search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகளிர் சுயஉதவிக்குழு"

    • தமிழ்நாட்டில் மொத்தம் 74 தேனீ வளர்ப்புத் தொகுப்புகளை உருவாக்குவதற்கு தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
    • சென்னை மாவட்டத்தைத் தவிர்த்து தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்படுகிறது.

    சென்னை:

    தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

    சுயஉதவிக் குழு உறுப்பினர்கள் தேனீ வளர்ப்பினை மேற்கொள்வதற்கு தேவையான பயிற்சி, தொழில்நுட்ப உதவி, உள்கட்டமைப்பு மற்றும் நிதி உதவியினை வழங்கிடும் வகையில், நடப்பாண்டில் ரூ.2.22 கோடி மதிப்பீட்டில் ஒரு சிறப்புத் திட்டத்தினை தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.

    தேனீ வளர்ப்பினை சுயஉதவிக் குழுவினரிடையே ஊக்குவிக்கும் வகையில், ஒவ்வொரு தேனீ வளர்ப்புத் தொகுப்பிற்கும் ரூ.3 லட்சம் சுழல் நிதி வழங்கி, தமிழ்நாட்டில் மொத்தம் 74 தேனீ வளர்ப்புத் தொகுப்புகளை உருவாக்குவதற்கு தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

    20 மகளிர் கொண்ட ஒவ்வொரு தொகுப்பிலும் உள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும் 5 தேனீ பெட்டிகள் வீதம் மொத்தம் 100 தேனீப் பெட்டிகள் வாங்குவதற்காக ரூ.1.5 லட்சமும், முகக்கவசம், புகைமூட்டி, தேனீ பிரஷ், தேன் பிரித்தெடுக்கும் கருவி போன்ற உபகரணங்கள் வாங்குவதற்கு 20 ஆயிரம் ரூபாயும், தேன் சுத்திகரிப்பு, பதப்படுத்தும் எந்திரம் கொள்முதல் செய்வதற்கு ரூ.1.15 லட்சமும், இந்த எந்திரங்களை நிறுவுவதற்கு 11 ஆயிரம் ரூபாயும், தேனீ வளர்ப்பு, தேன் பதப்படுத்துதல் தொடர்பான பயிற்சிக்கு 4 ஆயிரம் ரூபாயும் என ஒவ்வொரு தொகுப்புக்கும் ரூ.3 லட்சம் சுழல் நிதியாக வழங்கப்படுகிறது.

    இந்த திட்டம் சென்னை மாவட்டத்தைத் தவிர்த்து தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தினை வெற்றிகரமாக செயல்படுத்துவதற்காக, சுயஉதவிக்குழுவில் உறுப்பினர்களாக உள்ள மகளிர் தேர்வு செய்யப்பட்டு, தேனீ வளர்ப்பில் முனைப்பாக ஈடுபட்டு வரும் தொழில் முனைவோர்கள் அல்லது தோட்டக்கலைத்துறை அல்லது கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் அல்லது வேளாண் அறிவியல் மையங்கள் மூலம் தேனீ வளர்ப்புத் தொழில்நுட்பம் குறித்து பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

    விரைவில், அனைத்து பயனாளிகளுக்கும் தேவையான தேனீப் பெட்டிகளை தோட்டக்கலைத்துறையின் ஒருங்கிணைப்புடன் தரமான நிறுவனத்திடம் இருந்து கொள்முதல் செய்வதற்கு மாவட்ட அலுவலர்களுக்கு உரிய அறிவுரைகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கி உள்ளார்.

    தமிழ்நாட்டில் 1480 சுயஉதவிக் குழு மகளிர் உறுப்பினர்கள் பயனடையும் வகையில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் ரூ.2.22 கோடி நிதி ஒதுக்கீட்டில் அறிமுகப்படுத்தி உள்ள இத்திட்டத்தின் மூலம் அயல் மகரந்தச் சேர்க்கை நடைபெறும் பருத்தி, சூரிய காந்தி, தென்னை, மக்காச்சோளம், கம்பு, சோளம், பழப்பயிர்கள், காய்கறிப் பயிர்களை சாகுபடி செய்யும் விவசாயிகள் அதிக மகசூல் பெற இயலும்.

    மேலும், தேனீ வளர்ப்பில் உள்ள நுணுக்கங்களை சுயஉதவிக் குழு மகளிர் நன்கு தெரிந்து கொண்டு, அதன் மூலம் தேன் மட்டுமல்லாது, தேன் மகரந்தம், ராயல் ஜெல்லி, தேன் மெழுகு போன்ற தேனீ வளர்ப்பு மூலம் கிடைக்கும் துணைப் பொருட்களையும் சேகரித்து நல்ல வருமானம் ஈட்ட இயலும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு இனிப்பு மற்றும் கார வகை திண்பண்டங்கள் அடங்கிய பெட்டகம்.
    • தீபாவளி பரிசு பெட்டகம் விற்பனை வருகிற 23-ந்தேதி வரை நடை பெறுகிறது.

    தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்கள் விழாக் காலங்களுக்கு ஏற்ற வகையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

    அதன்படி, வருகிற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு இனிப்பு மற்றும் கார வகை திண்பண்டங்கள் அடங்கிய 'மதி தீபாவளி பரிசு பெட்டகம்' தற்போது விற்பனை செய்யப்படுகிறது.

    இந்த பரிசு பெட்டகத்தில் சிவப்பு அரிசி, கம்பு, சோளம், ராகி, தினை, கருப்புக் கவுனி, கருப்பு உளுந்து, நரிப்பயிர், சாமை, ஆவாரம் பூ ஆகியவற்றால் செய்யப்பட்ட லட்டு வகைகள், சாமை முறுக்கு, தேங்காய் பால் முறுக்கு, அரிசி முறுக்கு, கை முறுக்கு ஆகிய கார வகைகளும் இடம் பெற்றுள்ளன.

    இத்துடன் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள், தஞ்சாவூர் ஓவியங்கள், மண்ணால் செய்யப்பட்ட விளக்குகள், கோரைப் புல்லில் செய்யப்பட்ட அலங்காரப் பரிசு பொருட்களும் விற்பனை செய்யப்படுகின்றன.

    பொதுமக்கள் இவற்றை மொத்தமாகவோ அல்லது சிறிய அளவிலோ விரும்பும் வகையில் www.tncdw.org என்ற இணையதளம் மற்றும் 76038 99270 என்ற செல்போன் எண் வாயிலாக முன்பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம். மொத்த விற்பனைக்கு சலுகைகளும் வழங்கப்படுகிறது.

    இந்த விற்பனை வருகிற 23-ந்தேதி வரை நடை பெறுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடனுதவி வழங்க ஏற்பாடு.
    • பெண்கள் வாக்குகளை அதிகளவில் பெறுவதற்கும் தி.மு.க. வியூகம்.

    சென்னை:

    2026 சட்டமன்ற தேர்லுக்கு தி.மு.க. இப்போதே தயாராகி வருகிறது. அந்த தேர்தலில் 200 தொகுதிகளில் தி.மு.க. வெற்றி பெற்று மெஜாரிட்டி ஆட்சி அமைக்க திட்டமிட்டுள்ளது. இதற்கான வியூகம் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் ஆண்களை விட பெண்கள் ஓட்டு அதிகமாக உள்ளதால் பெண்களின் ஓட்டுகள் சிதறாமல் கிடைக்க என்னென்ன வழிகள் உள்ளதோ அதை அனைத்தையும் தி.மு.க. கையாண்டு வருகிறது.

    அந்த வகையில் தி.மு.க. அரசு பொறுப்பேற்றது முதல் பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

    அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம் மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், அரசுப் பள்ளிகளில் படித்து கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு மாதந் தோறும் ரூ.1000 ஊக்கத் தொகை என பல்வேறு உதவிகள் வழங்கப்படுகின்றன.

    இதுதவிர மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு அதிக அளவில் சுழல் நிதி வழங்கவும் இப்போது ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    பொதுத்தேர்தலுக்கு இன்னும் 18 மாத காலமே உள்ளதால் ஆட்சி காலம் முடிவடைவதற்குள் சுமார் ரூ.90 லட்சம் கோடி அளவுக்கு கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இதற்காக மாவட்ட வாரியாக கடனுதவி வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்ய தமிழக மகளிர் மேம்பாட்டு நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    இந்த நிகழ்ச்சிகளில் துணை முதல்மைச்சர் உதயநிதி பங்கேற்று மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடனுதவி வழங்க உள்ளார்.

    2009-ம் ஆண்டு துணை முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் இருந்தபோது மாவட்டம் வாரியாக சென்று பலமணி நேரம் ஒவ்வொரு சுயஉதவிக் குழுக்களுக்கு சுழல் நிதி வழங்கியது போல், இப்போது துணை முதலமைச்சராக உள்ள உதயநிதி சுயஉதவிக் குழுக்களுக்கு சுழல் நிதி வழங்க உள்ளார்.

    இதற்காக மாவட்ட வாரியாக உதயநிதியின் சுற்றுப்பயணம் தயாராகி வருகிறது. ஆயுத பூஜைக்கு பிறகு அவர் ஒவ்வொரு மாவட்டமாக சென்று வரும் வகையில் பயணத் திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது.

