search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மருத்துவ கல்லூரிகள்"

    • 6 தனியார் மருத்துவ கல்லூரிகள் புதிதாக தொடங்க தேசிய மருத்துவ ஆணையத்திடம் அனுமதி கேட்டுள்ளனர்.
    • ஆன்லைன் வழியாக பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடங்கப்படும்.

    சென்னை:

    அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்தப்படுகிறது.

    இந்த ஆண்டு நீட்தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் முறை கேட்டால் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு கால தாமதம் ஆகியுள்ளது.

    இந்த நிலையில் நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகள் மருத்துவ படிப்பில் சேருவதற்கு ஆவலுடன் காத்திருந்த நிலையில் கலந்தாய்வு தள்ளிப் போகிறது. அகில இந்திய ஒதுக்கீட்டு மருத்துவ இடங்களுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 1-ந் தேதி தொடங்கும் என்று மத்திய மருத்துவ ஆணையம் அறிவித்ததை தொடர்ந்து தமிழக அரசு, மாநில இடங்களுக்கான கலந்தாய்வை தொடங்க முடிவு செய்தது. அதன்படி ஆகஸ்ட் 21-ந் தேதி பொது கலந்தாய்வு தொடங்குகிறது.

    இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் 2024-25-ம் ஆண்டிற்கான மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்பம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. ஆகஸ்ட் 8-ந்தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். ஆவணங்களை பதிவேற்றம் செய்யலாம். அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் 15 சதவீதம் போக மீதமுள்ள 85 சதவீத இடங்களுக்கு மருத்துவ கலந்தாய்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.


    ஆகஸ்ட் 21-ந்தேதி முதல் கட்ட கலந்தாய்வு தொடங்குகிறது. தமிழ்நாடு மருத்துவ தேர்வு குழு மூலமாக நடத்தப்படும் கலந்தாய்விற்கான மெரிட் லிஸ்ட் ஆகஸ்ட் 19 -ந்தேதி வெளியிடப்படும். 21-ந்தேதி ஆன்லைன் வழியாக பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடங்கப்படும்.

    22 மற்றும் 23-ந் தேதிகளில் 7.5 சதவீத அரசு பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு ஒதுக்கீடு மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்கள், முன்னாள் ராணுவத்தினர், விளையாட்டு வீரர்கள் என 4 வகை சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறும்.

    சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நேரடியாக நடத்தப்படும். எந்த இடத்தில் நடக்கும் என்ற விவரம் பின்னர் தெரிவிக்கப்படும். தமிழ்நாட்டில உள்ள 36 அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் மூலம் 5050 எம்.பி.பி.எஸ். இடங்கள், ஈ.எஸ்.ஐ. கல்லூரிகள் மூலம் 3,400 இடங்கள் 3 நிகர்நிலை பல்கலைக் கழகங்கள் மூலம் 450 என ஆக மொத்தம் 9050 இடங்கள் உள்ளன.

    பல் மருத்துவ இடங்கள் 2200 உள்ளன. இது தவிர 6 தனியார் மருத்துவ கல்லூரிகள் புதிதாக தொடங்க தேசிய மருத்துவ ஆணையத்திடம் அனுமதி கேட்டுள்ளனர். புதிய மருத்துவ கல்லூரிக்கு அனுமதி கிடைக்கும் பட்சத்தில் கலந்தாய்வின் போது இடங்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

    அரசு மருத்துவ கல்லூரிகளில் புதிதாக இடங்கள் இந்த ஆண்டு உருவாக்கப் படவில்லை. வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களை மீட்க ஊட்டியில் இருந்து 2 மருத்துவ குழு, மருந்து, மாத்திரையுடன் சென்றுள்ளது. தேவைப்பட்டால் கூடுதலாக அனுப்பவும் தயாராக இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ரூ.196.16 கோடி செலவில் கட்டப் பட்டு வரும் டவர் பிளாக் கட்டிடத்தை ஆய்வு செய்தார்.

