search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தெலுங்கு தேசம் கட்சி"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தெலுங்கு தேசம் கட்சியினர் ஸ்ரீ ரெட்டி மீது கடும் கோபம் அடைந்தனர்.
    • போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமோகன் ஸ்ரீ ரெட்டி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    திருப்பதி:

    நடிகை ஸ்ரீ ரெட்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆந்திரா முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு, துணை முதல் மந்திரி பவன் கல்யாண், தகவல் தொழில்நுட்ப மந்திரி லோகேஷ், உள்துறை மந்திரி அனிதா மற்றும் அவர்களது குடும்பத்தினர் குறித்து அவதூறு வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.

    இது ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை கண்ட தெலுங்கு தேசம் கட்சியினர் ஸ்ரீ ரெட்டி மீது கடும் கோபம் அடைந்தனர்.

    கர்னூலை சேர்ந்த தெலுங்கு தேசம் கட்சி தலைவர் நாகநாஜு என்பவர் அவதூறு வீடியோ வெளியிட்ட ஸ்ரீ ரெட்டி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என 3-வது நகர போலீசில் புகார் செய்தார்.

    போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமோகன் ஸ்ரீ ரெட்டி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • பி.வி.சுனில் குமார், பி.எஸ்.ஆர்.ஆஞ்சநேயுலு மற்றும் பிற போலீஸ் அதிகாரிகள் தன்னை பெல்ட்கள் மற்றும் தடிகளால் தாக்கினர்.
    • தனக்கு பைபாஸ் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது தெரிந்தும் என்னை தாக்கினர்.

    ஆந்திர பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் ஜெகன் ரெட்டி மற்றும் 2 முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 5 பேர் மீது தெலுங்குதேச கட்சியின் எம்எல்ஏ அளித்த புகாரின் பேரில் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

    ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் தனக்கு எதிராக கிரிமினல் சதித்திட்டம் தீட்டியதாக உண்டி எம்எல்ஏ கே ரகுராம கிருஷ்ண ராஜு தனது புகாரில் குற்றம் சாட்டியுள்ளார். 

    அவரது புகாரில், 2021-ம் ஆண்டில் ஐதராபாத்தில் சிஐடி என்னை கைது செய்தது. அப்போது ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் பிற அதிகாரிகள் தனக்கு எதிராக ஒரு கிரிமினல் "சதி" திட்டம் தீட்டினர்.

    மே 14, 2021 அன்று, நான் முறையான நடைமுறையின்றி கைது செய்யப்பட்டேன். என்னை கொடுமைப்படுத்தினர். அதுமட்டும் இல்லாமல் சட்டவிரோதமாக போலீஸ் வாகனத்திற்குள் இழுத்துச் சென்றனர். அதே இரவில் வலுக்கட்டாயமாக குண்டூருக்கு கொண்டு சென்றனர்.

    பி.வி.சுனில் குமார், பி.எஸ்.ஆர்.ஆஞ்சநேயுலு மற்றும் பிற போலீஸ் அதிகாரிகள் தன்னை பெல்ட்கள் மற்றும் தடிகளால் தாக்கினர். இதய நோய்க்கான மருந்துகளை எடுத்துக்கொள்ள கூட அனுமதிக்கவில்லை. தனக்கு பைபாஸ் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது அதிகாரிகளுக்குத் தெரியும்.

    இது தெரிந்தும் சில அதிகாரிகள் எனது மார்பில் அமர்ந்து என்னை கொல்லும் முயற்சியில் அழுத்தம் கொடுத்தனர். மேலும் எனது தொலைபேசியை எடுத்துச் சென்று அதன் பாஸ்வேடை கூறுமாறு தாக்கினர்.

    அதனை தொடர்ந்து அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டேன். அங்கு மருத்துவர் பிரபாவதி எனக்கு மோசமாக சிகிச்சை அளித்தார். காவல்துறை அதிகாரிகளின் தூண்டுதலின் பேரில் மருத்துவர் போலி மருத்துவ சான்றிதழ்களை வழங்கினார்.

    மேலும், அப்போதைய முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை விமர்சித்தால் கொலை செய்து விடுவதாக பிவி சுனில் குமார் மிரட்டினார்.