    நடிகர் விஜய் புதுக்கட்சி ஆரம்பித்துள்ள நிலையில் தி.மு.க.வின் வாக்குகளை தக்க வைத்துக்கொள்ளவும், பெண்கள் வாக்குகளை அதிகளவில் பெறுவதற்கும் இந்த வியூகம் 'கை கொடுக்கும்' என தி.மு.க. தலைமை கணக்கு போட்டுள்ளது.

    • 2 ஆயிரம் பேருக்கு வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது.
    • மதுரையில் மட்டும் 80 ஆயிரம் மாணவர்கள் பசியாறி வருகிறார்கள்.

    மதுரை:

    மதுரையில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

    வரலாற்று சிறப்பு மிக்க மதுரை யானைமலை ஒத்தக்கடை பகுதியில் நடைபெறும் இந்த விழா நான் அமைச்சர் பொறுப்புக்கு வருவதற்கு முன்பாகவே கடந்த 2024-ம் ஆண்டு தி.மு.க. மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கியதிலும், 72 ஆயிரம் மகளிர் சுயஉதவிக்குழு வினருக்கு கடனுதவி வழங்கியதிலும் இடம் பிடித்துள்ளது.

    மதுரை என்றாலே அமைச்சர் மூர்த்தி, மூர்த்தி என்றாலே மதுரை என்ற பெருமைக்கு அவர் சொந்தக்காரர் ஆவார். இன்று நடைபெறும் விழாவில் 12 ஆயிரத்து 307 மகளிர் சுயஉதவி குழுக்களை சேர்ந்த 17 ஆயிரம் பேருக்கு ரூ.108 கோடியில் கடனுதவியும், அரசின் பல்வேறு துறைகள் சார்பில் ரூ.298 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டுள்ளன.


    கடந்த 2024 பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை நான் மதுரையில் தான் தொடங்கினேன். மதுரை, விருதுநகர், தேனி ஆகிய தொகுதிகளுக்கு சென்று பொதுமக்களிடம் வாக்கு கேட்டேன்.

    அவர்களும் வாக்களித்து எங்கள் கூட்டணியை வெற்றிபெற செய்திருக்கிறார்கள். அதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

    பள்ளி மாணவர் என்றால் தேர்வு நடத்தியும், விளையாட்டு வீரராக இருந்தால் விளையாட்டுத் திறன் மூலமாகவும் மதிப்பீடு செய்யப்படுகிறது.

    தேர்தல் என்றால் வாக்காளர்கள் மூலம் அவர்கள் அளிக்கும் வெற்றியின் அடிப்படையில் அரசின் ஸ்திரத்தன்மை உறுதி செய்யப்படுகிறது.

    அந்த வகையில், திராவிட மாடல் அரசுக்கு நற்சான்றிதழ் அளிக்கும் விதமாக பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியை 40-க்கு 40 என்ற விகிதத்தில் வெற்றி பெறச்செய்து இன்னும் எங்களை கூடுதலாக உங்களுக்கு உழைக்க நிர்பந்தித்து உள்ளீர்கள்.

    தமிழ் பண்பாட்டுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட மதுரையை நோக்கி ஏராளமான திட்டங்கள் வந்து கொண்டிருக்கின்றன.

    அந்த வகையில் இன்று நடைபெறும் விழாவில் மகளிர் சுய உதவிக்குழுவினர் அதிகளவில் வந்துள்ளார்கள்.

    அரசின் சேவைகளை நீங்கள் தேடிச்சென்ற காலம் மாறி இன்று உங்களை தேடி அரசின் திட்டங்கள் வந்து கொண்டிருக்கின்றன.


    கடந்த காலத்தில் ரூ.30 ஆயிரத்து 75 கோடி என்று இருந்த வங்கி கடன் இணைப்பு தற்போது ரூ.35ஆயிரம் கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை ரூ.17 ஆயிரம் கோடி வங்கிக்கடன் இணைப்புகளை திராவிட மாடல் அரசு வழங்கி உள்ளது.

    31 ஆயிரம் மகளிர் குழுவைச்சேர்ந்த 3 லட்சத்து 74 ஆயிரம் பேருக்கு ரூ.290 கோடி கடன் வழங்கியிருக்கிறோம். 2 ஆயிரம் பேருக்கு வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு வீட்டுமனை பட்டா பெறுவதில் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து இருக்கிறார்கள்.

    ஆனால் இன்றைய விழாவின் மூலம் வீட்டுமனை பட்டா பெற்ற 12 ஆயிரம் பேரும் இனிமேல் தங்கள் வீடுகளில் நிம்மதியாக தூங்கலாம். உங்களின் உரிமைகளை திராவிட மாடல் அரசு நிலைநாட்டி இருக்கிறது.

