search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதுரை சித்திரை திருவிழா"

    • மதுரையில் சித்திரைத் திருவிழா நடைபெற்று வருகிறது.
    • வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க பொதுப்பணித்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

    கூடலூர்:

    முல்லைப்பெரியாறு அணை நீர் பிடிப்பு பகுதியில் கடந்த 1 வாரமாக மழை பெய்தது. இதனால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மழைப்பொழிவு இல்லாததால் அணைக்கு நீர் வரத்து சரியத் தொடங்கியது. இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் நீர் பிடிப்பு பகுதியில் மீண்டும் மழை பெய்து வருவதால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

    நேற்று 100 கன அடி நீர் வந்த நிலையில் இன்று காலை நீர் வரத்து 418 கன அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 100 கன அடி நீர் திறக்கப்படுகிறது. வைகை அணையின் நீர் மட்டம் 53.87 அடியாக உள்ளது. 14 கன அடி நீர் வருகிறது. மதுரையில் சித்திரைத் திருவிழா நடைபெற்று வருகிறது. இதன் முக்கிய நிகழ்வான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி வருகிற 5-ந் தேதி நடைபெறுகிறது. அப்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவார்கள். வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும்போது பக்தர்கள் மீது புனித நீர் பீய்ச்சி அடிக்கப்படும். எனவே ஆற்றில் அதிக அளவு தண்ணீர் செல்லும் வகையில் வைகை அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் வருடம் தோறும் திறக்கப்படுகிறது.

    அதன்படி இன்று வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க பொதுப்பணித்துறையினர் திட்டமிட்டுள்ளனர். வினாடிக்கு 750 கன அடி நீர் திறக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நீர் திறப்பு 500 கன அடியாகவும் குறைக்கப்பட்டு 4 நாட்களுக்கு பின் நிறுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதற்காக அணைப்பகுதியில் உள்ள ஷட்டர், மதகு உள்ளிட்ட இடங்களில் கடந்த 2 நாட்களுக்கு முன்பாக அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 38.20 அடியாக உள்ளது. 28 கன அடி நீர் வருகிறது. திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 66.58 அடியாக உள்ளது. 49 கன அடி நீர் வருகிறது. 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. பெரியாறு 11.2, தேக்கடி 10.2, கூடலூர் 5.6, சண்முகா நதி அ ணை 4.8, உத்தமபாளையம் 1.2, போடி 20.8, வைகை அணை 2.6, சோத்துப்பாறை 8, பெரியகுளம் 6, வீரபாண்டி 7.2, அரண்மனைப்புதூர் 4 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

    • பழம்பெருமை வாய்ந்த சப்பரத்தை இந்த ஆண்டு சீரமைத்து அழகரை எழுந்தருள செய்வது என கோவில் நிர்வாகம் முடிவு செய்தது.
    • கோவில் துணை ஆணையர் நடவடிக்கையின் பேரில் தற்போது ஆயிரம் பொன் சப்பரத்தை ரூ. 5 லட்சம் செலவில் சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    மதுரை:

    மதுரையில் ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக நடைபெறும் சித்திரை திருவிழா இந்த ஆண்டு வருகிற 23-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    விழாவின் முத்தாய்ப்பாக மே மாதம் 5-ந் தேதி கள்ளழகர் தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்குகிறார். இதற்காக கள்ளழகர் அழகர் மலையில் இருந்து மே 3-ந்தேதி புறப்பாடாகிறார்.

    திருமலை நாயக்கர் மன்னர் காலத்தில் இருந்து தொன்றுதொட்டு வரும் இந்த திருவிழாவில் அழகர் வைகை ஆற்றில் இறங்குவதற்கு முன்தினம் இரவு தல்லாகுளம் கருப்பண்ணசாமி கோவில் அருகே ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளி வைகை ஆற்றுக்கு எழுந்தருள்வது வழக்கம்.

    இதற்காக திருமலை நாயக்கர் மன்னர் காலத்தில் ஆயிரம் பொன் சப்பரம் செய்யப்பட்டது. காலப்போக்கில் பராமரிப்பு எதுவும் செய்யப்படாததால் அதனை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அழகர் சப்பரத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது.

    இந்தச் சப்பரம் தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவில் முன்புள்ள மண்டகப்படியில் நிறுத்தப்பட்டிருந்தது. மன்னர் காலத்தில் மிகவும் சிரத்தையுடன் செய்யப்பட்ட இந்த சப்பரம் பயன்பாடின்றி இருப்பதை அறிந்த பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    இந்த நிலையில் பழம்பெருமை வாய்ந்த சப்பரத்தை இந்த ஆண்டு சீரமைத்து அழகரை எழுந்தருள செய்வது என கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. இதையடுத்து கோவில் துணை ஆணையர் ராமசாமி நடவடிக்கையின் பேரில் தற்போது ஆயிரம் பொன் சப்பரத்தை ரூ. 5 லட்சம் செலவில் சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    இதுகுறித்து கோவில் அர்ச்சகர்கள் கூறுகையில், பிரசித்தி பெற்ற கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவதற்காக தல்லாகுளம் கருப்பண்ணசாமி கோவிலில் இருந்து ஆயிரம் பொன் சப்பரத்தில் வைகை ஆற்றுக்கு வருவார். இதற்காக திருமலை நாயக்கர் மன்னர் தனது ஆட்சிக்காலத்தில் ஸ்தபதியை அழைத்து ஆயிரம் பொன் சப்பரத்தை செய்தார்.

    100 ஆண்டுகளுக்கு முன் இந்த சப்பரத்தில் அழகர் எழுந்தருளினார். ஆனால் காலப்போக்கில் சப்பரம் பயன்படுத்தபடவில்லை. இதன் பெருமையை அறிந்து தற்போது சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த ஆண்டே ஆயிரம் பொன் சப்பரத்தில் 100 ஆண்டுகளுக்கு பின் கள்ளழகர் எழுந்தருளும் வைபவம் நடைபெறும் என்றார்.

    ×