என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்தியர்கள் மீட்பு"

    • லிபியா நாட்டில் நல்ல சம்பளத்துடன் வேலை வாங்கித்தருவதாக முகவர் ஆசைவார்த்தை கூறியதை நம்பி, பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த 12 பேர் அவருடன் சென்றனர்.
    • துனிஷியாவில் உள்ள இந்திய தூதரகத்தின் உதவி நாடப்பட்டது.

    புதுடெல்லி:

    லிபியா நாட்டில் நல்ல சம்பளத்துடன் வேலை வாங்கித்தருவதாக ஒரு முகவர் ஆசைவார்த்தை கூறியதை நம்பி, பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த 12 பேர் அவருடன் சென்றனர். சட்டவிரோதமாக அழைத்து செல்லப்பட்ட அவர்கள், அங்கு போனவுடன் தனியார் நிறுவனங்களில் சம்பளம் இல்லாமல் வேலை செய்ய வைக்கப்பட்டனர். கொத்தடிமையாக நடத்தப்பட்டனர். உணவும் வழங்கப்படவில்லை. அடித்து சித்ரவதை செய்யப்பட்டனர். 2 மாதங்களாக இதே நிலை நீடித்தது.

    அவர்களை மீட்குமாறு தேசிய சிறுபான்மையினர் ஆணைய தலைவர் இக்பால்சிங் லால்புராவிடம் சில பஞ்சாப் பிரமுகர்கள் மனு அளித்தனர். அவர் அதை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்தார்.

    துனிஷியாவில் உள்ள இந்திய தூதரகத்தின் உதவி நாடப்பட்டது. தூதரகத்தின் உதவியால், முதலில் 4 பேர், அடுத்தபடியாக 8 பேர் என 12 பேரும் மீட்கப்பட்டு இந்தியா அழைத்துவரப்பட்டனர்.

    • நெருக்கடி நிலையைத் தொடர்ந்து ஹைதியில் இருந்து வெளியேறும்படி பல நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
    • ஆபரேஷன் இந்திராவதி மூலம் 12 இந்தியர்கள் ஹைதியில் இருந்து டொமினிக்காவுக்கு அழைத்து வரப்பட்டனர்.

    புதுடெல்லி:

    கரீபிய நாடான ஹைதியில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஆயுதக் குழுவினரின் வன்முறை தாக்குதல்களால் பல ஆண்டுகளாக மக்கள் இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். ஜனாதிபதி பதவிக்கான தேர்தலை அரசாங்கம் நடத்த தவறியதால் அங்கு சமூக பதற்றம் அதிகரித்துள்ளது.

    இதனால் காவல் நிலையங்கள், போலீஸ் அகாடமி, சர்வதேச விமான நிலையம் உள்ளிட்ட இடங்களைக் குறிவைத்து ஆயுதக் குழுக்கள் தாக்குதல் நடத்தி வருகின்றன.

    ஹைதியில் நிலவும் நெருக்கடியான நிலைமையால் பல்வேறு நாடுகள் தங்கள் நாட்டினரை அங்கிருந்து வெளியேறும்படி வலியுறுத்தி வருகின்றன.

    இந்நிலையில், ஆபரேஷன் இந்திராவதி மூலம் 12 இந்தியர்கள் ஹைதியில் இருந்து டொமினிக்காவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர் என வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். நமக்கு தேவையான உதவிகளை செய்யும் டொமினிக்காவுக்கு நன்றி என பதிவிட்டுள்ளார்.

    • இந்திய தொழிலாளர்கள் 17 பேர் பத்திரமாக இந்தியா திரும்பினர்.
    • இதற்கு ஆதரவளித்த லாவோஸ் அதிகாரிகளுக்கு நன்றி என வெளியுறவுத்துறை மந்திரி கூறினார்.

    புதுடெல்லி:

    தென்கிழக்கு ஆசிய நாடான லாவோசில் இந்தியாவை சேர்ந்த தொழிலாளர்கள் சிக்கியுள்ளதாகவும், அவர்கள் அங்கு பாதுகாப்பற்ற மற்றும் சட்டவிரோதமான வேலையில் ஈடுபடுத்தபடுவதாகவும் தகவல்கள் வெளியாகின.

    இதையடுத்து, அவர்களை பத்திரமாக தாயகம் அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது. லாவோசில் உள்ள இந்திய தூதரகத்தின் வாயிலாக இதற்கான முயற்சிகள் நடந்தன.

    இந்நிலையில், லாவோசில் சிக்கித் தவித்த 17 இந்தியர்கள் தாயகம் திரும்பினர் என வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் எக்ஸ் வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வௌியிட்டுள்ள செய்தியில், மோடியின் உத்தரவாதம், உள்நாட்டில் உள்ள மக்களுக்கு மட்டுமின்றி வெளிநாட்டில் உள்ள இந்தியர்களுக்கும் வேலை செய்கிறது. லாவோசில் பாதுகாப்பற்ற மற்றும் சட்டவிரோத வேலைகளில் சிக்கிய 17 இந்திய தொழிலாளர்கள் தாயகம் திரும்பியுள்ளனர். பிரச்சனைக்கு தீர்வு காண வெற்றிகரமான முயற்சிகளை மேற்கொண்ட லாவோசில் உள்ள இந்திய தூதரகத்துக்கு பாராட்டுகள். இந்திய தொழிலாளர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவதற்கு ஆதரவளித்த அந்நாட்டு அதிகாரிகளுக்கு நன்றி என பதிவிட்டுள்ளார்.

