி தமிழ் இனப்படுகொலை நினைவு தினமாக கடைபிடிக்க கனடா பாராளுமன்றத்தில் ஒருமனதாக அங்கீகரிக்கப்பட்டது.

    இது தொடர்பாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறுகையில் "மோதலின் போது இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு நீதி மற்றும் பொறுப்பேற்றல், இலங்கையில் அனைவரும் எதிர்கொள்ளும் இன்னல்களுக்கு நாங்கள் எப்போதும் வாதிடுவோம். 2023-ல், ஆயுதப்போரின் போது நாட்டில் மனித உரிமைகள் மீறப்பட்டதற்கு பதிலளிக்கும் வகையில், நான்கு முன்னாள் இலங்கை அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராக நாங்கள் பொருளாதாரத் தடைகளை விதித்தோம்.

    இலங்கையில் மனித உரிமைகளைப் பாதுகாக்கும் வலுவான நாடாக கனடா உள்ளது. கனடா மதம், நம்பிக்கை மற்றும் பன்மைத்துவ சுதந்திரத்தை மதிக்குமாறு இலங்கை அரசாங்கத்தை தொடர்ந்து வலியுறுத்தும்" என்றார்.

    இதற்கு இலங்கை அரசு, வாக்கு வங்கி அரசியலுக்காக விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரின்போது இனப்படுகொலை நடைபெற்றதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டுகிறார் எனத் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது-

    இனப்படுகொலை என்ற மூர்க்கத்தனமான குற்றச்சாட்டை இலங்கை அரசாங்கம் முந்தைய அனைத்து தகவல் தொடர்புகளிலும் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள், ஐ.நா சாசனத்தின் கொள்கைகளுக்கு மாறாக, தனிநாடு வலியுறுத்தி விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்ட ஆயுதமேந்திய பிரிவினைவாத பயங்கரவாத மோதலின் முடிவுடன் தொடர்புடையது. விடுதலைப்புலிகள் இயக்கம் கனடா உட்பட உலகளவில் 33 நாடுகளில் பயங்கரவாத அமைப்பு என அறிவிக்கப்பட்டதாகும்.

    இவ்வாறு இலங்கை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    • பிரபாகரன் மரணம் தொடர்பாக சில கேள்விகள் தொடர்ந்து நிலவுகிறது.
    • பழ.நெடுமாறன் அறிவிப்பின் பின்னணியில் உள்ள அரசியலை கண்டு பிடிக்கும் முயற்சிகளில் உளவுத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

    சென்னை:

    விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்று உலக தமிழர் பேரவை தலைவர் பழ.நெடுமாறன் இதற்கு முன்பு பல தடவை சொல்லி இருக்கிறார். ஆனால் அப்போதெல்லாம் அதை யாரும் கண்டு கொண்டதில்லை.

    நேற்று அவர் தஞ்சையில் பிரபாகரன் பற்றிய உண்மைகள் என்ற தலைப்பில் வெளியிட்ட அறிக்கையும், அவரது பேட்டியும் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்று பழ. நெடுமாறன் அறிவித்த போதிலும் அதற்கான எந்த ஆதாரத்தையும் வெளியிடவில்லை.

    இதன் காரணமாக உலக தமிழர்கள் மத்தியில் பிரபாகரன் மரணம் பற்றிய சந்தேகங்கள் தொடர்ந்து நீடித்தபடியே உள்ளது. பழ.நெடுமாறன் அறிவிப்புக்கு கருத்து தெரிவித்த தமிழக அரசியல் தலைவர்கள், 'பிரபாகரன் உயிரோடு இருந்தால் மகிழ்ச்சி' என்று மட்டுமே பதில் அளித்து இருக்கிறார்கள். அவர்களது இந்த பதில் மூலம் 99 சதவீத தமிழக அரசியல்வாதிகள் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்பதை நம்பவில்லை என்று தெரிய வந்துள்ளது.

    பழ.நெடுமாறன் அளவுக்கு இல்லாவிட்டாலும் விடுதலை புலிகள் அமைப்பின் மூத்த தலைவர்கள் இடையே வைகோவுக்கும் நல்ல தொடர்பு உண்டு. ஆனால் அவர் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்பதை இதுவரை ஏற்கவில்லை.

    பிரபாகரனுக்கு நிழலாக இருந்தவர்கள் மூலம் தனக்கு கிடைத்த தகவல்களின்படி பிரபாகரன் உயிருடன் இல்லை என்றே வைகோ பல தடவை உணர்த்தி உள்ளார். நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானும் இதே நிலைப்பாட்டில்தான் காணப்படுகிறார்.

    இந்த நிலையில் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்று பழ.நெடுமாறன் மீண்டும் சொல்லி இருப்பதற்கு வேறு ஏதேனும் பின்னணி காரணம் இருக்கும் என்று உளவு அமைப்புகள் கருதுகின்றன. இலங்கையில் தமிழர்களுக்கு சம உரிமையை பெற்று கொடுக்கும் முயற்சிகளில் இந்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

    இதற்காக இலங்கை பாராளுமன்றத்தில் 13-வது சட்ட திருத்தத்தை நடைமுறைக்கு கொண்டுவர இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். சிங்களத் தலைவர்களும் 13-வது சட்டத் திருத்தத்துக்கு ஆதரவாக மாறிக் கொண்டிருக்கிறார்கள்.

    இலங்கையில் சீனா பல்வேறு வகைகளிலும் காலடி எடுத்து வைத்துள்ள நிலையில் அங்கு ஈழத் தமிழர்களுக்கு அதிக அதிகாரம் வழங்கினால்தான் இந்தியாவுக்கு பாதுகாப்பாக இருக்கும் என்று மத்திய அரசு கருதுகின்றது. இதன் காரணமாக பிரதமர் மோடி எடுத்துள்ள நடவடிக்கைகள் பலன் அளிக்க தொடங்கியுள்ளன.