    இந்த வழக்கில் குண்டூர் அரசு பொது மருத்துவமனையின் முன்னாள் கண்காணிப்பாளர் பிரபாவதி, ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி விஜய் பால் ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    • தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது.
    • தெலுங்கு தேசம் தலைமையிலான கூட்டணி அரசு தொடர்ந்து போராடும்.

    ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் ஆங்கில நாளேடு டெக்கன் கிரானிகிள் (Deccan Chronicle) நிறுவனத்திற்கு சொந்தமான அலுவலகம் விசாகப்பட்டினத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தின் மீது தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது.

    "விசாகப்பட்டினம் ஸ்டீல் ஆலையை தனியார் மயமாக்கும் நடவடிக்கையில் இருந்து ஆந்திர பிரதேச மாநிலத்தின் கூட்டணி அரசு அந்தர்பல்டி அடிக்கும்," என்பது தொடர்பாக டெக்கன் கிரானிகிள் செய்தி வெளியிட்டு இருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்தவர்கள் அந்நிறுவன அலுவலகத்தை தாக்கி உள்ளனர்.

     


    அத்துமீறி அலுவலகத்திற்குள் புகுந்த கட்சியினர் அங்கிருந்த மேசை, இருக்கைகள் உள்ளிட்டவைகளை அடித்து நொறுக்கியதோடு அலுவலக ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அலுவலகத்தின் சுற்றுச் சுவர் மீது ஏறிவர்கள், அலுவலகத்தின் பெயர் பலகைக்கும் தீ வைத்துள்ளனர்.

    டெக்கன் கிரானிகிள் வெளியிட்ட செய்தியில் உண்மையில்லை என்று கூறிய தெலுங்கு தேசம் கட்சியினர் விசாகப்பட்டினம் ஸ்டீல் ஆலை தனியார் மயமாக்கப்படுவதற்கு எதிராக தெலுங்கு தேசம் தலைமையிலான கூட்டணி அரசு தொடர்ந்து போராடும் என்று தெரிவித்தனர்.

    நிறுவனம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த செய்தியாளர்கள், இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தனர். மேலும், அவர்கள் வெளியிட்ட செய்தி உண்மைதான் என்றும், அதனை எத்தகைய பிரச்சினையாலும் எடுக்க முடியாது என்று தெரிவித்தனர். 

    • தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சிக்கு சரியான எதிர்கட்சிகள் எதுவும் இல்லை.
    • ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி புத்துயிர் பெறும்.

    திருப்பதி:

    ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு நேற்று முன்தினம் தெலுங்கானா முதல் மந்திரி ரேவந்த் ரெட்டியை சந்தித்தார். அப்போது ஆந்திரா தெலுங்கானா பிரிவினையால் ஏற்பட்டுள்ள முக்கிய பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இந்த நிலையில் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தெலுங்கானா பிரிவினைக்கு பிறகு கடந்த 10 ஆண்டுகளாக தெலுங்கு தேசம் கட்சி தெலுங்கானா தேர்தலில் போட்டியிடாமல் இருந்தது.

    தெலுங்கானாவில் பிரதான ஆளும் கட்சியாக இருந்த சந்திரசேகரராவின் பி.ஆர்.எஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. தற்போது தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சிக்கு சரியான எதிர்கட்சிகள் எதுவும் இல்லை.

    ஒருங்கிணைந்த ஆந்திராவாக இருந்தபோது தெலுங்கு தேசம் கட்சிக்கு அதிக அளவில் ஆதரவு இருந்தது. அதேபோல் தெலுங்கானாவில் தெலுங்குதேசம் கட்சி பிரிவு மீண்டும் தொடங்கப்படும்.

    இதனால் ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி புத்துயிர் பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தெலுங்கானாவில் மீண்டும் கட்சியை செயல்படுத்துவதற்கான திட்டங்களையும் அறிவித்தார். தெலுங்கானா மக்களும் தெலுங்கு தேசம் கட்சிக்கு ஆதரவு அளிப்பார்கள் என அவர் கூறினார்.

