search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அண்ணா நகர் பூங்கா"

    • கோபுரத்தின் மீது செல்லும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு வசதிகளும் செய்யப்பட்டு உள்ளன.
    • 12 ஆண்டுக்கு பிறகு திறக்கப்பட்டு உள்ள அண்ணா நகர் பூங்கா கோபுரத்தை பார்க்க பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    அண்ணா நகர்:

    சென்னை, அண்ணா நகரில் உள்ள டவர் பூங்கா பிரபலமானது. இங்கு 12 அடுக்கில் 135 அடி உயரத்தில் கோபுரம் உள்ளது.

    இந்த கோபுரத்தின் மீது ஏறி பார்க்க சென்ற சில காதல் ஜோடிகள் தற்கொலை செய்ததால் கடந்த 2011-ம் ஆண்டு பாதுகாப்பு கருதி கோபுரத்தின் மீது ஏறி பொதுமக்கள் பார்க்க தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து பல ஆண்டுக்கு மூடிக் கிடந்த கோபுரம் 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் புனரமைக்கப்பட்டு திறக்கப்பட்டு உள்ளது. இதில் ரூ.44 லட்சம் செலவில் தடுப்பு வேலி, ரூ.11 லட்சம் செலவில் நடைபாதை, குளத்தை சுற்றி தடுப்பு வேலி, ரூ.33 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் சிறுவர் விளையாட்டு உபகரணங்கள் என மொத்தம் ரூ.97 லட்சம் மதிப்பில் புதுப்பிக்கப்பட்டது.

    கோபுரத்தின் மீது செல்லும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு வசதிகளும் செய்யப்பட்டு உள்ளன. இதன் திறப்பு விழா நேற்று மாலை நடைபெற்றது. புதுப்பிக்கப்பட்ட அண்ணா நகர் பூங்கா கோபுரத்தை பார்க்க பொதுமக்கள் மத்தியில் ஆர்வம் ஏற்பட்டு உள்ளது. இன்று காலை சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பூங்கா கோபுரத்தை பார்க்க குடும்பத்துடன் குவிந்தனர். இதனால் பூங்கா பகுதி முழுவதும் களை கட்டியது.

    புதுப்பிக்கப்பட்ட நீரூற்று, வண்ண ஓவியத்தை அவர்கள் பார்த்து ரசித்தனர். கல்லூரி மாணவ-மாணவிகள் அதிக அளவில் வந்து இருந்தனர். அவர்கள் 135 அடி உயர கோபுரத்தில் ஏறி அண்ணா நகரின் அழகை மேலே நின்றபடி ரசித்தனர். ஏராளமானோர் இதனை செல்போனில் செல்பி எடுத்து ரசித்தனர். ஒருமாதம் இந்த கோபுரத்தை பார்க்க இலவச அனுமதி என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன் பின்னர் கோபுரத்துக்கு செல்ல குறிப்பிட்ட கட்டணம் வசூல் செய்யப் படும் என்று தெரிகிறது.

    12 ஆண்டுக்கு பிறகு திறக்கப்பட்டு உள்ள அண்ணா நகர் பூங்கா கோபுரத்தை பார்க்க பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் பூங்காவுக்கு வரும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    • கோபுரத்தின் பக்கவாட்டு பகுதிகள் அனைத்திலும் தடுப்பு கம்பிகள் மற்றும் இரும்பு வேலிகள் அமைக்கப்பட்டு உள்ளது.
    • நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இந்த கோபுரத்தை திறந்து வைக்க உள்ளார்.

    சென்னை:

    சென்னை அண்ணா நகரில் உள்ள 'டவர்' பூங்கா மிகவும் பழமையான பூங்காக்களில் ஒன்று ஆகும். இந்த பூங்கா அமைக்கும் பணி 1960-ம் ஆண்டு தொடங்கப்பட்டு 1968-ம் ஆண்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது. இந்த பூங்காவில் 135 அடி உயர கோபுரம் உள்ளது. அண்ணாநகரின் முக்கிய அடையாளமாக இந்த 'டவர்' பூங்கா திகழ்ந்து வந்தது. பொதுமக்களை கவரும் வகையில் அமைக்கப்பட்டு இருந்த இந்த கோபுரத்தின் மேலே பொதுமக்கள் ஏறிச்சென்று சென்னை நகரின் இயற்கை அழகை ரசித்து வந்தனர்.

    இந்த நிலையில், காதல் தோல்வி அடைந்த ஒரு சில காதலர்கள் இந்த டவரில் ஏறி கீழே குதித்து தற்கொலை செய்த சம்பவங்கள் நிகழ்ந்தது. இதையடுத்து, கடந்த 2011-ம் ஆண்டு முதல் கோபுரத்தின் மேல் ஏறிச்செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டது. கடந்த 11 ஆண்டுகளாக பொதுமக்கள் கோபுரத்தின் மேலே செல்ல அனுமதிக்க மறுக்கப்பட்டது.

    மேலும், பூங்காவுக்கு வரும் பொதுமக்கள் நவீன பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த கோபுரம் மற்றும் பூங்காவை சீரமைத்து தர வேண்டும் என்று சென்னை மாநகராட்சிக்கு கோரிக்கை விடுத்தனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மாநகராட்சி சார்பில் ரூ.30 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கோபுரம் நவீன பாதுகாப்பு வசதிகளுடன் சீரமைக்கப்பட்டு வந்தது. குறிப்பாக, கோபுரத்தின் பக்கவாட்டு பகுதிகள் அனைத்திலும் தடுப்பு கம்பிகள் மற்றும் இரும்பு வேலிகள் அமைக்கப்பட்டு உள்ளது.

    கோபுரத்தின் மேலே ஏறிச்செல்லும் போது கீழே தடுமாறி விழுந்திடாத வகையில் இவை அமைக்கப்பட்டு இருக்கிறது. படிக்கட்டுகள் அனைத்தும் கம்பள விரிப்புகள் கொண்டுள்ளது. கோபுரத்தின் தடுப்பு சுவர் மற்றும் தூண்களில் தமிழ்நாட்டின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையிலான ஓவியங்கள் வரையப்பட்டு உள்ளது. கோபுரத்தின் மேலே செல்லும் பொதுமக்களுக்கு மன அமைதியையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தும் வகையில் பசுமையை சித்தரித்து வண்ணங்கள் தீட்டப்பட்டு உள்ளன.

    இந்தநிலையில், பூங்காவில் கோபுர பணிகள் அனைத்தும் முடிந்துள்ள நிலையில் அடுத்த வாரம் இந்த கோபுரம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்பட உள்ளது. இதுகுறித்து, சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், 'நவீன பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த கோபுரம் மறுசீரமைப்பு செய்யப்பட்டு உள்ளது. அடுத்தவாரம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்பட உள்ளது. நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இந்த கோபுரத்தை திறந்து வைக்க உள்ளார் என்றார்.

    ×