    2-வது முறையாக தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றதும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த கட்டணமில்லா பேருந்து சேவை மூலம் 520 பேர் பயணம் செய்துள்ளனர். மதுரையில் மட்டும் 21 கோடி பேர் கட்டணமில்லா பேருந்தில் பயணம் செய்திருக்கிறார்கள்.

    பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் பசியுடன் செல்லக்கூடாது என்பதை உணர்த்தும் வகையில் காலை உணவுத்திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்துள்ளார். இந்த காலை உணவுத்திட்டம் மூலம் தமிழகம் முழுவதும் 20 லட்சம் பேர் பயனடைந்து உள்ளனர்.

    மதுரையில் மட்டும் 80 ஆயிரம் மாணவர்கள் பசியாறி வருகிறார்கள். இதேபோல் கல்லூரி மாணவிகளுக்கான புதுமைப்பெண் திட்டம், மாணவர்களுக்கான தமிழ்புதல்வன் திட்டம் ஆகியவற்றின் மூலம் தமிழகம் முழுவதும் 7 லட்சம் பேரும், மதுரையில் மட்டும் 15 ஆயிரம் பேரும் பயனடைந்து உள்ளனர்.

    கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் மூலம் 1 கோடியே 16 லட்சம் பேர் மாதந்தோறும் ரூ.1000 பெறுகிறார்கள். மதுரையில் மட்டும் 4 லட்சத்து 62 ஆயிரம் பேர் இந்த உரிமைத்தொகையை பெறுகின்றனர்.

    இதேபோல் உயர்கல்வியில் தமிழக முதலிடத்தை பிடித்துள்ளது. வறுமை ஒழிப்பு, சுகாதாரம் ஆகியவற்றிலும் தொடர்ந்து முதலிடம் பெற்று வருகிறது.

    இன்று நலத்திட்ட உதவிகள் பெற்ற பொதுமக்கள், மகளிர் குழுவினர் அரசின் சாதனைகளை பிறருக்கும் எடுத்துக்கூற வேண்டும். மகளிர் குழுவுக்கு வழங்கப்பட்டது வெறும் கடன் அல்ல.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கை. இந்த கடன் உதவியை கொண்டு மகளிர் குழுவினர் தொழில் முனைவோராக உருவாக வேண்டும். அதற்கு அரசும், முதல்-அமைச்சரும் துணை நிற்பார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • மண்டல அளவிலான சாராஸ் மேளா வருகிற 29-ந் தேதி முதல் அடுத்த மாதம் 15ந் தேதி வரை சென்னையில் உள்ள தீவுத்திடலில் நடக்கிறது.
    • கண்காட்சியில் கொண்டு வந்து அறிமுகப்படுத்த மற்றும் விற்பனை செய்ய வாய்ப்பு தரப்படும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களின் விற்பனையை அதிகரிக்கவும், தயாரிக்கப்பட்ட பொருட்களை அனைத்து மக்களுக்கும் அறிமுகப்படுத்தவும் கண்காட்சிகள் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி 2023-24-ம் ஆண்டு மண்டல அளவிலான சாராஸ் மேளா வருகிற 29-ந் தேதி முதல் அடுத்த மாதம் 15-ந் தேதி வரை சென்னையில் உள்ள தீவுத்திடலில் நடக்கிறது.

    இந்த மேளாவில் கலந்து கொள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களை தேர்வு செய்து அனுப்பப்பட உள்ளது. எனவே திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மகளிர் சுயஉதவிக்குழுவினரால் உற்பத்தி செய்யப்படும் தரம் வாய்ந்த கைவினை பொருட்கள், எம்பிராய்டரி துணி வகைகள், ரெடிமேடு ஆடைகள், பரிசு பொருட்கள், மண்பாண்ட பொருட்கள், பூவகைகள், தரமான ஊதுபத்தி, தேன், மூலிகை பொருட்கள், அலங்கார சங்கு பொருட்கள், கைப்பைகள், உணவு பொருட்கள், சணல் பொருட்கள் மற்றும் பல பொருட்களை இந்த கண்காட்சியில் கொண்டு வந்து அறிமுகப்படுத்த மற்றும் விற்பனை செய்ய வாய்ப்பு தரப்–படும்.

    மண்டல அளவிலான விற்பனை கண்காட்சியில் கலந்து கொண்டு உற்பத்தி பொருட்களை விற்பனை செய்வதற்கு விருப்பம் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களின் விவரங்களுடன் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மகளிர் திட்டம் அறை எண்.305-ல் வருகிற 18-ந் தேதி மாலை 5 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும்.

    மேலும் விவரங்களுக்கு மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்க மேலாளரை 97901 64775 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

    ×