    தெலுங்கானா முதல்-மந்திரியுடனான சந்திப்புக்கு பிறகு அந்த மாநில அரசியலில் சந்திரபாபு நாயுடு கவனம் செலுத்துவது பரரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • அன்னமய்யா மாவட்டத்தில் ஹரிதா ரெட்டி உள்ளூர் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.
    • வைரலான வீடியோவில், காரின் முன் பயணிகள் இருக்கையில் அமர்ந்து இருக்கும் ஹரிதா ரெட்டி, சப்-இன்ஸ்பெக்டரை நோக்கி பல கேள்விகளை கேட்கிறார்.

    நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆந்திராவில் 4-வது முறையாக முதல்-மந்திரியாக தெலுங்கு தேச கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு பதவியேற்றுக்கொண்டுள்ளார். துணை முதல்வராக கூட்டணியில் உள்ள ஜனசேனா கட்சியின் தலைவரும், நடிகருமான பவன் கல்யாண் பதவியேற்றார். சந்திரபாபு நாயுடுவின் அமைச்சரவையில் மண்டிபள்ளி ராம்பிரசாத் ரெட்டி என்பவர் அமைச்சராக உள்ளார். இவர் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக உள்ளார்.

    இந்நிலையில், அமைச்சர் ராம்பிரசாத் ரெட்டியின் மனைவி ஹரிதா ரெட்டி, ஒரு நிகழ்ச்சிக்கு சென்றிருந்தபோது, தன்னைக் காத்திருக்க வைத்ததற்காக ரமேஷ் என்ற சப்-இன்ஸ்பெக்டரை கண்டித்த வீடியோ வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    அன்னமய்யா மாவட்டத்தில் ஹரிதா ரெட்டி உள்ளூர் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. வைரலான வீடியோவில், காரின் முன் பயணிகள் இருக்கையில் அமர்ந்து இருக்கும் ஹரிதா ரெட்டி, சப்-இன்ஸ்பெக்டரை நோக்கி பல கேள்விகளை கேட்கிறார்.

    அப்போது... "இன்னும் காலை ஆகவில்லையா? என்ன கான்பரன்ஸ்? கல்யாணத்துக்கு வந்திருக்கியா, ட்யூட்டிக்கு வந்திருக்கியா? உங்களுக்காக அரைமணிநேரம் காத்திருந்தேன். உனக்கு சம்பளம் யார் தருவது? அரசாங்கமா அல்லது ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியா?" என்று கடுமையான வார்த்தைகளால் வசப்பாடியுள்ளார்.

    வீடியோவின் முடிவில், சப்-இன்ஸ்பெக்டர் ஹரிதா ரெட்டிக்கு சல்யூட் அடித்து, அவரது வாகனத்துக்கு வழி ஏற்படுத்தி தர முன்னோக்கி செல்கிறார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    இந்த சம்பவத்திற்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்து அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில் "அமைச்சரின் மனைவிக்கும் ராஜ மரியாதை வேண்டுமாம். அமைச்சர் மண்டபள்ளி ராம்பிரசாத் ரெட்டின் மனைவி ராயச்சோட காவல் நிலையத்தை சேர்ந்தவர்களை தனக்கு துணையாக வரும்படி கூறினார். போலீசாரை அடிமைபோல் எச்சரிக்கை செய்துள்ளார். பயமடைந்த போலீஸ் ஆதரவற்ற நிலையில் அவருக்கு சல்யூட் அடித்தார்'' என தெரிவித்துள்ளது.

    • ஆந்திரா முழுவதும் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.
    • போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    திருப்பதி:

    ஆந்திர முன்னாள் முதல் மந்திரியாக இருந்தவர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி. கடந்த 5 ஆண்டுகள் ஜெகன்மோகன் ரெட்டி முதல் மந்திரியாக இருந்தார்.

    அப்போது அவரது தந்தை ராஜசேகர ரெட்டிக்கு ஆந்திர மாநிலம் முழுவதும் ஆங்காங்கே சிலைகளை நிறுவினார்.

    நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெற்றது முதல் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினருக்கும், தெலுங்கு தேசம் கட்சியினருக்கும் ஆங்காங்கே மோதல் ஏற்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் ஆந்திர மாநிலம் பாப்பரட்டலா மாவட்டம் அட்டை பள்ளியில் வைக்கப்பட்டுள்ள ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் சிலை மீது மர்ம நபர்கள் பெட்ரோலை ஊற்றி தீ வைத்தனர். இதில் சிலை முழுவதும் எரிந்து கருகியது.

    இதனைக் கண்ட ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் அதிர்ச்சி அடைந்தனர். தெலுங்கு தேசம் கட்சியினர் சிலைக்கு தீ வைத்ததாக குற்றம் சாட்டினர். இதனை எதிர்த்து போராட்டம் நடத்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

    இதனால் ஆந்திரா முழுவதும் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டு உள்ளதால் ஆங்காங்கே போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    • தேர்லுக்கு பின் கிரகப்பிரவேசம் நடத்தலாம் என ஜெகன்மோகன் ரெட்டி திட்டமிட்டு இருந்ததாக கூறப்படுகிறது.
    • புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    ஆந்திராவில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி தோல்வி அடைந்தார். தெலுங்கு தேச கட்சி பெரும்பான்மையான வெற்றி பெற்று 4-வது முறையாக ஆந்திராவின் முதல்-மந்திரியாக சந்திரபாபு நாயுடு பதவியேற்றுக்கொண்டார். ஆட்சி மாறியதும் ஜெகன்மோகன் ரெட்டிக்கு பிரச்சனைகளும் வரிசை கட்டி இருக்கிறது.

    கடந்த 15-ந்தேதி, தெலுங்கானா மாநிலம் ஐதாராபாத்தில் உள்ள ஜெகன்மோகன் ரெட்டில் வீட்டில் நடைபாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்கள் புல்டோசர் மூலம் போலீஸ் பாதுகாப்புடன் இடிக்கப்பட்டது.

    இந்நிலையில், ரூ.500 கோடி மதிப்பில் அரண்மனை போன்ற பங்களாவை ஜெகன்மோகன் கட்டி உள்ளது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் சுற்றுலா பகுதிகளில் ஒன்றான ரிஷிகொண்டா என்ற மலைப்பகுதியில் இந்த பங்களா கட்டப்பட்டுள்ளது.


    இந்த பங்களா தொடர்பான புகைப்படத்தை எக்ஸ் தள பக்கத்தில் ஆளும் தெலுங்கு தேசம் கட்சி பகிர்ந்து, இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என தெரிவித்துள்ளது.

    கண்ணாடிகள், கிரானைட்கள் என மிக பிரம்மாண்டாக கட்டப்பட்டுள்ள பங்களாவில் பாத்ரூம் தொட்டிக்கு மட்டும் ரூ.25 லட்சம் செலவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பங்களாவை அரசின் பயன்பாட்டிற்காக கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    ஜெகன்மோகன் ரெட்டி மறுபடியும் ஆட்சிக்கு வருவார் என்ற நம்பிக்கையில் தான் இந்த பங்களா கட்டப்பட்டுள்ளதாகவும் தேர்லுக்கு பின் கிரகப்பிரவேசம் நடத்தலாம் என ஜெகன்மோகன் ரெட்டி திட்டமிட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது.

    இதுதொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    • வாக்கு எண்ணிக்கையில் நானி தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி வேட்பாளர் செவி ரெட்டி பாஸ்கர் ரெட்டியை விட அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
    • ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஒட்டு மொத்தமாக ஊரை காலி செய்து விட்டு நேற்று நடை பயணமாக திருப்பதிக்கு சென்றனர்.

    திருப்பதி:

    ஆந்திராவில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் சந்திரகிரி தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் புலி வர்த்தி வெங்கடமணி பிரசாத் என்கிற நானி வேட்பாளராக போட்டியிட்டார்.

    தேர்தலில் நானி வெற்றி பெற வேண்டும் எனவும், நானி தேர்தலில் வெற்றி பெற்றால் நடந்து வந்து நேர்த்தி கடன் செலுத்துவதாக தாமல செருவு பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஊட்ல வங்க கிராம மக்கள் ஏழுமலையானிடம் வேண்டிக்கொண்டனர்.

