என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டாஸ்மாக் மேலாளர் வீட்டில்"

    • பீரோவில் இருந்த நகைகள் மற்றும் பணம் திருட்டு போயிருந்தது.
    • சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளையும் ஆய்வு செய்து விசாரணை.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்துள்ள விஜயமங்கலம் சேரன் நகரை சேர்ந்தவர் பசுபதி. இவரது மனைவி மைதிலி. பசுபதி தர்மபுரியில் டாஸ்மாக் மேலாளராக வேலை பார்த்து வருகிறார்.

    இவருடைய மனைவி மைதிலி அத்திக்கடவு- அவினாசி திட்ட அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.

    நேற்று முன்தினம் வீட்டில் அனைவரும் வெளியூர் சென்று விட்டனர். நேற்று காலை மைதிலி வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. பீரோவில் இருந்த 37 பவுன் நகைகள் மற்றும் ரூ.4 லட்சம் ரொக்க பணம் திருட்டு போயிருந்தது.

    வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து கைவரிசை காட்டி இருப்பது தெரிய வந்தது. இது குறித்து பெருந்துறை போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டது.

    அதன் பேரில் பெருந்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயபாலன், போலீஸ் இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

    கைரேகை நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்தனர். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. அது சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

    இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் வீட்டில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளையும் ஆய்வு செய்து அதன் அடிப்படையில் விசாரணையை நடத்தி வருகின்றனர்.

    சி.சி.டி.வி. கேமிரா காட்சியில் கொள்ளை நடந்த அன்று நள்ளிரவில் ஒரு சிகப்பு கலர் காரும், ஒரு மோட்டார் சைக்கிளும் செல்வது பதிவாகி இருந்தது. இதன் பேரில் விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர்.

    ×