என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உழுவை எந்திரம்"

    • விவசாயிகளுக்கு மானியத்தில் விசை உழுவை எந்திரம் வழங்கப்படும்.
    • இந்த தகவலை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசு வேளாண் பொறியியல் துறை மூலம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட கிராமங்கள் மற்றும் அண்ணா மறுமலர்ச்சி திட்ட கிராமங்களில் உள்ள வேளாண் பெருமக்களுக்கு பவர் டில்லர் (விசை உழுவை எந்திரம்) மானியத்தில் வழங்கப்பட உள்ளது. பவர் டில்லர் எந்திரம் வழங்க தமிழக அரசால் ரூ.38.25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் இயந்திரம் வாங்குவதற்கு சிறு, குறு விவசாயிகள், மகளிர் மற்றும் ஆதிதிராவிட பழங்குடியின விவசாயி களுக்கு 50 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு 40 சதவீத மானியமும் அதிகபட்சமாக ரூ.85,000 வரை மானியமாக வழங்கப்படுகிறது. இதில் பொதுஇன விவசாயிகளுக்கு 36 எண்களும் ஆதிதிராவிட விவசாயிகளுக்கு 9 எண்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆதிதிராவிட சிறு, குறு விவசாயிகளுக்கு அதிகபட்சம் ரூ.1,19,000 வரை மானியம் வழங்கப்படுகிறது.

    பெரிய விவசாயிகளை போல சிறு, குறு மற்றும் ஆதிதிராவிட பழங்குடியின விவசாயிகளும், இதர விவசாயிகளும் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்தில், தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ள இத்திட்டத்தினை பயன்படுத்திட விரும்பும் கிராமங்களில் உள்ள வேளாண் பெருமக்கள் சிறு, குறு விவசாயி சான்றிதழ், அடங்கல், நிலவரைபடம், ஆதார் அட்டை நகல், புகைப்படம் மற்றும் உரிய வருவாய் துறையின் மூலம் பெறப்பட்ட சாதிச்சான்றிதழ் நகல் ஆகிய விபரங்களுடன் ராமநாதபுரம், திருப்புல்லானி, மண்டபம், ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் திருவாடானை வட்டார விவசாயிகள் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வளாகத்தில் கருவூலக கட்டிட முதல் தளத்தில் அமைந்துள்ள உதவி செயற்பொறியாளர் (வே.பொ), ராமநாதபுரம் அலுவலகத்திலும், பரமக்குடி, நயினார்கோயில், முதுகுளத்தூர், போகலூர், கமுதி மற்றும் கடலாடி வட்டார விவசாயிகள் பரமக்குடி சவுகத்அலி தெருவிலுள்ள உதவி செயற்பொறியாளர் (வே.பொ), பரமக்குடி அலுவலகத்திலும் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வளாகத்தில் வேளாண்மை இணை இயக்குநர் அலுவலக கட்டிடம் 2-ம் தளத்தில் அமைந்துள்ள செயற்பொறியாளர் (வே.பொ) அலுவலகத்தையும் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    ×