    குறிப்பாக ஈழத் தமிழர்கள் கடந்த சில மாதங்களாக இந்தியாவின் பலனை பெற தொடங்கி இருக்கிறார்கள். இது உலக தமிழர்கள் மத்தியில் பிரதமர் மோடிக்கு நல்ல பெயரை ஏற்படுத்தி உள்ளது. இது பிடிக்காமல் தான் பழ.நெடுமாறன் திடீரென இந்த விவகாரத்தை கையில் எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

    கடந்த சில ஆண்டுகளாகவே பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்பதை பரபரப்பாக மாற்ற விடுதலை புலிகள் அமைப்பின் மூத்த தலைவர்கள் பலர் தொடர்ந்து முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். வெளி நாடுகளில் வாழும் அவர்கள் இதற்காக நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானை அணுகியது உண்டு.

    ஆனால் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்பதை உறுதிபடுத்தினால் மட்டுமே தன்னால் பொது வெளியில் அப்படி அறிவிக்க முடியும் என்று சீமான் ஒவ்வொரு முறையும் மறுத்துவிட்டார். இதையடுத்து பழ.நெடுமாறன் மூலம் இந்த அறிவிப்பை விடுதலை புலிகளின் மூத்த தலைவர்கள் அறிவிக்க வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இதற்கிடையே பிரபாகரன் மரணம் தொடர்பாக சில கேள்விகள் தொடர்ந்து நிலவுகிறது. 2009-ம் ஆண்டு மே மாதம் அவர் 18-ந் தேதி கொல்லப்பட்டாரா? அல்லது 19-ந் தேதி கொல்லப்பட்டாரா? என்பதில் சர்ச்சை நீடிக்கிறது. அதுபோல அவரது உடல் நந்திக்கடல் பகுதியில் இருந்து மீட்கப்பட்டதா? அல்லது நீர் நிலையில் இருந்து மீட்கப்பட்டதா? என்பதிலும் உரிய பதில் இல்லை.

    என்றாலும் சர்வதேச அளவில் ராணுவ நிபுணர்கள் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்பதை ஏற்க மறுக்கிறார்கள். டி.என்.ஏ. பரிசோதனை உள்பட பல்வேறு தகவல்களை அவர்கள் இதற்கு ஆதாரமாக சொல்கிறார்கள். இலங்கை ராணுவம் திட்டவட்டமாக அறிவித்துள்ள நிலையில், இந்திய உளவு அமைப்புகளும் பிரபாகரன் உயிரோடு இல்லை என்றே சொல்லி வருகின்றன.

    பழ.நெடுமாறன் அறிவிப்பின் பின்னணியில் உள்ள அரசியலை கண்டு பிடிக்கும் முயற்சிகளில் உளவுத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். மற்றொரு பக்கத்தில் பழ.நெடுமாறன் அறிவிப்பு காரணமாக இலங்கையில் உள்ள ஈழத்தமிழர்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

    இலங்கையின் வடகிழக்கு பகுதிகளில் கடந்த சில மாதங்களாக ராணுவ நடவடிக்கைகளை இலங்கை அதிபர் ரனில் விக்கிரம சிங்கே குறைத்துள்ளார். இந்த நிலையில் பழ.நெடுமாறன் அறிவிப்பு காரணமாக ஈழத்தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் மீண்டும் கெடுபிடி ஏற்படலாம் என்ற தவிப்பு உலக தமிழ் மக்கள் மத்தியில் உருவாகி இருக்கிறது.

    சர்ச்சைக்கு மத்தியில் ஈழத்தமிழர்கள் சங்கடங்களை அனுபவிக்க இந்த அறிவிப்பு காரணமாகி விடலாம் என்று அரசியல் நிபுணர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் 2009-ம் ஆண்டு நடந்த இறுதிக்கட்ட போரில் கொல்லப்பட்டுவிட்டார்.
    • பிரபாகரன் மரபணு பரிசோதனை ஆதாரங்களை நாங்கள் வைத்துள்ளோம்.

    விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக பழ.நெடுமாறன் தெரிவித்தார்.

    இந்நிலையில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் விவகாரம் தொடர்பாக இலங்கையை நோக்கி, குறிப்பாக அந்த நாட்டு ராணுவத்திடம் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

    இதைத்தொடர்ந்து இந்த தகவலை இலங்கை ராணுவம் மறுத்து உள்ளது. இது தொடர்பாக இலங்கை ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் நளின் ஹேரத் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு தெரிவித்ததாவது:-

    விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் 2009-ம் ஆண்டு நடந்த இறுதிக்கட்ட போரில் கொல்லப்பட்டுவிட்டார். அதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன.

    அவரது மரபணு பரிசோதனை ஆதாரங்களையும் நாங்கள் வைத்துள்ளோம். 2009-ம் ஆண்டு மே மாதம் அவர் கொல்லப்பட்டதற்கான அனைத்து ஆதாரங்களும் எங்களிடம் உள்ளன.

    எனவே அவர் உயிருடன் இருப்பதாக கூறப்படும் தகவல்கள் அனைத்தும் தவறானவை.

    இந்த தகவல் எங்களுக்கு எந்தவித எச்சரிக்கை உணர்வையும் ஏற்படுத்தவில்லை. ஏனெனில் அவர் கொல்லப்பட்டுவிட்டார் என்பது எங்களுக்கு தெளிவாக தெரியும். அதில் சந்தேகமே இல்லை.

    இவ்வாறு ராணுவ செய்தி தொடர்பாளர் ரவி ஹேரத் கூறினார்.

    ×