    வாக்கு எண்ணிக்கையில் நானி தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி வேட்பாளர் செவி ரெட்டி பாஸ்கர் ரெட்டியை விட அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

    தங்களது பிரார்த்தனை நிறைவேறியதால் ஏழுமலையானுக்கு நன்றி கடன் செலுத்துவதற்காக ஊட்ல வங்க கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் பாதயாத்திரை செல்ல முடிவு செய்தனர்.

    ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஒட்டு மொத்தமாக ஊரை காலி செய்து விட்டு நேற்று நடை பயணமாக திருப்பதிக்கு சென்றனர்.

    நடைபயணமாக சென்ற கிராம மக்களுக்கு எம்.எல்.ஏ. நானியின் மனைவி புலிவத்தி சுதா ரெட்டி தாமல செருவில் அன்னதானம் வழங்கி வழி அனுப்பி வைத்தார்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • பதவியேற்பு விழாவில் அரசியல், சினிமா பிரபலங்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
    • மேடையில் இருந்த தனது அண்ணனான நடிகர் சிரஞ்சீவி காலில் விழுந்து பவன் கல்யாண் ஆசீர்வாதம் பெற்றார்.

    ஆந்திர பாராளுமன்ற தேர்தலில் 135 இடங்களில் தெலுங்கு தேசம் கட்சியும், 21 இடங்களில் ஜனசேனா கட்சியும் வெற்றி பெற்றது. பா.ஜ.க போட்டியிட்ட 10 இடங்களில் 8 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த கூட்டணி மொத்தமாக 164 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதனால் தெலுங்கு தேசம் தலைமையிலான கூட்டணி இன்று ஆந்திராவில் ஆட்சி அமைக்கிறது.

    விஜயவாடா கன்னவரம் விமான நிலையம் அருகே உள்ள கேசரப்பள்ளி தொழில்நுட்ப பூங்கா வளாகத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள் அமித்ஷா, ஜேபி நட்டா நடிகர்கள் ரஜினிகாந்த், சிரஞ்சீவி, வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழக துணைத் தலைவர் ஜி.வி.செல்வம் மற்றும் அரசியல், சினிமா பிரபலங்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

    இதில், ஆந்திராவின் முதல்-மந்திரியாக 4-வது முறையாக சந்திரபாபு நாயுடு பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு கவர்னர் நசீர் அகமது பதவி பிரமாணம் செய்து வைத்தார். சந்திரபாபு நாயுடுவுக்கு அடுத்ததாக ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாணும் பதவியேற்றுக்கொண்டார்.

    பதவியேற்று முடிந்தவுடன் பிரதமர் மோடியிடம் வாழ்த்து பெற்ற பவன் கல்யாண், மேடையில் இருந்தவர்களிடம் வாழ்த்து பெற்றார். மேலும் மேடையில் இருந்த தனது அண்ணனான நடிகர் சிரஞ்சீவி காலில் விழுந்து பவன் கல்யாண் ஆசீர்வாதம் பெற்றார்.

    இதனிடையே, சந்திரபாபு தலைமையிலான அமைச்சரவையில் பவன் கல்யாணுக்கு துணை முதல்-மந்திரி வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக, தேர்தல் வெற்றியை உறுதி செய்ததில் ஜனசேனா கட்சி தலைவரும், நடிகருமான பவன் கல்யாணுக்கு பெரும் பங்குண்டு என்பதால் அவருக்கு துணை முதல்வர் பதவி வழங்கக்கூடும் என கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.


    • ஆந்திராவில் ஆட்சி அமைக்க வரும்படி சந்திரபாபு நாயுடுவுக்கு கவர்னர் அப்துல் நசீர் அழைப்பு விடுத்தார்.
    • பதவியேற்பு விழாவிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலுக்கும் வாக்கு பதிவு நடந்தது. இதில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி கூட்டணி இமாலய வெற்றி பெற்றது.

    மொத்தம் உள்ள 175 சட்டமன்ற தொகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சி மட்டும் 135 இடங்களிலும், ஜனசேனா கட்சி போட்டியிட்ட 21 இடங்களிலும் வெற்றி பெற்றது.