    • ஒரே வழி அதிக அளவில் அரசு மருத்துவக் கல்லூரிகள் துவக்கப்பட வேண்டும்.
    • காஞ்சிபுரம் மற்றும் தென்காசி மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளை திறக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை எண். 164-ல், மருத்துவக் கல்லூரி இல்லாத மாவட்டங்களில், புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளை தி.மு.க. அரசு உருவாக்கும் என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்று மூன்று ஆண்டுகள் கடந்த நிலையிலும், ஒரு அரசு மருத்துவக் கல்லூரியைக் கூட உருவாக்க தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால், 99 சதவீதம் வாக்குறுதி நிறைவேற்றப்பட்டு விட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுகிறார்.

    ஒரு மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்ற அடிப்படையில், பெரம்பலூர், மயிலாடுதுறை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மற்றும் தென்காசி மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளை துவங்க தி.மு.க. அரசு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். மூன்று ஆண்டுகளாகியும் இதற்கான நடவடிக்கையை எடுக்கவில்லை. இப்பொழுதுதான், மேற்படி ஆறு மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரியை அமைக்க 25 ஏக்கர் நிலத்தை தேடும் பணியில் தி.மு.க. ஈடுபட்டு வருகிறது. ஆட்சிக்கு வந்தவுடனேயே இதற்கான பணியை மேற்கொண்டிருந்தால், தற்போது ஆறு மருத்துவக் கல்லூரிகள் உருவாகி, அதன்மூலம் கிட்டத்தட்ட 900 மருத்துவ இருக்கைகள் தமிழ்நாட்டிற்கு கிடைத்து இருக்கும். இதைச் செய்ய தி.மு.க. அரசு தவறிவிட்டது.

    ஏழை-ஏளிய மாணவ, மாணவியர் அதிகளவில் மருத்துவராக வேண்டுமானால், அதற்கு ஒரே வழி அதிக அளவில் அரசு மருத்துவக் கல்லூரிகள் துவக்கப்பட வேண்டும். இதனை முதலமைச்சர் மனதில் நிலைநிறுத்தி, பெரம்பலூர், மயிலாடுதுறை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மற்றும் தென்காசி மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளை திறக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • 6 மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரிகள் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
    • மத்திய அரசின் பங்களிப்புடன் அமைக்கப்படும் மருத்துவக் கல்லூரிக்கான 25 ஏக்கர் நிலத்தை அடையாளம் காண அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    தமிழகத்தில் சில மருத்துவ கல்லூரிகள் அமைக்க தேசிய மருத்துவ ஆணையத்திடம் அனுமதி கேட்டிருந்த நிலையில் தற்போது 6 புதிய மருத்துவக் கல்லூரியில் அமைக்க தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மயிலாடுதுறை, திருப்பத்தூர், தென்காசி, பெரம்பலூர், அரக்கோணம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரிகள் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    மத்திய அரசின் பங்களிப்புடன் அமைக்கப்படும் மருத்துவக் கல்லூரிக்கான 25 ஏக்கர் நிலத்தை அடையாளம் காண அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது.

    • புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கத் தவறியதன் மூலம் தமிழ்நாட்டு மாணவர்களின் நலனை தாரை வார்த்து விட்டது.
    • ஐந்தாண்டுகளில் ஒரு மருத்துவக் கல்லூரியைக் கூட தொடங்காத அரசு என்ற அவப்பெயரை இன்றைய அரசு சுமக்க நேரிடும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-

    இந்தியா முழுவதும் புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு விண்ணப்பிப்பதற்காக தேசிய மருத்துவ ஆணையம் வழங்கியிருந்த காலக்கெடு நவம்பர் 26-ஆம் நாளுடன் நிறைவடைந்து விட்ட நிலையில், தமிழ்நாட்டில் புதிய மருத்துவக் கல்லூரிகளுக்காக விண்ணப்பிக்க தமிழக அரசு தவறி விட்டது. 2025-ஆம் ஆண்டுக்குப் பிறகு தமிழ்நாட்டில் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க எந்த உத்தரவாதமும் இல்லாத நிலையில், கிடைத்த அரிய வாய்ப்பை தமிழக அரசு தவறவிட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.

    தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் அரசு மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க வேண்டும் என்பதில் தமிழக அரசுக்கு அக்கறை இருந்திருந்தால் புதிய மருத்துவக் கல்லூரிக்கு விண்ணப்பித்திருக்க வேண்டும். அதிலும் குறிப்பாக 2025-26ஆம் ஆண்டுக்குப் பிறகு புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க முடியாது என அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், இது தான் கடைசி வாய்ப்பு என்பதால் அதை தமிழக அரசு உறுதியாக பயன்படுத்திக் கொண்டிருக்க வேண்டும்.

    ஆனால், புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கத் தவறியதன் மூலம் தமிழ்நாட்டு மாணவர்களின் நலனை தாரை வார்த்து விட்டது. இது அரசின் பெரும் தோல்வி. மத்திய அரசு உதவியுடன் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்போவதாக தமிழக அரசு கூறுவது மக்களை ஏமாற்றும் செயலாகும். 3 ஆண்டுகள் ஏற்கனவே முடிவடைந்து விட்ட நிலையில், புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், ஐந்தாண்டுகளில் ஒரு மருத்துவக் கல்லூரியைக் கூட தொடங்காத அரசு என்ற அவப்பெயரை இன்றைய அரசு சுமக்க நேரிடும்.

    எனவே, தேசிய மருத்துவ ஆணையத்திடம் சிறப்பு அனுமதி பெற்று, 6 மாவட்டங்களிலும் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளை தமிழக அரசே அதன் சொந்த நிதியில் தொடங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தனலட்சுமி சீனிவாசன் மருத்துவ கல்லூரியில் 150 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு அனுமதி வழங்கி உள்ளது.
    • சென்னை கே.கே.நகரில் உள்ள இ.எஸ்.ஐ.சி. மருத்துவ கல்லூரிக்கு இடங்களை உயர்த்தியும் அனுமதி வழங்கப்படுகிறது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் மேலும் 2 தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி அளித்து உள்ளது. இதன் காரணமாக கூடுதலாக 350 எம்.பி.பி.எஸ். இடங்கள் கிடைக்கும்.

    டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் ஈரோட்டில் உள்ள நந்தா மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை 150 இடங்களுடன் முதலாம் ஆண்டு சேர்க்கை தொடங்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

    ஈரோட்டில் இருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் பிச்சாண்டம்பாளையத்தில் அமைந்துள்ள இந்த கல்லூரி அரசு ஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கைக்கான இடங்களை மாநில தேர்வு குழுவுடன் பகிர்ந்து கொள்ளும். அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் 150 இடங்களுக்கு நீட்-2023 மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகம்-தமிழ்நாடு தனியார் பல்கலைக் கழகச் சட்டம் 2019-ன் கீழ் நிறுவப்பட்டு 2021-ம் ஆண்டில் சேர்க்கையை தொடங்க அனுமதி வழங்கப்பட்டது.

    தற்போது தனலட்சுமி சீனிவாசன் மருத்துவ கல்லூரியில் 150 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு அனுமதி வழங்கி உள்ளது.

    சென்னை கே.கே.நகரில் உள்ள இ.எஸ்.ஐ.சி. மருத்துவ கல்லூரிக்கு இடங்களை உயர்த்தியும் அனுமதி வழங்கப்படுகிறது. இதன் மூலம் கூடுதலாக 350 எம்.பி.பி.எஸ். 'சீட்'கள் கிடைக்கும்.

    இதன் மூலம் மொத்தம் எம்.பி.பி.எஸ். இடங்களின் எண்ணி்க்கை 11,575-ஆக உயர்ந்து உள்ளது. தமிழ்நாட்டில் மொத்த மருத்துவ கல்லூரி எண்ணிக்கை 74-ஆக அதிகரித்து உள்ளது.

    ×