    • கொமாரோஸ் நாட்டுக்குச் சொந்தமான ‘பிரெஸ்டீஜ் பால்கன்’ என்ற அந்த கப்பல் ஏமனின் ஏடன் துறைமுகம் நோக்கி சென்று கொண்டிருந்தது.
    • மாயமான மற்ற மாலுமிகளை தேடும் பணியில் மீட்பு குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.

    மஸ்கட்:

    13 இந்திய மாலுமிகளுடன் சென்ற எண்ணெய் கப்பல் ஓமன் நாட்டின் கடற்பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. நீண்ட நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு 8 இந்தியர்கள் மற்றும் இலங்கையை சேர்ந்த ஒருவர் என 9 மாலுமிகள் உயிருடன் மீட்கப்பட்டனர். மாயமான மற்ற மாலுமிகளை தேடும் பணியில் மீட்பு குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.

    ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் உள்ள ஹம்ரியா துறைமுகத்தில் இருந்து ஒரு எண்ணெய் கப்பல் புறப்பட்டது. கொமாரோஸ் நாட்டுக்குச் சொந்தமான 'பிரெஸ்டீஜ் பால்கன்' என்ற அந்த கப்பல் ஏமனின் ஏடன் துறைமுகம் நோக்கி சென்று கொண்டிருந்தது.

    இதில் 13 இந்திய மாலுமிகள் மற்றும் இலங்கையை சேர்ந்த 3 மாலுமிகள் என மொத்தம் 16 பேர் இருந்தனர். இந்த கப்பல் ஓமன் நாட்டின் ராஸ் மத்ரகா கடற்கரையில் இருந்து சுமார் 25 கடல் மைல் தொலைவுக்கு அருகே பயணித்துக் கொண்டிருந்தபோது திடீரென கவிழ்ந்தது. இதில் கப்பலில் இருந்த மாலுமிகள் அனைவரும் கடலில் மூழ்கினர்.

    இதுகுறித்து தகவலறிந்த ஓமன் கடலோர காவல்படையினர் அங்கு விரைந்தனர். அவர்கள் கடலில் மூழ்கி மாயமான மாலுமிகளை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். நீண்ட நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு 8 இந்தியர்கள் மற்றும் இலங்கையை சேர்ந்த ஒருவர் என 9 மாலுமிகள் உயிருடன் மீட்கப்பட்டனர். மாயமான மற்ற மாலுமிகளை தேடும் பணியில் மீட்பு குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.

    • தூதரக அதிகாரிகள் லாவோஸ் பாதுகாப்பு அதிகாரிகளின் துணையுடன் ஒரு குழுவை அந்த மையங்களுக்கு அனுப்பி வைத்தனர்.
    • மீட்கப்பட்ட இந்தியர்கள் அனைவரையும் இந்தியாவுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    வியன்டியான்:

    கிழக்கு ஆசிய நாடான லாவோசில் ஏராளமான இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களை அங்குள்ள ரவுடி கும்பல் கடத்திச்செல்வது அடிக்கடி நடந்து வருகிறது.

    அந்தவகையில் லாவோசின் பல்வேறு பகுதிகளில் தங்கியிருந்த இந்தியர்கள் 67 பேர் மோசடி கும்பலால் கடத்தப்பட்டு போகியோ மாகாணத்தில் உள்ள சைபர் மோசடி மையங்களில் பணியமர்த்தப்பட்டு இருந்தனர்.

    அந்த ரவுடி கும்பலால் பல்வேறு துயரங்களை அனுபவித்து வந்த இந்தியர்கள், தங்களை மீட்குமாறு தலைநகர் வியான்டியானில் உள்ள இந்திய தூதரகத்துக்கு தகவல் கொடுத்தனர்.

    இதைத்தொடர்ந்து தூதரக அதிகாரிகள் லாவோஸ் பாதுகாப்பு அதிகாரிகளின் துணையுடன் ஒரு குழுவை அந்த மையங்களுக்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் அதிரடியாக செயல்பட்டு 67 இந்தியர்களையும் பத்திரமாக மீட்டனர். பின்னர் அவர்கள் வியான்டியானுக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு உள்ள அவர்களை இந்திய தூதர் பிரசாந்த் அகர்வால் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும் அவர்களது அனுபவங்களை கேட்டறிந்த அவர், இந்த கடத்தலுக்கு உடந்தையாக இருந்த ஏஜென்டுகள் மீது புகார் அளிக்க நடவடிக்கை எடுப்பதாகவும், விரைவில் நாடு திரும்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் உறுதியளித்தார்.

    இதைத்தொடர்ந்து மீட்கப்பட்ட இந்தியர்கள் அனைவரையும் இந்தியாவுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக இந்திய தூதரக அதிகாரிகள் லாவோசில் உள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். தற்போது மீட்கப்பட்டுள்ள 67 பேரையும் சேர்த்து மொத்தம் 924 இந்தியர்கள் இதுவரை ரவுடி கும்பலிடம் இருந்து மீட்கப்பட்டு உள்ளதாகவும், இதில் 857 பேர் பாதுகாப்பாக இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாகவும் இந்திய தூதரகம் கூறியுள்ளது.

    அதேநேரம் தாய்லாந்துக்கு பணிக்கு அனுப்பி வைப்பதாக வெளியாகும் தகவல்களை குறித்தும், இந்த ஏஜென்டுகளை குறித்தும் கவனமாக இருக்குமாறு இந்தியர்களை லாவோசில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தி உள்ளது.

    ×