    பா.ஜ.க போட்டியிட்ட 10 இடங்களில் 8 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த கூட்டணி மொத்தமாக 164 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.

    தெலுங்கு தேசம் தலைமையிலான கூட்டணி கட்சிகளின் கூட்டம் விஜயவாடாவில் நேற்று நடந்தது. இதில் கூட்டணி கட்சிகளின் தலைவராக சந்திரபாபு நாயுடு ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார்.

    இதனைத் தொடர்ந்து சந்திரபாபு நாயுடு ஒருமனதாக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான கடிதத்துடன் பா.ஜ.க. மாநில தலைவர் புரந்தேஸ்வரி மற்றும் தெலுங்கு தேசம், ஜனசேனா கட்சி பிரதிநிதிகள் கவர்னர் நசீர் அகமதுவை நேரில் சந்தித்து சந்திரபாபு நாயுடுவை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கும்படி கோரிக்கை விடுத்தனர்.

    ஆந்திர முதல்-மந்திரியாக சந்திரபாபு நாயுடு பதவியேற்கும் விழா இன்று காலை விஜயவாடா கன்னவரம் விமான நிலையம் அருகே உள்ள கேசரப்பள்ளி தொழில்நுட்ப பூங்கா வளாகத்தில் பிரமாண்டமாக நடந்தது.

    விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி விமானம் மூலம் விழா நடைபெறும் இடத்திற்கு வந்தார். அவரை சந்திரபாபு நாயுடு, கவர்னர் நசீர் அகமது ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

    விழாவில் சந்திரபாபு நாயுடு ஆந்திர மாநில முதல்-மந்திரியாக பதவி ஏற்றுக்கொண்டார். அவரை அடுத்து ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாணும் பதவியேற்றுக்கொண்டார். மற்ற அமைச்சர்களும் பதவி ஏற்றுக்கொண்டனர். அவர்களுக்கு கவர்னர் நசீர் அகமது பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

    பிரதமர் மோடி முதல்- மந்திரி சந்திரபாபு நாயுடு மற்றும் அமைச்சர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

    மத்திய மந்திரிகள் அமித்ஷா, ஜேபி நட்டா நடிகர்கள் ரஜினிகாந்த், சிரஞ்சீவி, வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழக துணைத் தலைவர் ஜி.வி.செல்வம் மற்றும் அரசியல் சினிமா பிரமுகர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.

    சந்திரபாபு நாயுடுவுக்கு விழாவில் பங்கேற்ற முக்கிய பிரமுகர்கள் பொன்னாடை அணிவித்தும் பூங்கொத்துகளை கொடுத்தும் வாழ்த்து தெரிவித்தனர்.

    பதவியேற்பு விழா நடந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    தெலுங்கு தேசம் ஜனசேனா,பா.ஜ.க கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

    சந்திரபாபு நாயுடு மற்றும் அமைச்சர்கள் பதவியேற்றக் கொண்ட போது கைதட்டி பலத்த ஆரவாரம் செய்தனர்.

    ஆந்திர மாநில அமைச்சர்கள் தேர்வு குறித்து அமித்ஷா மற்றும் ஜே.பி. நட்டாவுடன் நடந்த சந்திப்பிற்கு பிறகு சந்திரபாபு நாயுடு இறுதி முடிவு எடுத்துள்ளார்.

    அமைச்சர்கள் பட்டியலில் 17 புது முகங்கள் தெலுங்கு தேசம் கட்சியில் இடம் பெற்றிருந்தனர். சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷுக்கு முக்கிய இலாக்கா ஒதுக்கப்படுகிறது.

    இது தவிர நடிகர் பவன் கல்யாண் உட்பட அவருடைய கட்சியில் 3 மந்திரிகளும், பா.ஜ.க.வுக்கு ஒரு மந்திரி பதவியும் வழங்கப்பட்டுள்ளது.

    சந்திரபாபு நாயுடு ஒரு மந்திரி பதவியை காலியாக வைத்துள்ளதாக கூறப்படுகிறது. மந்திரிகள் குழுவில் 3 பெண்கள் உள்ளனர்.

    முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு இன்று மாலை திருப்பதி வருகிறார். அங்கு இரவு தங்குகிறார். நாளை அதிகாலை ஏழுமலையான் கோவிலில் சந்திரபாபு நாயுடு சாமி தரிசனம் செய்கிறார்.













    • சந்திரபாபு நாயுடு நாளை மறுநாள் முதல் மந்திரியாக பதவி ஏற்று கொள்கிறார்.
    • புரந்தேஸ்வரி ராஜமுந்திரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    திருப்பதி:

    தேசிய ஜனநாயக கூட்டணி பிரதமராக நரேந்திர மோடி மற்றும் மத்திய மந்திரிகள் நேற்று பதவி ஏற்றனர்.

    சந்திரபாபு நாயுடு தனது கட்சிக்கு 5 மந்திரி பதவியும், 1 சபாநாயகர் பதவியும் வழங்க வேண்டும் என பா.ஜ.க.விடம் வலியுறுத்தி வந்தார்.

    ஆனால் தெலுங்கு தேசம் கட்சிக்கு 2 மந்திரி பதவிகளை பா.ஜ.க. வழங்கியது. சந்திரபாபு நாயுடு வலியுறுத்தியதின்படி. அவரது மனைவியின் சகோதரியும் பா.ஜ.க. மாநில தலைவரான புரந்தேஸ்வரிக்கு சபாநாயகர் பதவி வழங்க பா.ஜ.க. மேலிடம் முடிவு செய்துள்ளது.

    சந்திரபாபு நாயுடு நாளை மறுநாள் முதல் மந்திரியாக பதவி ஏற்று கொள்கிறார். அவரது பதவி ஏற்பு விழாவிற்கு பிறகு புரந்தேஸ்வரி இன்னும் சில நாட்களில் சபாநாயகராக பதவியேற்பார் என கூறப்படுகிறது.

    புரந்தேஸ்வரியை சபாநாயகராக தேர்ந்தெடுத்தால் ஆந்திரா மாநிலம் மேலும் வளர்ச்சி பெறும் என கூறப்படுகிறது.

    ஆந்திர மாநில பா.ஜ.க. தலைவர் புரந்தேஸ்வரி தெலுங்கு தேசம் கட்சி தலைவரும் முன்னாள் முதல் மந்திரியுமான நடிகர் என்.டி.ராமராவின் மகள். என்டி ராமராவ் மகளும், புரந்தேஸ்வரியின் சகோதரிமான புவனேஸ்வரியை சந்திரபாபு திருமணம் செய்து கொண்டார்.

    என.டி.ராமராவின் மறைவுக்கு பிறகு சந்திரபாபு நாயுடு தெலுங்கு தேசம் கட்சி தலைவரானார். ஆந்திர அரசியலில் கால் பதிக்க நினைத்த புரந்தேஸ்வரி தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்து மந்திரி, எம்.பி பதவிகளை வகித்தார். 2004-ம் ஆண்டு பாபட்லா எம்.பி.யாகவும், 2009-ம் ஆண்டு விசாகப்பட்டினம் எம்.பி.யாகவும் பணியாற்றினார்.

    பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து விலகி எந்த கட்சியிலும் சேராமல் இருந்தார்.

    இந்த நிலையில் ஆந்திராவில் பா.ஜ.க. கால் பதிக்க முடியாமல் திணறிக்கொண்டு இருந்தபோது கட்சி மேலிடம் புரந்தேஸ்வரியை மாநில தலைவராக அறிவித்தது.

    புரந்தேஸ்வரி மாநில தலைவராக பதவி ஏற்ற பிறகு கட்சியின் வளர்ச்சிக்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார். இவரது நடவடிக்கையால் ஆந்திராவில் பா.ஜ.க. அபார வளர்ச்சி அடைந்தது.

    நடந்து முடிந்த சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க, தெலுங்கு தேசம் மற்றும் ஜனசேனா கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. புரந்தேஸ்வரி ராஜமுந்திரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    பா.ஜ.க. 10 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட்டு 8 சட்டமன்ற தொகுதிகளையும், 3 பாராளுமன்ற தொகுதிகளிலும் அபார வெற்றி பெற்றது.

    • ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமார் 3 முக்கிய மத்திய மந்திரி பதவிகளை கேட்கிறார்.
    • அறுதி பெரும்பான்மை பெற்று தெலுங்கு தேசம் ஆந்திராவில் ஆட்சி அமைக்க உள்ளது.

    நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு ஆட்சி அமைக்க தேவையான இடங்கள் கிடைக்கப்பெறவில்லை. இதனால் கூட்டணி கட்சிகளின் ஆதரவில் ஆட்சி அமைக்க உள்ளது.

    இதனால் புதிய மத்திய அமைச்சரவையில் கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை இடம் ஒதுக்குவது? பா.ஜ.க.வில் யார் யாருக்கு அமைச்சர் பதவி வழங்குவது? என்பது குறித்து பா.ஜ.க. மூத்த தலைவர்கள் ஒரு புறம் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

    இதனிடையே தேர்தலில் பா.ஜ.க.வுக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்காததால் சந்திரபாபு நாயுடுவும், நிதிஷ் குமாரும் கிங் மேக்கர்களாக உள்ளனர். அவர்கள் இருவரும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தங்கள் கட்சிக்கு அதிக மந்திரி பதவியை கேட்க தொடங்கி உள்ளனர். இதனால் பா.ஜ.க. தரப்பினர் செய்வதறியாது தவிப்புக்குள்ளாகி உள்ளனர்.

    ஆந்திர மாநிலத்திற்கு கூடுதலாக நிதி தேவை என்பதால் நிதி அமைச்சகத்தில் ராஜாங்க மந்திரி பதவியையும் சந்திரபாபு நாயுடு கேட்கிறார்.

    இதற்கிடையே ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமார் 3 முக்கிய மத்திய மந்திரி பதவிகளை கேட்கிறார். மேலும் ராஜாங்க மந்திரி பதவிகளையும் அவர் எதிர்பார்த்து பா.ஜ.க. மூத்த தலைவர்களிடம் கருத்து தெரிவித்துள்ளார்.

    ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி 135 இடங்களிலும், ஜன சேனா 21 இடங்களிலும் வெற்றி பெற்றது. அறுதி பெரும்பான்மை பெற்று தெலுங்கு தேசம் ஆந்திராவில் ஆட்சி அமைக்க உள்ளது.

    இந்நிலையில் ஆந்திராவில் முஸ்லீம் இடஒதுக்கீடு தொடருமா என்ற கேள்விக்கு, தெலுங்கு தேசம் கட்சியின் கே.ரவீந்திர குமார், ஆம், நாங்கள் அதை தொடர்வோம். எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறினார்.

    இதைத்தொடர்ந்து அவர் கூறுகையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இதற்கு முந்தைய கூட்டம் கடந்த 5-ந்தேதி நடைபெற்றது. இன்று நடைபெறுவது 2-வது கூட்டமாகும். இன்றைய கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியிடம் இருந்து சில உதவிகள் கேட்கப்படும். இதையடுத்து தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது. ஜூன் 9-ந்தேதி பிரதமர் பதவியேற்பார் என்று தெரிகிறது.

    அதற்கு முன்பாக தேசிய ஜனநாயக கூட்டணி தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும். அதற்கான கோரிக்கையை குடியரசுத்தலைவரிடம் சமர்ப்பிக்க வேண்டும். பின்னர் எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறும். அதன்பின்னர் பிரச்சனைகள் தொடர்பாக நாங்கள் விவாதிப்போம்.

    இன்று கோரிக்கைகளை விவாதிக்கும் மேடை அல்ல. ஆனால் நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் அங்கம் வகிக்கிறோம். இது தேர்தலுக்கு முந்தைய கூட்டணி. கோரிக்கை என்ற கேள்விக்கு இடமில்லை. முதலில் மத்திய அரசின் திட்டங்களையும், மத்திய-மாநிலப் பகிர்வு சட்டத்தையும் எடுத்துக்கொள்வது வழக்கம். ஆந்திரப் பிரதேசம் 25 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றுவிட்டதால் மீண்டும் கட்டமைக்கப்பட வேண்டும் என்பதே முன்னுரிமை என்று கூறினார்.

    ×